ஷங்கர்ராமசுப்ரமணியன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி, ஐஸ்க்ரீம் மற்றும் பழச்சாறுகளைத் தயாரித்து விற்கும் வயோதிகர் ஒருவர் எங்கள் பகுதியில் இருக்கிறார். அவர் மங்களூரைச் சேர்ந்தவர். முதுமையிலும் உயிர்ப்பு ததும்பும் கொங்கணி முகம். கண்களும் சிரிக்கும். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சாயல். ஒவ்வொரு கோடையிலும் எங்கள் நட்பு அவருடன் துளிர்விடத் தொடங்கும். அவரிடம் ஷுகர் ஃப்ப்ரீ ஐஸ்கிரீம் கிடையாது. ஆனாலும் அதையும் தயாரியுங்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறேன். விட்டேத்தியாகச் சிரிப்பார். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் சூடான ஹாட் சாக்லேட் பாகை ஊற்றிச் சாப்பிட்டபடியே, வாடிக்கையாளர் அதிகம் இல்லாத சமயத்தில் எங்களுக்குள் உரையாடலும் நடக்கும். வீட்டின் பிரதான அறையில் தனது கடையை அவர் அமைத்துள்ளார். அவருக்கு மனைவியும், திருமணமாகாத முதிர்கன்னி மகளும் உண்டு. எல்லாருக்கும் கொங்கணி முகங்கள். பிரியத்துடன் சிரிப்பார்கள். சில காலைகளில் அப்பாவும் மகளுமாக நடைப்பயிற்சியும் செய்யும்போது நாங்கள் கைகளை உயர்த்திக் கொள்வோம். அன்றாட வியாபாரம் குறித்தும் பேசியிருக்கிறோம். அவருடைய ஒரே மகன் தனது குடும்பத்தோடு வேறெங