Skip to main content

Posts

Showing posts from August, 2022

டெசர்ட் ரோஸ்

  அமாவாசை தினங்களில் சாப்பிடும் உளுந்த வடைகளில் அம்மா அவளது ருசியாக எப்படியோ அவற்றில் இறங்கிவிடுகிறாள் அவள் உப்பில் தரிக்கிறாளா உப்பின்மையிலா? அவள் இங்கிருந்து கிளம்பிப் போன அன்று என் வீட்டில் வளர்க்கும் டெசர்ட் ரோஸ் பூப்பதை நிறுத்தியது மண்சத்தா சூரியனின் ஒளிச்சத்தா அவள் தந்துவந்த நிழல் சத்தா எந்த ஊட்டம் குறைந்ததென்று   தெரியவில்லை ஏன் எனது டெசர்ட் ரோஸ் மீண்டும் பூக்கவேயில்லை தொட்டியை இடம் மாற்றி தற்போது வைத்திருக்கிறேன் டெசர்ட் ரோஸை மீண்டும் எப்படியாவது பூக்க வைக்க வேண்டும் நேற்று முன்மதியம் ஒரு கருப்பு வண்ணத்துப்பூச்சி அதன் இலைகளின் மேல் பறப்பதைப் பார்த்தேன் அது நற்சகுனமா தீச்சகுனமா மார்க்வெஸுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நான் செடிக்கு மட்டுமா தினசரி நீர் ஊற்றுகிறேன். இரவில் நான் உறங்கும் அறையின் சுவரில் தன் இலைகளின் உருவைப் பெருக்கி படர்த்துகிறது    அதற்கும் தானே நீர் ஊற்றுகிறேன். அம்மா உனக்குத் தெரிந்திருக்கலாம் தாம் மட்டுமே அலையும் இடமாக பூனைகள் விதானங்களை எப்போது ஆக்கிக் கொள்கின்றன?  

சல்மான் ருஷ்டியின் தனிமைவாசம்

  பெரும்பான்மைவாதம், மத அடிப்படையிலான கொடுங்கோன்மை, சர்வாதிகாரம் அனைத்தும் கொள்ளை நோய்கள் தான். இந்தக் கொள்ளை நோய்கள் தொடரும்வரை அதனால் பாதிக்கப்பட்டவர்களும் இருந்துகொண்டே இருப்பார்கள். எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு அந்தக் கொள்ளை நோய் சக்திகளுடன் இணையாமல் இருப்பதும் நம்முடைய  விருப்பின்பாற்பட்டதுதான் என்றும் நம்மை எச்சரிக்கிறார் ஆல்பெர் காம்யூ. கொள்ளை நோய் போன்ற சக்திகளுடன் இணையாமல் வாழ்வதென்பது அத்தனை சுலப சாத்தியமல்ல என்றாலும் அதுவே உண்மை என்றும் சொல்கிறார் காம்யூ. மார்க்வெஸ் பற்றிய எழுதிய ஒரு கட்டுரை தவிர, சல்மான் ருஷ்டியின் புனைவெழுத்தில் ஒரு வாக்கியத்தைக் கூட நான் வாசித்திருக்கவில்லையாயினும், அவரது கல்லீரலில் கத்திக்குத்தித் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த இரவிலிருந்து, இரண்டு நாட்கள் அந்த வலியை நானும் உணர்ந்தேன். உச்சபட்சப் புகழிலும், சௌகரிய நிலையிலும் கூட,  அநாதை வாசத்திலிருந்த ஒரு எழுத்தாளனுக்கு நிகழ்ந்திருக்கும் தாக்குதல், என் போன்ற எல்லா உயிர்கள் மீதும் நிகழ்த்தப்பட சாத்தியமுள்ளதுதான். கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்

அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு - ஆஹா சாகித் அலி

  1. மினாரெட் புதைக்கப்பட்ட   ஒரு நாட்டுக்கு நான் திரும்பியிருக்கிறேன் களிமண் விளக்குகளின் திரிகளை கடுகெண்ணெய் கொண்டு நனைத்து கோள்களில் கீறப்பட்டுள்ள செய்திகளை வாசிக்க ஒவ்வொரு இரவும் யாரோ ஒருவன் மினாரெட்டின் படிகளில் ஏறிச்செல்கிறான். தொலைந்து போன முகவரிகளைக் கொண்ட கடிதங்களின் சேகரத்திலிருந்து தபால் வில்லை ஒட்டப்படாத கடிதங்களை அவனது விரல் ரேகைகள் ரத்து செய்கின்றன ஒவ்வொரு வீடும் புதைக்கப்பட்டு விட்டது அல்லது காலியாக இருக்கிறது காலியாக? ஏனெனில் நிறைய பேர் தப்பினார்கள், ஓடினார்கள் சமவெளிகளில் அகதிகளானார்கள் இப்போது அவர்களுக்கு ஒரு பெரும் பனிப்பொழிவு மலைகளைக் கண்ணாடியாக மாற்றவேண்டும் அவர்களுக்கு. நம்மை அவர்கள் அதனூடாகப் பார்ப்பார்கள் சுவர் போலச் சூழும் நெருப்பிலிருந்து காக்க வீடுகளைத் தரையில் புதைப்பதை. ராணுவ வீரர்கள் பற்ற வைக்கிறார்கள் தணல்களை ஊதிப் பெருக்குகிறார்கள் எம் உலகத்தை சட்டென்று பற்றும் காகிதக்கூழ் பொம்மையாக்குகிறார்கள் தங்கம் பதிக்கப்பட்ட காகிதக்கூழ் பொம்மைகளாக ஆக்குகிறார்கள் பின்னர் சாம்பலாக்குகிறார்கள். தொழுகைக்கு அழைப்பவர் இறந்தபிறகு எல்லா அழைப்புக

நினைவின் குற்றவாளி நகுலன்

தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்டப்பட்டது. லௌகீகம், மதம் மற்றும் அரசு போன்ற அமைப்புகள் காலம்தோறும் மனிதனை வடிவமைக்கவும், கட்டுப்படுத்தவும், வரையறை செய்யவும் முயன்றுகொண்டே இருக்கின்றன. ஆனால், இவ்வமைப்புகள் தங்கள் நோக்கத்திற்கேற்ப வரையும் மனிதச்சித்திரம் மட்டுமல்ல அவன். தமிழ் நாவல் பரப்பில் பெரும்பாலும் மனிதர்கள் பேசப்பட்டிருப்பது மேற்குறிப்பிட்ட வரையறையின் மீறாத நிலைமைகளில்தான். ஸ்தூலமான நிகழ்வுகள்,வெளிப்பாடுகள், முடிவுகளைக் கொண்டு ஒரு தன்னிலையை, அதன் செயலை வரையறுக்கும் பழக்கத்தை பொதுப்புத்தி உருவாக்கி வைத்துள்ளது. இதிலிருந்து மாறுபட்டு பொருள்கள் மற்றும் உயிர்கள், அவை தொடர்பு கொண்டிருக்கும் சூழலின் மறைதன்மையை சுட்டிப் புலப்படுத்துவதாய், அதன் அகமுகத்தை வரைவதாய், ஒரு பார்வைக் கோணம் நகுலனின் புனைவுகளில், ஒரு விசித்திர அனுபவத்தைச் சாத்தியப்படுத்துகிறது. நகுலன் இவ்வனுபவத்தை திண்ணமான கதை உருவோ,கதாபாத்திரங்களோ இன்றி சாத்தியப்படுத்துகிறார். அவரது எழுத்துகளில் தொடர்ச்சியாய் இடம்பெறும் பூனை

