Skip to main content

Posts

Showing posts from November, 2016

நள்ளென் றன்றே யாமம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் 
 நள்ளென் றன்றே யாமம்  சொல்லவிந்து சடலங்களாய்  பேருந்தில்  உடல்சுருட்டியடங்கினர் மக்கள்  இருட்டில் முனகும் சல்லாபப் பாடல்கள்  உதிர்ந்து வரும் திருவள்ளுவர் சித்திரம்  பொன்மொழிகள்  அதிகாலையில் இறங்கவிருக்கும் நகரம் குறித்த நினைவு  எதுவுமல்ல  ஆம்  உண்மைதான் பதுமனார் அவர்களே பற்றித் தள்ளும் விருப்பும் வெறுப்பும்  அலைக்கழிப்புகளும் அல்ல  உறக்கமும் பனியும் தான்  அவர்களைத் தாயென கதகதப்பாக  தற்காலிகமாகப் போர்த்தியிருக்கிறது.     

புனிதச் சிப்பி

ஷங்கர்ராமசுப்ரமணியன்

கடலடியிலிருந்து மீன்களோடு கரைக்கு வந்து வலையோடு வெளியே எறியப்பட்ட சிப்பி நீ தனக்கென்று தனிவிருப்பமில்லாத உன் உடலில் கடலின் நிணம் கறையாகச் சிவந்திருக்கிறது கடலின் காதல் சுவடுகளும் உனது முதுகில் அழகிய  சமச்சீர் வரிகளாக பறவை மூக்கென இறங்கிக் குழிந்துள்ளன. கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி இப்போது உலகின் விருப்பத்துக்கு வீசப்பட்டு இந்த வெயிலில் உன்னை ஒப்புக்கொடுத்து யாருக்கோ எதற்கோ காத்திருக்கிறாய். அதனால்   நீ புனிதச்சிப்பி.

ஆனந்தா 2.0

ஷங்கர்ராமசுப்ரமணியன்
பிரமாண்டமான 
ஒரு பச்சை முட்டையைக் கொத்தி வெளியே வருவதைப் போல கழுத்தைச் சிலுப்பி மரத்திற்குள்ளிருந்து கிளைகள் நடுங்க வந்து நிற்கிறது வெள்ளைக் கொக்கு அது இருட்டில்தான் ஜனித்தது தெரியாத தெய்வத்தின் கரங்களை நம்பி     அது காத்திருந்தது அதுதான் தற்போது தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி கண்கள் பறிக்க உயிர்கோஷம் இடுகிறது ஆனந்தா.

ஆனந்தா

ஷங்கர்ராமசுப்ரமணியன்
 ஆனந்தா என்றேன்  பிறந்தவையும் ஆம் என்றன  இன்னும் பிறக்காதவையும்  ஆம் ஆம்  என்கின்றன.
 000


தமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்

நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள்
நீர் ஊற்றிச் சேர்த்து
உருட்டிப் பிசைந்து
உங்கள் மூர்க்க பலத்தால்
அடித்துத் துவைத்தெடுங்கள்
பாலியஸ்டர் துணிபோல்
என்னை நெகிழ்வாக்கி
நீட்டி விசிறியடித்து
காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக
மேஜையில் அடுக்குங்கள்.
அப்போது கடவுள் போல்
நான் ஒளிர்வேன்.
பின்னர் மீண்டும் தட்டி மடித்து
வட்ட சதுர முக்கோணங்களாக
எண்ணைய் கொதிக்கும்
வாணலியிலோ
கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள்
உங்கள் அரும்பசிக்குச் சுவையான
உணவாய் நான் மாறுவேன்...
உங்கள் வரலாறு
மூர்க்கம்
ஆசைகள்
காமம்
மூட்டம்
வலி
அரசியல்
துயரங்கள்
நெருக்கடி
உழைப்பு
உங்கள் மாமிசமும் சேர்ந்த
குழம்பில்
நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும்
மடிப்புமடிப்பாக
தூள்தூளாகக் கரைந்துபோகக்
காத்திருக்கும்
தமிழ் புரோட்டாதான்
நான்.

சிரிக்கத் தொடங்கும் யாளிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

முன்னம் பழைமையிலிருந்தும்மீண்டும் நம்மை, நமது வாழ்வைப் பரிசீலிக்க ஆரம்பிக்கலாம். பழையதென்றும் மரபென்றும் தளையென்றும் மெய்யியலென்றும் மதமென்றும் சடங்கென்றும் நாம் ஒதுக்கியதில் இன்றை, இப்பொழுதை உயிர்ப்பிக்கும் வஸ்துகள் ஏதாவது மிஞ்சியுள்ளதா? இன்றைக்கான குணமூட்டியோ, எதிர்காலத்திற்கான தீர்வோ இருக்கிறதா என்றும் பார்க்கலாம்.
‘காலடியில் ஆகாயம்’தொகுதியில் ஆனந்தின் சிறந்த கவிதைகளில் ஒன்றான ‘எல்லாமும் எப்போதும்’கவிதையில் கவிதைசொல்லி மண்ணுக்குள் போகிறான். மண்ணுக்குப் போனபின்பு உளிச்சத்தம் கேட்க மேலும் அடியில் செல்கிறான். அவனது பாட்டன் ஒரு சிலையை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். அது அவனது சிலையாக இருக்கிறது. மேலும் கீழே செல்கிறான் கவிதைசொல்லி, அங்கே சிற்பியாக கொள்ளுப்ப்பாட்டன் அமர்ந்திருக்கிறார். அங்கே பாதி செதுக்கப்பட்ட அவனது சிலை இருக்கிறது. மேலும் இறங்க இறங்க கடைசியில் கவிதை சொல்லியே சிலை செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிறான். அந்த நான், செய்து கொண்டிருந்தது கவிதை சொல்லியின் மகனுடைய சிலை.
ஆனந்த் உருவாக்கியிருக்கும் இளவரசி கவிதைகள் நம் மண்ணுக்குள் புதையுண்டு போனவற்றைத் தேடிப் போவ…