கோணங்கி, தமிழ் சொல்கதை மரபின் லட்சணங்கள் அனைத்தையும் சூடிக்கொண்ட நவீன கதை சொல்லி . ‘ மதினிமார்கள் கதை’ மூலம் கரிசலின் உணர்வு மூட்டங்களை மந்திர மொழியில் சொன்ன சிறுகதைக் கலைஞர் . பாழி , பிதிரா , த என்ற மூன்று நாவல்களைத் தொடர்ந்து ‘நீர் வளரி’ என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இந்தப் பேட்டி எடுக்கப்பட்டது . இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்த இந்த நேர்காணலின் விரிவான வடிவம் இது... ஒரு கதைசொல்லியை உங்களிடம் கண்டுகொண்ட பின்னணி , காலத்தைச் சொல்லுங்கள்... விளாத்திகுளத்திலிருந்து வந்த ச . ஜோதிவிநாயகத்தின் தேடல் சிற்றிதழில் ‘கருப்பு ரயில்’ சிறுகதை பிரசுரமானது . அப்போது என் வயது இருபது . அதைப் படித்து உற்சாகமான எழுத்தாளர் வண்ணநிலவன் , ஜோதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து சிறுகதைக்கான தீவிரமான சுழற்சியை உள்ளுணர்வாகப் பெற்றேன் . மெல்ல நாடோடியாய்ச் சுற்ற ஆரம்பித்த என்னை வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ கதை கட்டிப்போட்டது . அதிலுள்ள இருட்டைத் தொட்டு ‘இருட்டு’ கதையை எழுதினேன் . இப்படி இழுத்துச் சென்றதில் எல்லாம் பெரும் சுழற்சியாய் கதைகள் பல்வேறாக உள்ளே சுழலத் தொடங்கிவ...