Wednesday, 29 April 2020

அன்பு என்றே


அன்பு
என்றே நாம் மொழிபெயர்த்திருக்கிறோம்
எனது வளர்ப்புப் பிராணியின் செய்கையை
சிறுநீர் கழிப்பதற்கு
கழுத்துச் சங்கிலியை விடுவிக்கும்போது
தலையைக் கோதிக் கொடுக்கும்போது
எட்டி எனது விரலை நக்கிக் கடிக்கிறது
சில சமயங்களில் எனது கை முழுவதையும்
கடித்து விழுங்குவதற்கு முயல்கிறது
மொழி தெரிந்தால் அது என்னைக் கேட்டுவிடும்
அதன் அன்புக்குத் தந்தும்விடலாம்
ஆனால் எனது கை
எனது உடலோடும்
தலையில் வலியோடும் பிணைக்கப்பட்டிருப்பது
அதற்குத் தெரியாது
ஒருநாள்
அவளும் நானும் அவரவர் போதத்தை
உடைகளோடு உதிர்த்து
சற்றே பறக்க முயன்றோம்
தன் முலைகளைக் கடித்துப் பருக அளித்து
எனது முகம் பார்த்திருந்தாள் அவள்
இந்தச் செல்லங்களைத்
தந்துவிடு தந்துவிடு
என்று பைத்தியம் போல வாய்குளறிக் கேட்டேன்
அவளும் தலையை தலையை
அசைத்தாள்
அந்த அசைவு சன்னமாய்
நினைவில் சிறுத்துக் கொண்டிருக்கிறது.

(கவிஞர் சாகிப்கிரானுக்கு)

Tuesday, 28 April 2020

முல்லா விழும் குழிஒரு பெரிய தெருவின் நடுவே ஆள் விழும் அளவுக்குக் குழி ஒன்று இருந்தது. அந்தக் குழியைத் தவிர்த்து எல்லாரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அந்தத் தெருவில் ஒரு நாள் முல்லா பரபரப்பாகத் தென்பட்டார். எல்லாரும் பார்த்து கவனமாகக் கடந்து செல்லும் குழியில் விழுந்துவிட்டார் முல்லா.

அவரைத் தூக்கிவிட்ட மனிதர், பார்த்துக் கவனமாகச் செல்வதுதானே முல்லா என்று கேட்டார். இத்தனை பெரிய தெருவில் இந்தக் குழியைத் தவிர்த்துப் போக வழி இருக்கிறதே என்ற 'நியாய'மான கேள்வியைக் கேட்டார்.

இத்தனை பெரிய தெருவின் நடுவில் இந்தக் குழியில் ஏன் என்னைத் தவிர வேறு யாருமே விழவில்லை என்று கோபமாகக் கேட்டார் முல்லா.

இந்தக் குழியில் தான் குழந்தைகள் தொடங்கி புலம்பெயர் தொழிலாளர்கள் வரைக்கும் விழுந்துவிடுகின்றனர்.

காரணமும் விளைவும் தலைகீழாகும் இடத்தில் முல்லா பிறந்துவிடுகிறார். பொதுவாக அனைவரும் பார்க்காத ஒரு அம்சத்தை ஆனால் அருகிலேயே வாழும் உண்மையைப் பார்க்கும்போதும் நமக்குக் காண்பிக்கும்போதும் முல்லா பிறந்துவிடுகிறார். காரணங்களையும் விளைவுகளையும் ஒருவிதமாக வகுத்துத் தொகுத்து அவற்றைப் படிப்பினையாகக் கொண்டுதான் முன்னெச்சரிக்கைகளும் நெறிகளும் வகுக்கப்படுகின்றன. எண்ணற்ற விதிகள், எண்ணற்ற நெறிமுறைகள், எண்ணற்ற சட்டங்கள், எண்ணற்ற சட்டங்கள், எண்ணற்ற அப்பியாசங்கள், அனுஷ்டானங்களால் மேலும் காப்பாற்ற முடியாமல் ஆக்கப்பட்ட இந்த உலகின் பைத்தியக்காரத் தன்மையிலிருந்து விலகி ஓடுவதற்கான பாதையைத் தான் முல்லா காண்பிக்கிறார்.   அனுபவ சேகரம் மூலமான அறிவால் அதிலிருந்து பெறும் முன்னெச்சரிக்கையால் தொடப்படாத அறிந்துகொள்ள முடியாத உண்மையொன்றை அங்கே எப்போதும் எதிர்கொள்கிறோம். அந்தத் தருண உண்மையின் உருவம் தான் முல்லா. அங்கே முன்னெச்சரிக்கை பலிக்கவே பலிக்காது.

முல்லா தன் வீட்டைச் சுற்றி ரொட்டித் தூளைத் தூவிக் கொண்டிருந்தார். தெருவழியாகப் போனவர், முல்லாவிடம் என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார். புலிப்பொடியைத் தூவுகிறேன். இந்தப் பொடியைத் தூவினால், புலிகள் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்றார்.

ஐம்பது மைல் தூரத்துக்கு இங்கே புலிகளே கிடையாதே என்றார் கேட்டவர்.

‘சரிதான். புலிப்பொடி அவ்வளவு திறன் கொண்டது’ என்றார் முல்லா.

முல்லா, அரசருடன் மாலை நடை சென்று கொண்டிருந்தார். "சட்டங்களால் மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. உள்ளேயிருக்கும் சத்தியத்தை ஒட்டியொழுகுவதற்கு குறிப்பிட்ட விஷயங்கள் தேவை. வெளியில் தெரியும் சத்தியத்தில் உள்ளே உள்ள சத்தியம் கொஞ்சமே பிரதிபலிக்கிறது."  என்றார் முல்லா.

சட்டத்தின் வழியாக நெறிமுறைகள் வழியாக மக்கள் சத்தியத்தைப் பின்பற்றச் செய்ய முடியும் என்பதை முல்லாவுக்கு நிரூபிக்க நினைத்தார் அரசர்.

தலைநகரத்துக்குள் நுழையும் பாலத்தின் வாசலில் ஒரு தூக்கு மேடையை அமைப்பதற்கு உத்தரவிட்டார். அடுத்த நாள் விடிவதற்கு முன்பாகவே தனது படையினரை பாலத்தின் நுழைவாயிலில் நிற்கவும் ஆணையிட்டார். நகருத்துக்குள் வரும் மக்கள் ஒவ்வொருவரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படும். பதில் உண்மையாக இருக்க வேண்டும். உண்மை சொன்னால் அவர்கள் நகருத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொய் சொன்னால் தூக்குமேடை தான் என்று உத்தரவிட்டார் அரசர்.

அடுத்த நாள் முல்லா தன் கழுதையில் நகரத்துக்குள் நுழைய முயலும்போது அவரைக் காவலர்கள் பிடித்தனர். அரசரின் உத்தரவுப்படி, முல்லாவிடம் காவலர்கள் எங்கே போகிறீர்கள் என்று கேட்டனர். ‘நான் தூக்கிலிடப்படுவதற்காகச் செல்கிறேன்’ என்றார்.

எங்களால் நம்பமுடியவில்லை, பொய் சொல்கிறீர்கள் முல்லா என்று கவலையுடன் கேட்டார் படைத்தலைவர்.

‘நான் பொய் பேசினால் என்னைத் தூக்கிலிடுவதுதானே முறை’ என்றார் முல்லா.

“ஆனால், நாங்கள் உங்களைத் தூக்கிலிட்டால் நீங்கள் சொல்வது சத்தியமாகிவிடுமே" என்றார் படைத்தலைவர்.

‘சரிதான். இப்போது சத்தியம் என்றால் அவருடையது என்பது அரசருக்குத் தெரிந்திருக்கும்? என்றார் முல்லா.

“எல்லாரும் சொல்கிறார்கள்: நான் அறிந்துகொள்ள முயன்றேன், ஆனால் இங்கே வெறும் பைத்தியக்காரத்தனத்தையே பார்க்க முடிகிறது.

ஆனாலும், அவர்கள் ஆழமான ஞானத்தை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கலாமா. அது கிடைக்கவே போவதில்லை.”


இதுதான் முல்லா கண்டது. அதை உண்மை என்றும் சத்தியம் என்றும் கூடச் சொல்ல வேண்டியதில்லை.

முல்லா சந்தைக்குப் போய் இறைச்சி வாங்கிவந்தார். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குக் கறி சமைக்குமாறு உத்தரவும் இட்டார். சாப்பாடு வந்தது. ஆனால், மேஜையில் இறைச்சி சமைத்த சுவடே இல்லை. முல்லாவின் மனைவி தான் சமைத்த இறைச்சியின் ருசியில் மயங்கி அதை முழுவதும் சாப்பிட்டு விட்டார். முல்லா, தன் மனைவியிடம் கோபமாக, எங்கே இறைச்சி என்று கேட்டார். பூனை சாப்பிட்டுவிட்டது என்று மனைவி பதிலளித்தார். நான் வாங்கிவந்த மூன்று பவுண்ட் இறைச்சியையுமா என்றார். ஆமாம் என்று நெஞ்சழுத்தத்துடன் பதிலளித்தார் முல்லாவின் மனைவி.

அப்போது அங்கே தென்பட்ட பூனையைப் பாய்ந்தோடிப் பிடித்தார் முல்லா. அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய் எடைத் தராசில் அளந்து பார்த்தார். பூனை மூன்று பவுண்டு எடை இருந்தது.

இது பூனையென்றால், இறைச்சி எங்கே? இது இறைச்சி தான் என்றால் அதைச் சாப்பிட்ட பூனை எங்கே? என்று கோபாவேசமாகக் கேட்டார் முல்லா.

முல்லா, தன் மனைவி சொன்ன பொய்யை உண்மையென்று நம்பி அதைப் பூனையில் தேடுகிறார். அல்லது மனைவி சொன்ன பொய்யை நிரூபிக்கப் பார்க்கிறார் நம்மைப் போலவே.

 உண்மை, பொய் அது மூன்று பவுண்டு கொண்டது என்றாலும் அந்த எடையைத் தாங்கும் உயிரல்ல பூனை. அது நமது காரண- காரிய, தர்க்க விளைவுகளுக்கு வெளியில் உள்ள உயிர்.Monday, 27 April 2020

பயம் என்னும் முல்லாவின் குதிரைஆசை, பயம் இரண்டையும் கவனித்துப் பார்த்தால் அது தெருவில் அடிக்கடித் தென்படும் ஒற்றைச் செருப்பைப் போல. அதற்கு ஜோடி எதுவும் தேவையல்ல; யார் காலை விட்டுப் பார்க்கிறானோ அவன் தான் அதன் ஜோடி. எளிதாக காலை நுழைக்க முடியுமென்பதாலேயே, ஒற்றைச் செருப்பிலிருந்து விடுபடுவது போன்று அத்தனை எளிதல்ல. ஒற்றைச் செருப்பு காலோடு தரிப்பதில்லை, தலை வரை ஏறிவிடும்.

அடுத்தவர்களை அச்சுறுத்துவதற்காக ஆயுதம் எடுத்தவனையும் திரும்பிக் குத்தும் ஆயுதம் பயம்; அறிவு தன் கொடுக்கை தம்மை நோக்கி நீட்டுவதைப் போலவே.

 முல்லா டீச்சராக வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு ஒரு அழகிய நடுத்தர வயதுப் பெண்மணி தனது சேட்டைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு வந்தாள். தன் மகனைப் பயமுறுத்தி நல்வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்று அவள் முல்லாவை வேண்டினாள்.
முல்லா, பையனை பயமுறுத்தி அவனது அம்மாவின் மனத்தையும் கவர நினைத்தார்.

“டேய், இங்கே பாரு.” என்று முல்லா அந்தப் பையனைக் கூப்பிட்டு தனது முகத்தைக் கடுமையாக வைத்துக் கொள்ள முயன்றார். கண்ணெல்லாம் சிவக்கக் கொடூரமாக முகசதைகளைத் துடிக்கச் செய்தார். அந்தப் பையன் அவரை கோமாளியைப் போலப் பார்த்தான். இது போதாதோ என்று கருதிய முல்லா, ராட்சதன் போலத் திங்குதிங்கென்று குதிக்கத் தொடங்கினார். டேய் என்று சத்தமிட்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு மயக்கமே வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எழுந்த அந்தப் பெண்மணி முல்லாவைக் காணாமல் காத்திருந்தார்.

முல்லா, சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார். ‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல’.

"அம்மணி, இதுவெல்லாம் திட்டமிட்டா நடக்கிறது. நாம் ஒன்று நினைக்கிறோம். அது வேறாக நடக்கிறது. ஒன்று நம்மை அச்சுறுத்தும் போது அது ஆளையா பார்க்கிறது?” சோர்வுடன் வகுப்பறைக்குத் திரும்பிவந்தார்.

‘நான் என் மகனைத்தான் பயமுறுத்தச் சொன்னேன். என்னை அல்ல!’ என்றார்.

ஆசையையும் அச்சத்தையும் நேரடியாகப் பார்க்கும் போது, அது போட்டிருக்கும் முகத்திரையை, இருளை விலக்கி கூர்ந்து பார்க்கும்போதே அதன் இயல்பை வெளிப்படுத்தி நமக்குப் பரிச்சயமாகி விடும் வாய்ப்புண்டு. விஷமமான குழந்தைகளோடு தோழமை உண்டாகும் போது ஏற்படும் இணக்கம் போன்றது. அவர்களை இதத்தோடு நெருங்கிப் பார்த்தால் அந்த விஷமங்களுக்குப் பின்னால் ஒரு பாங்கு இருப்பதை நம்மால் அவதானிக்க முடியும்.  பரிச்சயம் கொள்ளும்போது ஒரு டினோசரஸின் முகம் கூட நமது வளர்ப்புப் பிராணியின்  பிரேமை கொண்ட கண்களைக் கொண்டதாகி விடுகிறது.

எந்தக் குரூரமும் எந்த அசூயையும் எந்தப் பயங்கரமும் சரியாகப் பார்க்கப்படுதலில் தான் இருக்கிறது. சரியாகப் பார்க்கப்படும் போது எதுவுமே குரூரம் அல்ல; அசிங்கம் அல்ல; பயங்கரம் அல்ல;

நிச்சயமின்மையும், அறியாததுமான அந்தகாரத்துக்குள் நடக்க விழிப்பின் விளக்கே எப்போதைக்குமான உதவி. ஆனால் நாம் ஆசையின் எண்ணை ஊற்றப்பட்ட தீபத்தின் குறை வெளிச்சத்தைக் கொண்டு நிச்சயமின்மையின்   இருட்டுக்குள் குழப்படியின் காற்று சுடரை அலைக்கழிக்கப் பயத்துடன் பயணிக்கிறோம்.

பயத்தையும் அதன் முகத்திரைக்குள் சுயமுகம் காட்டும் ஆசையையும் நமக்கு நேரடியாகப் பார்ப்பதற்கு, பயத்தின் இயல்பை பல்வேறு வகைகளில் காட்டும் முல்லாவின் வேலை அத்தோடு நிற்கவில்லை.

பயமும் ஆசையும் உயிரை எரிக்கும் பொருளாக மட்டும் எதிர்மறையான பண்பில் முல்லாவின் கதைகளில் இல்லை. உயிரைத் தொடர வைக்கும் எரிபொருளாகவும் குதிரையாகவும் ஆசையையும் பயத்தையும் பயன்படுத்துகிறார் முல்லா.

பயமும் அச்சமும் ரசவாதத்துக்கு உள்ளாவது அங்கே நிகழ்கிறது. கழுதை உயிர்பயத்தை நெம்புகோலாகப் பயன்படுத்தித் தான் படிகள் தூர்ந்து போன குளத்திலிருந்து தப்பிக்கிறது.

நிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் ஒரு குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடித்தது; ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டுத் தடுக்கிவிழுந்தார்.

‘நீங்கள் யார்?’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார்.

