Skip to main content

Posts

Showing posts from March, 2013

மழை

 ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு கொடும் வெயில் நாள் தன் முடிவில் மழையால் கனிவது ஒரு முரண்நகை சற்று அபத்தம். இந்த நீண்ட கோடையின் கோராமை தாங்காது சற்றுமுன் தற்கொலை செய்தவனின் உடலை மழை நனைக்கிறது நீ வெயில்கால வீட்டிலேயே இருப்பதாகவும் நான் மழைக்கால வீட்டிற்கு நகர்ந்திருப்பதாகவும் நினைப்பது ஒரு தோற்றம் தான் உடை விலகும் அச்சமின்றி நீ கைகளை உயர்த்தி சுதந்திரமாய் கூந்தலை அள்ளி முடிக்கலாம் என் காமம் அடக்கம் கொண்ட மேட்டை சுற்றிச் சிரிக்கிறது இந்த மழை மூடிய இலைகள் அதன் தொலைவு இன்று விற்காமல் போன பழரசப் பாத்திரம் மழையில் நனைய ஈரம் சொட்ட சொட்ட வீடு திரும்பும் அவன் நானாகவும் இருக்கலாம்.  (அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள் தொகுப்பிலிருந்து)

வண்ணமீன்கள்

வண்ணமீன்களின் குழுத்திரள் தான் தம் இயல்பென யுவதிகள் கைகோர்த்தபடி குமிழ்விடும் சிரிப்பால் வீட்டையும் சிறைகளையும் முற்றுகையிடுகின்றனர் ஒரு பொழுதில் மீன்கூட்டத்தின் வெளிவடிவை வரைந்தால் ஒரு பெரிய மீன் கிடைக்கலாம் சிரிப்பற்று அடுக்குமாடி குடியிருப்புகளில் பால்கனிகளில் குட்டிமகளின் சிகையில் சிக்கெடுக்கும்போது ஏக்கமுடன் சலிக்கும் செடிகளாய் நிற்கின்றனர் ஒருபொழுதில் கசப்பில் உலர்ந்து காய்ந்து நிற்கும் முதிய வேம்பின் நிழலில் காத்திருக்கிறார்கள் அனிச்சையாக உதிரும் இலைகளின் கிளிநடனம் ஞாபகத்தைப் போல் அவர்களை அலைக்கழிக்கிறது ஒருபொழுதில் அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் தொகுப்பிலிருந்து)

சூரிய உதயத்திலிருந்து வருகிறோம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எங்கிருந்து புறப்பட்டு நகரமெங்கும் பரவுகிறார்கள் இந்த விற்பனைப் பிரதிநிதிகள் கழுத்துப்பட்டையை ஓயாமல் சரி செய்துகொண்டு காலை வணக்கம் ஐயா நாங்கள் சூரிய உதயத்திலிருந்து வருகிறோம் எங்கள் கருவியின் செயல்பாட்டை உங்களுக்கு நிகழ்த்திக் காட்ட அனுமதிப்பீர்களா சரி ஐயா உங்கள் சிரமம் புரிகிறது தொந்தரவுக்கு மன்னிக்கவும் உங்கள் நாயைக் கொஞ்சம் பிடித்துக் கொள்ளுங்கள் நாங்கள் வெளியேறுகிறோம் ஒரு வீட்டின் வரவேற்பறையில் யாரோ தெரிய வாசல்கதவை மென்மையாக திறக்கிறார்கள் காலை வணக்கம் ஐயா நாங்கள் சூரிய உதயத்திலிருந்து வருகிறோம். (எனது முதல் தொகுதியான மிதக்கும் இருக்கைகளின் நகரம் தொகுப்பில் இருந்து- வெளியானது 2001)