Tuesday, 21 January 2020

மதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு

மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந. ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ஜயபாஸ்கரன், அர்த்தநாரி கவிதைத் தொகுதி வழியாக தமிழ் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியை தனது கவிதைகளில் கொண்ட ஜயபாஸ்கரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் இவை…


அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனின் அறிமுகம் , கவிதையுடனான அறிமுகம் இரண்டும் உங்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறதல்லவா?


பேராசிரியரும் அறிஞருமான எஸ். ஆர். கே என்று சொல்லப்படும் எஸ். ராமகிருஷ்ணன், அமெரிக்க கவிஞர் எமிலி டிக்கன்சனை, எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாளின் இரவு இன்னும் நினைவில் உறைந்திருக்கிறது. 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி அது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திகட்டலும் சலிப்பும் தொடாததாக அந்தக் கவிஞருடைய படைப்புகளுடனான உறவு தொடர்கிறது. எனக்கு எப்படி அர்த்தமாகிறாள் எமிலி? ஒன்றைத் தேர்ந்த பின் கதவை அடைத்து விடுகிற மன உறுதி, பிறர் பாராட்டு என்பது உயிர்வாழத் தேவையற்ற நறுமணப் புகைதான் என்ற தீர்மானம், ‘அவர் இவராக இருப்பதென்பது எவ்வளவு அயர்வூட்டும் விஷயம்’ என்ற தெளிவு, தன்னுடைய பாதையில் கடைசிப்புள்ளி வரை பயணம் செய்கிற பிடிவாதம் இப்படி பல விஷயங்களின் கலவையாக எமிலியின் உருவம் என் மனத்தில் பதிந்திருக்கிறது. பிடிவாதமாக நான் அடைகாத்த தனிமை என்னை எமிலிக்கு அருகில் இழுத்துக் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. சுயத்தின் தொடர் பயணத்தில் எமிலியின் பங்கு மறுக்க முடியாதது. சொல் சிக்கனம், துண்டிக்கப்பட்டு துடிக்கும் தொடர் அமைப்பு எல்லாம் அவள் தந்ததாக இருக்கலாம். அவளுடைய கவிதைகளில் தவறாமல் இடம்பெறுகிற டேஷஸ்(கிடைக்கோடுகள்) போல என்னுடைய கவிதையில் விழுகிற சொல் இடைவெளிகள் மனத்தயக்கத்தின் சமிக்ஞைகள் என்று நகுலன் உணர்த்தினார். இன்று அகத்திலிருந்து சில எட்டுகள் எடுத்துவைத்து கடைவீதியில் நடக்கும்போது, எதிரே கல்சந்தில் கழிக்கப்பட்ட வெள்ளைப் பூண்டு சருகுகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. ‘சூழ்ந்த அதனில் பெரிய அவா அறச் சூழ்ந்தாயே’ என்ற திருவாய்மொழியின் இறுதித் தொடரை எமிலியிடம் பகிர்ந்து கொள்கிறேன் ரகசியமாக.

மதுரை என்ற இடம்தான் உங்கள் கவிதையின் தீராத உள்ளடக்கம். அதுபற்றிச் சொல்லுங்கள்?


தேய்வழக்காகி விட்ட யாதும் ஊரே என்ற தொடரை தலைகீழாக ஊரே யாதும் என்று வாசித்துக் கொள்கிறேன் நான். பிறந்து வளர்ந்து படித்து வியாபாரம் செய்து வருகிற மதுரையே உலகமாகிவிட்டது என்னைப் பொறுத்த வரை. தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் கொடையாளிகளான சமணர்களின் எண்பெரும் குன்றங்களால் தழுவப்பட்ட மதுரை பலமுகங்களைக் கொண்டது. சில முகங்கள் குரூரமானவை. வையையின் கொதிமணலில் தொன்மச் சில்லுகள் பாதத்தைக் கீறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதேசமயம் ஓடுகாலில் முகம் தெரியாத இளைஞனின் பிரேதமும் அவ்வப்பொழுது காலில் இடறுகிறது. சிதிலமான வையைப் படித்துறைகளும் படர்தாமரையின் ஆக்கிரமிப்பும் கலக்கும் அனைத்துவகைக் கசடுகளும் மச்ச அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணிக்கப்படும் கிருதமாலை ஆற்றின் நசிவும் ஒடுக்கமும்- என்று இவை எல்லாமே மதுரையின் இன்றைய இருப்பின் குறியீடுகள் தான். ஆனால், இதே வையை, கள்ளழகர் அதற்குள் இறங்கும்போது வேறு தோற்றம் கொள்கிறது. பௌர்ணமி நிலவில் வையை மணல், நீரைப் புணர்ந்து புதிய சோபை கொள்கிறது. வையைக் கரையில் பத்தி உலாவும் மோகினி வைகறைப் பொழுதில் அமுதத்தை அசுரருக்கும் சேர்த்தே பரிமாறிச் செல்கிறாள். ஆற்றையும் அழகரையும் ஒருசேரக் காணும் கணம் அது. தமிழ் மதுரைக்கு அரசியாக குமர குருபரர் கொண்டாடும் அங்கயற்கண்ணியின் மூன்றாம் முலை திக்குவிஜயத் திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் மறைந்து பின் முகிழ்க்கிறது. திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படும் இந்த ஐதிகங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேறொன்றாய் தோற்றம் கொள்கின்றன. வெயிலின் சலிப்பை வேறுவிதமாகக் கடந்துவிடுகிறது மதுரை. இதையெல்லாம் பாடித் தீரவில்லை எனக்கு.

சமய இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் நினைவுகள் அழுத்தமாகக் கொண்டவை உங்கள் கவிதைகள். பழைய மதிப்பீடுகள், வரையறைகளைக் கொண்ட மரபிலக்கியத்தை உங்கள் புதுக்கவிதைகளில் எங்கே விடுவிக்கிறீர்கள்?


ஒரு பெருந்தெய்வமான மீனாட்சியின் கோயிலுக்கும் ஒரு சிறுதெய்வமான மதுரை வீரனின் கோயிலுக்கும் இடையேயிருந்த கடைவெளியில் பல பதிற்றாண்டுகளைத் தின்றவன் என்ற வகையில் அதன் ருசி என்னிடம் எஞ்சியிருப்பதென்பது இயல்பானதுதான். நாதஸ்வரமும் பறையும் சம அளவில் ஒலித்திருக்கின்றன என்னுடைய உட்செவிகளில். அதேசமயம் பாவமும் மன்னிப்பும் வருண அளவுகோலால் வெவ்வேறு வகைகளில் அளக்கப்படுவதை புராணங்கள் பின்னாளில் உணர்த்தின. எங்கள் தாயார் வாசித்த சென்னை ரத்ன நாயக்கர் சன்ஸ் பதிப்பித்த ‘திருவிளையாடல் புராண வசனம்’ ஒரு புதிய உலகத்தை எனக்குக் காட்டியது. கரிக்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, கால்மாறி ஆடியது, ரசவாதம் செய்தது போன்ற புனைவுகளின் மாயத்தன்மை என்னை வசீகரித்தது. கடைவீதி அஞ்சலகத்தில் வியாபாரத் தகவல் கார்டுகளை நாள்தோறும் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பழக்கம் இருந்த அந்தக் காலத்தில் குறுக்குவழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்து பஜார் அலுவலகம் சென்று மீள்வது என் அன்றாட நடைமுறை. போகும்பொழுது அமுதம் பரிமாறும் மோகினியையும் வரும்போதும் பிச்சாடனரையும் வல்லப சித்தரையும் கண்களால் முத்தமிட்டு கடைக்குத் திரும்பிவிடலாம். இவையெல்லாம் பதினைந்து நிமிஷங்களில் என்பது அன்று சாத்தியமாக இருந்தது. ஆண்டு முழுவதும் திருவிழாவும் மூர்த்திகளின் திரு உலாவும் பக்தியின் குழப்பமான வெளிப்பாடுகளும் படித்த சமய இலக்கியத்தின் பிடித்த பகுதிகளும் சேர்ந்து ஒரு பித்து மனநிலையை உருவாக்கியிருந்தன. ‘பெரிய தென்னன் மதுரையை பிச்சது ஏற்றி’ என்ற மாணிக்கவாசகரின் கவிதையை எனக்கு ஏற்பப் புரிந்துகொண்ட புள்ளியில் என்னுடைய கவிதை பிறந்தது என்று சொல்லலாம்.