‘நான் ஒரு துறவி, இதுதான் நான் தவம் செய்யும் இடம்.’

‘அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போய்விட்டேன். உங்கள் இடத்தை எனக்கும் இன்று இரவு பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார் முல்லா.

துறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார்.

நஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார்.

‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’

‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா.

முல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழுந்து போனார்.

‘அய்யய்யோ, போகாதீர்கள். எனக்கே என்னைப் பார்த்து இப்போது பயம்.’ என்று தடுத்தார் முல்லா.

முல்லாவின் பயத்தைப் பார்த்த துறவி, தன்னிடமிருந்த கத்தியை முல்லாவிடம் அளித்தார்.

முல்லாவுக்கு அச்சம் மேலும் பெருகிவர, யாராவது எதிரி வந்துவிட்டால், அவரை எப்படி எதிர்கொள்வதென்று கற்பனை செய்து பார்த்தார். தனது கத்தியைச் சுழற்றுவதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டார்.

அப்போது தண்ணீரை எடுத்துவந்தார் துறவி.

‘கிட்ட வராதே, நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.’ என்று துறவியை மிரட்டினார் முல்லா.

‘நான் உனக்காகத் தண்ணீர் கொண்டுவரப் போன துறவி’

‘நீ யார் என்பது பற்றி எனக்கென்ன அக்கறை- நீ வேடம் போட்டுவந்த எதிரியாகக் கூட இருக்கலாம். அத்துடன் எனக்கு இடம் கொடுத்த துறவியைப் போன்றே தலையையும் இமைகளையும் மழித்து வேறு வந்திருக்கிறாய்’ என்றார் முல்லா.

‘நான் உனக்காக தண்ணீர் கொண்டு வந்திருக்கிறேன். உனக்குத் தாகமெடுத்தது ஞாபகத்தில் இல்லையா?’

‘நல்ல வார்த்தை சொல்லி மயக்கலாமென்று நினைக்கும் உன் பாச்சா பலிக்காது பலிக்கவே பலிக்காது.’ என்றார் முல்லா.

‘எனது இடத்தில் தான் நீ இப்போது இருக்கிறாய்.’ என்றும் துறவி சொல்லிப் பார்த்தார்.

‘அது உன்னுடைய துரதிர்ஷ்டம். வேறு இடம் பார்த்துக் கொண்டு போ.’ என்று சளைக்காமல் பதிலளித்தார் முல்லா.

‘வேறென்ன செய்வது. ஒன்றுமட்டும் எனக்குப் புரியவில்லை. இதையெல்லாம் செய்யத் தூண்டுவது எதுவென்று தான் எனக்குத் தெரியவில்லை.’

‘ஒரே ஒரு விஷயம் மட்டும் உனக்குச் சொல்கிறேன். பயம் என்பது பல திசைகளில் செல்லக்கூடியது.’ என்று பக்குவமாகச் சொன்னார் முல்லா.

‘தாகத்தை விட, மன ஆரோக்கியத்தை விட, இன்னொருவனின் உடைமையை  தன்னுடையதாக்கும் கேவலத்தைவிட பயம் என்பது வலிமையானது.’ என்றார் துறவி.

‘நீங்கள் துயர்படுவதற்கு அது உங்களுடையதாக இருக்கவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை.’ என்று அழுத்தமாகச் சொன்னார் முல்லா.

Saturday, 25 April 2020

செத்து செத்து விளையாடும் முல்லா


உடல் குளிர்ந்து சில்லிட்டுப் போய்விட்டால் ஒருவனுக்கு மரணம் வந்துவிட்டதென்று அர்த்தம் என்று மனைவி சொன்னதைச் சோதித்துப் பார்த்தார் அல்லவா முல்லா? அதே கதையை ஓஷோ சற்று நீட்டிச் சொல்ல முயன்றிருக்கிறார்.  நீ இல்லாமல் போகும்போது, நீ தெய்வீகமாகி விடுவாய் என்பதை விளக்க, ஓஷோ அந்தக் கதையை நீட்டியுள்ளார்.

சாவென்றால் தொடை நடுங்குபவராக இந்தக் கதையில் முல்லா நஸ்ருதீன் தோன்றுகிறார்; நம்மைப் போலவே.

இத்ரிஷ் ஷாவின் கதையில் வருவது போலவே, ஒரு நாள் ஊருக்கு வெளியே உள்ள தனது பண்ணையில் வேலைபார்த்துக் கொண்டிருந்த முல்லா, தன் உடலைக் குளிர்ச்சியாக உணர்கிறார். உடனேயே இறந்து போனதாக முடிவு செய்து தரையில் கால்நீட்டிப் படுத்து பிணம் போல ஆகிவிட்டார்.
அந்தப் பண்ணையைக் கடந்த வழிப்போக்கர்கள் சடலம் போலக் கிடக்கும் முல்லாவைப் பார்க்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் இறந்து போன இந்த சடலத்தை என்ன செய்வது என்று பேசிக் கொண்டனர். முல்லாவுக்கு அவர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. ஆனால், அவர் தான் இறந்துவிட்டதாக நினைத்ததால் பேசாமல் கிடந்தார். முல்லாவின் வீட்டு முகவரி தெரிந்தால் அங்கே கொண்டுபோய் சடலத்தைச் சேர்த்துவிடலாம் என்று வழிப்போக்கர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

ஓட்டைவாயான முல்லாவுக்கோ தனது வீட்டின் முகவரியைச் சொல்தற்கு ஆசைதான். ஆனால், அவர் இறந்துவிட்டதால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. வழிப்போக்கர்கள் யாரவது ஊர்க்காரர்கள் வந்தால் கேட்கலாம் என்று காத்திருந்தனர். சாயங்காலம் இருட்டத் தொடங்கிவிட்டது.
இறந்த போன இந்த மனிதனின் சடலத்தை இங்கேயே விட்டுச் செல்வது மனிதாபிமானமாக இருக்காது. வீட்டுக்கோ இடுகாட்டுக்கோ எடுத்துச் செல்லவும் வழி தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று குழம்பியபடி காத்திருந்தனர்.

முல்லாவுக்கு வேறுவழி தெரியவில்லை. சட்டென்று எழுந்தார்.

“நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இப்படி செத்தவன் எழுவது இயல்பும் அல்ல. இறந்தவன் ஒருவன் பேசுவதையும் இந்த உலகின் விதிகள் அனுமதிக்காது. ஆனால், உங்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. என் வீட்டுக்கு வழியைக் காண்பிக்கிறேன். அதற்கப்புறம் எனது பேச்சை நிறுத்திக் கொள்கிறேன்". என்று ஒரு போடாகப் போட்டார் முல்லா.

நான் இல்லாமல் போய் விட்டால், நான் இல்லை என்று கூட என்னால் சொல்ல முடியாமல் போய்விடும். அப்படிச் சொல்லும் அவசியம்கூட இல்லை. ஆனால் முல்லாவுக்கோ எல்லாம் தலைகீழாக நடக்கிறது. அவர் மரணத்துக்குப் பிறகும் செயல்பட வேண்டியிருக்கிறது.

அப்படிச் செயல்பட்டாலும் முல்லாவைப் பொருத்தவரை மரணம் தான் அவரது இலக்கு.

இப்படித்தான் முல்லா வீட்டுக்கும் இடுகாட்டுக்கும் வழிகாட்டி, செத்துச் செத்து விளையாடி இல்லாமல் ஆக்குகிறார் மரணத்தை.
துயரப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் காரணமே தேவையிலை. அதற்குக் காரணமான ஒரு வஸ்துவோ, உயிரோ, விவகாரமோ நம்முடையதாகக் கூட இருக்க வேண்டியதில்லை. ஒரு கருத்து நம்மைத் துயர்பட வைக்கிறது. ஒரு பொருள் நம்மிடமிருந்து தொலைந்து போகும்போது அலைக்கழிக்கிறது. ஒரு உறவு நம்மைவிட்டுப் பிரிவதற்கு முன்னாலேயே கலக்கம் தொடங்கிவிடுகிறது. ஒரு நம்பிக்கையைக் கைவிடும்போது பைத்தியம் கொள்கிறோம்.

இவையெல்லாம் நம்முடையதா என்று கேட்கும் நிலையில் தான், முல்லா இடுகாட்டுக்குச் செல்லும் வழியைக் காண்பித்து விட்டு, அதற்குப் பிறகு நான் பேசவே போவதில்லை என்று வழிப்போக்கர்களுக்கு உறுதிமொழி தந்து மீண்டும் சடலமாகத் துணிகிறார்.

எதற்கு இத்தனை பயம்?

நான் இல்லாமல் போன இடத்தில் என்ன நடந்தால் எனக்கென்ன?

அந்தக் காலிப் பகுதியில் தெய்விகம் என்ற முட்டையை இடுகிறாரா ஓஷோ?

அங்கே தான் நேசம் காதல் என்று பல முட்டைகளை இடுகிறாரா ஜலாலுதீன் ரூமி?

Thursday, 23 April 2020

எளிதாக இறந்து போகும் முல்லா


உளவியல் ஆலோசகரும் நண்பரும் சினிமா விமர்சகருமான சஃபி மொழிபெயர்ப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட முல்லா  கதைகள் தான் முல்லாவுடனான எனது இரண்டாம் பருவத்து உறவுக்கு வழிவகுத்தது. பள்ளிப்பருவத்திலிருந்து மேலோட்டமாக அறிமுகமான முல்லா கதைகள், நடுவயதுப் பருவத்தில் கூடுதல் உதவியாய் இருப்பதை உணரமுடிந்தது. முல்லா கதைகளைப் படிப்பது மட்டுமல்ல இன்னொருவருக்குச் சொல்லும்போது கூடுதலான குணம் தெரியத் தொடங்கியது; நிறைய கதைகளை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அச்சமும் ஆசையும் அகந்தையும் கனத்துப் பெருத்த நம் சுயத்தைத் தரையில் வீழ்த்தி சிரிக்கச் சிரிக்கப் புரட்டுபவர் முல்லா என்பது கதைகளை இன்னொருவரிடம் சொல்லிச் சிரிக்கும்போது கூடுதலாகப் புரிந்தது. நாம் மறைத்து வைத்திருக்கும் பொறாமை, பேராசை, அல்பத்தனம், சிறுமையை வெளியே போட்டு உலர்த்தி காயப்போட்டு விடுகிறார். அப்போது நம் சுயம் அத்தனை லேசாக மாறிவிடுகிறது.

முல்லா என்ற ஒரு கதாபாத்திரம் துருக்கி நாட்டில் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும் அந்தக் கதாபாத்திரத்தின் ஆளுமையும் அவரது பல்வேறு குணங்களும் அவர் ஒருவர் அல்ல என்றே தோன்றவைக்கிறது. உடல் முழுக்க விஷமமும், அக்குறும்பும், நிகழ்ச்சிகள் அத்தனையையும் தலைகீழாக்கி விடும் முல்லாவின் இயல்பும், எதார்த்தத்துக்கு முகம் கொடுத்து தன் பிம்பத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் சகல வேஷங்களையும் இடும் விவேகமும் கொண்டவர் முல்லா. ஆனால், இந்த உலகின் கல்மிஷங்கள் எல்லாவற்றிலும் அவர் உடல் புரண்டாலும் அந்த அழுக்கோ அதன் நஞ்சோ ஏறாத கண்கள் முல்லாவினுடையது. ஒரு கணத்தில் கஞ்சனாகவும் ஒரு கணத்தில் திருடனாகவும் ஒரு கணத்தில் முட்டாளாகவும் ஒரு கணத்தில் தற்பெருமைக்காரனாகவும் ஒரு கணத்தில் சுயநலமியாகவும் ஒரு கணத்தில் கோழையாகவும் அவர் விழுந்து எழுகிறார். அந்தக் கணத்துக்கு மேல் எந்தக் கதாபாத்திரமும் அவசியமல்ல என்று முல்லா உணர்த்துகிறார்.மனம் சாய்வு கொண்ட, உருவகம் செய்து வைத்திருக்கும், கற்பித்து உறைந்திருக்கும், தனிச்சுயத்தின் நாற்காலியைத் தட்டிக் கவிழ்த்து மூளையைச் சுற்றி ஆக்சிஜனைப் படரவிடுபவர் முல்லா. முல்லா கதையை படிக்கத் தொடங்கும்போது இருந்தவர் படித்து முடிக்கும் போது இல்லாமல் போகிறார். அவர் இருந்த இடத்தை தன்னார்வத்துடனேயே முல்லாவிடம் அவர் சந்தோஷமாகத் தட்டிவிடக் கொடுத்து விடுகிறார். முல்லாவைப் படிப்பவர்களுக்கு முல்லா கொடுப்பது இனிமையானதொரு மரணம் என்னும் ஆசுவாசம். மனத்தின் இருண்ட அனுஷ்டானங்களுக்குள் முல்லாவின் கதாபாத்திரம் தன் விழிப்பு, விமர்சனத் துடுக்கு, விவேக ஞானத்தோடு நுழைகிறது. ஆசை, அச்சத்தின் அடிப்படையில் மனம் இறுக்கச் சேர்த்துக் கட்டியிருக்கும் சுயத்தின் மூட்டைகளை நூலாம்படைகள் கிழிய அவிழத் தொடங்குகின்றன. நூற்றாண்டுக் கணக்கில் புழுங்கிக் கொண்டிருந்த தலை திறந்து காற்று வருகிறது.

இத்ரிஷ் ஷாவுக்குப் பிறகு, முல்லா கதைகளைச் சொந்தமாக எனக்குத் தெரிந்து ஐம்பது கதைகளுக்கு மேல் உருவாக்கியிருப்பவர் ஓஷோ. முல்லாவின் கதாபாத்திரத்துக்கு இந்தோ-அமெரிக்கத் தன்மையை அவர் ஏற்றியிருப்பார். முல்லா கதைகளை உருவாக்கியவனோ உருவாக்கியவர்களோ ஓஷோ போன்ற அறிஞராகவும் ஞானிகளாகவும் தான் இருக்க வேண்டும். எனது ஆயுளில் ஒரே ஒரு முல்லா கதையை உருவாக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. அது அத்தனை சாதாரணமானதல்ல என்று தெரிந்தாலும்.

முல்லா நமக்கு சிகிச்சையாக ஒரு குணமூட்டியாக உதவ முடியும் என்ற பார்வையை சஃபி தான் உருவாக்கினார்.

மரணத்துக்குப் பிறகு பேயாகாமால் முல்லாவாகவே, முல்லா மிஞ்சும் கதைகளை இங்கே முதலில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் என்ற அனுபவத்தின் மேல் இந்த உலகம் வைத்த அத்தனை மூட்டைகளையும் தளர்த்தி கல்லறைக்குள் சடலமாகப் போய்விட்டு வந்தவராக முல்லா இந்தக் கதைகளில் உள்ளார்.

முல்லாவை நோக்கி நெருங்கிப் புரிவதற்குத் தூண்டுதல் தந்த சஃபிக்குத் தான் நான் நன்றி சொல்ல வேண்டும். முல்லா கதைகளோடு இருக்க,  அவரது கதைகளைத் திரும்ப மொழிபெயர்ப்பு செய்ய வேண்டுமென்று தோன்றியது. நானும் எனது அலுவலக நண்பர் கௌரியும் அவ்வப்போது அவர் கதைகளை இத்ரிஷ் ஷாவிலிருந்து செய்தோம். கௌரி கணிசமாக எண்ணிக்கையில் செய்தார். இந்தக் கட்டுரைத் தொடரில் பகிர்ந்துகொள்ளப் போவது இருவரும் செய்த அந்த மொழிபெயர்ப்புக் கதைகளைத்தான்.   

