தெரியாமல் ஒன்றைச் சொல்வது மட்டுமல்ல; தெரியும் ஒன்றையும் சொல்ல வேண்டியதில்லை; சொல்வதற்குத் தேவையுமில்லை என்பது மிகவும் தாமதமாகப் புரிய ஆரம்பித்திருக்கும் தருணத்தில் அபியின் 'சொல்லாதிருத்தலும் எளிது' கவிதை அந்தப் புரிதலை வலுப்படுத்துகிறது. முதலில் கமழ்வது எல்லாவற்றுக்கும் முடிவில் ஒரு விதி இருக்கிறது. பழக்கத்தின் ஊழலில், பிரமிள் சொல்வது போல இருண்ட மனத்தின் அனுஷ்டானத்தில் சொல் உருவாக்கும் கமழ்ச்சி நிறைந்த எதார்த்தம், திருமணம் முடிந்த மண்டபத்தில், அடுத்த நாள் விருந்துக்கூடத்திலிருந்து வரும் காடியேறிப் புளித்த உணவு நெடியைப் போல ஆகிவிடுவதுதான் அந்த நியதி. சொல் உருவாக்கும் எதார்த்தம் தானே மெய்மை என்ற தோற்றத்தை, மயக்கத்தைக் கொண்டிருக்கிறது. சொல் உருவாக்கும் எதார்த்தத்தைத் திரும்பப் பெறவும் முடியாது. இப்படித்தான் சொல், நிச்சயத்தினாலான மலட்டுத்தன்மையைத் தவிர்க்க முடியாமல் இந்த உலகத்தில் உருவாக்கிவிடுகிறது, அழிக்கவே இயலாத வேதனைகளின் அணுக்கழிவுகளைப் போல. சொல்லப்படும் போது, சொல்லப்படாதது எல்லாம் தமது உருவங்கள், உடைகளை இழந்து நிழல்களாகின்றன. சொல்லப்படும் போது அங்கே முட்டுச்சந்தையும், அடுத்த...