சிவன் மீதான பித்து ஒருபுறமிருக்க சிவனால் அங்கம் வெட்டப்பட்ட பாணனின் பக்கமும் சித்தரால் முத்தம் மறுக்கப்பட்ட பொன்னனையாளின் பக்கமும் தான் என்னால் நிற்க முடிகிறது என்று தோன்றுகிறது.

அன்பின் நிராகரிப்பு, நிராசையின் வலி உணர்வு உங்கள் கவிதைகளின் பாடுபொருளாக உள்ளது. அந்தப் பொருளுடன் தொடர்புடைய நடிகை வஹிதா ரஹ்மான், இயக்குனர் குரு தத் போன்றோரு உங்கள் கவிதைகளில் வருகிறார்கள்..


முதலில் வஹிதா ரஹ்மான் பற்றி; பேரழகியான நடிகை மதுபாலா, உணர்ச்சிகரமான நடிப்பை அள்ளித்தந்த் மீனாகுமாரி போன்ற நடிகைகளுக்கு மத்தியில் வஹிதா ரஹ்மானின் மிகை தவிர்த்த நடிப்பும் நடனத்தேர்ச்சியும் மென்மையான நளினமும் என்னைக் கவர்ந்தன. அவருடைய குரல் தணிவும் என்னைக் கவர்ந்தது. இதைச் சொல்லும்போது காஷ்மீர் கவிஞர் ஆகா சஹித் அலி பற்றிய விமர்சகர்களின் குறிப்பு நினைவுக்கு வருகிறது. அவருடைய கவிதைகள் தனக்குத்தானே அவர் கிசுகிசுத்துக் கொண்ட சொற்கள்தாம். அவற்றை வாசிப்பது என்பதே அவரை ஒட்டுக்கேட்பது போன்றதுதான். முன்பு வஹிதா ரஹ்மானும் பின்பு ஆகா சஹித் அலியும் ஏதோ ஒருவகையில் என்னைப் பாதித்திருக்கிறார்கள். வஹிதா ரஹ்மானை வடிவமைத்ததில் குருத தத்தின் பங்கு முக்கியமானது. தன்னுடைய சிருஷ்டியின் மீதே காதல் கொள்வதுதான் அங்கே நிகழ்கிறது. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்கிறவர்களை விதி ஏன் ஒன்றாக வாழவிடுவதில்லை? என்பது போல ‘காகஸ் கே பூல்’ என்றொரு வசனம் வரும். அந்தக் காட்சியின் துயரம் வஹிதாவின் அடக்கிய நடிப்பால் கூர்மையாகப் பார்வையாளரைத் தாக்கும். உறவின் வலியை உணர்ந்த கணம் அது.

தமிழ் இலக்கிய மரபை இந்தத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?


டி. எஸ். எலியட்டின் ‘பாரம்பரியமும் தனித்திறமையும்’ என்ற புகழ்பெற்ற கட்டுரையையே பதிலாகச் சொல்லிவிடலாம். இதுவரை எழுதப்பட்டுள்ள கவிதைகளின் ஒட்டுமொத்த சாரத்தையும் உயிர்ப்புடன் தனக்குள் உணர்ந்துகொள்ளும் வரலாற்றுப் பிரக்ஞையை படைப்பாளியிடம் வேண்டுகிறார் எலியட். ஆனால், தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மரபே சுமையாகி படைப்பின் மூச்சை இறுக்கிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம் எலியட் சொல்கிற முறையில் மரபைப் புரிந்துகொள்ளும்போது அது படைப்புக்குச் செழுமை கூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் குறுந்தொகையின் சில கவிதைகள் நம்மை உறையவைக்கின்றன என்றால் கலித்தொகையின் சில பாடல்கள் நம்மைச் சீண்டி விடுகின்றன. சிலப்பதிகாரத்தின் உணர்வுச் சமநிலையும் மணிமேகலையின் சுருள்கதை வடிவமும் வழக்கமான காவிய மரபுகளை மீறுகின்றன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் அமானுஷ்ய உலகமும் நாச்சியார் திருமொழியின் வேட்கைப் பிரவாகமும் பக்தி இலக்கிய மரபுக்கு அப்பால்தான் இருக்கின்றன. மரபும் மரபு மீறலும் இங்கே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. மரபைச் சுமையாகத் தூக்கிக் கொண்டு திரியாமல் அதன் சாரத்தை மட்டும் செரித்துக் கொண்டு பயணப்பட்டால் நீண்ட கவிதைப் பயணம் சாத்தியமாகக் கூடும். மொழியின் வளத்தை அறிந்து அதைச் சாகசமாக உதறித்தள்ளவும் ஏற்றுப் பயன்படுத்தவும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று புதுமைப்பித்தனும் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சமஸ்கிருத மொழி உங்கள் கவிதைப் பார்வையை எப்படிச் செழுமைப்படுத்தியுள்ளது?


தமிழை முழுமையாகப் புரிந்துகொள்ள சமஸ்கிருத மொழி அறிவு அவசியம் என்று வலியுறுத்தி வந்தவர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. அவருடைய ‘விடுதலை வேண்டும்’ என்ற எளிய கட்டுரையை தமிழர்கள் அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். மொழி பற்றிய புராணம் குறித்த இறுக்கங்களை வெகுவாகத் தளர்த்திவிடும் அது. தமிழ்-சமஸ்கிருதம் இடையே நேசம்-வெறுப்பு என்ற உறவுநிலை காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சங்க அகக்கவிதை தமிழ் மரபிலிருந்து கிளைத்து வந்தது என்பதால் அதனளவிலேயே அது புரிந்துகொள்ளப்படக் கூடியது. அதேசமயம் ரஸத்வனிக் கோட்பாடு, தமிழ் அகக்கவிதையில் உள்ளுறையாக இருக்கும் குறிப்புப்பொருளை மேலும் நுட்பமாக விளங்கிக் கொள்ள உதவும். மேலும் காவியங்களின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதப் பரிச்சயம் அவசியமென்றுதான் தோன்றுகிறது. குந்தகரின் வக்கிர உத்தி ஜீவிதம் நவீனக் கவிதையை அணுகுவதற்கு உதவக் கூடியது. இதுபற்றிய ஞானக்கூத்தனின் வக்கிர நவிற்சி கட்டுரை குறிப்பிடத்தக்கது. நாடகம், அணி இயல் போன்ற துறைகளில் சமஸ்கிருதம் எட்டியிருக்கும் உச்சம் பெருவியப்பைத் தரக்கூடியது. காளிதாசனும் பவபூதியும் ஆனந்தவர்த்தனரும் அபினவ குப்தரும் கவிதையின் நுட்பமான அசைவுகளையும் அவை குறித்த விளக்கங்களையும் நம்முன் பரப்பி வைத்திருக்கிறார்கள். கொள்ளுவதும் தள்ளுவதும் அவரவர் விருப்பம்.

தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்..


எமிலி டிக்கன்சனின் ஒரு நூறு கவிதைகளையாவது தமிழில் மொழிபெயர்ப்பது என்ற திட்டத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். வின்சென்ட் வான்கோவின் மஞ்சளும் வெண்கலத்தின் உலோக மஞ்சளும் புணர்கிற ரசவாதத்தை வார்த்தைக்குள் கொண்டுவர முடியுமானால் இன்னுமொரு கவிதைத் தொகுப்பு. காரைக்காலம்மையார், ஆண்டாள் கவிதைகளுக்கு குறைவான குறிப்புகளுடன் கூடிய ஒரு உரைப்பதிப்பு, டி. கே. சியின் முத்தொள்ளாயிரப் பதிப்பு போல.
நம்பிக்கை தருகிற இன்றைய தமிழ் கவிஞர்கள் குறித்து எனக்குள் சொல்லிக் கொள்வதாய் ஒரு சிறிய கட்டுரைத் தொகுதி..இவ்வளவுதான்.