மனதின் பைத்திய நிழல் சுசீலா

நகுலனின் முதல் நாவலாக பிரசுரமான 'நிழல்கள்'-ல் நவீனனுக்கு, வாழ்க்கையைப் போதித்துவிட்டுச் செல்லும் சாரதி, கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானிடம்' நாவலில் வரும் கிட்டாவைச் சற்றே ஞாபகப்படுத்தினாலும் அத்தனை வல்லவன் அல்ல; அதேவேளையில் காசியபனின் கணேசனைப் போல 'அசடு'ம் அல்ல. இந்திய அளவிலும் தமிழிலிலும் நவீன இலக்கியத்தை, தங்களது பிரதான அடையாளமாகத் தெரிந்தெடுத்த பெரும்பாலான பிராமண எழுத்தாளர்கள் எப்படி தங்கள் மரபை உள்ளடக்கமாக, குடும்பத்தைக் கதைப்பொருளாகக் கொண்டு எழுதினார்களோ  அந்த இடத்திலிருந்துதான் நகுலனும் 'நிழல்கள்' என்னும் முதல் படைப்பைத் தொடங்குகிறார். ஆனால், அவர் கடைசியில் வந்து நின்ற இடம் தொடங்கியதிலிருந்து ரொம்பத் தூரம் என்பதுதான் நகுலனின் தனித்துவம்.     பிராமண லட்சணம் சிறிதுமின்றி இருக்கும் தறுதலை குடிகாரத் தந்தை, அவரிடம் ஆட்பட்டுக் கிடக்கும் அம்மாஞ்சி அம்மா, தூரத்துக்குத் தொலைந்துபோய்விட்ட சகோதரர்கள், விதவைகளாகி வீடு திரும்பிவிட்ட சகோதரிகளின் பின்னணியில் தனக்கென்று அடையாளத்தை உருவாக்க, ஏற்கெனவே உள்ள அடையாளத்தை அழிக்க திருடி, பட்டிணம் போய், தலைமறைவாக கோயில்ப

நான் பிறந்த க-வி-தை : 3 சாவின் சுவை நகுலன்

(பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம்.அத்துடன் கவிதை சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்ளவும் செய்வேன். குறுந்தொகையிலிருந்து இத்தொடரைத் தொடங்குகிறேன் .அம்ருதா மாத இதழில் மாதம்தோறும் வெளியாகி வருகிறது.) பிறந்து உலகின் விவரங்கள் சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கிய நாள் முதலாக மரணத்தைப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் மரணங்களைப் பார்ப்பதன் வழியாக மரணத்தை நாம் உணர்வதில்லை; ஒவ்வொரு மரணத்தையும் சுற்றி இருக்கும் உயிர்ப்பை, உயிர்த் தன்மையை, உயிர்கள் தான் நம் கண்களுக்குத் தெரிகிறது. இங்கே ஒருவர் இறந்து ஒருவர் இருக்கும் குரூரத்தின் உயிர்ப்பைத் தான் பிறரின் மரணத்தில் அனுபவிக்கிறோம். இறுதிச் சடங்குகளில் சவப்பெட்டியோடு சணலில் கட்டப்பட்டு பயணிக்கும்  பறவை துள்ளி சவ வண்டியில் அலைவதைப் போன்ற உயிர்ப்பைத்தான் ரகசிய ஆசுவாசத்தைத் தான் நமக்கு இன்னொர

நகுலனின் 'அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி' : தோற்றம் மறைவு என்னும் விவகாரங்கள்

ஓவியம் : சுந்தரன். என் நகுலனின் முதல் படைப்பு என்று சொல்லப்படக்கூடிய 'அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யை ஒரு குட்டி நாவல் என்றும் குறுங்காவியம் என்றும் நம்மால் சொல்லமுடியும்.  கடைசியில் பிரசுரமானது.  நகுலனின் ஒட்டுமொத்த உலகமென்று நாம் உருவகிக்கும் பண்புகள், தன்மைகள், வஸ்துகளை  பூரணமான சிற்றண்டங்களாக மிகச் சிறிய படைப்புகளிலும் விட்டுச் சென்றவர் அவர். ‘அந்த மஞ்சள் நிறப்பூனைக்குட்டி'-யிலும் நகுலன் தன்மை முழுமையாகவும் தீவிரமாகவும் பரவியுள்ளது.  வாழ்வின் அந்தத்தில் தான் கழித்த நாட்களை அசைபோடுவதில் ஆரம்பிக்கிறது இந்தக் குறும்படைப்பு. தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மை இல்லாத அசைபோடுதல்; ஆனால், புதுப்புதுக் கண்டுபிடிப்புகளும், ஒலியும் அமைதியும் சேர்ந்து சன்னதம் புரியும் வாக்கியங்களோடு நம்மை ஈர்க்கின்றன. பேசுவது போல எழுதிய தன்மைகளோடு கூடிய உரையாடலை தொடர்ச்சி, நேர்கோட்டுத் தன்மையின்றி அர்த்தம் நடுநடுவே விடுபட்டுப் போனாலும், இசைமை இருப்பதால் போதையுடன் தொடர்கிறோம். மனமும், அதன் நினைவுகளும், எண்ண ஓட்டமும் தொடர்ச்சியானதோ நேர்கோட்டுத் தன்மை கொண்டதோ அல்ல. அவன் இயங்கும் காலங்களும் கூட. அவன் மனம்