குருக்களுக்கும் ஞானிகளுக்குமான வழிபாட்டு தினமான வியாழக்கிழமையன்று முல்லா கதைகள் குறித்த இந்தத் தொடரை எழுதத் தொடங்கியிருப்பது தற்செயல்தான். மரணத்தின் மீதான பரிசீலனை, மரணத்தின் மீதான தியானத்தின் உருவகமாகவே உலகெங்கும் மூத்தோர்களின் கல்லறைகள் வழிபடும் இடங்களாக மாறியுள்ளன. மரணத்துக்குப் பிறகு, அடைந்த மரணத்தைப் பார்க்கவும் பார்த்துச் சிரிக்கவும் முடியும் மரணம் அது என்று, அத்தனை எளிமையாக இந்த உலகத்துக்குச் சொன்னவர்களில் ஒருவர் முல்லா. அதனால் மரணமடைந்த முல்லா, தனது மரண அனுபவத்தைச் சொல்லும் மூன்று கதைகளிலிருந்து இதைத் தொடங்குகிறேன்.

'ஒட்டகங்களைத் தொந்தரவு செய்யாதே' கதையில் மரணத்தைக் கற்பனை செய்கிறார் முல்லா. மரண தேவதையும் உடனடியாக அங்கே வந்துவிட்டாள். அவளைப் பார்த்து ஓடத்தொடங்குகிறார் முல்லா.  ஓடும்போது ஒட்டகங்களின் வரிசையில் புகுந்து அதன் உரிமையாளர்களிடம் அடி வாங்குகிறார் முல்லா. மரணமடைந்தாலும் அது ஒட்டகம் வராத இடமாக இருக்க வேண்டுமென்ற ஞானத்தை முல்லா தனது மனைவியிடம் பகிர்ந்துகொள்கிறார். இனி கதை.

ஓட்டகங்களைத் தொந்தரவு செய்யாதே

முல்லா இடுகாட்டில் உலவிக்கொண்டிருந்தார். அப்போது கால்தவறி ஒரு பழைய கல்லறைக்குள் விழுந்துவிட்டார். இறந்துவிட்டால், எப்படியிருக்கும் என்பதைக் கற்பனைசெய்யத் தொடங்கினார். அப்போது திடீரென்று ஒரு சத்தத்தைக் கேட்டார். கடைசித் தீர்ப்பெழுதும் தேவதை தன்னை நோக்கிவருவதைப் போல அவர் மனதில் தோன்றியது. ஆனால், அப்போது ஓர் ஓட்டகக் கூட்டம் மட்டுமே அந்தப் பக்கம் சென்றுகொண்டிருந்தது.கல்லறையில் இருந்து துள்ளிகுதித்தெழுந்த முல்லா, அருகிலிருந்த சுவரின் மீது மோதி விழுந்ததுடன் பக்கத்தில் சென்றுகொண்டிருந்த ஓட்டகங்களின் மீது விழுந்து அவற்றையும் தொந்தரவுக்குள்ளாக்கினார் . ஓட்டகக்காரர்கள் அவரைத் தங்கள் கைகளில் வைத்திருந்த கம்புகளால் அடித்தனர்.அவர் அங்கிருந்து வலியுடன் வீட்டுக்கு ஓடிச்சென்றார். அவர் மனைவி, என்னவாயிற்று, எதனால் தாமதம் என்று கேட்டார்.
‘நான் இறந்துபோயிருந்தேன்’, என்று சொன்னார் முல்லா.ஆர்வம் அதிகமாகி, இறந்துபோயிருந்த போது எப்படி இருந்தது என்று முல்லாவிடம் கேட்டார் அவர் மனைவி.
‘அப்படியொன்றும் மோசமான அனுபவமில்லை, ஆனால், ஓட்டகங்களை மட்டும் தொந்தரவு செய்யக்கூடாது. ஏனென்றால், ஓட்டகங்களைத் தொந்தரவு செய்தால் அடி விழும்’ என்று சொன்னார் முல்லா.


இறக்கப் பயந்து உயிர்க்காமல் வாழ்பவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். மிகச் சிலர் தான் இறப்பதற்குத் துணிந்து இறந்து இறந்துபோனது போலத் தெரிந்தாலும் மறுபடி உயிர்த்து உயிர்த்து வாழ்கிறார்கள். அப்புறம் ஒரு அனுபவத்தின் சௌகரியம் அத்தனையும் வேண்டும், அதன் பக்க விளைவுகள் கூடாது என்று நினைப்பவர்களின் மேல் முல்லாவின் பரிகாசம் படர்கிறது. லட்டு வேண்டும் லவ்டா வேண்டாமென்றால் எப்படி? லட்டு வேண்டுமென்றால் லவ்டாவும் சேர்ந்துதான் என்று கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொடுக்கிறார் முல்லா. மனிதனுக்கு அத்தனை சுதந்திரமான தேர்வோ விருப்போ இல்லை என்கிறார். நிகழ்ச்சியின் போக்குக்கு அங்கே ஒப்புக்கொடுக்கிறார் முல்லா. அதனால்தான் அவர் கழுதையைக் கூட அவரால் காப்பாற்ற முடியவில்லை. லட்டுக்கும் லவ்டாவுக்கும் தொடர்பு உண்டு.

நான் யாரென்று காட்டியிருப்பேன்!

ஒருநாள் முல்லா, ‘சில பேர் இருக்கிறார்களே, அவர்கள் உயிரோடு இருக்கும்போதே இறந்துவிடுகிறார்கள். இன்னும் சிலரோ, இறந்துபோனது போல் தெரிந்தாலும் உயிரோடு இருப்பார்கள். ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதை எப்படிச் சொல்வது?’ என்றார்.
கடைசி வரியை மட்டும் மீண்டும் சத்தமாகச் சொன்னதால், அதை  அவர் மனைவி கேட்டுவிட்டார்.


‘அட, முட்டாள் மனுஷா! ஒருவனோட கைகளும் பாதங்களும் ஜில்லென்று ஆகிவிட்டால், அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்’ என்று முல்லாவிடம் சொன்னார் அவர் மனைவி.

 
சில நாட்களுக்குப்பிறகு, முல்லா காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நிலவிய கடுங்குளிரால் அவரது உறுப்புகள் அனைத்தும் ஜில்லென்று ஆகிவிட்டதை அவர் உணர்ந்தார்.


‘அய்யோ, மரணம் சமீபத்தில் வந்துவிட்டது. இறந்தவர்கள் மரம் வெட்டமாட்டார்கள்; அவர்களால் இயங்கமுடியாது என்பதால், அவர்கள் அமைதியாகப் படுத்துகொள்வார்கள்’ என்று நினைத்துக் கொண்டார்.


அவர் மரத்தின் கீழே படுத்துகொண்டார்.
அப்போது, கடுங்குளிரால் பாதிக்கப்பட்டு அந்தப் பக்கமாக வந்த ஓநாய்க் கூட்டம், அங்கே படுத்திருந்த மனிதன் இறந்துவிட்டான் என்று நினைத்து, முல்லாவின் கழுதையை அடித்துத் தின்றன.


‘இதுதான் வாழ்க்கை! ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு கொண்டதாக இருக்கிறது. நான் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்களால் என் கழுதையிடம் இப்படி உரிமை எடுத்துகொண்டிருக்க முடியாது’ என்று நினைத்தார் முல்லா.


அச்சம் மரணத்தை நோக்கித் தான் முல்லாவை அடிக்கடி துரத்துகிறது. ஆனால், அவர் விவேகமான பதிலைச் சொல்லிக் கொண்டு எழுகிறார். அது சாமர்த்தியமான பதில் போல உள்ளது. அதில் உண்மையும் உள்ளது. பஞ்சதந்திரத்தில் கமல் நாகேஷைப் பார்த்துச் சொல்லும் வசனம் ஞாபகத்துக்கு வருகிறது. கேள்வி கேட்கறது ஈசி மாமா? என்று சொல்வார். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பதால் தான், முல்லா சில வேளைகளில் சவக்குழியில் இருக்க வேண்டியிருக்கிறது.

நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?

முல்லா, ஒரு நாள் மாலை, ஆளரவமற்ற சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சில குதிரைகளில் ஆட்கள் அவர் எதிரே வந்ததைப் பார்த்தார். அவரது கற்பனை வேலைசெய்யத் தொடங்கியது. அவரை அடிமையாகப் பிடிக்கத்தான் குதிரையில் ஆட்கள் வருகிறார்கள் என்று நினைத்தார்.
வந்த வழியே ஓடிச்சென்று, ஓரத்தில் இருக்கும் சுவரொன்றில் ஏறி, இடுகாட்டில் குதித்தார். அங்கே காலியாக இருந்த குழியில் போய் கால்நீட்டிப் படுத்துக் கொண்டார். முல்லாவின் புதிரான செய்கையைப் பார்த்த குதிரைப் பயணிகள் அவரைப் பார்த்து பரிதாபப்பட்டு பின்தொடர்ந்து சென்றனர். குழியில் படுத்துக் கிடந்த முல்லாவைப் பார்த்து, “நீங்கள் இங்கே வந்து ஏன் படுத்துக் கிடக்கிறீர்கள். எங்களைப் பார்த்து ஏன் ஓடிப்போனீர்கள். ஏதாவது உதவி தேவையா?” என்று கேட்டனர்.
“நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்க முடிவதாலேயே அதற்கு நான் நேரடியான பதிலை அளித்துவிட முடியாது. எல்லாம் உங்களது பார்வையில் உள்ளது. எப்படியாக நீங்கள் கேட்டாலும் இதுதான் என் பதில். உங்களால் தான் நான் இங்கே இருக்கிறேன். என்னால் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.”


முல்லா கதைகளில் அபூர்வமான இந்தக் கதையில் முல்லா இருக்கிறார். கழுதையும் இருக்கிறது. ஆனால், இதில் வரும் முல்லா முல்லா அல்ல. கழுதைதான் முல்லா. இங்கே உயிர் பயத்தை, தூண்டுதலாக ஆற்றலாகப் பயன்படுத்திக் குளத்துக்குள் விழுந்த கழுதை கரையேறி விடுகிறது. இந்தக் கதையில் வரும் முல்லா தாராள மனம், நன்றி உணர்வு படைத்தவராகத் தெரியவருகிறார். ஆனால், இந்தக் கதையில் முல்லாவின் குணலட்சணங்களைக் கொண்டது கழுதைதான். கறை நல்லது என்பது போல, உயிர் பயமும் சில இடங்களில் நல்லது. இங்கே உயிர்பயம் ஆற்றலாக மாறிவிடுகிறது.

விபத்து அதிர்ஷ்டமானது


முல்லாவின் கழுதை தாகத்தால் ஒரு குளத்தில் இறங்கி  தண்ணீர் குடித்தது. ஆனால், படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்த நிலையில்  தடுமாறிக் குளத்துக்குள் விழுந்தது. கழுதை விழுந்த நிலையில் அங்கிருந்த தவளைகள் அதீதமாகச் சத்தமிடத் தொடங்கின. தவளைகள் போட்ட சத்தத்தால் பயந்துபோன கழுதை, தறிகெட்டுப் போய் குளத்திலிருந்து வேகவேகமாக மேலேறி வந்து விட்டது. இதைப்பார்த்த முல்லாவுக்கு கழுதை திரும்பக் கிடைத்தது.  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ‘நீங்கள் எனக்கு ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுத்தீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று முல்லா தனது அங்கியிலிருந்து நாணயங்களை எடுத்து குளத்தில் எறிந்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


(முல்லாவின் தொடர்ச்சி பஷீர் கட்டுரையைப் படிக்க : https://www.shankarwritings.com/2017/08/blog-post_23.html)

Wednesday, 22 April 2020

இந்த அந்திமுதிய கருவேப்பிலைச்செடியின் கீழே
ஒரு அந்தி கவிழ்கிறது
மூலைக் கழிப்பறைக்கும்
ஈரப்புழக்கடைக்கும் இடையே நின்று
இச்செடி
உள்ளங்களையளவு சோகத்தை
இருட்டோடு சேர்த்து
அனைவருக்கும் பகிர்கிறது
காபிப்பொடி நீரில் அவியும் மணம்
துண்டிக்க
தன் பிராய கால வீட்டின் நினைவைத் தொடரும்
பெண்ணின் கண்ணீர்த்துளி
உலர்ந்த அவள் முகத்தில் சில்லிடும்.
குழந்தைகள் விடைபெற்றுச் செல்லும்
ஒவ்வொரு பொழுதும்
நடுங்கும் முதுமையின் கரங்களில்
விசனத்துடன்
இந்த அந்தி கனக்கும்
ஒரு கருப்பு வண்ணத்துப்பூச்சி
அந்தியின் இடைவெளிகள் மேல்
பறக்கிறது.
கடைசித்துளி சிறுநீர் பிரியும் க்ஷணத்தில்
அந்தி
நம்மிடம் விடைபெறுவதும்
கருவேப்பிலைச் செடி
தன் இலைகளோடு
இருள்மசங்கில்
மறைத்துக் கரைவதும்
பறவைகளின் உருமறைந்த இரைச்சலும்
ஒரு சின்னஞ்சிறிய
வழி அனுப்புதலின் பொருட்டா.

(அழகு தெய்வானைக்கு)

Saturday, 18 April 2020

கன்னிமை கலைஞன் கபாடபுரம்
புதுமைப்பித்தனின் கபாடபுரத்திலும் லா. ச. ரா-வின் அபிதாவிலும் காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘லவ் இன் தி டைம் ஆப் காலரா’ நாவலிலும் கன்னிமை என்ற கருத்து ஏன் தொடர்ந்து கலைஞர்களை ஈர்ப்பதாக உள்ளது. கன்னியும், கலைஞனும் ஏன் ஒருவரையொருவர் ஆகர்ஷித்துத் திரும்பித் திரும்பி விழுங்கியபடி இருக்கிறார்கள். நகுலனின் சுசீலா, நகுலனை விட்டுச் செல்லும்போது, நகுலனுக்கு ஒரு சுசீலாவை அவர் வாழ்க்கை முழுக்க அவருக்கே அவருக்கென்று பரிசளித்துச் செல்கிறாள். அவரை விட்டுச் சென்ற சுசீலாவின் பிரிவுக் குறிப்புகள் அவளது கன்னிமையை முன்வைத்தே எழுதப்படுகிறது. ‘கண்ணனிருக்கும் குருவாயூரில் கண்மணியவள் கன்னிமை தவிர்ந்தாள்.’ என்றும் ‘அவள் சூலுற்றாள் தன்னைப் போல் ஒரு பெண்ணைப் பெற்றாள் நான் தனியிருந்தேன்; மிகநன்று.’ என்பதைப் போன்ற பிரிவுக் குறிப்புகளாக வருகிறது. வில்லெடுத்து நாண்பூட்டி அவளை வென்ற அர்ஜூனன் அல்லாத தன்னை, வந்து வந்து போகும் அர்ஜூனன் என்று குறிப்பிடும் நகுலன் திரௌபதியை தூய்மையின் ஊற்று என்கிறார்.

கன்னிமை என்பது படைப்புகளில் எவ்வாறெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது? ஒரு அனுபவத்தை, அறிதலை அடைவதற்கு முந்தைய நிலை; அந்த அனுபவத்தை ஒரு குறிப்பிட்ட நபருடன் அடைவதற்காக அந்த அனுபவத்தை மறுத்த, ஒதுக்கிய, துறந்த, கடந்த நிலை; அந்த அனுபவத்தை அறிதலை விதியால் அடையவே முடியாமல் போன நிலை என்று மூன்றாக வகைப்படுத்தலாம்.

‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ நாவலில் நாயகன் ப்ளோரென்டினா அரிஸா, 70 வயது வரை தன் காதலிக்காகக் காத்திருக்கிறான். ஆனால், அவன் உடல் ரீதியாக எத்தனையோ பெண்களைக் கடக்கிறான். ஆனால், அவன் தன் காதலிக்காக கன்னிமையைக் கடக்காமல் தக்கவைத்திருக்கிறான்.