Saturday, 18 January 2020

பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்
பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட முழுமையாகப் படித்துமுடித்தபோதும் இந்தக் கவிதைகளின் காலம் குறித்த கேள்விதான் முதலில் தோன்றியது.
கவிதை அகாலத்தில் தானே எழுதப்படுகிறது என்ற எளிய பதிலைக் கொண்டு அந்தக் கேள்வியை முறிக்கப் பார்த்தேன். ஆமாம், அகாலத்தில் எழுதப்பட்டாலும் கவிதையின் பொருத்தப்பாடு என்பது காலத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. கவிதையின் பொருத்தப்பாடும் பின்னணிகளும் மாறும்போது கவிதையைக் காலம் கவ்வுவதற்கு முயன்றபடி இருக்கிறது. காலம் கவ்வாத கவிதைகள் இன்றைக்கும் என்றைக்குமானதாக எப்போதும் பொருத்தப்பாடுடையதாக அகாலத்தின் பொலிவேறி சோபை தழும்ப இருக்கின்றன.
ஒவ்வொரு கவிஞனும் தனது காலத்தின் மொழியை எடுத்துக் கொண்டு, தனது தனிச்சாயல் கொண்ட அனுபவங்களைச் சேர்த்து மொழியில் சமைக்கும்போது அவனுடைய ஆற்றல், வேகம், அவனுக்குக் கிடைக்கும் அருள் எல்லாவையும் சேர்ந்து கூடுதலோ குறைவாகவோ தன் சில கவிதைகளை அகாலத்தின் பீடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான். அருள் என்பதை மேலிருந்து, புலப்படாததிலிருந்து அப்பாலிலிருந்து வருவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எல்லாம் ஒத்திசையும் யோகம் என்று அதைச் சொல்லலாம். சுயத்துடன் தொடர்பில்லாத ஒரு வஸ்து படைப்புச் செயல்பாட்டில் கலப்பதென்று சொல்லலாம். ஆழ்மனம், கூட்டு நனவிலி என்ற நிலவறை வெளிப்படுத்தும் சிரிப்பு அல்லது பெருமூச்சு, கருணை என்று சொல்லலாம்.  களமும் காலமும் சேர்ந்து நிகழ்த்தும் ஆட்டம் சிறந்த படைப்புகளில் நிகழ்கிறது. அந்தப் படைப்புகள் தான் காலத்தைத் தாண்டுகின்றன. அதேவேளையில் அகாலத்தின் பொன்னிறத்தையும்  சூடிக்கொள்கின்றன.   
பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளில் எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம், 2010-ல் எழுதப்படும் கவிதைகளின் சாயல்கள் ஏறியுள்ள கவிதைகளையும் முடிப்புகளையும் பார்க்கிறேன். வண்ணதாசன், தேவதச்சன், அப்பாஸ், ஆத்மாநாம் என்று காலம் ஆளுமைகளாகவும் இந்தக் கவிதைகளில் சாயல் கொண்டுள்ளன.
பூமா ஈஸ்வரமூர்த்தியின் களமும் அவரது காலமும் சேர்ந்து ஆடிய அவரது மன அடையாளத்தை மட்டுமே கொண்ட கவிதைகளைத் துப்பறிவது எனக்குச் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. அந்தக் கவிதைகள் இவர் கடந்து கண்டதின் சாரத்துடன் இவர் கடந்து கண்டதின் சிரிப்புடன் இருக்கின்றன. எனக்கு அந்தக் கவிதைகளைத் தெரியும். அந்தக் கவிதைகள் வழியாக, அவர் கண்ட உலகத்தினுடனான உறவுதான் எனக்கு பூமா ஈஸ்வரமூர்த்தியினுடனான உறவும்.

இந்தத் தொகுதியில் துவக்கத்திலேயே அவரது கவிதையைக் கண்டுவிட்டேன்.
என் வன யானைகளை
வழி பிசகாமல்
அழைத்துச் செல்ல வேண்டும்
மின்மினிகள்
நான் இருக்கிறேன் என்றது.

மின்மினிகள் யாருக்குச் சொல்கிறது. யானைகளை அழைத்துச் செல்பவனையா, யானைகளிடம் சொல்கின்றனவா.
அல்லது யானையின் பாதையை மட்டுமே நோக்குபவர்களுக்கு மின்மினிகளின் இருப்பை நாம் பார்க்க வேண்டுமென்று சொல்கிறதா?
எனது உலகத்துக்கு எனது அனுபவத்துக்கு நெருக்கமாக, யானையிடம் மின்மினிகள் பேசுவதாகவே நினைப்பேன். நான் இருக்கிறேன். பார்த்துப் போங்கள். நான் இருக்கிறேன். பார்த்துக் கொள்ளலாம். போங்க இந்த மனிதனுடன். இப்படித்தான் நான் புரிந்துகொள்வேன். எனக்கும் அந்த மின்மினிகள் ஆறுதல் சொல்கின்றன. நான் இருக்கிறேன்.
இப்படி பூமா ஈஸ்வரமூர்த்தியின் தனிக் கையெழுத்தைக் கொண்ட கவிதைகள் ஒரு பகுதி இவரிடம் இருக்கின்றன.
000
பூமியில் சிறிய இருப்புகளை, கண்ணுக்குத் தெரியாத இருப்புகளை மின்மினிகள் சொல்வதைப் போல வெளிச்சமிட்டுக் காண்பிப்பது; சின்னச் சின்ன இருப்புகள் அவை. குழந்தை வரைந்த ஒரு சுவர் சித்திரம்,  ஒரு சுவர் , ஒரு சிறிய செடித் தொட்டி, பீரோவில் ஒட்டப்படும் சிறிய வண்ணத்துப்பூச்சி வடிவ காந்தம். சின்னப் பொருட்கள், சின்ன உணர்வுகள் மீது கவனம் குவிக்க வைப்பது பூமா ஈஸ்வரமூர்த்தியின் உலகத்தின் ஒரு குணம் என்று வகுக்கலாம். இந்தச் சிறிய அழகுகளைக் கொண்டு அழகேயற்ற, அழகு உணரப்படாத ஒரு இடத்தில் வைப்பதுதான் பூமா ஈச்வர மூர்த்தியின் வேலை என்று கூடச் சொல்லிவிடலாம்.
கவிஞனின் இருப்பு கூட அந்தச் சின்ன அழகைப் போன்றது தான் இந்த உலகத்துக்கு. உலகம் அவனை அழகுபடுத்துவதில்லை. அவன் இந்த உலகத்தை அழகுபடுத்துகிறான். உலகம் அவனுக்கு விருந்திடுவதில்லை அவன் விருந்துகொடுத்து மகிழ்கிறான். அவன் தன்னை தனது படைப்புப் பணியை ஒரு கலை சாதகம் என்ற பிரக்ஞையுடன் இயங்குகிறான்.
000
பூமா ஈஸ்வரமூர்த்தியின் இன்னொரு உலகம் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் கலாசாரத்தின் அவரது கனவாக இருக்கும் ஊரின் அடையாளங்களுடன் உள்ளது. சித்தப்பா, பூச்சுற்றும் பெண் குறித்த கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம். குழந்தையின் கால்கொலுசு தொலைந்த ஆற்றை, தாமிரபரணி கொலுசு அணிந்து ஓடிக்கொண்டிருக்கிறாள் என்று எழுதுகிறார். புதுமைப்பித்தன் இந்தப் படிமத்தை சற்றேறக்குறைய நெருக்கமாக ஒரு சிறுகதையில் பேராச்சியம்மன் படித்துறையில் நீர்விளையாட்டில் ஈடுபடும் குழந்தையை வைத்து எழுதியிருக்கிறார். இந்த உலகில் எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் கண்ணீர் சிறு துளியளவு இருக்கிறது.
ஈஸ்வர மூர்த்தியின் கவிதைகளில் வரும் குழந்தைகள் கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் அவர் கவிதைகளைப் போல மிதப்பவர்கள்.
என் கவிதையின் முதல் வரியில்
வந்து அமர்ந்து கொள்ள விரும்புகிறாள்
இவள்
மூன்றுக்கு மிகாத வயதுச் சிறுமி
மாலை சிறுவர் பூங்காவில் வந்தமர்ந்தவள்
இன்று சின்னஞ்சிறு விரிந்த நீலக் குடையோடும்
வந்திருக்கிறாள்
மழையில்லை வெயிலில்லை தூறலுமில்லை
வான்நீலக் குடையின் மேற்புரத்தில்
கண்ணாடியில் வீழும் மழைத்துளிகளை
சித்திரம் தீற்றியிருக்கிறார்கள்
சிறுமியர்கள் தொட்டுப் பார்த்து செல்கிறார்கள்
சிலரிடம் கொடுத்தும் வாங்கியும் கொள்கிறாள்
கூடவே ஒரு சிறு நாய்க்குட்டியும்
அவளோடு சேர்ந்து மற்றவர்கள்
விளையாடுவதை பார்க்கிறது
மழையில்லை வெயிலில்லை தூறலுமில்லை
விரித்த குடைக்குள் நாய்க்குட்டியை
அழைத்துக் கொள்கிறாள்
பின்னாளில் இவள் அன்பிலாப் பெண்டிரில்
தன்னை இணைத்துக் கொள்ளாள்.
இந்தக் கவிதையின் உள்ளடக்கம் எனக்குப் பிடித்தமானது. ஆனால் இந்தக் கவிதையில் காலம் ஏறியிருக்கிறது. ஏனெனில் இன்றைய கவிஞன் இந்தக் கவிதையை இப்படி முடிக்கமாட்டான். ஈஸ்வர மூர்த்தியின் கவிதை முடிவை நான் பொய்யென்று சொல்லமாட்டேன். ஆனால், உண்மைக்கு அருகில் இல்லை. விரித்த குடைக்குள் நாய்க்குட்டியை அழைத்துக் கொள்ளும் சிறுமியின் சாத்தியத்தை அங்கே ஈச்வரமூர்த்தி மட்டுப்படுத்தி விடுகிறார் என்பதை மட்டும் சொல்வேன். மென்னுணர்வு, ரொமாண்டிக் என்று இந்த இடத்தைச் சொல்லிப் பார்க்கலாம். இங்கேதான் காலம் என்பது கவிதையின் மீது ஒரு இடமாக அமர்ந்திருக்கிறது. இடம் என்பது மதிப்பீடாகவும் இருக்கிறது. நான் திரும்பவும் சொல்கிறேன். பொய்யென்று சொல்லமாட்டேன். ஆனால் அது உண்மைக்கு அருகில் இல்லாமல் இருக்கிறது..அவள் அன்பற்ற பெண்டிரில் ஒருவளாக ஆக்கவும் இந்த பூமியின் எத்தனை குறுக்குவெட்டுப் பாதைகள் காத்திருக்கின்றன.

