Skip to main content

Posts

Showing posts from September, 2020

திருமிகு. காக்கையாரே

ஒரு முரட்டு ஓட்டத்துக்குப் பிறகுமனமே உடலாகிவீட்டின் இரும்புக் கேட்டுக்கு முன்னால் வந்துமுட்டிகளைப் பிடித்து இரைத்து நின்றேன்அதிகாலை இருட்டில் நடைக்குகிளம்பியபோது இருந்ததெருவும் வேம்பும்சற்று நெருக்கத்தில் துலங்கியதைவிரியப் பார்த்தேன்தெருவின் நடுவே எறியப்பட்டிருந்தஇறந்த எலியின் வயிற்றில்உறிஞ்சியைப் போல்கூர் அலகைச் செலுத்திக் கொத்திசிவந்த குடலை உருவியிழுத்தது கருப்புக் காகம்திருமிகு. காக்கையாரேஉங்களுக்கு இது நற்கணம்எனக்கு இதுவோ திங்கள்இந்த வாரம் மகத்தான நல்வாரமாக அமையவாழ்த்துகிறேன்காக்கையாரே.

அமேசான் கிண்டிலில் ராணியென்று தன்னையறியாத ராணி

ராணியென்று தன்னையறியாத ராணி நூலை அமேசான் கிண்டிலில் வாங்க

சென்னை நெசப்பாக்கத்தில், நான் தனியாக ஒரு சிறு வீட்டை எடுத்து வாழ்ந்த இரண்டு வருடங்களில் அறிமுகமான நட்புகளும் ஆதரவாக இருந்த மனிதர்களின் முகங்களும் ஞாபகத்துக்கு வந்துபோகிறார்கள். முதன்மையானவன் ராஜகோபால். நெசப்பாக்கத்தில் மேற்கொண்ட தனிவாழ்க்கையில் தான் நண்பராக ரஃபீக் அறிமுகமானார். ஹஸீன், செல்வம், சுப்ரமணியன், சி. மோகன், சந்தோஷ், சிவா எல்லாரும் வயது பேதங்களின்றி சில வாரங்கள் டிபன்ஸ் காலனி மைதானத்தில் சேர்ந்து ஒரு கிரிக்கெட் டீமை அமைத்து விளையாடிய ஆற்றல் இந்தக் கவிதைகளிலும் சிந்தியுள்ளது. கவிஞர் விக்ரமாதித்யன் ஒரு ஆண்டு அளவுக்குக் கூடவே இருந்தார். தளவாய் வந்து வந்து போய்க் கொண்டிருந்தான்.  நெசப்பாக்கம் வீட்டில் தான், இரண்டு ஜோடி தங்க மீன்களை வளர்த்துப் பிரியத்துடன் அவற்றைப் பராமரிக்கவும் செய்தேன். திரும்ப வேளச்சேரி வந்த பிறகும் அவை என்னுடன் நான்கு ஆண்டுகள் தொடர்ந்தன. தங்கமீனின் உடலை விட நீளமாக வளர்ந்த சிறகு போன்ற வாலை பார்த்து அமைதிகொண்டிருக்கிறேன். இந்தக் கவிதைகள் அந்தத் துடிக்கும் வாலைப் போன்றவை. த சன்டே இந்தியன் இதழில் அப்போது பணிய…

நற்றுணையாவது

முழு இருட்டையும் நீல விளக்கொளி அரையிருட்டையும் உற்றுப் பார்க்கப் பழகிவிட்டேன் பேயின் அரவம்  கழிப்பறையில் சமையலறையில் உலவும் எலியளவுகூட எங்கும் இல்லை பேய் பின்வாசலில் தோட்டத்தில் மாநகரகச் சாலைகளின் முடிவில் மின்மாற்றியின் கீழே இருள்மூலையில் இல்லவே இல்லை. பேய் இப்போது என்னைத் தேடிவந்தாலும் எனது வளர்ப்பு நாய்  நெருங்கவிடாது போல. உறங்கும் தலையணைக்கு அருகே தடவிப் பார்க்கிறேன் பேய்  இருந்தால் நன்றாக இருக்கும் நற்றுணையாக இருந்திருக்கும்.