அருவம் உருவம் நகுலன் 100

ஓவியம் : சுந்தரன். எம் இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன இலக்கியத்தில் தனித்துவமான எழுத்துக் கலைஞர்களில் ஒருவரான நகுலனுக்கு இது நூற்றாண்டு. நகுலனின் நூற்றாண்டை முன்னிட்டு 'அருவம் உருவம் நகுலன் 100’ என்ற நூல்தொகுப்பு ஒன்றை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொண்டுவர உள்ளோம். பல்வேறு தயக்கங்கள், ஒத்திப்போடல்களுக்குப் பிறகு  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கவிஞர் சபரிநாதனையும் கவிஞர் வே. நி. சூர்யாவையும் தார்மிகத் துணையாகக் கொண்டு நகுலனுக்கான நூற்றாண்டு நூல் தொகுப்பைக் கொண்டுவரும் வேலைகளை மெதுவாகத் தொடங்கினேன்.  இதுவரை  தொகுக்கப்படாத நகுலனின் சில சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை, கவிதைகளின் மொழிபெயர்ப்பு, நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் படைப்பாளிகளின் கட்டுரைகள் ஆகியவை இந்த நூலில் இடம்பெறும். நூல்வனம் பதிப்பகத்தின் வெளியீடாக மணிகண்டன் இந்தப் புத்தகத்தைக் கொண்டுவருகிறார். 000 தனிமனிதனின் வெற்றி, புகழ், வெளிச்சம், அவை சார்ந்து திரளும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பும், கும்பல்வாதமும் அதனால் ஊக்கம்பெற்ற தொழில்முனைவும் தீவிர இலக்கியத்திலும் கலை - பண்

நகுலன் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இணையும் அருவம் உருவம் நகுலன் 100

  கிட்டத்தட்ட பதினைந்து மாதங்களாக மனத்தை ஆக்கிரமித்திருந்த அருவம் உருவம் நகுலன் 100 புத்தகப்பணி அருமையான வகையில் நிறைவடைந்திருக்கிறது. படிப்பவர் கைகளில் வைத்திருப்பதற்கு மிருதுவாக, கண்ணுக்கும் விருந்தாக, இந்த நூலை அழகிய கலைப்படைப்பாக நூல்வனம் மணிகண்டன் பதிப்பித்திருக்கிறார். ஒரு தொகுப்பாளனாக எனது குறைகள் அத்தனையையும் நிறைசெய்தவர் நூல்வனம் மணிகண்டன் தான். உள்ளடக்க ரீதியாகவும் அவரது பணி நிறைய. அவருக்கு முதன்மையான நன்றி. மனுஷ்ய புத்திரன் 1997-ல் எனக்கு எழுதிய இன்லாண்டு கடிதத்தில் மேற்கோள் காட்டியிருந்த கவிதையின் வழியாகத் தீவிரமாகத் தொடங்கித் தொடரும் நகுலனுடனான உறவின் மிக முக்கியமான கட்டம் அருவம் உருவம் நகுலன் 100. நகுலன் நூற்றாண்டில் அவருக்கு ஒரு மலர் போன்ற ஒரு நூல்தொகுப்பைத் திட்டமிடலாம் எனத் தோன்றியது, 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில். இதுபோன்ற தொகுப்புப் பணிகள் செய்வது எங்கேயோ உயிரை வருத்தும் காரியம் என்பதால் அதைத் தள்ளித் தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தேன். 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், வேளச்சேரி அரசு நூலகத்துக்கு அருகே நானும் சபரிநாதனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அதைச் செய்துவி