மழை பனி குளிருக்காக
சன்னல் கீழிறக்கப்படவேண்டும்
உள்ளிருக்கும் கதகதப்பு காற்றுப் போதும்
வெளிச்சம் புதுக் காற்று வேண்டும்
உள்ளிருக்கும் அழுகல் காற்று அகல
சன்னல் மேலேற்றப்பட வேண்டும்
சொற்கள்
ரயில் பெட்டிகள்
என்ற ஒரு கவிதையை வைத்தே சொல்லிப் பார்க்கலாம். புதிய காற்று, பழைய காற்று என்பதை காலமாக விழுமியங்களாகவும் மாற்றிப் பார்க்கலாம்.

இக்கரையில் ஏறி அக்கரைக்கு
சென்றானபின்
வெற்றுப் படகை
நீருக்குள் தள்ளி விடுங்கள்
படகு கரையோரம் நின்று
நீரை ஏக்கத்துடன் பார்ப்பதை
மனதாலும் பார்க்க இயலாது
என்கிறார். இதிலும் எனக்கு முந்தைய ஒரு காலம் செயல்படுகிறது. நான் அந்தப் படகை கரையிலேயே தான் வைத்திருப்பேன். நானும் அந்தப் படகும் வேறு இல்லை, என்னைப் பொருத்தவரை.
கடல் முற்றத்தில்
தீய்க்கும் வெய்யிலின்
சுடுமணலில்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
என் பறவை நடந்து
கடல் பார்க்கிறது.

தீய்க்கும் வெய்யிலின் சுடுமணலில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் நடக்கும் பறவை தான் பூமா ஈச்வரமூர்த்தியின் கவிதைகள். அப்படித்தான் பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலத்துக் கவிதைகளும் பூமா ஈஸ்வரமூர்த்தியின் அகாலத்துக் கவிதைகளும் செயல்படுகின்றன.

இந்தக் கவிதைகள் இருக்கும் காலத்தைக் கடந்து கண்ட ஒரு உலகம் எனக்கு மிகவும் பயனுள்ளது. அவருக்கும் அதுதான் நிறைவையும் கருணையையும் சுரக்கச் செய்திருக்க வேண்டும். அதுதான் மிக நெடுங்காலமாக காணாதிருந்த ஈஸ்வரமூர்த்தியை எனக்கு மிகவும் நெருக்கமாக்கவும் செய்கிறது.
அந்த இரண்டு கவிதைகளை நான் படித்து நிறைவு செய்கிறேன்…

இந்த விதைகள் என்னையும் சேர்த்தணைத்து
நிலத்தில் விதைத்துக் கொள்கிறது
இந்த மீன்கள் என்னையும் சேர்த்தணைத்து
நீரில் நீந்தி மகிழ்கிறது
இந்த எழுத்துக்கள் என்னையும் சேர்த்தணைத்து
நெருப்போடு எரிகிறது
இந்த மூச்சு என்னையும் சேர்த்தணைத்து
காற்றோடு கலந்து கொள்கிறது
இந்தப் பறவை என்னையும் சேர்த்தணைத்து
ஆகாயத்தில் மிதந்து கொள்கிறது
இந்த உயிர் என்னுயிரையும் சேர்த்தணைத்து
இன்பம் துய்க்கிறது
இந்த உயிர் என்னுயிரையும் சேர்த்தணைத்து
துன்பம் துய்க்கிறது.

இதுதான் ஈஸ்வரமூர்த்தி கண்டது என்று கருதுகிறேன். இதுதான் அவர் அடைந்திருக்கும் கனிவு என்று தெரிகிறது. இதுதான் அவர் என்னுடன் என் காலத்துக்கும் சேர்த்து அகாலத்துக்கு அளித்திருக்கும் பரிசு.

நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
கடந்து போகிறீர்கள் சிறு புன்னகையுடன்
நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
அகன்று போகிறீர்கள் சிறு புன்னகையுடன்
நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
ஏற்றுக் கொள்கிறீர்கள் சிறு புன்னகையுடன்.

கடவுளைக் கண்டும் எதையுமே கேட்கத் தோன்றவில்லை என்று சொல்லும் ஆத்மாநாமின் நிறைவு கொண்ட பூரணப் புன்னகையின் எதிரொலியை இந்தக் கவிதையில் காண்கிறேன்.

ஈஸ்வர மூர்த்தி, உங்களை மிகத் தொலைவிலிருந்து காலத்திலிருந்து இடத்திலிருந்து பார்க்கிறேன். மகிழ்ச்சி.