குடியானவனின் ஜென்

மகாயான பெளத்தத்தின் பிரிவான ஜென் தத்துவம், சீனாவில் பிறந்த காலகட்டத்திலிருந்த தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எழுதிய நூறு கவிதைகள்தான் 'குளிர்மலை' என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. ஹான்ஷான் என்ற பெயரின் அர்த்தம் குளிர்மலை என்று பொருள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஜென் துறவியும் கவிஞருமான ஹான்ஷானின் கவிதைகளைப் படிக்கும்போது, வழக்கமாக நாம் படிக்கும் தாவோயிய, ஜென் கவிதைகளிலிருந்து ஒரு வித்தியாசம் துலக்கமாக உள்ளது.இயற்கையோடு பேதப்படாத மனத்தின் ஏகாந்தம், வாழ்க்கை குறித்த பூரண ஞானம், தெளிவு, சலனமின்மை போன்ற குணங்கள் ஹான்ஷானிடம் இல்லை. ஹான்ஷானின் கவிதைகளில் ஒரு அறிவாளியும் ஏழைக் குடியானவனும் சேர்ந்த ஒரு ஆளுமை தென்படுகிறான். அவன் முகமிலி அல்ல. புறவாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மை சார்ந்து அனுபவிக்கும் பாகுபாடுகள் விரக்தியுடனும் சஞ்சலத்துடனும் இந்தக் கவிதைகளில் பதிவாகின்றன. ஹான்ஷான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கங்கள், மனிதர்கள், உயர்குடிகள், புழங்குபொருட்கள், நம்பிக்கைகள், பழங்கதைகள் எல்லாம் இந்தக் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அதனால்தான், ஹான்ஷானை நவீனத்தோடு அடை…

தூல சூட்சும சன்னிதி

கோயில் வாசல்களில்உலர்ந்த புல்வெளித் திடல்களில்பஜார் மைதானங்களில்வந்து நிற்கிறதுஈக்களை விரட்டச் சுழல்கிறது  கம்பீரக் கூந்தல் வால்குதிரையே குதிரையேஎழில் பொங்கிப் பிரவகிக்கும் குதிரையேஉயிர் சமைக்கப்படும் கருப்பைச் சட்டியில்திரளும் உபரிதான்உன் அழகாகலையாகடவுளாசுட்டி பீலி குச்சம்சூடாமணி சிக்குதாகுசாமரைவல்லிசைபல்பிடிக் கண்டிகைசுருள் திருகுசேணப்பறிஅங்கவடிநூபுரப்புட்டில்பசும்பாழிசிலம்பு தாழ்தண்டைதலைமுதல் கால்வரைநெற்றி முதல் பிருஷ்டம்வரை நீ அணியும் அணிகள்கோபுரங்களில் கோயில் சிலைகளில் இன்றுஎச்சங்கள் ஒச்சங்கள்குதிரையே குதிரையேஇத்தனை அணிகளையும் பூட்டிய பிறகுகுதிரை அங்கே இருந்ததாகுதிரை இல்லை குதிரை இல்லைகுதிரை இல்லை000கிழக்குக் கோபுரத்துக்குள்நுழைந்துநந்தியைநினைவில் இப்போதுதாண்டினாலும்தலைக்குள் கேட்கத் தொடங்கிவிடுகிறதுதவிலும் நாயனமும்இசைப்பவர் வேண்டாம்கருவியும் வேண்டாம்இன்னும் வெளிச்சம் நுழையாதஇருள்மூலைகளில்அதன் எதிரொலிகள் பெருமூச்சுகள் கேட்கின்றனஒடுக்கிய குதிரைகள் போல்கொடிமரம் தாண்டிக் கருவறைக்குள்செல்லும் நுழைவாயிலின்பக்கவாட்டு மேடையின் மூலையில்தவிலும் நாதஸ்வரமும் பம்பையும்புழங்காத நாட்களில் அழுக…

நான் வெளியேற முடியாத கதை

வீடு திறந்திருந்தது. அம்மா வேலையிலிருந்து வரும் நேரம் அல்ல இது. அதிசயமாக அப்பா வீட்டில் இருந்தார். சைக்கிள் தார்சாவில் நின்றிருந்தது. யூனிபார்மை மாற்றிவிட்டு உடனடியாகக் கிளம்பச் சொன்னார். ஏதோ சரியில்லை என்பது மட்டும் அப்போதைக்கு தெரிந்தது. சைக்கிளில் பார்வதி தியேட்டர் ஆர்ச்சைக் கடக்கும்போதுதான், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். வயிற்றுவலியாகத் தான் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அம்மா இந்த வயிற்றுவலியுடன் சிரமப்பட்டாள். ஆசையாக ரவை உப்புமாவை கூடுதலாக ஒரு பங்கு சாப்பிட்டுவிட்டாலும் துடித்துப் போய்விடுவாள். என்.ஜி.ஓ காலனி மாமா வீட்டிலிருந்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுத் திரும்பும்போது கோவில் வாசலில் வண்டி நிற்கும்போது மயங்கி தெருவிலேயே விழுந்து விட்டாள். அங்குள்ள கடைக்காரர்கள் தான் முதலுதவி செய்து அனுப்பிவைத்தார்கள். அம்மாவுக்கு எப்போது வயிற்றுவலி வருமோ என்று எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கும். இரண்டு மாதத்திற்கு முன்புகூட ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்தாள். ஒரு நாள் இரவு நானும் அப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவளுக்கு டிரசும் பிளாஸ்கும்…

