சென்ற நூற்றாண்டு பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நான் யார் என்று கேட்டு வெங்கட்ராமன் என்னும் சிறுவன் வந்து நின்ற அதே கோயிலுக்குள் தான் அன்றிரவு வந்து நின்றேன். அவன் நுழையும்போது, வெளியில் உள்ள பித்தளைப் பாத்திரக் கடைகள் இருந்திருக்காது. நான் உள்ளே நுழைந்த பிறகும் வெளியில் உள்ள உலகமும் காலமும் மறைந்துபோய்விட்டது. கரையான்களும் எறும்புகளும் கடித்து மண்ணோடு மண்ணாக ஒட்டி அழுகிய தசையோடு, நிஷ்டையில் அந்தச் சிறுவன் இருந்த பாதாள லிங்கம் இருக்கும் ஆயிரம்கால் மண்டபம் தெரிகிறது. நான் பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள மண்டபத்தின் முன்னர் நின்றேன். உள்ளே நுழைந்ததும் தென்பட்ட முருகனின் சந்நிதியில் விபூதியை நெற்றி முழுக்கப் பூசி எனது நோய் இங்கே இப்போதே குணமாகிவிட வேண்டுமென்ற உன்மத்த வெறியுடன் தான் இந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்திருந்தேன். பிரிவு நேரும் என்று அறிந்தே வந்த உறவென்றாலும், உறவின் போது சந்தோஷமும் குற்றவுணர்வும் ரகசியமும் சுமையும் சேர்ந்து மூச்சு முட்டினாலும் அவளைப் பிரியும் கணத்தில் தான் பிரிந்தவளின் மகத்துவம் எனக்குத் தெரியத் தொடங்கியது. பிரிவு நோயாகியது. சேர்ந்திருந்த...