நீந்தி துள்ளித் துள்ளி விளையாடும்
மீன்கள் சொல்லும் இது எனது நதி
நதி சொல்லும் இவைகள் எனது மீன்கள்
மகனே கவனம் கொள்
இன்று மிக நல்ல நாள்
மீன் பிடிக்கக் கற்றுத் தரப்போகிறேன்
தேர்ச்சி கொள்
இனி உனக்குப் பசி இல்லை
இது உனது நதி இவைகள் உனது மீன்கள்
மீன் கொத்திப் பறவையும்
சொல்லும்
இது உனது நதி இவைகள் உனது மீன்கள்

மீன்கள் சொல்வதும் உண்மை. மீனைப் பிடித்துப் பசியாற்றுவதற்குக் கற்றுக்கொடுக்கு மனிதத் தகப்பன் சொல்வதும் உண்மை. மீன்களைக் கொத்திச் சாப்பிடப் போகும் மீன்கொத்தி சொல்வதும் உண்மை. உனதும் எனதும் ஒன்றாகும் உண்மை. நீயும் நானும் ஒன்றாகும் உண்மை. காலத்தை விழுங்கிய கவிதையின் உண்மை.

Tuesday, 14 January 2020

மொழியின் உயிர்த்துடிப்பு கவிதைதமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக கோடைக்கால குறிப்புகள் தொகுதியின் மூலம் அறிமுகமானவர் சுகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல் என பல்வேறு பரிமாணங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் சுகுமாரனின் ஒட்டுமொத்த கவிதைகள் இந்த புத்தகச் சந்தையில் வருவதையொட்டி மின்னஞ்சல் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பேட்டி இது உங்களது ஒட்டுமொத்தக் கவிதைகள் தற்போது வெளியாகவுள்ள நிலையில், உங்கள் கவிதைகள் கடந்த பருவங்களைச் சொல்லுங்கள்...

கவிஞர் ஒருவரின் கவிதைகள் முழுத் தொகுப்பாக வருவது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு என்ற எண்ணம் எனக்கு இல்லை. தனித் தனித் தொகுப்புகளைத் தேடி வாசகர் அலைவதைத் தவிர்க்கும் நடைமுறைச் செயல்பாடு என்றும் அந்தக் கவிஞரின் உலகைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பார்வை உருவாக உதவும் வாய்ப்பு. என்றுமே இதைக் கருதுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது இப்போது செயலாகி இருக்கிறது. 

கவி வாழ்வில் கடந்து வந்த பருவங்கள் அந்தந்தக் காலங்களில் வெளிவந்த தொகுப்புக் கவிதைகளில் தெளிவாகத் தென்படுவதாகவே நம்புகிறேன். பருவங்கள் கடப்பதோடு பருவ மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்பக் கவிதைகளிலும் கவிதையாக்கம் பற்றிய பார்வையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை என்னவென்பதை கவிதை வாசகரோ விமர்சகரோ சொல்வதே சரியாக இருக்கும். எனினும் சுய பரிசோதனையில் நான் உணர்ந்தவை இவை. கோடைகாலக் குறிப்புகள் முழுக்கவும் தனி ஒருவனின் குரலில் வெளிப்படும் கவிதைகள் கொண்டவை. தன்னைச் சுற்றியுள்ள நிலைமையால் கசந்து போன கைவிடப்பட்ட மனோபாவத்தில் எழுதப்பட்டவை. சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்ட மனதின் மன்றாடல்கள். ‘பறக்கும் கழுகின் கால்களில் சிக்கிய துடிக்கும் இதயம் நான்’ என்ற வரி ஓர் எடுத்துக்காட்டு. இந்த மன நிலை மிக விரைவிலேயே கலைந்தது. ‘எனது நான் என்னுடையதல்ல; காற்றுப்போலப் புறவயமானது’ என்று மாறியது. சிலைகளின் காலம் தொகுப்புக்கு பிந்தைய கவிதைகள் பெரும்பான்மையும் இந்த மனமாற்றத்தின் பல நிறங்களும் பல குரல்களும் கொண்டவை. சுருக்கமாக, நான் என்பதை நாமாக உணர்ந்தது பார்வையில் நிகழ்ந்த மாற்றம். இதுவே கவிதையின் உள்ளடக்கத்தையும் பெருமளவு புதுப்பித்தது. முதல் இரண்டு தொகுப்புகளில் மொழி தொடர்பாக ‘வேண்டாத பிடிவாதங்கள்’ இருந்தன. நேரடியான சொல்லைப் பயன்படுத்தினால் மட்டும் போதும் என்ற எண்ணம் இருந்தது. ‘ரத்தம்’ என்று எழுதினால் போதும்; குருதி என்று எழுதத் தேவையில்லை என்பது போன்ற பிடிவாதம். அனுபவமும் தொடர் பயிற்சியும் கவனமான வாசிப்பும் பிடிவாதங்களை உதறச் செய்தன. ‘வளை எயிறு, கொன்றையுகிர்ப் பாதங்கள் ‘ என்று பிந்தைய கவிதையில் இயல்பாகக் கையாண்ட சொற்கூட்டுகளை முன்பு யோசித்தே இருக்க மாட்டேன். இவை மேலோட்டமான உதாரணங்கள். விரிவாகச் செல்ல கூச்சம் தடுக்கிறது. மாற்றங்களுக்குத் தொடர்ந்து ஆட்பட்டு வருகிறேன். அது கவிதைகளிலும் வெளியாகிறது. எனினும் கவிதையாக்கத்தில் மாறாத சில அடிப்படைகள்  எனக்கு இருக்கின்றன. அவைதாம் என் கவிதைகளைக் கட்டி எழுப்புகின்றன.  கவிதையை மலினப் பண்டமாகக் கருதக் கூடாது. அனுபவத்தில் தைக்காத ஒரு வரியையும் எழுதக் கூடாது. புரியாத வகையில் எழுதக் கூடாது. பொய்யான ஒன்றைச் சொல்லக் கூடாது. பகட்டான உணர்வைக் காட்டக் கூடாது. இது போன்ற ‘கூடாது’களை இன்றும் கடைப்பிடிக்கிறேன். ஒருபோதும் அவற்றைக் கைவிடக் கூடாது என்று விரும்புகிறேன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை என்னும் வடிவத்தில் இயங்கி வருபவராக கவிதைகளைப் பற்றி எழுதிவருபவராக கவிதைகளை மொழிபெயர்ப்பவராகச் செயல்படுபவர் நீங்கள். இன்றும் கவிதையின் இன்றியமையாத தன்மை என்பதைச் சொல்லுங்கள்?

உலகின் எந்த மொழியிலும் கதையோ நாவலோ எழுத முயல்பவர்களை விடக் கவிதை எழுத முன் வருபவர்களின் எண்னிக்கையே அதிகம். பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் அநேகரும்  கவிதையைத் தொட்டுப் பார்த்து விலகியவர்கள் என்பது இலக்கிய சுவாரசியம். மொழியின் முதல் இலக்கிய வடிவம் கவிதையே என்பதனால்தான் இந்த ஈர்ப்பு உருவாகிறது என்று எண்ணுகிறேன். நான் வசிக்கும் திருவனந்தபுரத்தில் ஒருமுறை ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலில் வண்டி திணறியபோது ஓட்டுநர் பாழாய்ப் போன  இந்த வேலைக்கு வந்தது பற்றித் தனக்குள் நொந்துகொண்டு ஒருவரியைச் சொன்னார். ‘அவனி வாழ்வு இது கினாவு கஷ்டம்’. உலக வாழ்வு கனவு; கஷ்டம் என்று பொருள். அது மலையாளத்தின் மகாகவி குமாரன் ஆசானின் கவிதை வரி. ஆட்டோ ஓட்டுநர் படித்தவர் அல்லர்; ஒருவேளை பள்ளிப்படிப்பில் இந்தக் கவிதையைப் பாடமாகக் கேட்டிருக்கலாம். ஆனால் தனது வாழ்வின் துயரைச் சொல்ல அவருக்கு இந்த வரிதான் பொருத்தமாக இருந்தது. மொழியின் ஆதி மனநிலையைக் கிளர்த்தி விட்டதுதான் அந்த வரி செய்த காரியம். இன்றைய கொந்தளிப்பான சூழலில் எத்தனை பேர், எத்தனை முறை ‘ பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதி வரியை யோசித்திருப்பார்கள்? சிக்கலான தருணத்தில் கொந்தளிப்பைக் கொட்டச் செய்ததுதான் அந்த வரி ஆற்றிய கடமை. பாப்லோ நெரூதாவின் வீட்டைச் சர்வாதிகாரி பினோஷேயின் ராணுவம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடிச் சூறையாடியது. ‘உங்கள் கைகளிலிருப்பதை விடவும் வலிமையான ஆயுதம் இங்கேஇருக்கிறது. அதன் கவிதை’ என்று நெரூதா பதில் அளித்தார். மொழியின் ஆதிக் கருவி கவிதை என்பதுதானே அந்த பதிலின் உட்பொருள்.