காப்ரியேல் கார்சியா மார்க்வேஸின் அம்மா

காப்ரியேல் கார்சியா மார்க்வெஸின் படைப்புலகத்துக்குள் அறிமுகமாக விரும்பும் ஒரு தமிழ் வாசகனுக்கு சரியான நுழைவாயிலென அவர் எழுதிய ‘செவ்வாய்கிழமை மதியத் தூக்கம்’ கதையைச் சொல்வேன். அதனால்தான் போலும், அக்கதை தமிழில் நிறைய பேரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆளையே கிறங்கடித்து மயங்க வைக்கும் தென்தமிழகத்து வேனல் பிரதேசத்தின் சுடும் வெக்கை, மனிதர்களின் அகத்திலும் ஆளுமையிலும் பரவியிருக்கும் தன்மையோடு அடையாளம் காணக்கூடிய கதை அது. வறுமை காரணமாக ஊருக்குள் திருடவந்து, ஒரு விதவையின் வீட்டுக்கதவை இரவில் திறக்க முயலும்போது, தற்காப்புக்காக அந்த விதவையால் சுடப்பட்டு இறந்துபோய், புதைக்கப்பட்ட திருடனைத் தேடி அவனது தாயும் தங்கையும் அந்த ஊருக்கு அடுத்த வாரம் வருவதுதான் கதை. அவர்கள் கையில் புதைக்கப்பட்ட மகனுக்கும், அண்ணனுக்கும் வைப்பதற்கு தண்ணீர் தெளிக்கப்பட்ட மலர்க்கொத்து இருக்கிறது. அடுமனை அடுப்புகள் போல வீடுகள் கொதித்துக் கொண்டிருக்கும் செவ்வாய்கிழமை மதியநேரத்தில் அவர்கள் அந்த ஊருக்கு ரயிலில் வருகிறார்கள். ரயில் பயணம் சிறுகதையின் முன்பகுதியில் விவரிக்கப்படுகிறது. இறங்கவேண்டிய ரயில் நிலையத்தில் அம்மா தனது …

கடவுள் புழுதியாய் மறையும் சிங்காரத்தின் நாவல்கள்

சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்கமுடியாத தனித்துவ எழுத்து ப. சிங்காரத்துடையது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை மற்றும் மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப. சிங்காரம். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். ‘புயலில் ஒரு தோணி’ நாவல், தமிழில் அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட படைப்புகளுடன் ஒப்பிடமுடியாதது. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும்படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு அந்த நாவல்.சரித்திரத்தின் கதியில் தோன்றி மறையும் சுடர்ந்து அவியும் கரைந்து தேயும் மானுடர் வாழ்வு தான் ப. சிங்காரத்தின் கவனம். அந்த வகையில் குடும்பம் என்ற மையத்திலேயே சுற்றிச் சுழன்று கொண்டிருந்த தமிழ் நாவல்களின் மந்தைப் போக்கிலிருந்து விலகிய  படைப்பு இது. வீடுகளின் தாழ்வாரத்துக்குள் கூட எட்டிப் பார்க்காத இந்த நாவலில் விதிவாதம், கடவு…

