ஷங்கர்ராமசுப்ரமணியன் (சிறுவயதிலிருந்து எனது கனவு உணவாகவும், நிறைவேறாத எத்தனையோ ஆசைகளின் எளிய வடிகாலாகவும் இன்றும் இருக்கும் புரோட்டா குறித்த சில குறிப்புகள் இவை. புரோட்டா குறித்து விரிவான ஆய்வைச் செய்யவேண்டும் என்பதும், புரோட்டா குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்கவேண்டும் என்பதும் எனது நிறைவேறாத திட்டங்கள். நான் தான் தமிழ் புரோட்டா என்ற என்னுடைய கவிதையில், புரோட்டா எனது ஆசைப்படி ஒரு படிமமாக மாற்றப்பட்டது. இந்தக் கட்டுரையின் சற்று பெரிய வடிவம், 2000 ஆவது ஆண்டில் குமுதம் இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது. அதன் பிரதி என்னிடம் தொலைந்து போய்விட்டது. 2009 ஆம் ஆண்டு பேராசிரியர் பக்தவத்சல பாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஞாபகத்திலிருந்து மீண்டும் எழுதப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விரிவான ஆய்வுக்கட்டுரையாக அமையவில்லை. அதற்குப் பின்னர் இது என்னிடமே தங்கிவிட்டது. இப்போது இங்கே வெளியாகிறது. என் அப்பா குறித்து எத்தனையோ புகார்கள் உண்டு. ஆனால் புரோட்டாவையும், பிரியாணியையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் எனது வாழ்க்கையில் அவற்றின் ருசி தெரியாமலேயே போயிருக்க வாய...