மொழியின் குருதியோட்டம் என்று சொல்வது அலங்காரமாகத் தோன்றினாலும் அதன் உயிர்த் துடிப்பை அளந்து பார்க்கக் கவிதையைத் தவிர வேறு வழி இல்லை என்பது உண்மை. என்றும் கவிதையின் இன்றியமையாத இயல்பு அது கவிதையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

ஒரு பத்திரிகையாளன் என்ற பின்னணியில் ஒரு படைப்பாளி அனுபவம், மொழி சார்ந்து என்னவிதமான அனுகூலங்களைப் பெறுகிறான்?

பத்திரிகையாளனாக வேண்டும் என்ற குறிக்கோளுடனோ அதற்கான கல்விப்புலப் பயிற்சியுடனோ பத்திரிகையாளன் ஆனவந் அல்லன். பிழைப்பு நிமித்தம் இதழாளன் ஆனவன். அந்தப் பணியின் மீது ஒரு தூரத்து வசீகரம் இருந்தது. எனவே பணியில் அமர்ந்த உடனேயே அதற்கு என்னைத் தயார் செய்து கொண்டேன். பின்னாட்களில் ‘ உலகத்திலேயே மிகச் சிறந்த வேலை இதுதான் ‘ என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியேல் கார்ஸிகா மார்க்கேஸ் வியந்து சொன்னதை நடைமுறையில் உணர்ந்தேன். எந்தக் கதவையும் திறக்கும் மாயச் சாவி அவன் கையில் இருக்கிறது. எந்த மனதையும் துருவிப் பார்க்கும் நுண்ணோக்கி இருக்கிறது. எந்தக் கொண்டாட்டத்திலும் எந்தத் துயரத்திலும் அவனால் அழைப்பின்றிப் பங்கேற்க முடியும். இவையெல்லாம் அவனுக்கான தகுதிகள். ஆனால் இவற்றை அப்படியே  நடைமுறையில் பின்பற்றும் வாய்ப்பு தமிழ்ப் பத்திரிகை உலகில் அரிது. எனக்கும் அப்படி முழுச் சுதந்திரவானாகச் செயல்படும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இந்தப் பணியில் கிடைத்த அனுபவங்கள் படைப்புக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன. ஒரு இதழாளனாக இல்லாமலிருந்தால் என்னுடைய சில கவிதைகளை நான் எழுதியிருக்க மாட்டேன். மொழியைத் தெளிவானதாகவும் தெளிவு தருவதாகவும் பயன்படுத்த உறுதிகொண்டதும் இந்தப் பணி வாயிலாகத்தான். இவை நான் பெற்ற பயன்கள்.

ஒரு நூறு ஆண்டைக் காணப்போகும் தமிழ் புதுக்கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்லமுடியுமா?

நூற்றாண்டின் ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதுதான் சுருக்கமான பதிலாக இருக்கும். உயிர்ப்புக் குன்றாத இலக்கிய ஊடகம் என்ற நிலையில் அது இயல்பானது. இறுதியான கருத்தல்ல என்ற பொறுப்புத் துறப்புடன் மேலோட்டமாக இப்படிச் சொல்லப் பார்க்கிறேன். தமிழ்க் கவிதைகளை அதன் நீண்ட மரபையொட்டியே அகம், புறம் என்று இரண்டாகப் பகுக்க முடியும். புதுக்கவிதையின் தோற்ற ஆண்டான 1934 முதல் எழுபதுகளின் இறுதிவரையான கவிதைகள் அக உணர்வுகளுக்கு முதன்மையளித்தவை; என்பதுகள் முதல் தொண்ணூறுகள் வரையானவை புற உணர்வுகளையும் அகத்துக்குள் ஏற்றவை. அதற்குப் பிந்தையவை அகம், புறம் என்ற வேறுபாட்டை இல்லாமல் ஆகியவை என்று பிரித்துக் காண விரும்புகிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று கலந்தும் இயங்கியவை. எனினும் எழுத்து முதலான காலகட்டக் கவிதைகளில் அதிகம் வெளிப்பட்டவை நகர மனிதனின் மனமும் சூழலும். மொழியும். அவற்றில் அரசியல், சமூகப் பேசுபொருள்கள் குறைவு. அதன் பின்னரானவற்றில் களம் விரிந்தது. மொழி மாறியது. பல்வேறு சூழல்கள் சித்தரிக்கப்பட்டன.. அரசியலும் சமூகமும் பேசுபொருள்களாயின. ஈழக் கவிதையின் அறிமுகம் தனி மனிதனையும் அரசியல் உயிரி என்று கருதத் தூண்டியது. தொண்ணூறுகளுக்குப் பின்னர் கல்வி பெற்று வந்த புதிய தலைமுறை கவிதையின் பொதுத் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியது. கவிதையில் புதிய பொருள்கள் பேசப்பட்டன. ஒடுக்கப்பட்டோரின் நிலை. பெண் மைய வாதம், சூழலியல், மாற்று அரசியல் இவையெல்லாம் புதுக் கவிதையை விரிவாக்கின. நவீனமாக்கின. அலகிட்டு விரிவாகப் பேசப்பட வேண்டிய தலைப்பைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. பிற மொழிக் கவிதைகளையும் வாசிப்பில் பின் தொடர்பவன் என்ற தகுதியில் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். சம கால இந்தியக் கவிதையில் தமிழ் அளவுக்கு விரிவும் ஆழமும் வேற்றுமைகளும் கொண்ட கவிதைகள் இல்லை.

வெல்லிங்டன் நாவலை எழுதும்போது மிக நேரடியான எதார்த்த மொழியைக் கையாண்டுள்ளீர்கள். கவிஞனின் சாயல் அதில் வரவே கூடாது என்று கவனமாக இருந்தீர்களா?

வெல்லிங்டன் நாவலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வெல்லிங்டன் உருவாக்கத்தைச் சொல்லும் வரலாற்றுப் பகுதியும் வெல்லிங்டன் மனிதர்களின் தற்கால வாழ்க்கை பற்றிய பகுதியும். முதற் பகுதியில் அங்கங்கே கவிஞன் எட்டிப் பார்க்கிறானே?. இரண்டாம் பகுதி மையப் பாத்திரமான சிறுவனின் இளம் பருவத்திலும் பதின் பருவத்திலுமாக நிகழ்கிறது. அவனுடைய பார்வையிலேயே சம்பவங்கள் முன்வைக்கப் படுகின்றன. அந்தப் பின்புலத்தில் அங்கே கவிஞனுக்கு வேலை இல்லை.

வெல்லிங்டன், பெருவலி இரண்டில் எது உங்களுக்கு மனத்துக்கு நெருக்கமானது?

வெல்லிங்டன். அதில் கொஞ்சூண்டு நானும் இருக்கிறேன்.