கன்னிமை என்ற உருவகம் கலைப்படைப்புகளில் ஒரு கோபுரம் போல, ஒரு ஒளிவிளக்கைப் போல கிடைமட்டமாக இருக்கிறதென்றால், கன்னிமை தவிர்ந்த, தீர்ந்த நிலை படுக்கைவாட்டு நிலையாகிறது. அங்கே தான் உலகம், சமூகம், பொது அனுபவம், குழந்தைகள் உருவாகின்றன. திரும்பிப் போக முடியாத ஒரு வழியிலிருந்து கிடைக்கும் அறிவு அது. குழந்தைமை, கல்மிஷமின்மை, தூய்மை என்று அதுவரை வீசிக்கொண்டிருந்த ஒளி பறிக்கப்பட்ட தோட்டமாகி விடுகிறது. அங்கிருந்துதான் ஆதாம் ஏவாளிலிருந்து ரோமியோ ஜீலியட் வரை விரட்டப்படுகின்றனர்.

கிடைமட்டத்தில் தோன்றிய காதலின் தூய்மையும் அதன் ஆற்றலும் தொடரவும் ஜீவித்திருக்கவும் தான் காதலை, காதலர்களை பூமியில் படுக்கைமட்டத்தில் கிடத்த படைப்பாளிகள் அனுமதிப்பதில்லை. ரோமியோவும் ஜூலியட்டும் அங்கே பெரியவர்களாக சமூகமாக உலக அனுபவத்துக்குள் மாசுபட்டு விடுவார்கள். குழந்தைகள் பெற்று சண்டை போட்டு, கழிப்பறையைத் திறந்தபடி சிறுநீரைச் சத்தமாகக் கழிப்பார்கள்.
காதல், கன்னிமை, தூய்மை என்ற உருவகத்தை தொல்படிமமாக தீர்க்க முடியாத ஆற்றலாக வைத்துக் கொண்டே இருப்பது ஒருபுறம். மற்றொரு புறத்திலோ படைத்தவனும் படைப்பவர்களும் பூமியில் குழந்தைகள் உற்பத்தியை ஏற்று அனுமதித்து நிர்வகித்துக் கொண்டே இருப்பது இன்னொரு புறம்.

ஆனால், இந்த இரண்டு நிலைகளும் கிடைமட்டத்திலும் பக்கவாட்டிலும் சம மதிப்போடு எப்படி ஜீவிக்கின்றன. ஒன்றுக்கான பாதை எப்போதும் குறுகியதாகவும் பலரால் பயணிக்கப்படாததுமாகவும் இன்னொன்று பழகிய சலிப்பது போன்ற பாவனையைத் தருகிற பாதையாகவும் எப்படித் தொடர்கிறது?

உடலில் தோன்றி வெளிக்கு உயரும் ஆலாபனையைப் போல புணர்ச்சிக்கு முன்னரான ஆண், பெண் காதலுறவில் உணரும் இசையைச் சொல்லலாம். அது அவர்கள் உடல்களிலிருந்து தோன்றினாலும் தமது சுயங்களைக் கொண்டு உருவாக்கினாலும் அவர்களுடையது அல்ல. அப்படிக் கோடிக்கணக்கான காதலர்களும் காதலும் உருவாக்கிய இன்பம், துன்பம் என்று பிரித்தறிய முடியாத உணர்வுதான் இசை. அது தான் ஒளியும் இருளும் மயங்கும் மெழுகுத் தன்மை கொண்ட மஞ்சள் அந்தியாக ஓவிய உருக்கொள்கிறது.

அந்த அந்தியிலிருந்து சிருங்காரம் நிகழ்கிறது. சிருங்காரத்தின் உச்சத்தில் எங்கேயோ வன்மையும் இம்சையும் கலந்துவிடுகிறது. பாற்கடலில் அமுதம் கடையும் இடத்தில் விஷம் தோன்றும் தொன்மம் எத்தனை சக்தி வாய்ந்தது என்று உணரமுடியும்.

கூடலின் ஒரு புள்ளியில் தனிமை அங்கே இறங்குகிறது. பழிப்பு தொடங்குகிறது. அநிறைவு உருவாகிறது. பயங்கரத்தின் முடிச்சு அங்கே விழுந்து விடுகிறது. அங்கே தனி ஆண் தனிப் பெண் அல்ல. ஹிட்ச்காக்கின் கருப்புவெள்ளைப் படங்களில் பால்ரூம் நடனக் காட்சிகளில் சிருங்காரத்தின் உச்சத்தில் பெண் முகத்தில் தோன்றும் பயங்கரத்தை அவர் காட்சிப்படுத்தியிருப்பார்.

நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய அபூர்வமான கதைகளில் ஒன்றான முகமது இப்ராகிம் (https://www.shankarwritings.com/2013/08/ ) கதையில் கதைசொல்லியின் மனைவி பெயர் சுசீலா. அவளும் கதைசொல்லியும் காதலும் ஆத்மார்த்தமும் ததும்ப வாழ்ந்தவர்கள். புற்றுநோய் பாதித்த அவளது கடைசி நாட்களில், அவளிடமிருந்து ஒரு பழிக்கும் பார்வை வெளிப்பட்டதை உணர்ந்ததாகச் சொல்கிறான் கதைசொல்லி. அவள் இறந்தபிறகு, கதைசொல்லியைச் சந்திக்க வரும் முகமது இப்ராகிம் என்பவனும் பாகிஸ்தான் கலவரத்தில் பாலியல் பலாத்காரம் செய்வதற்காக இழுத்துச் செல்லப்பட்ட தனது மனைவியின் பார்வையில் அத்தனை வெறுப்பு இருந்ததாகக் கூறுகிறார். கதைசொல்லியின் இரட்டை போலத் தோன்றும் முகமது இப்ராகிமுக்கும் குழந்தை கிடையாது. கதைசொல்லி-சுசீலா தம்பதிக்கும் குழந்தை இல்லை.
அங்கேயிருந்து தான் இறங்கிப் போக வேண்டும் இருவரும். அந்த இடத்தில் இருவரும் வெகுநேரம் தரிக்க முடியாது.

இங்கேதான் கன்னிமை என்பது கோபுரமாக, லட்சியமாக மாறுகிறது போல.
தமிழில் இந்தக் கன்னிமையின் ஒளியை தொடர்ந்து உணரமுடியும் படைப்புகளைத் தந்தவர்களாக நகுலனையும் ஆத்மாநாமையும் பார்க்கிறேன்.

ஒரு வகைப்பட்ட ஒரு இயல்பு கொண்ட அறிவுக்கு பூமியுடன் உறவு கொள்ள வேண்டும். அந்த உறவை ஆத்மாநாம் மேற்கொண்டிருந்தால் அவரது படைப்புகளில் நாம் இப்போது உணரும் ஒளி தொலைந்து போயிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் மண்ணுடன் ஸ்னேகம் கொள்கின்றன என்று அவர் எழுதியிருக்கிறார். ஆனால் மண்ணைப் பொருத்தவரை அது ஸ்னேகம் அல்ல; அவை பூமியின் ஈர்ப்பை மீறிப் பறக்கும் லட்சிய உயிர்கள்.

அப்படி ஸ்னேகம் கொள்ளாத, ஸ்னேகம் கொள்ள முடியாத, ஸ்னேகத்தை மண்ணுடன் மறுத்த நிலையிலேயே கவிதைப் பயணம் அகாலத்தில் முடிந்துவிட நேர்கிறது.

நகுலனின் ஒட்டுமொத்தப் படைப்புலகத்தையும் மாயம் கொள்ள வைப்பது இந்தக் கன்னிமை என்ற மையப்படிம அம்சமும் தான்.

நகுலன், ஆத்மாநாம் என்ற தனிப்பட்ட ஆளுமைகளின் வாழ்க்கைக் குறிப்புகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் வகையில் இந்தக் கட்டுரை வாசிக்கப்படக் கூடாது.

கன்னிமை என்பது ஒரு கருத்துநிலையாக, ஒரு படைப்பு இயல்பாக அவரவர் படைப்புகளில் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பரிசீலித்துப் பார்க்கத் தூண்டும் குறிப்புகளே இவை.

‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ நாவலில் நாயகன் ப்ளோரென்டினா அரிஸா, காதலி பெர்மினா டாஸாவுக்காக தனது 70 வயது வரை காத்திருக்கிறான். ஆனால், அவன் பொது அர்த்தத்தில் பிரம்மச்சாரி அல்ல. நிறைய பெண்களுடன் அவன் உடல் ரீதியாகவே உறவைக் கொண்டவன்தான்.   ஆனால், அந்தப் பெண்களில் யாரும் பெர்மினா டாசாவின் இடத்தை நிரப்பவேயில்லை. அவளுடனான உறவைத்தான் இதயபூர்வமான திருமணம் என்று நம்புகிறான். 70-களைக் கடந்து பெர்மினா டாசாவின் கரம் பற்றும்போது, தான் இன்னும் கன்னித்தன்மை உடையவன்தான் என்று சொல்கிறான் அரிஸா. அது பாதியளவில் உண்மையும்கூட. அது பொய்யும் அல்ல.

கன்னித்தன்மை என்பதற்கு சமூகமும், சமயமும் வைத்திருக்கும் வரையறைக்கு மாற்றான கருத்துருவங்களையும் புரிதல் நிலைகளையும் ஒரு படைப்பு எவ்வாறு கொண்டுள்ளது?

நகுலனின் கவிதைகளில் அது கருத்துருவமாகவே செயல்படுகிறது. ஆத்மாநாமின் கவிதைகளில் ஒரு ஒளியனுபவமாக, சாயைகளாக, உள்ளடக்கமாகச் செயல்படுகிறது.

எந்த நஞ்சு பருகினான் சிவன்? ஏன் அதைத் தொண்டையோடு தடுத்தாள் சக்தி?

Thursday, 16 April 2020

கொரோனா காலத்தில் கிறிஸ்துஜேம்ஸ் மார்டின்

கடந்த சில வாரங்களில் லட்சக்கணக்கான மக்களுக்கு, தீர்ப்பு நாளை நெருங்குகிறோமென்ற அச்சம் எழுந்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று தான் அதற்குக் காரணம். வேகமாக நகரும் இத்தொற்றின் இன்னொரு பயங்கர அம்சமாக கிட்டத்தட்ட உடல் திடுக்கிடலைத் தரும் அதன் திடீர் அவதாரமும் உள்ளது. ஒரு பாதிரியாராக, பீடிப்பு, அச்சம், கோபம், துயரம், குழப்பம் மற்றும் விரக்தி கலந்த உணர்வுகளைத் தொடர்ந்து செவியுற்று வருகிறேன். நாட்கள் போகப் போக ஒரு திகில் படத்துக்குள் வாழும் உணர்வு ஏற்படுகிறது. உள்ளுணர்வு ரீதியாகவே என்னை குலைத்துப் போடும் தன்மையில் என் மனத்தை அதீதமாகத் தொந்தரவு செய்யும் நிலை இது. சமயப்பற்று அதிகம் கொண்ட மக்கள் கூட என்னிடம் கேட்கின்றனர்: ஏன் இப்படி நடக்கிறது? இவை எல்லாவற்றிலும் கடவுள் எங்கே இருக்கிறார்?

கோவிட் -19 வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை ஏன் கொல்கிறது? இதுபோன்ற நோய்த்தொற்றுகள் ஏன் மனிதகுலத்தைச் சீரழிக்கின்றன? இத்தனை துயரம் மனிதர்களுக்கு ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேர்மையான ஒரு பதில் இருக்குமானால், அது நமக்குத் தெரியவில்லை என்பதுதான். என்னைப் பொறுத்தவரை, அதிகபட்சமான நேர்மையும் துல்லியமும் கொண்ட பதில் இதுதான்.

இயற்கை உலகின் ஓர் அங்கம்தான் வைரஸ் என்றும், அது உயிர் வாழ்க்கைக்குப் பங்களிப்புசெய்வதாகவும் சிலர் வாதாடலாம். ஆனால், இந்த அணுகுமுறை தனது நேசத்துக்குரிய துணையையோ நண்பரையோ இழந்து நிற்பவருக்கு முன்னால், தோற்றுப் போய்விடும். இறை விசுவாசிக்கு இதுபோன்ற வேளைகளில் எழும் முக்கியமான கேள்வி இது: உங்களால் புரிந்துகொள்ள முடியாத கடவுளை நம்ப முடியுமா?

நாம் அனுபவிக்கும் துயரங்களின் ரகசியங்களுக்கு விடை இல்லாதபோது, ஒரு இறை விசுவாசி எங்கே சென்று அடைக்கலம் தேட முடியும்? விடை கிறிஸ்துவாக இருக்கலாம்.

கிறிஸ்து முழுமையாக தேவனும் முழுமையாக மனிதனுமானவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். சில வேளைகளில் மனித அம்சத்தை நாம் பாராமல் இருந்துவிடுகிறோம். நாசரேத்தில் பிறந்த இயேசு, நோய்கள் ராஜாங்கம் செய்த உலகில் பிறந்தார். தனது பிரசங்கங்கள் அனைத்திலும் நோயாளிகளை நோக்கி அவர் பேசினார். அவரது அதிசயங்களில் பெரும்பாலானவை நோய்களையும் ஊனங்களையும் குணப்படுத்திய சம்பவங்கள்தாம். மோசமான தோல் குறைபாடுகள், வலிப்பு, பார்வைக் குறைபாடு, காதுகேளாமை, பக்கவாதம் என அவர் தீர்த்த நோய்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பெருந்தோற்று நோய் அச்சமூட்டிக் கொண்டிருக்கும் நாட்களில், கிறிஸ்தவர்கள் இயேசுவை நோக்கி பிரார்த்தனை செய்யும்போது, அவர் கடவுளாக அனைத்து விஷயங்களையும் அறிந்தவர் என்பதுடன் மட்டுமல்லாமல், மனிதராக இங்கே வாழ்ந்து இங்குள்ள அனைத்து விஷயங்களை அனுபவித்தவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நோயுற்றவர்களை நேசத்துடன் கவனித்துப் பராமரிப்பதற்கான முன்மாதிரியாக கிறிஸ்துவை, கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களும் காண்பதற்கு இடமுண்டு. கிறிஸ்துவைப் பொறுத்தவரை நோயுற்ற மனிதனோ, இறந்துகொண்டிருக்கும் மனிதனோ வேற்றாள் அல்ல; அவன் குற்றம்சாட்டப்பட வேண்டியவனும் அல்ல, அவன் நமது சகோதரனோ சகோதரியோ ஆவான் / ஆவாள். பரிகாரம் தேடும் ஒரு நபரை இயேசு சந்திக்கும்போதெல்லாம், அவரது இதயம் இரக்கத்தால் நெகிழ்ந்தது என்று நற்செய்திகள் சொல்கின்றன. இதுபோன்ற நெருக்கடிக் காலங்களில் நமது இதயங்கள் எப்படி நெகிழ்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதற்கான மாதிரிதான் இயேசு.

நியூயார்க்கின் 68-வது சாலையில் உள்ள தேவாலயத்தில் நான் பிரார்த்திக்கும் போதெல்லாம், நான் இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தின் முன்னர் சிறிது நேரம் நிற்பேன். அவரது கரங்கள் விரிந்து இதயம் தெரிய நிற்கிறார். பாரிஸ் சுண்ணச்சாந்தில் செய்யப்பட்ட சிலை அது. அது ஒரு பெரிய கலைப்படைப்பு அல்ல. ஆனால், அந்தக் கிறிஸ்துவின் சிலை என்னைப் பொறுத்தவரை அர்த்தமுடையது. ஏன் மக்கள் இறக்கின்றனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்ற மனிதனை என்னால் பின்தொடர முடியும்.

