Skip to main content

Posts

Showing posts from August, 2023

போலந்து கவிஞர் செஸ்லா மிலோஸுடன் ஒரு நேர்காணல்

  நேர்காணல் செய்தவர் : நதன் கார்டல்ஸ்     இருபதாம் நூற்றாண்டின் மகத்தான கவிஞர்களில் ஒருவர் செஸ்லோ மிலோஸ் . நோபல் பரிசு பெற்றவர் . தீவிரமான மோதல்கள் கொண்ட உலகத்தில் வாழ விதிக்கப்பட்ட மனிதனின் குரல் என்று நோபல் பரிசுக் கமிட்டியின் குறிப்பு இவரது கவிதைகளைப் பற்றித் தெரிவிக்கிறது . மனம்நிறை கவனம்தான் இவரது சமயத்துவம் என்பதை இந்த நேர்காணல் மூலம் தெரியப்படுத்துகிறார் .   கேள்வி : உங்கள் கவிதைத் தொகுப்பில் கதேயின் மேற்கோள் ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் . “ நலிவின் காலகட்டங்களில் , எல்லா மனப்போக்குகளும் தன்னிலை சார்ந்ததாக இருக்கும் ; ஒரு புதிய சகாப்தத்துக்கான கனிதல் ஏற்படும்போது அனைத்து மனப்போக்குகளும் புறநிலையில் இருக்கும் ” . உங்களைப் போன்றே கதேயும் புறநிலைக் கலையைப் பாராட்டுகிறார் . கற்பனாவாதப் போக்குக்கு செவ்வியல் காலம் வழிவிட்ட கதேயின் காலகட்டத்திலேயே இசையில் புறநிலை ஒழுங்கு குலைந்தது என்றும் நீங்கள் கருத்து தெரிவித்திருக்கிறீர்கள் . புறநிலைக் கலை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதை விவரிக்க இயலுமா ?