ஒவ்வொரு எறும்பும், ஷேக்ஸ்பியரைப் போல அல்லது வால்ட் விட்மனைப் போல - ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்சின் கடைசி நேர்காணல்

  ஞானக்கூத்தன் தனது வாழ்வின் சாயங்காலத்தில் எழுதிய கவிதைகளில் 12 வயதுச் சிறுவனின் களங்கமின்மையும் விந்தையும் சிரிப்பும் கூடிவந்தது. அவரது முந்தைய முத்திரைகளாக இருந்த விஷமமும் குத்தலும் நீங்கிய கனிவை அந்தச் சிறுவன் பெற்றிருந்ததை ‘பென்சில் படங்கள்’, ‘இம்பர் உலகம்’ கவிதைத் தொகுதிகளில் காண முடிந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் , இறுதியாக அளித்த நேர்காணலை வாசித்தபோது ஞானக்கூத்தனின் அந்த இயல்புதான் ஞாபகத்துக்கு வந்தது. ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ் சின் விந்தை, அநிச்சயம், நகைச்சுவை, பரிவு, நெகிழ்ச்சி, நிறைவை வெளிப்படுத்தும் முழுமையான நேர்காணல் இது. 12 ஆண்டுகள் உடன் வாழ்ந்து மறைந்த செல்லப் பூனை, காதல்கள், அம்மாவின் மீது இறுதிவரை கொண்டிருந்த பிரியம் என எல்லா ரசங்களும் வெளிப்படும் நேர்காணல் இது. லோபஸ் லெக்யூப்க்கு இந்த நேர்காணலை அளித்துள்ளார்.   பார்வையின்மை தொடர்பான பேச்சிலிருந்து அந்த நேர்காணல் தொடங்குகிறது. பார்வையிழப்பு ஏற்பட்டவுடன் அவரிடம் மிஞ்சியிருந்த ஒரே நிறம் என்று மஞ்சளைக் குறிப்பிடுகிறார். தான் அறிந்த முதல் வண்ணம் என்று மஞ்சளைக் குறிப்பிட்டு அதை மிருகக் காட்சி சாலையில் புலிகளிடம் பார்த்ததாக ந

போர் என்னும் போதை - ஹர்ட் லாக்கர்

  ஈராக் போர் சார்ந்து பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் தனியான அனுபவத்தைக் கொடுத்த திரைப்படம் ‘HURT LOCKER’. இஸ்லாமியத் தீவிரவாதம் சார்ந்த அமெரிக்க தரப்பிலிருந்து பேசும் படைப்புகளில் ஒன்றுதான் ஹர்ட் லாக்கர் என்றாலும், போர்க்களத்திலேயே அபாயகரமான பணியான வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் மூன்று வேறுபட்ட ஆளுமையையும் குண இயல்புகளையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைக் களனை நெருங்கிக் காண்பித்த படைப்பு என்பதால் திரைப்பட வரலாற்றில் முத்திரை படைத்த படைப்பு இது. சமீபத்தில்   ‘HURT LOCKER’ திரைப்படத்தின் திரைக்கதைப் புத்தகம் எனக்குப் படிக்கக் கிடைத்தபோது, அந்தப் படத்தின் திரைக்கதையை தனது சொந்த கள அனுபவத்திலிருந்து எழுதிய பத்திரிகையாளர் மார்க் போல்-ஐத் தெரிந்துகொண்டேன். 2004-ம் ஆண்டின் குளிர்காலத்தில், உலகிலேயே வசிப்பதற்கு அபாயகரமான பிராந்தியங்களில் ஒன்றான பாக்தாத்தில், போர்ச்சூழல் சார்ந்த நேரடி அனுபவங்களைப் பெறுவதற்காக மார்க் போல் தனது பயணத்தை மேற்கொண்டார். ராணுவத்திலேயே அதிகம் கவனிக்கப்படாத பிரிவான வெடிகுண்டுகளைச் செயலிழக்க வைக்கும் எக்ஸ்ப்ளோசிவ் ஆர்டினென்ஸ் டிஸ்போசல் டீமின்(EOD