கட்டுரையாளர், அமெரிக்காவில் வசிக்கும் இயேசு சபை அருட்பணியாளர்

(நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்)

தமிழில் : ஷங்கர்

Wednesday, 15 April 2020

புதுமைப்பித்தனின் கபாடபுரத்துக்குள் இன்னும்தேவதச்சன் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றில் அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் சேர்ந்த புதுமைப்பித்தனின் மரபு புதுக்கவிதையிலும் இருப்பதாக எழுதியிருப்பேன். புதுமைப்பித்தன் கன்னியாகுமரி ஆலயத்தின் கிழக்கு வாசலிலிருந்து இறங்கிப் போய் கபாடபுரக்குள் போன ஒரு பயணத்தின் இன்னொரு பிரதி தேவதச்சன் கவிதையாக உள்ளது. புதுமைப்பித்தனின் பிரமாண்ட உலகம் தேவதச்சனில் சிறு வீடாக மாறியுள்ளது.

வெளிக்கதவு திறந்து
உள்கதவைத் திறந்து
அறைக்கதவைத் திறந்து
பீரோ திறந்து
ரகசியச் சிற்றறை திறந்து
பெட்டியை எடுத்தேன்
மணம் வீசிக்கொண்டிருக்கிறது
கருநாவல் பழம் ஒன்று
பிசுபிசுவென்று.
கபாடபுரத்தின்
சுடுகாட்டு மரத்தில்
பறிக்கையில்
ஒட்டிய தூசு தும்பட்டையுடன்

காலத்தின் எத்தனையோ மடிப்புகளுக்கப்பால், எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் கபாடபுரத்தின் சுடுகாட்டு மரத்தில் பறிக்கும்போது ஒட்டியிருந்த அதே தூசு தும்பட்டையுடன் பிசுபிசுவென்ற கருநாவல் பழம் இருக்கும் பெட்டி ஒன்று திறக்கப்படுகிறது. புதுமைப்பித்தனும் தேவதச்சனும் தமிழ் என்ற ஆதி உணர்வை, அறிவை, நினைவை கபாடபுரம் என்ற சொல், இடம் வழியாகத் திறக்கிறார்களா? சுடுகாட்டு மரத்தில் பறிக்கப்பட்ட நாவல்பழம் என்ற செய்தியில் காரைக்காலம்மையாரைக் கடக்காமல் இருக்க முடிகிறதா? தேவதச்சன் இந்தக் கவிதையில் பயன்படுத்தியிருக்கும் பிசுபிசுப்பு, தூசுதும்பட்டை என்ற இரண்டு வார்த்தைகளும் கொடுக்கும் உணர்வு அர்த்தச் சுமை அலாதியானது.

மனிதனை உண்ணும் மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியை கபாடபுரத்தின் கதைசொல்லி சாப்பிடத் தயங்கும்போது, சுடுகாட்டு மரத்தில் பறிக்கப்பட்ட மாம்பழத்தை நாம் சாப்பிடுவதில்லையா என்று சித்த புருஷர் கேலியாகக் கேட்கிறார். கபாடபுரத்திலும் இன்னும் பல கதைகளிலும் மரணம் என்ற விஷயத்தின் மேல் விசாரணையும் வசீகரமும் தொடர்ந்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறிவின் தன்மை அறிவுக்குத் தெரிய அறிவு அடங்குவதை நோக்கி, கற்பனை உலகங்களை சிருஷ்டித்து தனது கேள்விகளை மரணத்தை நோக்கி எழுப்பிய கதைகளாக உபதேசம், செவ்வாய்தோஷம் கதைகளைச் சொல்வேன். உபதேசம் கதையில் நவீன மருத்துவத்தால் விளங்கிக் கொள்ள முடியாத, கண்ணாடிகளைத் தின்று உயிர்வாழும் ஹடயோகியின் உடலைத் திறந்து பார்ப்பதன் வழியாகத் தான் ஆங்கில மருத்துவர் விஸ்வநாத்தின் பாதையே மாறுகிறது.

செவ்வாய்தோஷம் கதையில் வரும் கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு, அலோபதியை வாழ்வாதாரமாகவும் சித்தவைத்தியத்திலும் ஜோதிடத்திலும் நம்பிக்கையை விடாதவராகவும் இருக்கிறார். கோயிலூர்ப் பள்ளனின் மரணத்துக்குச் சொல்லப்படும் அதீதமான பின்னணியை அலோபதி மருத்துவர் வீரபத்திரப் பிள்ளைக்குத் தெரியப்படுத்துகிறார். கபாடபுரம், செவ்வாய்தோஷம், உபதேசம் மூன்று கதைகளிலும் அறியாத ஒரு உலகம் திறக்கப்படுகிறது. கபாடபுரம் கதையில் இடமென்றால், மற்ற இரண்டு கதைகளிலும் உடலும் உடல் சார்ந்த அறிவும் விசாரணைக் களமாகிறது. நவீன பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பழையதில் தீர்வு காணும் மூர்க்கத்தில் அல்ல, ஒரு அரசாக, மதமாக, எதிர்த்துக் கேட்க இயலாத நம்பிக்கையாக மாறிவரும் நவீன அறிவின் போதாமைகளிலிருந்து புதுமைப்பித்தன் உருவாக்கும் விவேக உலகங்கள் இவை. மாயை, பயம், சபலம், சமய நம்பிக்கையைத் துறந்த அறிவார்ந்த படைப்புக் கேள்விகளாக அவை இருப்பதாலேயே பழைமை ஏறாமல் நமக்கு இன்னும் அர்த்தப்பாட்டுடன் இருக்கின்றன.

பிறப்பின் ரகசியங்களை, இருப்பின் ரகசியங்களை, வாழ்வதின் ரகசியங்களை, மரணத்தின் ரகசியங்களை, மொழியின் ரகசியங்களை, அர்த்தங்களின் ரகசியங்களை, அதன் வரையறைகளின் ரகசியங்களை மோதித் திறக்காமல் அவை வகுக்கும் நியதியை உணர்ந்து அதன் பிரகாரத்திலேயே அமர்ந்து கனிந்து அந்தக் கனிவையே அறிதலாக்கிப் படைப்பாக்கும் எழுத்தாளர்கள் ஒருவகை. பஷீர், சிவராம் காரந்த், எம். வி. வெங்கட்ராமன் போன்றவர்கள் அதற்கு உதாரணங்கள். கடவுளின் கஜானாவிலிருந்து நிறைவையும் கனிவையும் நிறை ஆயுளையும் அனுபவிப்பவர்கள்.

புதுமைப்பித்தன் போன்றவர்கள், கம்பவுண்டர் வெங்கடசாமி நாயுடுவைப் போல கையில் கத்தியுடன் நடு இரவில் அச்சமின்றி சுடுகாட்டுக்குப் போய், அறிவின் நியதிகள், மொழி வகுத்திருக்கும் நியதிகள், அமைப்பின் நியதிகள் எல்லாவற்றையும் கேள்விகளாலும் விமர்சனத்தாலும் அறுத்துப் பார்க்கத் துணியும் அதீதர்கள். தன்னைச் சுற்றி இயல்பைப் போலப் படர்ந்திருக்கும் அமைப்பை உலுக்கியெடுக்கும் அந்த அதீதம்தான் திரும்பி அவனது உயிரையும் தீண்டிவிடுகிறது.

ஆனால், அந்த அதீதம்தான், தமிழ் மொழியின் வசீகரம் குன்றாத பொற்பிரம்பாக மாறியிருக்கிறது.     

அவரது அன்று இரவு கதையில் ஈசன் முகத்தில் விழுந்த அந்தப் பொற்பிரம்பு, புதுமைப்பித்தனுடையது. அழகு, உண்மை, தெய்வம் என்ற அம்சங்களை ஆபரணங்களாகக் கொண்ட, அழகுக்கான தேடலும் நீதிக்கான தேடலும் வேறு வேறு அல்ல என்ற முன்வரைவைக் கொண்ட உருவகம் அவன். அதனால் தான் அந்த அடியிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை. எதுவும் தப்ப முடியவில்லை.

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின்மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகள் மீது விழுந்தது. கருவூரில் அடைபட்ட உயிர்கள் மீது, மண்ணின் மீது வனத்தின்மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின் மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடிவிழுந்தது.

காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள்மீது விழுந்தது. சாவின்மீது பிறப்பின் மீது மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன்மீது, வாதவூரன் வேதனையின்மீது, அவன் வழிபட்ட ஆசையின்மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது. 


(அன்று இரவு கதையின் கடைசிப் பகுதி)  

Sunday, 12 April 2020

பக்கீர் சிறுவன் ராணிதிலக்


கரோனோ ஊரடங்கு நாட்களில் எல்லாரும் சமூக விலக்கம் செய்து கொண்டு வீட்டில் தனியே இருக்கும் அனுபவம், எனக்குப் புதியது அல்ல. இன்று தொலைபேசியில் அழைத்த கவிஞர் ஜயபாஸ்கரனிடம், நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், இது நமக்குப் புதியதா என்ன என்று கேட்டபோது பதிலுக்குச் சிரித்தார்.

சுனாமி காலத்திலும் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும் சென்னைக் கடலைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிப் போய்ப் பார்த்ததுண்டு. அப்படித்தான் சென்ற வாரமும் மெரினாவை அலுவலகத்திலிருந்து வரும்போது கடந்தேன். ஔவை சிலைக்குச் சற்று முன்னர் பைக்கை நிறுத்தி மனிதப்படலம் முற்றிலும் அகன்று கடல் நீலமும் மணலின் பொன்னும் மின்னும் இயற்கையைப் பார்த்தேன். வேம்பும் பூச்செடிகளும் நடப்பட்ட நீண்ட புல்வெளியில் நிற்கும் சாம்பல் நாரையைப் பார்த்தேன். தடுப்புக் கம்பிக்கு அருகில் இன்னொரு சாம்பல் நாரையும் மேய்ந்து கொண்டிருந்ததால் மட்டுமே அந்த நாரை நிஜம் என்று தெரிந்தது. இல்லையென்றால் அசலான அளவில் வடிவமைக்கப்பட்ட சிலை போல புல்வெளியில் நின்று கொண்டிருந்தது. ஒரு நிமிடத்துக்குப் பிறகுதான் கழுத்தில் சலனம் கொண்டு தலையைத் திருப்பியது; அதற்குப் பின்னரும் நகரவேயில்லை.

காணும் இடமெங்கும் கண்குளிரும் பொன்மணல் என்ற பிரமிளின் படிமம் மெய்வெளியாக எனக்கு முன்னர் விரிந்திருக்கிறது. ஔவையும் நாரையும் அருகருகே இருந்தாலும் தற்போதுதான் அத்தனை நெருக்கமாக அவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றியது. மனிதர்களின் பழக்கம் தீண்டாத பழக்கமொழிந்த இந்த அசாதாரண வேளைகளில் வெளிகளில் குரங்கும்  புலியும் தோன்றத் தொடங்குகிறது. எங்கள் வேளச்சேரி வீட்டுக்கு ஒரு முதிய பெண் குரங்கு வந்து பால்கனிச் சுவற்றில் அமர்ந்து பசியாறும் வரை அவல், பழம் எல்லாவற்றையும் கோரிச் சாப்பிடுவது போலச் சாப்பிட்டு ஒரு குவளை தண்ணீரையும் குடித்துவிட்டு மிகச் சாவகாசமாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தது. கவிஞர் இசை, மயில் சாலையில் தோகை விரித்து ஆடும் வாட்ஸ் அப்-ஐப் பார்த்ததாகச் சொன்னார். அந்த மிருகங்கள் வேறு யாரும் அல்ல. அவை நாம் தான். அவை தோன்றாமல் இருந்தன; இப்போது அவை தோன்றுகின்றன என்று சொன்னேன்.

இயற்கைக்கும் அதில் தியானிக்கும் ராணிதிலக்கின் கண்களுக்கும் இடையே மனிதப்படலம் பெரும்பாலும் இல்லை. கண்களும் உடலும்  பருவங்களினூடாகவும் வெளிகளினூடாகவும் தாவரங்களினூடாகவும் தோய்ந்து அலைகிறது. அந்த அலைச்சலிலிருந்து சலித்து மேலெழும் ஒரு ஆலாபனை போல அந்தக் கடைதலில் இருந்து மேலெழும் ஸ்வரம் போன்றவைதான் ராணிதிலக்கின் கவிதைகள். காவிரியின் நீர்மேல் ப்ளக் ப்ளக் ப்ளக் என்று தவ்வத் தொடங்கியுள்ளன.       

அவனது கவிதைகளில் கண்ணுக்கு எட்டும்வரை வீடுகளே இல்லை. ஊருக்கு வெளியே ஊருக்கு வெளியே சாலையில் நடந்து செல்லும் சிறுவனின் குதிக்கும் மனம் கொண்ட நாடோடியின் கண்களால் இந்தக் கவிதைகளை எழுதியிருக்கிறார். ‘மெலட்டூர் ஆற்றுப் பாலம்’ கவிதையில் பாலம் இல்லாத போது இருந்த ஆற்றையும் பாலம் தூர்ந்த பிறகு ஓடும் ஆற்றையும் கற்பனை செய்து எழுதியுள்ளார்.
ஆற்றின் நடுவே பாலம் வரும்போது அங்கே கவிஞனுக்கும் இயற்கைக்கும் நடுவே மனிதப்படலம் நுழைந்துவிடுகிறது. கவிஞன் மானுடன் என்றாலும் அவன் ரகசியத்தில் அந்தப் பாலத்தை விரும்பாதவன்; பாலம் இல்லாமல் போகும் காலத்தைக் கனவு காண்பவன்.

லண்டன் பிரிட்ஜ் இஸ் பாலிங் டவுன் என்ற குழந்தைகள் பாடலில் திரும்பத் திரும்ப விழுதல் எப்படி விளையாட்டாக மாறுகிறது?

பாலம் இல்லாமல் போனபிறகு பரிசலின் ஓரத்தில் அமர்ந்தபடி ஈரமிக்க ஆற்றினைக் கைகளால் நனைப்பேன் என்று கனவு காண்பவன் யார்? பாலம் இல்லாதபோது அந்தப் பெரும்பரிசல் ஒரு உயிரியாக எப்படி மாறுகிறது?

மெலட்டூர் ஆற்றுப் பாலம்


முன்னொரு காலத்தில் ஆற்றின்மேல் பாலம் இல்லை
பெரும்பரிசல் ஒன்று
இரு கரைகளுக்கும் இடையே வாழ்ந்துகொண்டிருந்தது.
இப்போது அப்படியில்லை. அகரமாங்குடிக்கும்
மெலட்டூர்க்குமான பாலம் வெட்டாறு மேல் நிற்கிறது.
இப்போது புதிய விரிசலை அது கண்டுவிட்டது.
நான் இதன்மேல் நின்றுகொண்டு
இந்த ஆற்றில் கால் நனைக்காமல் தரிசிக்கிறேன்
என்பது எவ்வளவு துர்பாக்கியம்.
இன்னுஞ்சில காலத்தில் பாலம் இடிந்துவிழும்.
அக்கரைக்கும் இக்கரைக்குமான பரிசல் ஒன்றைக்
கிழவன் ஒருவன் செலுத்துவான்.
அந்தப் பரிசலின் ஓரத்தில் அமர்ந்தபடி
ஈரமிக்க ஆற்றினைக் கைகளால் நனைப்பேன்.
எப்போதும் போல்
பாலத்தைக்
கடக்கும்போதெல்லாம்
ஆற்றை நோக்கிக் கைகள் தாமாக
திரும்புகின்றன.