குப்பை சேகரிப்பவன்

குப்பைகளிலிருந்து
கவிதைகளைச் சேகரிக்கும்
சிறுவன் நான்.
எரியும் சூரியனுக்குக் கீழே
நான் வெயிலின் மகன்
தனிமையான இரவு வானத்தின் கீழே
நான் நட்சத்திரத்தின் பிள்ளை.
மழையில் என் வசிப்பிடம்
மூழ்கும்போது
தவளை ஈனும் தலைப்பிரட்டைகளில்
ஒரு சிசு நான்.
ஈரக்குப்பை
உலர்குப்பை
மக்காத குப்பை அனைத்தும்
எனது கைகளுக்குத் தெரியும்
கண்ணாடிப் பொருள்களால்
ஊறுபட்ட காயங்களும் தழும்புகளும்
எனக்கு உண்டு.
நட்சத்திரங்களின் உயரத்திலிருந்து
குப்பைத்தொட்டிகளைப் பார்த்தால்
இந்த உலகம் அழகிய சிறு கிணறுகளால்
ஆனதாய் நீங்கள் சொல்லக்கூடும்
ஆனால் உண்மையில்
இவை ஆழமற்றவை..
நான் நடக்கும் நிலத்திற்கு
அடியில்
கடல் கொண்ட நகரங்களும்
மூதாதையரும்
அவர்தம் மந்திரமொழியும் புதைந்துள்ளன
எனக்குத் தெரியும்.
ஆனாலும்
ஒரு ஆணுறையை
எறியப்படும் உலர்ந்த
மலர்ச்சரங்களை
குழந்தைகளின் உடைகளை
தலை உடல்
தனியாகப் பிய்க்கப்பட்ட பொம்மைகளை
விரலில் சுற்றி வீசப்பட்ட கூந்தல் கற்றையை
ரத்தம் தோய்ந்த மருந்து ஊசிகளை
சுமந்து செல்லும்போது
பூமியின் பாரத்தை
உடைந்த சிலம்புகளை
சுமக்கும்
புனிதத்துக்கம் எனக்கு.

உலகத்தின் பைத்தியம் இறங்கிய உடல்

புதுமைப்பித்தனுக்கு பத்தாண்டுகள் முன்னர் பிறந்து புதுமைப்பித்தனைப் போல இளம்வயதில் மறைந்தவர் ஜப்பானிய சிறுகதைக் கலைஞர் ரியுனொசுகே அகுதாகவா. இவரது ஆறு கதைகளை கே. கணேஷ்ராமின் மொழிபெயர்ப்பில் படிக்கும்போது, எரியும் ஆன்மாவிலிருந்து உருவான படைப்புகள் என்று விவரிக்கத் தோன்றுகிறது. காஃப்கா, சாதத் ஹசன் மண்டோவின் கதையுலகத்துக்கு நெருக்கமான உலகம் அகுதாகவாவினுடையது. தீமை, அச்சம், துயரம், சோர்வு, மரணம் என்ற நரகமாகத் வாழ்வைக் காணும் கண்கள் வழியாக விவரங்களோடும் அடர்த்தியோடும் வசீகரத்தோடும் தீட்டப்பட்ட  கோரச் சித்திரங்கள்.

‘சுழலும் சக்கரங்கள்’ தொகுப்பில் உள்ள முதல் கதையும், இத்தொகுதியில் மற்ற கதைகளை ஒப்பிடும் போது எதார்த்தமாக எழுதப்பட்ட கதையுமான ‘ராஷோமான்’ கதையிலேயே அகுதாகவாவின் படைப்பாளுமை தெளிவாகத் தெரிந்துவிடுகிறது.

ஜப்பானின் தொன்மையும் அதனுடன் மோதும் நவீனமும் மோதிப் பிளக்கும் சுயம் தான் அகுதாகவா. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரமான கியோட்டோவின் கோட்டை நுழைவுவாயில், சிதிலமாகி திருடர்களும் நரிகளும் அனாதைப் பிணங்களும் அடைக்கலம் கொள்ளும் காட்சி சித்தரிக்கப்படுகிறது. அகுதாகவா, கியோட்டோ நகரத்தை சமீபக…

அம்மாவின் நிலவு

'எனக்கு ஞாபகமுள்ள பெளர்ணமிகள்' என்னும் தேவதச்சனின் கவிதையைப் படித்திருக்கிறீர்களா? வேறு வேறு சந்தர்ப்பங்களில் பார்த்த பௌர்ணமி நிலவுகளை, நினைவு கூரத்தக்க அந்த சந்தர்ப்பங்களோடு சேர்த்து எழுதியிருப்பார்.

இரவில் இந்த உலகின் மீது ஒளிபடர விடும் நிலவை, நமக்கு வழங்கப்பட்ட அரிதான பரிசு என்று எப்போதாவது நாம் உணர்ந்திருக்கிறோமா? அதேபோல்தான் அம்மாவும். அவள் இருக்கும் வரை அவளுடைய அபூர்வத்தன்மை நமக்குத் தெரிவதே இல்லை. ஏகபோக உரிமையுடன் மொத்தமாக அவளை உபயோகிக்கிறோம். அவள் நம் வாழ்க்கையை விட்டு நீங்கிய பிறகுதான் தெரிகிறது. அவள் நிலவைப்போல எவ்வளவு அபூர்வம் என்று. காலையில் வெளியே போய்விட்டு வருவதற்குள் பித்துப்பிடித்து, சாப்ளினை நீண்ட தனிமையின் பாதைக்குள் விடும் சாப்ளினின் அம்மாதானே அவருக்குப் பெரிய தூண்டுதல்.