இசையில் ஈடுபாடு கொண்டவர் நீங்கள். உங்கள் மொழியில் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் இசை ஈடுபாடும் ரசனையும் மிக அந்தரங்கமானவை. கவிதையையும் இசையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பாதிக்கும் எதுவும் கவிதையையும் பாதிக்கும் என்ற வகையில் இசை சில விளைவுகளைக் கொடுத்திருக்கிறது. சுருதி பிசகாத சொற்களைத் தேர்ந்து கவிதையில் பயன்படுத்துவது; அநாவசிய ஆலாபனைகளுக்குள் இறங்காமலிருப்பது; கவிதைக்குப் பொருந்தக் கூடிய தொனியை உருவாக்குவது. இவற்றில் இசையின் தாக்கம் இருக்கலாம். இரண்டும் தனித்தனியான கலைவடிவங்கள் என்றாலும் இசையைக் கேட்டு முடித்ததும் வாய்ப்பதும்  நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் வாய்ப்பதும் ஒரே மனநிலைதான், 

கோவையில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள். இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறீர்கள். வாழ்நிலங்களின் மாற்றம் உங்களிடம் என்ன செய்திருக்கிறது?

கேரளத்தின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது திருவனந்தபுரம் தமிழுக்கு அந்நிய நகரமல்ல. மலையாளமும் பேசப்படும் தமிழ் நகரம்.. எனவே பெரிய மாற்றங்கள் எதையும் உணர்ந்ததில்லை. மலையாள வாசிப்பும் கேரளப் பண்பாட்டைச் சார்ந்த விஷயங்களின் மீதான கண்ணோட்டமும் செழிப்படைந்திருக்கின்றன. நான் கணியன் பூங்குன்றனின் வாரிசு. எனவே இந்த ஊரும் எனது ஊரே; இந்த மனிதர்களும் எனது சுற்றமே.

ஒரு இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட கவிஞர் நீங்கள். தமிழ் நவீன கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவரும் கூட. சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனின் ஆற்றலும் காதலில் ஈடுபடுபவனின் ஆற்றலும் ஒரு தளத்தில் சந்திப்பவையா?

இதுவரையானவற்றில் பதில் சொல்லச் சிக்கலான கேள்வி இது. நவீன கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவர் என்று நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது. உண்மையில் இது தமிழ் இலக்கிய மரபிலிருந்து  நான் கண்டெடுத்துக் கொண்ட  இயல்பு. காதல் உயர்வானது;காமம் விலக்கானது என்ற பேதம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில்  கிடையாது என்பது வாசிப்பில் அறிந்த உண்மை. அதையே நிஜத்திலும் கவிதையிலும் பின்தொடர முயன்றிருக்கிறேன். ஆணின் பார்வைக் கோணத்திலானவைதாம் நீங்கள் குறிப்பிடும் கவிதைகள். ஆனால் அது பெண்ணை ஆகாயத் தாமரையாகப் புகழ்வதோ பாதாளப் புழுவாக இகழ்வதோ அல்ல, மாறாக நிகர்நிலையில் வைத்துப் பார்க்கும் எத்தனம். இயற்கையின் பகுதியாக ஏற்கும் முனைப்பு. காதல், காமம் பற்றிய என் கவிதைகள் எதிலும் இயற்கையின் குறிப்பீடு இல்லாமலிருக்காது என்பதை என் தரப்பு விளக்கமாகச் சொல்வேன்,

இன்றுவரையில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் புரட்சியாளர்களில் பெரும்பான்மையினரும் மாளாக் காதலர்கள்தாம். காதலும் மானுடர்க்கிடையிலான மாற்றத்தைக் கோருவது என்பதால் சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனுக்கு இரு ஆற்றல்களும் ஒரு தளத்தில் இருப்பத்தானே சரி? இடதுசாரிப் பின்னணி அதற்கு ஒருபோதும் தடையல்ல என்று வரலாறு சொல்கிறது. நாம் பேசுவது காதலிலும் சமூக மாற்றத்திலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களைப் பற்றித்தான். நாடகக் காதலர்களையோ போலிப் புரட்சியாளர்களையோ அல்லவே. 
Monday, 13 January 2020

ஆனந்தின் சுற்றுவழிப்பாதை
பிராணிகளின் அழகும் குறும்பும் படைப்புணர்வும் ததும்பும் உறுப்பாக கடவுள் வாலைப் படைத்தார். என்னுடைய வளர்ப்புப் பிராணி பிரவுனியைப் பார்த்தபின்னர் தான் அதை அறிந்துகொண்டேன்.

மனிதர்களுக்கு வால் போய்விட்டது. அதை இடமாற்றி இன்னும் சூட்சுமமான வஸ்துவான மனமாக மாற்றியிருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.

அந்த வாலுக்குக் கண் வெளித்தெரியாமல் இருக்கலாம். ஆனால், விழிப்பு உண்டு.

வாலுக்குக் கண் இல்லை
யார் சொன்னது?
விழிப்புள்ளதெல்லாம் கண்களென்று கொண்டால்
வாலுக்குக் கண் உண்டுதான்.

வாலுக்குச் சுயம் உண்டு
அதை நான் வளர்க்கும்
ப்ரவுனியைப் பார்த்தே அறிந்துகொண்டேன்
அதன் வால் வழியேதான் அவன் அறிவிக்கிறான்
தான் பிரவுனி
தான் நாய்
தான் பிராணி
நான் நீயல்ல
நான் நீங்கள் அல்ல

மனிதர்களுக்குச் சுயமே வால்
பிராணிகளைப் போல அது கிடைமட்டமானது அல்ல
செங்குத்தாய் தரையிலிருந்து வானுலகம் வரை
அந்த வால் நீண்டிருக்கிறது

அவனுடைய வாலை
நான் பிடிக்கும்போதெல்லாம்
அவன் தான் தான் என்று
ஏன் அலறி அவன் எதிர்க்கிறான்
அதற்கு முதல் சாட்சியம் என் அப்பா
என் அம்மா அவர் வாலைப் பிடிக்கும்போதெல்லாம்
இப்படித்தான் தான் தான் என்று
விசுவரூபம் எடுத்தார்.

அடுத்த சாட்சி என் மனைவி
நான் அவள் வாலைத் தவறி மிதிக்கும்போதும் கூட
அலறிச் சீறுகிறாள்
அவள் காண்பிக்கும் எதிர்ப்பு அல்ல
அவள் சொல்லும் வசைகள் அல்ல
அவள் காண்பிக்கும் தனிமை
தான் தான் தான் என்று
என்னை வதைக்கிறது.

வாலின் நடுவில் உள்ள எலும்பு தான், தான், தான், தான் என்று வதைபடுகிறது. இந்தத் தானுக்கு இரண்டு வரலாறுகள். ஒன்று கூட்டு நனவிலி, கூட்டு அறிதிறன் என்பவற்றால் ஆன ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாறு; இன்னொன்று பிறந்து மொழிபயின்ற பின்னணி, நினைவுகளால் அடையப்பட்ட தனிநபர் அனுபவங்களின் வரலாறு.

மாறுதலுக்கும் மாறாததற்குமான யுத்தம், இந்த இரண்டு வரலாற்றுக் களங்களிலும் சேர்ந்து நடக்கும் களம்தான் மனம்.
நாவல் என்றும் கதை என்றும் தோன்றும் வடிவத்தில் எழுதப்பட்ட ‘சுற்றுவழிப் பாதை’, மனம் என்னும் உயிர்-வேதி-கலாசார சாராம்சத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட யாத்திரையின் தடங்களைக் கொண்ட படைப்பு ஆகும். அந்த யாத்திரையில் நிர்ணயமான ஒரு காலம் இல்லை; அது தேவையும் இல்லை. கல்யாணராமன் முன்னுரையில் இந்த படைப்பின் காலத்தை நிர்ணயிக்க நினைக்கிறார்.   

நான், பிறந்து வளர்ந்த பின்னால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை மனத்தை நான் தனியாக உணர்ந்ததில்லை. நினைவுகள், எண்ண ஓட்டங்கள், உள் உரையாடல்கள், வெளியில் நிகழும் அனுபவங்களுக்கு அகத்தில் நடந்துகொண்டேயிருக்கும் விளக்கங்கள், மொழிபெயர்க்கப்படாத உயிர்-வேதித் தளத்தில் நடக்கும் துயர, சந்தோஷ மூட்டங்கள் எல்லாவற்றையும் ‘நான்’ தாங்கிக் கொண்டிருக்க முடிந்த வரை, மனம் என்பதை, நான் என்றே கற்பனை செய்திருந்தேன்.

