ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதையை ஜனநாயகப்படுத்திய வானம்பாடி இதழின் தாய்ப்பறவை கவிஞர் புவியரசு. ‘தேடாதே தொலைந்து போவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று நம்பிக்கையின்மை தொனிக்க கவிதை எழுதியவர், வாழ்க்கை முழுக்க கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை. கோவையில் அவரது இல்லத்தில் கவிஞர் இசையுடன் சந்தித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது… வானம்பாடி இயக்கமும், கவிதை இதழும் தோன்றிய கதையைச் சொல்லுங்கள்? வானம்பாடி இதழ் 1970-களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சர்வதேச ரீதியாக, அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள், கொந்தளிப்போடும் அரசியல் சொரணையோடும் எழுந்த புரட்சிகரமான காலகட்டம் அது. பருவநிலைகள் எல்லாரையும் கிளப்பிவிட்டு விட்டதா, பூமிக்குக் கீழே எரிமலைகள் கொந்தளித்தது காரணமா என்று தெரியவில்லை. பிரான்சில் மாணவர் புரட்சி வெடித்ததற்குப் பின்னான மனநிலையென்று சொல்லலாம். அப்துல் ரகுமான் மாதிரி நாங்களும் அப்போது பெர...