வெளியீடு

ப்ளக் ப்ளக் ப்ளக்
ராணிதிலக்
காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ. 90
தொடர்புக்கு : 04652 - 278525

Friday, 10 April 2020

புதுமைப்பித்தனின் கபாடபுரம்


கன்னியாகுமரிக்குப் போய் சில வருடங்களாகிவிட்டன. அந்த ஏக்கத்தை பகத் பாசில் நடித்த ‘டிரான்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். படத்தில் நாயகன் பகத் பாசிலும் அவனது தம்பியும் படத்தின் ஆரம்பத்தில் கன்னியாகுமரியில் வசிப்பதாகக் கதை. தமிழ் சினிமாவில் கன்னியாகுமரி கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பிரதான மண்டபத்தையும் கடற்கரையையும் இப்படிக் காட்டியிருக்கவில்லை. நூற்றாண்டு காலமாக சுற்றுலாப் பயணிகளின் கண்களால் பார்க்கப்பட்டு சலித்து சிறுத்துப் போன சிறுநகரமாகத் தோன்றும் கன்னியாகுமரி, ஒரு பெரும் புராணிகத்தின் நினைவை ரகசியத்தை எழிலை மறைத்துவைத்திருக்கிறது. புறத்தில் எத்தனையோ கண்களால் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு சலித்துப் போன கன்னியாகுமரியின் கரையை, சிதறிக்கிடக்கும் பாறைகளை, மோதிக் கொண்டிருக்கும் அலைகளின் பேரோல இரைச்சலுக்குள், அந்தப் புராதனமும் மர்மமும் இரவுகளில் நம்மிடம் வேறொரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவை தூண்டிய ஞாபகத்திலிருந்துதான் புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை மீண்டும் படிக்க வேண்டுமென்று நினைத்தது.

கன்னியாகுமரி கோயிலின் கிழக்கு வாசலில் அசந்தர்ப்பமாக மாட்டிக் கொண்ட ஒருவன் முன்னால் கன்னியாகுமரியின் அந்தப் புராணிகம் தன்னைத் திறந்து காண்பித்த கதைதான் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’.

கபாடபுரத்தின் கதைசொல்லிக்கும் கன்னியாகுமரி கோயிலில் சிறுமியாக, தேசலான பெண்ணாகத் தான் அம்மன் தெரிகிறாள். மஞ்சணை என்று அழைக்கப்படும் எண்ணெய் குங்குமக்குழம்பில் அவள்  வசீகர ரூபம் கொள்கிறாள். திட்டிவாசலுக்கு வெளியே அலைகளின் அழைப்பை ஏற்று நினைவையும் சுயத்தையும் தவறவிட்டுப் படிகளில் இறங்கும்போது கடல் உள்வாங்கி இன்னொரு நிலம் துலங்குகிறது.

பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொண்ட, இன்றும் தமிழ் நனவிலியில் மோதிச் சிதறி அடித்துக் கொண்டேயிருக்கும் மாபெரும் நினைவொன்றின் புதைநிலத்தை அலிபாபா போல புதுமைப்பித்தன் திறந்த மிகுபுனைவுக் கதை இது. ஏற்கெனவே உள்ள புராணிகத்தைக் கச்சிதமாகக் கட்டியெழுப்பிய அலங்காரம் மட்டும் அல்ல இந்தச் சிறுகதை. மரணத்தின் எல்லையில் நின்று அறிவின் வரையறையை உலுக்கும் கேள்விகள் இந்தப் படைப்பில் உண்டு.  ‘காலத்தை எதிர்த்து நிற்க நினைக்கும் ஒருவனுக்கு உடம்பு அனாவசியம்’ என்று சொல்லும் உடலற்ற தலையின் குரலில் புதுமைப்பித்தன் என்ற சிருஷ்டிகர்த்தாவின் லட்சியமும் ஒலிக்கிறது. தமிழ் நவீன இலக்கிய சரித்திரமே, சித்தம் விடுக்கும் சுளீர் சவுக்கடி விமர்சன ஓசையில்தானே துவங்குகிறது.

கடலில் இறங்குகிறான் கபாடபுரத்தின் கதைசொல்லி. கடலில் உள்ள மலையில் ஏறத் தொடங்குவதற்கு முன்னர் ஆக்டோபஸ் போன்ற உருவத்தைப் பார்க்கிறான். அதன் கசையிழைகளை துதிக்கை என்கிறார் புதுமைப்பித்தன். அதற்குக் கண்கள் இருக்கின்றன. ஒரு சயன்ஸ் பிக்ஷன் திரைப்படத்தில் வரும் விதவிதமான உயிரினங்கள், ஊன் உண்ணித் தாவரம் உள்ளிட்டவை வருகின்றன. மரணமும் உயிர்ப்பும் பொன்னாக வெள்ளியாகப் பளபளப்புடன் மின்னுகின்றன.  அகாலத்தில் தன் உயிரைவிட்ட புதுமைப்பித்தனின் கதைகள் இன்றும் மின்னுவதைப் போல விசித்திர விசித்திரமாக ஆதித்தாவரங்களாக பிரமாண்டமாகக் காட்டப்படுகின்றன.

காஃப்காவின் விசாரணை கதையில் வருவதைப் போல, ஒரு நிகழ்ச்சி தொடங்கிய பிறகே அந்த இடத்தை விளக்கேற்றிக் காண்பிக்கிறான் கதைசொல்லி. அந்த இடத்தின் வடிவம், அங்கு இருக்கும் கதவுகள், அங்கு இருக்கும் ஜீவராசிகள் எல்லாம் அறிமுகமாகின்றன. தூண்டாமணி தீபத்தின் வெளிச்சத்தில் கபாடபுரம் நம் முன்னர் துலங்குகிறது.

சூரியோதயத்தில் செண்பகமும் அஸ்தமனத்தில் மல்லிகையும் வீசும் வாசனைக் கடிகாரம் ஒன்று அங்கே உள்ளது.

பாதாள கங்கையில் நான்கு சடலங்கள் சேர்த்துக் கட்டப்பட்ட புணையில் ஏறி சித்தலோகத்துக்குப் பயணிக்கிறான். எல்லையும் எல்லையுமற்ற தன்மையுமாக இருக்கும் அந்த இடத்தில் சடலங்கள் தனது வேலை முடிந்தவுடன் மாடர்களாகவும் நந்திகணங்களாகவும் சர்வசாதாரணமாக எழுந்து கரையேறிச் செல்கின்றன.

கதைசொல்லி கடைசியில் சென்று சேரும் சித்தலோகம் நமக்குத் தெரிந்த பழைய உலகங்கள் அல்ல. இயல்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக காரியங்கள் நடந்தால் அதை இயல்புக்கு மாறானதாக நினைத்துக் கொண்டுவிடலாமா என்ற கேள்வியில் கதைசொல்லிக்கு மட்டுமல்ல நமது நவீன மூளைகளுக்கும் அடி விழுகிறது. உபதேசம் கதையில் அறிவின் அஸ்திவாரமே தவறு என்று வில்கின்சனுக்கு டாக்டர் விசுவநாத் சொல்வது போன்று தொனிக்கிறது.

உடலின் மரணத்தை வெல்ல நினைக்கும் சாகாமை விவாதிக்கப்படுகிறது. உனக்குத் தெரியாமல் போனால் அதை இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே என்று சொல்லும் சித்த புருஷர், சாவு என்றால் உனக்குத் தெரியாது என்று ஒரு போடு போடுகிறார்.

சாவை விசாரிக்கத் தொடங்கும் அவர், மரணத்தின் வகைகளை விவரிக்கிறார். மெதுமெதுவாக மரணம் என்பது மரணமல்ல என்பது போலத் தொனிக்கத் தொடங்குகிறது.

டினோசரஸ் போன்று தோன்றும் கர்ப்பேந்திரத்தை அழிக்கும் முயற்சியில் கபாடபுரம் ஊழியில் மூழ்குகிறது. அதற்கு கொக்கு போலக் கழுத்து உள்ளது. பூசாரி சடையன் மகளாகவும் பிறகு காவல் தெய்வமாகவும் ஆகும் கன்னியும் வருகிறாள். கதைசொல்லியின் நிறைவேறாத காதலி.

கபாடபுரத்தின் மொத்தக் கதையும் அதன் தொடக்கத்திலிருந்து கன்னி என்ற உருவகத்தின் மீதான உத்வேகத்தைக் கொண்டிருப்பது. கடல் கோயிலில் ஒரு கன்னி, தென்மதுரையின் மீன்கன்னி என்று கன்னிகள் வருகின்றனர்.

சாகாமைக்கும் பிறப்புக்கும் அடியில் பூமியின் சிசுப்பருவத்திலிருந்து மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஒன்றை, படைப்புக்கும் விழைவுக்கும் உயிராக விளங்கும் காமத்தை, கன்னியாகுமரி ஆலயத்தில் அந்தக் குமரியின் மூக்கில் நித்தியமாக மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஆபரணமாக தமிழில் சுடரவிட்ட காரியம் தானோ ‘கபாடபுரம்’.

அதனால்தானோ எல்லாரும் வழிபடும் அனைத்து புராணிகங்களுக்கும் மூலப்பொருளாக விளங்கும் அந்தக் கன்னியையும் கதைசொல்லியையும் காவல் இன்றி, அலட்சியமாக விட்டு பூட்டிச் சென்றார்களோ மனிதர்கள்.

இப்போது கன்னியாகுமரியின் கிழக்கு வாசல் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. கபாடம் திறமினோ. கபாடம் திறமினோ.

ஓவியம் : மருது

புதுமைப்பித்தனின் கபாடபுரம் கதையை வாசிக்க : https://archive.org/details/orr-3943/page/n7/mode/2up)

புதுமைப்பித்தனின் கபாடபுரம் தொடர்பில் கவிஞர் பெருந்தேவி எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க :https://minnambalam.com/k/2018/04/25/12)

பெருந்தேவி கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு  : https://minnambalam.com/k/2018/04/26/8 )


Wednesday, 8 April 2020

மனித அகந்தைக்கு மேலே இயற்கைபிரபஞ்சத்தின் இயக்கத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையிலான தொடர்பை தனது சினிமாக்கள் மூலம் விசாரிக்கும் அபூர்வமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் டெரன்ஸ் மாலிக். அவரது சமீபத்திய படைப்பான 'எ ஹிட்டன் லைப்' எழுத்தாளர் ஜார்ஜ் எலியட்டின் வார்த்தைகளுடன் முடிகிறது.

‘உலகம் வாழ்வதற்கான இடமாக ஆவதற்கு வரலாற்று ரீதியாகப் பதிவாகாத செயல்பாடுகளும் ஒருபங்கு காரணமாக உள்ளன. உலகம் அத்தனை மோசமாக உங்களுக்கும் எனக்கும் இல்லாமல் இருக்கிறதென்றால் அதன் பாதிப் பொறுப்பு, விசுவாசத்துடன் கூடிய ஒரு வாழ்க்கையை யாருடைய கண்களுக்கும் படாமல் வாழ்ந்த தனிநபர்களையே சாரும். அதிக எண்ணிக்கையில் போய் காணப்படாத சமாதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்.’

கொடுங்கோலன் ஹிட்லருக்கு ஆதரவான உறுதிமொழியை எடுப்பது கிறிஸ்துவுக்கு எதிரான செயல் என்று கருதி, மரண தண்டனையை அடைந்த குடியானவன் பிரான்ஸ் ஜெகர்ஸ்டாட்டர் என்ற சாதாரணனின் கதை இது.

மரணம் அவன் மீது விதிக்கப்பட்டதா? இல்லை. தான் நம்பும் சத்தியத்துக்காக அவன் மேற்கொண்ட தேர்வு அது. இயற்கையோடு சேர்ந்து வாழும் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த செயின்ட் ரேட்கண்ட் கிராமத்தின் நடுத்தர விவசாயி அவன். காதல் மனைவி, மூன்று பெண் குழந்தைகள், கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகள் என்று ஒரு அமைதியான வாழ்வு அவனுக்கு ஆசிர்வதிக்கப்பட்டது. ராணுவப் பயிற்சியில் குறைந்த காலம் இருந்துவிட்டு ஊர் திரும்பி மனைவி மக்களோடு ஆல்ப்ஸ் மலை தீரத்தில் விவசாயம் செய்யும் கொடுப்பினை அவனுக்கு உண்டு. இரண்டாம் உலகப் போர் முடியாமல் தொடர்ந்த நிலையில் ஜெகர்ஸ்டாட்டருக்கும் படையில் சேர அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று படையில் சேர வேண்டுமானால் முதலில் ஹிட்லருடன் இணையும் உறுதிமொழியை பகிரங்கமாக எடுக்க வேண்டும். வெறும் வார்த்தைகள் தானே என்று கிராமத் தலைவர் சொல்கிறார்; உள்ளூர் பாதிரியார் சொல்கிறார்; திருச்சபை பிஷப் சொல்கிறார்; மொத்த கிராமமும் பிரான்சையும் அவனது குடும்பத்தையும் விலக்கி வைக்கிறது. அவனது காதல் மனைவி பானி மட்டுமே கடைசிவரை அவனது தீர்மானத்துக்கு ஆதரவாக இருக்கிறாள். குடும்பத்தையும் உன் நலத்தையும் காத்துக் கொள் என்று சொல்லும் அறிவுக்கும் உள்ளுணர்வுக்கும் போராட்டக் களமாக அவனது மனம் ஆகிறது. தன் மனைவியின் ஆதரவுடன் தானே முன்வந்து பெர்லினுக்குச் சென்று கைதாகிறான்.

கிறிஸ்துவின் மனிதாபிமான நம்பிக்கையைக் கடைசிவரைக் கைவிடாத பிரான்ஸ், பானி தம்பதியினரின் கதையோடு இன்னொரு முக்கியமான கதையும் திரையில் பேச்சற்று நிகழ்கிறது.

பிரமாண்டமாக நிற்கும் மலைகளின் பின்னணியில் மனிதனின் நிச்சயங்களை மறுக்கும் பருவ காலங்களின் பின்னணியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட பல்வேறு உயிர்வாழ்க்கைகளின் கதை காட்சிகளின் மூலமாக நமக்கு கண்கள் அகலக் காட்டப்படுகிறது. கருணை என்பது மனிதர்களுடையது மட்டுமேயல்ல என்பது போல இயற்கையின், நிலப்பரப்புகளின், ஒளிரும் புல்வெளிகளின் காட்சிகள் உறைந்த தன்மையில் நம்முன் காட்டப்படுகின்றன. வெறுமனே புகைப்படத்துக்கு முன்னால் நிற்பதற்கான பின்னணி மட்டுமே அல்ல என டெரன்ஸ் மாலிக் காட்டும் இயற்கையின் விகாசம் நமக்கு உணர்த்துகிறது. இயற்கை கொடுப்பதை மனிதர்களே நன்மை, தீமை, ஆசிர்வாதம், சாபம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் டெரன்ஸ் மாலிக் சொல்லி விடுகிறார். வீடுகளிலும் சிறையிலும் வயல்களிலும் விளையாடு ஒளி நிழல்களின் விளையாட்டு இன்னொரு தனிக்கதை.

கோடிக்கணக்கான ஆண்டுகளை வயதாகக் கொண்ட மலைகளிடமிருந்து உறுதியையும் பிடிவாதத்தையும் கற்றுக்கொள்வது போல பிரான்ஸ்- பானி தம்பதியினரின் விவசாய வாழ்க்கை காட்டப்படுகிறது. நவீனம் சற்றே எட்டிப் பார்க்கத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திய ஐரோப்பிய கிராமப்புற வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் விரிவாகக்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  பிரான்ஸ் சிறைக்குப் போன பின்னரும் பானி, தன் தாபத்தையும் நிராதரவையும் தனிமையையும் மண்ணை உழுது பாறைகளை அகழ்ந்தெடுத்து வேலிகளில் பணியாற்றி மண்ணுடனே புழங்கிக் கடக்கிறாள். அவளது கிராமத்தில் அவளுக்கு இரக்கம் காண்பிக்கும் அரிதானவன் நிலத்தை ஒட்டித் தனது அடுமனையில் ரொட்டிகளைச் சுடுபவன் தான்.

இயற்கையின் கொடூரம் எனத் தோற்றம் தரும் நாஜிக்களின் பல்வேறு விதமான கொடூரங்களை சிறையில் பிரான்ஸ் சந்திக்கிறான்.

