ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழில் புதுமைப்பித்தன் , மௌனி , லா . ச . ரா , ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி போன்ற சாதனைச் சிறுகதைக் கலைஞர்களின் கதைகளைக் காதுகளும் சேர்ந்து வாசிக்க முடியும் . நேரடியாகப் பேசிப் பழகாதவர்களும் தங்கள் ஆக்கங்களின் வழியாகக் கேட்கும்படியாகத் தங்கள் குரலைக் கேட்க வைத்தவர்கள் அவர்கள் . ந . முத்துசாமியின் சிறுகதைகள் , நாடகங்கள் , கட்டுரைகளிலும் அவர் குரல் ஆகிருதியுடன் ஒலிக்கிறது . அவர் உருவாக்கிய நடிகர்கள் அவர் குரலாகவே ஒலிப்பதைப் பார்க்க முடியும் . மௌனிக்கான கிராமிய பதில் என்று ந . முத்துசாமியைச் சொல்ல முடியும் . மௌனியைப் போலவே இருபத்துச் சொச்சம் கதைகளே எழுதியிருந்தாலும் , தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் சாதனைகள் என்று சொல்லக்கூடிய சிறுகதைகளை எழுதியவர்களில் ஒருவர் முத்துசாமி . உள் அங்கங்கள் அனைத்தும் இணைத்துப் பூட்டப்பட்ட அழகிய மனோரதங்கள் என்று அவரது சிறுகதைகளைச் சொல்ல முடியும் . ந . முத்துசாமியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘ செம்பனார்கோவில் போவது எப்படி ?’ கதையில் , பண்ணையார் உட்கார...