வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்துக்கான கடை திறக்கப்பட்ட பின்னர் பழக்கமான நண்பர் கவிதைக்காரன் இளங்கோ. அவரது நாவல் படைப்பான ‘ஏழு பூட்டுகள்’-ஐ முழுமையாக மதிப்பிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். திடமான, உள் இணைப்புகள் கொண்ட கதை, கதாபாத்திரங்கள், மனித இருப்பின் அறியப்படாத அம்சங்கள் புலப்படும் ஓர் மையம் என்று நாவல் வாசிப்பு சார்ந்து நான் வகுத்திருக்கும் குணங்களைச் சோதனைக்குள்ளாக்கும் படைப்பு இது. அத்துடன் தமிழின் தற்காலப் புனைவில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்து முக்கியமான சாதனைகளோடு நிலைநிறுத்தப்பட்ட நவீன தமிழ் புனைகதை எழுத்து மரபின் சாயல்களே இல்லாத அபூர்வக் கதையினம் ஒன்று தோன்றியிருப்பதையும் ‘ஏழு பூட்டுக்கள்’ நாவல் வழியாக தெரிந்துகொள்ள முடிந்தது. கவிதைக்காரன் இளங்கோவின் எழுத்து மரபென்று பார்த்தால் சுஜாதா மட்டுமே தெரிகிறார். சென்ற நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் உருவான வெகுஜன பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளின் மொழி, உரையாடல் பாணியை இளங்கோ சுவீகரித்திருக்கிறார். ஆனால், அவரது தளத்தை வெகுஜன எழுத்துத் தளமென்று சொல்ல...