பிரான்சின் வழக்கறிஞர் பரிந்துரைக்கும் மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கிறான். பார்வையாளர்கள் அவனிடம் கேட்க விரும்பும் கேள்விகள் கதாபாத்திரங்களால் கேட்கப்படுகின்றன. உன்னுடைய முடிவால் உன் குடும்பத்துக்கு நீ விட்டுச் செல்வது என? உன் செயலால் வரலாற்றுப் போக்கில் எதையவது மாற்றிவிட முடியுமா? தற்பெருமை தவிர உனது செயலால் எந்த அர்த்தமாவது உண்டா?

பிரான்சின் சக கைதியான ஒருவன் சொல்கிறான். இறைவன் தன் மகனான இயேசுவைக் கூடக் காப்பாற்றவில்லை. நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும்? என்று கேட்கிறான்.

இத்தனை கேள்விகளுக்குப் பின்னரும் தண்டனை கொடுப்பவரைத் தவிர யாரும் திரும்ப இயலாத கில்லட்டின் அறைக்குள் பிரான்ஸ் நுழைந்து அவனது மனைவியையும் மூன்று குழந்தைகளையும் அநாதையாக்கிவிட்டு மரித்துப் போகிறான்.

ஒட்டுமொத்த சமூகமே எதிராக நின்றாலும் சரி, என்னுடைய நிலைப்பாடு சத்தியத்தின் பாற்பட்டது என்ற பிடிவாதத்தைக் கொண்ட பிரான்ஸ் போன்றவர்களின் உறுதியும் தியாகமும் தான் நம் மேல் சூழும் கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கான குறைந்தபட்ச நம்பிக்கையாக உள்ளது. பிரான்ஸும் பானியும் இயற்கையிடமிருந்துதான் அந்தப் பிடிவாதத்தையும் தளராத உறுதியையும் பயின்றிருக்க வேண்டும். இவர்கள் நமக்குத் தெரியாத கிறிஸ்துகள். இவர்கள் தான் நம் மீது பேராதிக்கம் செலுத்திய காட்டுமிராண்டித் தனங்கள், அநீதிகளுக்கு எதிரான வாழ்க்கையை வாழ்ந்து இந்த உலகை நாம் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றிய சிறு தீபங்கள் அவர்கள்.

மனிதனுக்குச் சேவையாற்றுவதற்கு மட்டுமேயானதல்ல இயற்கை, அதன் நியாயம் அதற்கும் அப்பாற்பட்டது என்பதை டெரன்ஸ் மாலிக் இந்தப் படைப்பிலும் வலுவாக உணர்த்துகிறார். தாட்சண்யம், கொடூரம் என்ற நமது அர்த்தச்சுமை கொண்ட கருதுகோள்கள்களைப் பற்றிக் கவலையே படாத பிரமாண்டம் அது. மனிதனுக்கும் அமீபாவுக்கும் எந்த பாகுபாடும் அங்கே இல்லை. அந்த இயற்கை, நம்முடன் வாழ்ந்து நம்மிடம் பேசி நமது மீட்சிக்காக மரித்த கிறிஸ்துவின் அப்பனாகவோ அம்மையாகவோ கூட இருக்கலாம். அதைப்போலவே மனிதன் தனது லௌகீகத் தேவைகளுக்காக மட்டுமே படைக்கப்பட்டவன் இல்லை என்பதையும் பிரான்ஸ் எதிர்கொள்ளும் துயரங்கள் வழியாகத் தெரிவித்துவிடுகிறார். அவன் சதையால் படைக்கப்பட்டவன் தான். ஆனால் அவன் சதையின் தேவைகளுக்கு அப்பால் செல்வதற்கான பொறுப்பைக் கொண்டவன் என்கிறாரா டெரன்ஸ் மாலிக்?


Monday, 6 April 2020

வான்கோவை நேசிப்பதுகடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வான்கோவின் ஓவியங்களும் அவரது வாழ்க்கை தொடர்பில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும் அவர் பற்றிய எழுத்துகளும் என்னைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. என் இன்ஸ்டாகிராம் கணக்கிலும் தினசரி, அவரது ஒரு ஓவியத்தைப் பற்றியாவது படிப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்த்துவிடுகிறது. லவ்விங் வின்சென்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஸ்டாரி ஸ்டாரி நைட்' பாடல் எனக்கு எல்லா வேளைகளிலும் கேட்டால் அமைதியையும் வான்கோவின் மாய உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தையும் தொடர்ந்து தருகிறது. ஸ்டாரி நைட் பற்றி அறிஞரும் துறவியுமான நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை அருமையான அவதானங்களைக் கொண்டது. அழகின் மீதான தியானம் என்று அந்தக் கட்டுரையைச் சொல்வேன். (அதைப் படிக்க : http://aranya.me/uploads/3/4/8/6/34868315/starry_starry_night.pdf))


அட் தி எடர்னிடிஸ் கேட்' திரைப்படத்தில் வின்சென்டின் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த நடிகர் வில்லியம் டீஃபோ, வான்கோவிடமிருந்த கிறிஸ்துவின் அம்சத்தை எனக்குத் தெரியப்படுத்தியதன் மூலம் வான்கோவும் அவரது ஓவியங்களும் எனக்கு இன்னொரு விதமாக நெருக்கமானது. வான்கோவின் காலத்தில் அவரது படைப்பு மேதமையை இனம்கொண்ட ஒரே விமர்சகரான ஆல்பர்ட் ஆரியர் அவரது ஓவியங்களைப் பற்றி எழுதிய குறிப்புகளைப் படிப்பதற்கான அறிமுகத்தை இந்தப் படம் தான் எனக்கு ஏற்படுத்தியது. அதிகபட்சம் 300 வார்த்தைகள் கொண்ட அந்தக் குறிப்பு வான்கோவின் படைப்புகளில் உள்ள அத்தனை உக்கிரத்தையும் மொழியிலும் வெளிப்படுத்திய இலக்கிய ஆவணம் அது. (ஆங்கிலத்தில் ஆரியரின் குறிப்பைப் படிக்க : http://www.vggallery.com/misc/archives/aurier.htm)

அகிரோ குரசோவாவின் ட்ரீம்ஸ் படத்தில் ஒருகதை வான்கோ குறித்தது. 

 ஸ்டாரி ஸ்டாரி நைட் பாடலைக் கேட்க : https://www.youtube.com/watch?v=vp5qJlr4go0


தற்செயலாக அமேசான் பிரைமில் தேடிய போது வந்த வின்சென்ட் என்னும் பெயரைப் பார்த்து ஓட்டிப் பார்த்தபோது தான் அது 'ஒரு நபர் நாடகம்' என்று தெரிந்தது. மிகுந்த அசிரத்தையுடன் தான் 1981-ல் நிகழ்த்தப்பட்ட லியானார்ட் நிமாய் நடித்த அந்த நாடகத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.


வின்சென்ட் வான்கோ என்ற மனிதன், ஓவிய மேதையின் உருவாக்கத்தில் அவனது வாழ்க்கையின் கடைசிவரை ஆதரவு கொடுத்த அவனது நேசனும் அண்ணனுமான தியோ தான் இந்த நாடகத்தின் ஒரே கதாபாத்திரம். வான்கோ இறந்து ஒரு வாரகாலத்துக்குப் பிறகு தனது தம்பியைப் பற்றி தியோ தனது வீட்டு அறையிலிருந்து நம்மிடம் பேசத் தொடங்குகிறார். காலம் 1890, ஜூலை மாதம்.


வான்கோ எழுதிய கடிதங்கள் வாயிலாக வான்கோவின் வரலாற்றையும் தங்களது உறவையும் பிரியம், கோபம், விமர்சனம், நகைச்சுவை, கையறுநிலை ததும்ப விளக்குகிறார். வான்கோவின் கடிதங்களைப் படிக்கும்போது மட்டுமே வான்கோவின் குரலுக்கு மாறுகிறார். மிகச் சிறிய மேடை தான். அதில் தியோவின் அறை ஒரு புறம். வான்கோவின் அறை ஈசலுடன் அவரது புகழ்பெற்ற மேஜையுடன் ஒரு புறம் உள்ளது. மேடைக்குப் பின்னே இரண்டு திரைகள். புகைப்படங்கள், கையெழுத்துகள், அந்தந்த காலகட்டத்து ஓவியங்களைக் காண்பிக்கிறது. மேடையின் ஒளியமைப்பும் வான்கோ வாழ்ந்த காலகட்டத்தையும் அவரது ஓவியங்களின் நிறம் ஒளியையும் ஞாபகப்படுத்துமாறு செய்யப்பட்டுள்ளது.


ஒரு போர் வீரனின் உக்கிரமான சண்டை போல, இயற்கையை அழகை நேசத்தை என வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் தீவிரமாக மோதித் தாக்குதல் நடத்தி நேசித்தவன் என்று வான்கோவை தியோ நமக்கு அறிமுகப்படுத்தி அவரது பிறப்பிலிருந்து தொடங்குகிறார். ஓவியராக முழுப் பயிற்சி பெற்று ஓவிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்னர், பெல்ஜியத்தின் நிலக்கரிச் சுரங்கங்களில் கொத்தடிமை வாழ்க்கையை வாழ்ந்து வந்த ஏழை மக்களுடன் பாதிரியாராகப் பணியாற்றி அவர்களின் எளிய வாழ்க்கையை அவர்களுடனேயே பகிர்ந்துகொண்ட வான்கோவின் ஆரம்ப காலம் அவரது கோட்டுச் சித்திரங்கள் வழியாக விவரிக்கப்படுகிறது. கடும் இருட்டிலிருந்து தான் ஒளி முளைக்கும் என்கிறது வேதாகமம்.  சுரங்கங்களின் அந்தகாரத்தில் இருந்த ஏழைகளிடம் தான் கடவுளின் ஒளியைக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் அண்ணனிடம் கடிதங்கள் மூலம் வாதிடுகிறார்.  இந்த இருண்ட சுரங்கங்களிலிருந்து தான் 'உருளைக்கிழங்கு தின்பவர்கள்' போன்ற மகத்தான ஓவியங்களை வரைகிறார். 1881-ம் ஆண்டு வான்கோவுக்கு அவரது ஒன்று விட்ட சகோதரியான கீயுடன் ஏற்பட்ட ஒருதலைக் காதலை முரண்நகை தொனிக்க நம்மிடம் கூறுகிறார் தியோ. மேல்நடுத்தர வர்க்க மனோபாவம், அக்காலகட்ட பாரீஸ் நகர வாழ்க்கை, பண்பாடு சார்ந்த மதிப்பீடுகள் தியோவிடம் வெளிப்படுகின்றன. கீயுடனான ஒருதலைக் காதல் சீக்கிரத்தில் பலத்த அவமானத்துக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. பாரிசின் கலைஞர்கள், சீமான்கள் புழங்கும் வட்டத்தில் நுழையும் மனப்பாங்கையோ அதற்கான நாகரிகப் பழக்கவழக்கங்களோ இல்லாத நிலையில் பாரிஸ் என்ற நகரத்திலிருந்து தொடர்ந்து ஓடுபவராகவும் துரத்தப்படுபவராகவுமே வான்கோ இருந்தார் என்பதை தியோ நமக்குக் கூறுகிறார். தியோ தனது வேறுபாடுகள், வருத்தங்களோடு தம்பி புகலிடம் செல்லும் இடங்களுக்கெல்லாம் பணத்தை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்.


1882-ல் ஹேக் நகரத்தில் மது அடிமையும் பாலியல் தொழிலாளியுமான சியென் என்ற பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலையும் அவளது துயரமும் நிராதரவும் தான் வின்சென்டை அவளை நோக்கி ஈர்த்ததாக தியோ சொல்கிறார். வின்சென்ட் தன் கடிதத்தில் அவளைப் பற்றி எழுதும்போது, தான் முன்னர் காதலித்த கீயிடம் காணும் பெண்ணின் மென்மைத் தன்மை எதுவும் சியனிடம் இல்லையென்பதாலேயே அவளிடம் தான் ஈர்க்கப்பட்டேன் என்கிறார். அந்த உறவும் முடிவுக்கு வருகிறது.


மதுப்பழக்கம் வின்சென்டை ஆட்கொண்டு, புகைப்பழக்கத்தால் தொடர் இருமல் ஏற்பட்ட நிலையில் வின்சென்ட்டின் ஓவியத் திறன் வலுப்பெற்றதையும் நம்மிடம் பகிர்கிறார் தியோ. 1888-ல் அவர் வந்த ஆர்லெஸ் சிற்றூர் தான், அவரது மிகப் புகழ்பெற்ற ஓவியங்கள் நிகழ்ந்த இடமாகும். கோதுமை விதைப்பவன், செய்ண்ட் மேரிஸ் கடற்கரையில் படகுகள் நிற்கும் ஓவியம், ஆர்லசின் படுக்கையறை போன்ற ஓவியங்கள் இங்கேதான் வரையப்பட்டன. இங்கேதான் வான்கோ வானத்திலிருந்து வந்த தூதன் என்று நம்பிய ஓவியன் காகினுடனான உறவும் காது துண்டிப்புக்குக் காரணமான துயரமிக்க பிரிவும் நடைபெற்றது.


காகினை தன்னை விட மகத்தான ஓவியர் என்றும் தனது படைப்பூக்கம் அவராலேயே தூண்டப்படும் என்றும் நம்பினார். காகின் கடைசியில் அவரை பைத்தியக்காரர் என்று அவர் இறந்தபிறகும் அவதூறு சொன்னதைப் பற்றி கசப்பாக நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் தியோ. காகின் ஆர்லெஸ்சுக்கு வந்தபோது குழந்தை போல வின்சென்டிடம் ஏற்பட்ட மகிழ்ச்சியை நம்மிடம் கிண்டலுடன் சொல்கிறார் தியோ. காகின் தனது இடத்தில் வந்து தங்கும் அறையை வண்ணம்பூசி, அறைகலன்களைச் வாங்கிப் போட்டு, சுவர்களில் ஓவியங்களை மாட்டி அழகுபடுத்திய தகவலைத் தெரிவிக்கிறார்.


காகின் போன்ற சக ஓவியர்களாலும் சமூகத்தாலும் பைத்தியக்காரர் என்று கருதப்பட்ட, குழந்தைகளால் கேலிக்குரியவராக அவமதிக்கப்பட்டு விரட்டப்பட்ட, காதலுக்காகவும் நேசத்துக்காக குறைந்தபட்ச உணவுக்காகவும் சௌகரியத்துக்காகவும் அல்லாடிய வான்கோவின் வாழ்நாளில் விற்ற ஓவியம் ஒன்றே ஒன்றுதான். இறந்தபின்னர் அவர் பங்குகொண்ட இம்ப்ரஷனிச ஓவிய இயக்கத்துக்குப் பின்னர் உருவான நவீன ஓவிய மேதையாக இன்றும் கொண்டாடப்படுகிறார். கோடிக்கணக்கில் அவரது ஓவியங்களுக்கு இன்று மதிப்பு நிலவுகிறது.


வான்கோ தனது மரணம் வரை தனது ஓவியங்களை ஒட்டுமொத்தமாக காட்சிக்கு வைப்பதற்கு அனுமதிக்காத தகவலை தியோ சொல்கிறார். ஆரியரின் விமர்சனக் குறிப்பு வந்தபோதும் தனது ஓவியங்களைப் பற்றி அவர் இனி பேசக்கூடாது என்று நினைப்பதாகவும் கடிதம் எழுதுகிறார்.


ஆர்லஸ் கிராமத்தில் வின்சென்ட், அங்குள்ள குடிமக்களின் அதிருப்திக்கும் பகைமைக்கும் உள்ளாகிறார். சிறுவர்கள் அவர் போகும் இடமெங்கும், அவர் அமைதியாக ஓவியம் வரையும் வனத்துக்கும் சென்று அவரை கேலி செய்யத் தொடங்குகின்றனர். அவரது கொடூரமான நாட்கள் ஆரம்பிக்கின்றன. மருள்தோற்றங்களுக்கு உள்ளாகிறார். வலிப்பு நோயும் அதிகரிக்கிறது. அங்கு நிலவும் வெப்பமும் வான்கோவின் கோட்டிக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற தகவல் இந்த நாடகத்தில் சொல்லப்படுகிறது. கிராமத்துக் குடிமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு வான்கோவை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு விண்ணப்பம் அளித்த செய்தி தியோவுக்கு வருகிறது.


