விஷால் ராஜாவின் ‘ தீக்கொன்றை ’ சிறுகதையில் , “ சில விஷயங்களுக்கு யாரையும காரணம் சொல்ல முடியாது என்பதை அங்கே இருக்கும்போதுதான் கண்டுபிடித்தான் ” என்று ஒரு வாக்கியம் வருகிறது . விஷால் ராஜாவின் கண்கள் மையம் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்று அது . நோய்க்கூறு , வலி , நிச்சயமின்மை ஆகியவையே ‘ திருவருட்செல்வி ’ கதைகளின் மையம் . யாரையும் காரணம் சொல்ல முடியாதவாறு , இக்கதைகளில் கலவரம் தற்செயலாக , தன்னிச்சையாக தொடங்கிப் படிப்படியாக அதிகரித்தபடியே இருக்கிறது . நம்மைச் சூழ்ந்துள்ள ஓயாத கலவரங்கள் மீதான விழிப்பு மற்றும் விமர்சனம் என்று விஷால் ராஜாவின் புனைவுலகத்தை மேலும் விவரிக்கலாம் . தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு அது . படைப்பு வெறும் மொழித் தோரணமாகவும் , புதுமோகமாகவும் , அதிகாரத்தையும் புகழையும் வெற்றியையும் அடைவதற்கான உபாயமாகவும் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில் , படைப்புக்கே சம்பந்தமற்ற லட்சியங்களைக் கொண்டதாக படைப்புச் செயல் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில் , நமது நிகழ்காலம் மீதான , நாம் ஒட்டுமொத்தமாக வந...