நன்றி : விகடன் இணையத்தளம் தஸ்தயவெஸ்கியின் 'கரமசோவ் சகோதரர்கள்' நாவலின் இறுதிப்பகுதியில் சிறுவன் இல்யூஷாவின் மரண ஊர்வலத்தில் அவனது சவப்பெட்டியின் மீது இடப்பட்ட மலர்களில் ஒன்று சாலையில் விழுந்துவிடும். அந்த ஒற்றை மலர் உதிர்ந்த நிகழ்வு கடவுளுக்குத் தெரியுமா என்று ஆசிரியக்கூற்று கேட்கும். எனது காலை நடைகளில் விரல் சைஸ் கூட இல்லாத தேன் சிட்டுக்களைப் பார்க்கும்போதும், தலை முதல் வால் வரையில் இயற்கை அதற்கு வரைந்திருக்கும் உயிர்த்துடிப்பைக் காணும்போதும், இந்தக் குட்டிப்பறவையின் இருப்பு கடவுளுக்குத் தெரியுமா என்ற கேள்வி, தஸ்தயவெஸ்கியின் பிரதிபலிப்பாக என்னுள் எழும். கடவுள் என்று குறிப்பிடப்படப்படுவது எதன் பொருண்மை? இந்த உலகம் ஒரு நியதியில், ஒரு ஒழுங்கில், ஒரு பொறுப்பில் நிகழ்கிறது என்ற கருதுகோளிலிருந்து அந்த ஒழுங்கின் உருவகமாக கடவுள் கருதப்படுகிறார் போலும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, ஒழுங்கு இருக்கிறதோ இல்லையோ ஒழுங்கு என்ற நம்பிக்கையின் எலும்பைப் போர்த்துவதற்குக் கடவுள், தஸ்தயவெஸ்கி போன்ற மாபெரும் கலைஞனுக்கும் தேவையாக இருக்கிறார். கடவுளுக்கு இணையாக இங்கே நிலத்தில் மாறாத மூலப்படிவமாக அ