Skip to main content

Posts

Showing posts from November, 2019

அன்புக்கு எத்தனை கால்கள்

இரண்டு கால்கள் நான்கு கால்கள் பதினாறு கால்கள் கொண்ட அன்பை இங்கே நான் எப்படிப் பாதுகாத்துப் பராமரிப்பேன் ? ஒரு முக்காலி போடும் அளவே இடமுள்ள கிரகத்தில் கூட குட்டி இளவரசனால் தனது நேசத்துக்குரிய ரோஜாவை ஒரு ஆட்டின் துர்வாயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை எனும்போது … நான் எப்படி என் அன்பைப் பாதுகாத்துப் பராமரிக்கப் போகிறேன் ? முந்தின தினத்தின் முடிவில் முளைத்திருந்த களைகளையெல்லாம் புன்னகையுடன் பிய்த்தெறிகிறேன் நீர் ஊற்றிய பிறகு என் விரலின் நுனியால் அதன் தலையைத் தட்டிக் கொடுக்கிறேன் வீட்டுக்கு வெளியே வழிகள் நீள்வது புதிராவது அங்கே மனிதர்கள் அன்னியர்கள் என்பதால் வாசல் கதவை நன்றாகப் சாத்திவைக்கிறேன் காகிதம் பிளாஸ்டிக் குப்பை உலோகங்கள் உணவு எதையும் பிரித்துப் பார்க்க என் அன்பின் நாவுக்குத் தெரியாது குனிந்து குனிந்து தரையில் பொறுக்கியபடியே நடக்கிறேன் காலிடுக்கில் ஒரு உடைந்த பிளேடைப் பார்த்து எடுக்கும்போத

பைரவ பிச்சாடனர்

இரண்டு ஆசாமிகளும் சிவ மூர்த்தங்கள்தான் ஒருவன் துளியிலிருந்து முளைத்தவன் பிந்தையவனோ சிவனையும் துறக்க தோஷம்பிடித்து அலைந்தவன் அதனால் தான் அவன் கையில் துள்ளிய மான் கீழே இறங்கியது பிச்சாடனரின் கை அருகம்புல்லை கவ்வத் துள்ளும்போது பைரவரின் நாயாகி விடுகிறது பைரவரின் நாய் இப்போதும் பிச்சாடனரின் மான் ஆவது சொல்லாமல் விடுபட்டது பைரவர் கை இறைச்சியைத் தொடரத் தொடங்கியபோதுதான் நாயுடன் தொடங்கியிருக்க வேண்டும் எமது சகவாசம் இரைக்குத் துள்ளும் கணத்தில் நாய் மான் மான் நாய் . பைரவர் கையில் அருகம்புல் பிச்சாடனர் கையில் இறைச்சி நாய்கள் மான்கள் உயிர் துள்ளும் அழகு உயிர் துள்ளும் கலை உயிர் துள்ளும் அறிவு உயிர் துள்ளும் விடுதலை பசி என்று பெயர் கொண்டது பசி என்று பெயர் கொண்டது பசி என்று பெயர் கொண்டது . ( ந . ஜயபாஸ்கரனுக்கு )

ஆள் பார்ப்பதில்லை அபாயம்

முல்லா ஆசிரியராகப் பணியாற்றும் பள்ளிக்கூடத்துக்கு  ஒரு பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை    அழைத்து வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று முல்லாவிடம் வேண்டினாள். முல்லா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமானார். மேலும் கீழும் தங்குதங்கென்று குதிக்கத் தொடங்கினார். திடீரென்று வகுப்பை விட்டு வெளியே ஓடினார். அந்தப் பெண்மணிக்கோ மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லா வருவதற்காகக் காத்திருந்தார். முல்லா சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல!’ என்றார். ‘ அம்மணி . நானே எத்தனை பயந்துபோனேன் என்பதை நீங்கள் பார்க்கத் தானே செய்தீர்கள் . ஒன்று நம்மை அச்சுறுத்தும்போது , அது ஆளையா பார்க்கிறது ?’

கற்பனையின் சாத்தியங்களைச் சொல்லும் ஹாக்கிங்

அவன் சிறுவனாக இருந்தபோது, பொருட்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதில் பேராவல் கொண்டிருந்தான். கையில் கிடைப்பதை அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி அதன் இயக்கத்தைப் பார்ப்பதில் அவனுக்கு விருப்பம் அதிகம். அவன் வளர்ந்தபிறகும் தன் வேலையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால் அந்த வேலையின் வீச்சு வேறு. பொம்மை ரயில்களை உடைக்காமல் பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வெற்றியும் கண்டான். அவன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். பிரபஞ்சத்தின் தோற்றம், கருந்துளைகள், காலம்-வெளி தொடர்பான சில புதிர்களுக்கு விடையளித்தவர்; அறிவியல் மீது சாமானிய வாசகர்களிடமும் ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் ஸ்டீபன் ஹாக்கிங். சமீபத்தில் மறைந்துபோன அவரது இறுதி நூல் ‘ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்’. கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? மனிதனைத் தவிர அறிவார்ந்த உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? உள்ளிட்ட பத்து முக்கியமான கேள்விகளுக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்துள்ள ஆழமான பதில்கள் தான் இந்த நூல். இளம் தலைமுறையினர், மாணவர்கள், குழந்தை

ஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்

ஒரு பூனையை தொலைத்தல் ! தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள். உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சி: நாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்ட