நான், எட்டாவது படிக்கும் போது காலாண்டு விடுமுறையின் அக்குறிப்பிட்ட தினத்தின் இரவில், கடலின் மேல் நான் பார்த்த நிலவு ஞாபகம் வருகிறது. அன்று காலை அப்பா வுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சண்டை. இயல்பானதைவிட அன்று கூடுதல். அம்மா அப்பாவிடம் நிறைய அடிகள் வாங்கியிருந்தாள். இடையில் புகுந்த எனக்கும் அடிகள…

தெரிந்தது அந்த இன்மை - ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ்
அமைதி மற்றும் தெளிவுடன்

இருப்பதை நிலவு அறியாது

மணலும் அறியாது தான் மணல் என்று.

உடனேயோ எப்போதுமோ

எந்த வஸ்துவும் அறியப்போவதில்லை

இங்கு அலாதி வடிவத்தோடு இருப்பதை.

யானைத் தந்தத்திலிருந்து உருவாக்கப்பட்ட காய்கள்

தெரியாத சதுரங்கத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளன

அவற்றை வழிநடத்தும்

கையிலிருந்து, முதல் நகர்த்தலிலிருந்து.

குறுகிய மகிழ்ச்சி நீடித்துறையும் வேதனையாலான

மனிதவிதி

ஒருவேளை இன்னொருவரின் கருவியாக இருக்கலாம்.

நம்மால் அறியமுடியாது.

அதற்கு கடவுளின் பெயரைக் கொடுப்பதும் உதவாது.

அச்சம், சந்தேகம், நம்மால் முடிக்க இயலாத மதியப் பிரார்த்தனை

எல்லாமும் வீண்.

நான் என்ற அம்பை எந்த நாண் விடுவித்திருக்கும்?

அந்தக் கரத்தின் இலக்கு எந்த உச்சமாக இருக்கும்?

சொற்புணர்ச்சி

நான் ஏற்கனவே

உலகுக்கு வந்திருக்கும் ஞாபகத்தின்

ஒரு எச்சம்

மரத்தின் பழுத்த உலர்கிளை

முதிய காகம்

நெடுங்காலம் பயன்படாதிருக்கும்

விருந்துமேஜை

அதன் மீது படரும் துயர ஒளி

என் காதலைப் போன்றது

காலடிகளின் ஓசைக்காக

என் வாசல்கதவு தட்டப்படுவதற்காக

நள்ளிரவிலும் காத்திருப்பவன்

என் சிரிப்பில் சதா ஒளிந்திருக்கும்

அழுகை

என் நண்பன்

என் வீட்டிலிருந்து

தெருவைக் கடக்கும் பாதசாரிகளை

மணிக்கணக்காய்ப் பார்ப்பதில்

ஒரு திருப்தியும் ஏக்கமும்

அவர்களோடு அவளும் போனாள்

அவர்கள் யாரும் என்னை

உடன் அழைக்கவில்லை

அவளும் கூட

000

அப்பாவையும் அம்மாவையும்

எண்ணுகையில்

மணற்கடிகாரம்தான்

என் நினைவுக்கு வருகிறது

அப்பா செயலால் நிரம்பி

மணலைச் சலித்த

மேற்குடுவை

அம்மா அவர் சலித்த மணல் நிரம்பிய

பைத்தியம் படர்ந்த

கீழ்க்குடுவை

இப்போதெனக்கு

இருவர் மீதும்

சமமான அனுதாபமே

இருப்பினும்

என்மீது

அம்மா அதீதமாய் தன்னை விட்டுச்சென்றுள்ளதை

என்னால் மறுக்கவியலாது

தன் புகார்களையும்

நோய் என்றும்

ஞாபகம் என்றும்

அனுதினமும்

பைத்தியம் துடிக்கும்

இந்தக் காயத்தையும்

000

நான் காத்திருந்ததெல்லாம்

மரணத்தின் புணர்ச்சிக்காக

மதுபருக அபூர்வமாய்

வரும் நண்பன் அல்ல

மரண…