Skip to main content

Posts

Showing posts with the label தமிழ் புரோட்டா கவிதை

தமிழ் புரோட்டா தான் நான்- ஷங்கர்ராமசுப்ரமணியன்

நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள் நீர் ஊற்றிச் சேர்த்து உருட்டிப் பிசைந்து உங்கள் மூர்க்க பலத்தால் அடித்துத் துவைத்தெடுங்கள் பாலியஸ்டர் துணிபோல் என்னை நெகிழ்வாக்கி நீட்டி விசிறியடித்து காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக மேஜையில் அடுக்குங்கள். அப்போது கடவுள் போல் நான் ஒளிர்வேன். பின்னர் மீண்டும் தட்டி மடித்து வட்ட சதுர முக்கோணங்களாக எண்ணைய் கொதிக்கும் வாணலியிலோ கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள் உங்கள் அரும்பசிக்குச் சுவையான உணவாய் நான் மாறுவேன்... உங்கள் வரலாறு மூர்க்கம் ஆசைகள் காமம் மூட்டம் வலி அரசியல் துயரங்கள் நெருக்கடி உழைப்பு உங்கள் மாமிசமும் சேர்ந்த குழம்பில் நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மடிப்புமடிப்பாக தூள்தூளாகக் கரைந்துபோகக் காத்திருக்கும் தமிழ் புரோட்டாதான் நான்.