இரண்டு மாதத்தில் மன அமைதியைத் தேடி தானே முன்வந்து தியோவின் உதவியுடன் செய்ண்ட் பால் தி மவுசோல்  மனநலக் காப்பகத்தில் வின்சென்ட் சேர்கிறார். அங்கு சக நோயாளிகளிடம் மிகுந்த பரிவையும் மதிப்பையும் உணரந்ததாக தியோவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். சில நாட்களிலேயே அவர் மனநலக் காப்பகத்துக்கு அருகே உள்ள பகுதிகளில் ஓவியம் வரைவதற்கும் அனுமதிக்கப்பட்டார். அவர் மனநலக் காப்பகத்தின் சாளரத்திலிருந்து பார்த்து வரைந்து மானுடத்துக்கு அளித்த மகத்துவமான ஓவியப் பரிசுதான் 'ஸ்டாரி நைட்' .இயற்கையின் ரகசியப் பக்கத்தில் நடக்கும் இயக்கம், திரவ நிலை மற்றும் ஒளியின் இயக்கங்களை வான்கோ, மனத்திலுள்ள கண்ணால் பார்த்து வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தீவிரமான துயரத்திலிருந்த போது தான், இயற்கையின் புதிர்த்தன்மை கொண்ட அழகு அவருக்குப் பிடிபடவும் செய்திருக்கிறது. ஒளி உண்மையில் எப்படி நகர்கிறதோ அதே தன்மையில் தூரிகைத் தீற்றல்களும் வான்கோ போன்ற ஓவியர்களின் படைப்புகளில் இயங்குகின்றன என்கிறார்கள் இயற்பியலாளர்கள்.

வான்கோவுக்கு இருந்த கண்பார்வைக் குறைபாடும் இந்த விளைவுகளை அவரது ஓவியத்தில் கொடுத்ததாக லியோனார்ட் நம்மிடம் நாடகத்தின் இறுதி உரையில் கூறுகிறார்.

வான்கோவின் இறுதி நாட்களில் அவரது ஓவிங்கள் வரையும் வேகம் முடுக்கம் பெற்றதாக தியோ பகிர்கிறார். அவரது கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். மனநலக் காப்பகத்தில் அதிகபட்சமான கொந்தளிப்பையும் படைப்பூக்கத்தையும் அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். அங்கு மன ரீதியாக கொந்தளிப்புக்கும் உருவெளித் தோற்றங்களுக்கு உள்ளாகிறார். காதில் சத்தங்கள் கேட்கத் தொடங்குகின்றன. விஷம் கொடுத்து யாரோ கொல்ல வருகிறார்கள் என்ற பிரமை தோன்றுகிறது.


வான்கோவின் சராசரி வாழ்க்கைக்கு சராசரி லௌகீக மதிப்பீடுகளுக்கு எதிரான ஒரு வாழ்க்கையை வாழ்ந்த துயரத்தின் அத்தனை விளைவுகளுக்கும் பங்குதாரராகவும் பொறுப்பாகவும் இருந்த நிலையில் தியோவுக்கு தனது சகோதரன் குறித்து கசப்பும் பிரியமும் விமர்சனமும் கேலியும் வெளிப்படுகிறது. ஆனால் அதேவேளையில் அவனது கலை மேதமை அவனது சகமனிதர்களிடமும் சக கலைஞர்களிடமும் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற வருத்தத்தையும் வெளிப்படுத்துகிறது. அவன் வித்தியாசமானவன் தான். அந்த வித்தியாசம் தானே நாம் போற்றும் கலைப்படைப்புகள் பிரசவிக்கக் காரணமாக இருந்தது; அதை ஏன் அந்த மனிதர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறார். வான்கோவை பைத்தியம் என்று இறந்தபிறகும் அவதூறு செய்த காகின் மேலும் அவரது படைப்புகளில் மனநிலை சிதைந்த தன்மை உள்ளது என்று விமரிசித்த விமர்சகர் மீதும் கடும் கோபத்தை நாடகத்தில் வெளிப்படுத்துகிறார். நாம் வாழும் பூமிக்கும் கடவுள் இருப்பதாக நம்பப்படும் வானகத்துக்குமான பாலமாகச் செயல்படும் அரும் படைப்புகளை அல்லவா அவன் தந்தான் என்று கூறி பாரிசின் புறநகர் பகுதியான ஓவுரெஸ்சில் கழிந்த அவனது கடைசி நாட்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். கோதுமை வயல்களின் மேல் பறக்கும் காகங்களின் ஓவியம் தான் அவரது கடைசி ஓவியம். அப்படிப்பட்ட ஒரு வயலில் தான் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார் வான்கோ. மரணத்தின் கருப்பு பொன் ஒளிரும் அவனது தலைக்குள் கருப்பாகப் படர்ந்துவிட்டது. அந்த ஓவியத்தில் காகங்களின் சிறகில் பேதலிப்பைப் பார்க்க முடியும்.


வான்கோவின் மரணம் தற்கொலை என்பதால் அங்குள்ள தேவாலயத்தில் அவரது இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரது இறுதிச் சடங்கை படிப்படியாக தியோ விவரித்து கடைசியில் அழத்தொடங்குகிறார். ஒரு பணக்காரச் சீமான் எனவும் வான்கோவின் தத்தாரி வாழ்க்கைக்கு நேரெதிரான லௌகீக சாமர்த்தியசாலி என்றும் எண்ண வைக்கும் தியோ உடைந்து அழும்போது வான்கோவுக்கு நெருக்கமான ஒரேயொரு ஆன்மா அந்த மூத்த சகோதரன் தான் என்பது விளங்குகிறது.


வான்கோ தனது அண்ணன் தியோவின் நெஞ்சிலேயே தலைவைத்து இறக்கிறார். அவர் இறந்தபிறகும் சில கணங்கள் அவரது ஆன்மா அந்த அறையில் இருந்ததாக தியோ சொல்கிறார்.


கடைசி நூறு நாட்களில் அவர் வரைந்த ஓவியங்களும் சித்திரங்களும் எழுபது.


வான்கோவின் ஓவியம், வாழ்க்கை குறித்து நான் பார்த்த சினிமாக்களில் அதிகபட்சமாக நெருங்கிச் செல்லும் சிறந்த படைப்பென்று இந்த நாடகத்தையே கருதுகிறேன்.


லியோனார்ட் நிமாய், தனது குரல் மூலம் தியோவாகவும் வான்கோவாகவும் மாறி மாறி நடித்து ஒரு நபர் நாடகம் என்ற தன்மையை மாற்றிவிடுகிறார். மிகச் சிறிய மரத்தாலான அரங்கு, தன் ஓவியத்தின் உக்கிரத்தை பார்க்கும் எவருக்கும் தொற்றவைக்கும் மகத்தான ஒரு கலைஞனின் அத்தனை குணபேதங்களையும் தன்னில் ஸ்தாபித்துவிடுகிறது.


வின்சென்ட் வான்கோவின் வாழ்க்கை சார்ந்தும் அவரது ஓவியங்கள் சார்ந்தும் பிரியம் கொண்டவர்கள் இந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும்.   

Sunday, 5 April 2020

பேருருவம் கொள்ளும் பிரகிருதி சுமித்ராமலையாளத்தின் தலைசிறந்த கவிஞரும் தமிழிலும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு காரணமாக நவீன கவிதை வாசகர்களிடமும் நன்கு அறிமுகமான கல்பட்டா நாராயணனின் நாவல் 'சுமித்ரா'. கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்திருக்கும் இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பில் ஜெயமோகன் சொல்லியிருப்பது துல்லியமான வழிக்குறிப்பு; இது ஒரு கவிஞன் எழுதிய நாவல் என்பதுதான் இதன் தனித்துவம்; கவிஞனின் நாவல் எப்படி இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகளைக் கொண்ட நாவல் இது. அரிய தகவல்கள், வரலாற்று விவரங்களிலிருந்து பக்கம் பக்கமாக நாவலாசிரியர்கள் விரித்து எழுதுவதற்கு சபலப்படும் முனைகளில் பொருள் சார் பண்பாடு, அரசியல் சார்ந்த குறிப்புகளையும் அத்தனை சுருக்கமாக நுட்பமாகத் தெரிவிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் கடக்கிறார் கல்பட்டா நாராயணன்.

நாவலின் மையம் சுமித்ரா என்ற பெண். நமக்கு தமிழ் நாவல்கள் வழியாக அறிமுகமான யமுனா, அலங்காரம், அம்மணி, இந்து, அபிதா போன்று ஏக்கமாகவும் ப்ரேமையாகவும் அடைய முடியாத லட்சியமாகவும் ஆறாத நினைவாகவும் வாசகனுக்கு ஆகிவிடும் பிரகிருதி. கேரளத்தில் உள்ள பெரிய வீடுகளின் புழக்கடை இருட்டு நிழலுக்குள்ளேயே வரும் ஊருணி நீரின் குளிர்ச்சியையும் ஆழ்ந்த இருட்டையும் பிரியத்தையும் கொண்டவள் சுமித்ரா. பெண் குளிரும் பெண் தகிக்கும் ஆழமான ரகசியமான இடம் தான் சுமித்ரா என்ற நாவல். அந்த வகையில் தமிழ் நாவல்கள் லட்சியப்படுத்திய பிரகிருதிகளுக்கு எதிராக அ- லட்சியப் பிரகிருதி சுமித்ரா. யமுனா, அலங்காரம், அம்மணி முதல் அபிதா வரை உடல் அளவுக்கு கருத்து வடிவமாக உள்ளவர்கள். அபிதாவுக்குக் கன்னி தெய்வத்தின் சாயலே உண்டு. சுமித்ராவோ, தோண்டும்போது தெரியும் ஈரமான வேரின் சில்லிடலும் நிலத்தின் மணமும் கொண்டவள். கொண்டவள். நேசத்துக்குரிய யட்சி; வேரையே சடைகளாக, விழுதுகளாகக் கொண்ட நாகலிங்க மரத்தைப் போன்றவள். 

சுமித்ரா தனது 38 வயதில் அகால மரணத்தின் வழியாக நாவலின் முதல் அத்தியாயத்தில் அறிமுகமாகிறாள். சுமித்ராவுக்கு அண்டை வீட்டுப் பையனாக தம்பியாக உற்ற தோழனாக இருந்த புருஷோத்தமனின் ஞாபகத்திலிருந்து வெவ்வேறு ஆண்கள், பெண்கள் வரையும் நினைவுகள் தான் 'சுமித்ரா'. புருஷோத்தமனுக்கு அக்காள் போல, லட்சியக் காதலி போல, அறிவார்த்தமாகவும் உரையாடும் அருந்துணையாக சுமித்ரா தோற்றமெடுக்கும் போதே சுமித்ரா, கேரளத்தின் வயநாட்டின் ஒரு சிறு கிராமத்தில் வசித்தவள் மட்டும் அல்ல என்று தெரிந்துவிடுகிறது.

சுமித்ரா தினசரி பல வேளைகள் குளிப்பவள். அவளே நீராக இருக்கிறாள். கருப்பிக்கும் சுபைதாவுக்கும் தோழியாக, வாசுதேவனின் மனைவியாக, அனுசுயாவின் அம்மாவாக, பாத்திர வியாபாரி பொதுவாளிடம் ஒரே முறை ரகசிய உறவில் சுகித்தவளாக,  அண்டை வீட்டில் வசிக்கும் கிழவர் கௌடருக்கு காலை வேளைகளில் உப்புமா செய்து தந்து உடல்நலமில்லாத பருவங்களில் பராமரிக்கும் அருமகளாக, ஊரே பிழைக்கத் தெரியாதவனாகக் கருதும் தாசனின் கையை எடுத்து வருடிக் கொடுக்கும் அபூர்வமான சகியாக எத்தனையோ உருவங்கள் அவளுக்கு. அத்தனை உருவங்களும் வயநாட்டு வனத்தின் தாழ்ந்த பகுதிகளில் ஓடும் சுனையின் தன்மையையும் குளிர்ச்சியையும் கொண்டவை. இங்கு ஆழம் இடுப்பளவு என்றாலும் தனியாக இறங்குவதற்குப் பயத்தை உருவாக்கும் தனிமையையும் குளிர்ச்சியையும் கொண்டவை. அந்தச் சுனையில் பிறந்து மண் ஏறியவள் தான் சுமித்ரா.

சுமித்ராவின் தோழி சுபைதாவும் சுமித்ராவின் மகள் அனுசுயாவும் இந்த நாவலில் கூர்மையாகப் படைக்கப்பட்ட அதீதங்கள். விடுதியில் இருக்கும் அனுசுயா, தாயின் சாவைக் கேட்டு வந்து வீட்டுக்குள் நுழைந்து அம்மாவின் சடலத்தைப் பார்க்கும் போது பிணம் மீண்டும் சுமித்ராவாக மாறியது என்று எழுதுகிறார். மீண்டும் பெருமூச்சுகளின், மீண்டும் வாழ்வைப் பற்றிய யூகங்களின், எதிர்காலம் குறித்த பயத்தின் ஊற்றுக்கண்ணாக சுமித்ரா மாறிவிடுகிறாள். ஏனெனில் தான் இறந்த பிறகும் இன்னொரு பெண்ணை மகளாக இங்கே விட்டுச் சென்ற துயரத்தில் தான் சுமித்ரா மீண்டும் எழுகிறாள்; இறந்த துயரத்திலிருந்து அல்ல.

இந்த இடம் ஆணாக நான் தொடர்ந்து இறக்கும் இடம் சுமித்ரா.

தனது இடுப்பு வேட்டியை அவிழ்த்த காரணத்தால், தன் நிர்வாணம் குறித்த சங்கடத்தில் தனது செல்ல யானைக் குட்டியை, காயப்படுத்திக் கொன்ற குட்டிப் பெண் சுபைதாவின் வாழ்க்கை முழுக்கத் தொடரும் குற்றவுணர்வு இன்னொரு ஆழம்.சுமித்ராவின் எல்லா அங்கங்களையும் கடைசி நீர் குளிர்விக்கிறது. சுமித்ரா எண்ணற்ற ரகசியங்களோடு எரியத் தொடங்குகிறாள்.

ஒரு பெண்ணின் அகத்திலிருக்கும் ஆழம், சில்லிட்ட தன்மையை அதன் எதார்த்தத்திலேயே கவிஞனின் கண்கொண்டு எழுதப்பட்ட அபூர்வ படைப்பு இது.  செம்மையின்மை தெரியும் மொழிபெயர்ப்பு, பதிப்பின் கோராமை என எல்லாவற்றையும் தாண்டி சுமித்ரா உயிர்த்துவத்துடன் தமிழில் உருவம் கொண்டிருப்பது வினோதம் தான். இங்கு மொழியைத் தாண்டி வேறு அர்த்தங்கள் தொழிற்படுகின்றன.

சுமித்ரா வாசுதேவனுக்கானவள் மட்டுமல்ல; அவள் என் அவள் எனும்போது வரும் உணரும் நிறைவு நீடிக்கக் கூடியதல்ல. அவள் எல்லாருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக விண்டு கொடுத்தவள். விண்டது அத்தனையையும் தாண்டி சுமித்ராவிடம் ஒன்று உண்டு. அதுவும் சேர்ந்தவள் சுமித்ரா.


சில பெயர்களை இடம் பெயர்க்கவே முடியாது. சில பெயர்களை இடம் பெயர்க்கவே முடியாது. சுமித்ரா, சுமித்ரா, சுமித்ரா. 

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்க...