மனத்தின் கனமும் என் கனமும் வேறு அல்ல. மனத்தின் வெப்பமும் என் வெப்பமும் வேறு அல்ல. மனத்தின் குளிரும் எனது குளிரும் வேறு அல்ல என்றுதான் மனத்தை, ‘நான்’ ‘நான்’ என்று தாங்கிக் கொண்டிருந்தேன்.

அந்தக் கதைக்கு ஒரு முடிவு வந்தது. அதுவரை ‘நான்’ எதிர்கொண்டிராத ஒரு ஒரு துயர் எனக்கு நேர்ந்தபோது தான், மனம் என்பது எனக்கு ஆதரவானதில்லை என்பதை அறிந்துகொண்டேன். மனத்தால் எதையும் செய்யமுடியாதென்ற ஏலாமையை உணர்ந்தேன். இந்த மனத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்ற நகுலனின் வாக்கியம் முற்றிலும் புரிந்தது. மனமென்று அதுவரைத் தனியாகவே தெரியவே தெரியாமலிருந்த ஒரு பாண்டம் என் கையில் அமர்ந்து கொதிக்கத் தொடங்கிய போதுதான், மனத்தைக் கீழே போட்டு ஓடவேண்டுமென்று தோன்றிய போதுதான், மனம் என்பது அவ்வளவு எளிதாகச் சமாளிக்க முடியாத ஆளென்று தெரிந்தது; அது வேறொரு ஆள்.  

எதையும் தாங்க முடியாதபோதுதான், அதைவிட்டுப் பிரிய நினைக்கிறோம். அப்படியான தாங்க முடியாத வேளையில் மனத்தைக் கீழேபோட்டுவிடத் துடித்தபோது ஏற்பட்ட சந்திப்பு தான் ஆனந்துடனானது.

ஆனந்தை முன்வினை போல ஏற்கெனவே நான் பார்த்திருக்கிறேன்,எனது மாணவப் பருவத்தில். தியாகராய நகரின் நடேசன் பூங்காவில் எம். யுவனுடன், ஆனந்த்தைச் சந்தித்தேன். வில்ஸ் பில்டர் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே இருந்தார். எனக்கும் தாராளமாக உரிமையோடு உணரும்படி சிகரெட் தந்துகொண்டிருந்தார். முண்டக உபநிடதத்தின் புகழ்பெற்ற இரண்டு கிளிகள் கதையைத்தான், எம். யுவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் சொன்ன கதையின் உள்ளடக்கம் முழுக்க விளங்கவில்லை. ஒரு கிளி மேல் கிளையில் அமர்ந்திருக்கிறது; இரண்டாவது கிளி கீழ் கிளையில் அமர்ந்திருக்கிறதென்ற சித்திரம் மட்டும் மனத்தில் பதிந்தது. ‘காலடியில் ஆகாயம்’ தொகுதியை அதற்குப் பிறகு படித்தேன். ஆனந்த் எப்போதும் டைட்டன் வாட்ச் கம்பெனிக் காரர்களைப் போல காலம், காலம் என்று பேசிக் கொண்டிருப்பார் என்று சாரு நிவேதிதா ஒருமுறை கிண்டலாகக் கூறியிருந்தார்.

 காலம், காலம் என்று நமக்குத் தொடர்பில்லாத வேறு ஏதோவொன்றை ஆனந்த் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கும் இருந்தது. ஆனால், நான் புறக்கணித்த அந்தக் ‘காலம்’ என்னைப் பின்னர் வதைக்கும், என் கையில் கனக்கும் என்று தெரிந்திருக்கவேயில்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரிடமே நான் சிகிச்சைக்காக வந்துசேர்வேன் என்று எனக்குத் தெரியாது.

ஆனந்தைச் சந்தித்த பிறகு, வாழ்வில் தாங்கமுடியாதது என்ற ஒன்று இருக்கவே முடியாது என்று தோன்றும் புள்ளிக்கு அவர் என்னை நகர்த்தியிருக்கிறார். அதற்கு இந்தச் சுற்றுவழிப்பாதை நாவலுக்கும் சம்பந்தம் உண்டு.  

ஏனெனில், தாங்க முடியாத ஒன்று உண்மையிலேயே நேரும்போது, தாங்கமுடியவில்லை என்று சொல்வதற்கு நாம் இருக்கப் போவதில்லை. சந்தோஷம், வலி இரண்டுமே தாங்கமுடியும் அளவுதான் நமக்குத் தரப்படுகிறது. தாங்கமுடியாத போது நானோ நீங்களோ இங்கே இருக்கமுடியாது.

இந்த நாவலின் முன்னுரையில் தாங்க முடியாத வேதனைக்குள்ளாக்கி விட்டு, மனமே தாங்கமுடியவில்லை இனிமேலும் என்று புகார் சொல்லி அழுத நிலையில், ரணமாக்கும் எண்ணங்களை ஏவிவிட்டு ரத்தம் கோரிக் கொண்டேயிருக்கும் விலங்குகளாய் சதா பகலிலும் இரவிலும் என்னை உறங்காமல் ஓய்வுகொள்ளாமல் தமது குளம்படிகளால் மிதித்துக் குதறிக் கொண்டிருந்த வேளையில் தான் மனம் எனக்குக் கனக்கத் தொடங்கியது.

அதை அத்தனை காலம் மிக அனாயசமாக இயல்பான உள்ளுறுப்பாய் பாவித்து வந்த எனக்கு அது கைப்பாத்திரமாக கொதிக்கத் தொடங்கியது.

‘சுற்றுவழிப்பாதை’ படைப்பில் வரும் ஆசிரமத்தைப் போல அடைக்கலமாக ஆறுதல் தரும் இடமாக உண்மை வீடாக ஆனந்தும் இந்தப் படைப்பும் ஒரே நேரத்தில் இருந்தது. இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடம் ஆனந்தின் அண்ணா நகர் அறையாக என்னால் அப்போது உணரப்பட்டது.

புறநிலை, புறப்பிரபஞ்சத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று கல்யாணராமன் கேட்கிறார். நாம் சுத்தமான எதார்த்தம் என்ற ஒன்றைப் பார்க்கக் கூடிய, விளக்கக்கூடிய வல்லமையை அல்லது சாத்தியத்தைப் பெற்றிருக்கிறோமா? இது ஆன்மிகம் மட்டுமல்ல, இன்றைய நவீன அறிவியலும் கேட்கும் கேள்வி இது. பொய், மெய் என்ற இரட்டைகளில் அல்ல; குட்டி உண்மை, பெரிய உண்மை, ஒல்லி உண்மை, குள்ள உண்மை, சிகப்பு உண்மை, கருப்பு உண்மை, பச்சை உண்மை என எத்தனை கோடி மக்களாக உண்மைகளும் அனுபவ விளக்கங்களும் உருவெடுத்திருக்கின்றன.    

மனம் நோயுற்ற நாட்களில் தான், தற்பொழுதை எதிர்கொள்ள முடியாமல் இறந்த கால நினைவுகள் அளித்த வேதனையும் எதிர்காலம் குறித்த எண்ணிலடங்காத அச்சங்களும் போகும் இடம், பார்க்கும் நபர்கள் எல்லாரிடத்திலும் படர்ந்திருந்த போதுதான், பொன்மொழிகள், மகாவாக்கியங்கள் மீதான நம்பிக்கையும் கூடியது. ஒரு தேவாலயச் சுவரில் உள்ள, ஆட்டோவின் கூரையில் எழுதப்பட்ட வாசகங்கள் எல்லாவையும் அந்தக் கணத்தைக் கடப்பதற்கு, ஆறுதல் கொள்வதற்கான சொற்களாக மாறின. ஏகார்ட் டோலிலிருந்து, அஷ்டாவக்கிரர் யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி வரை, ஷிர்டி சாய்பாபாவிலிருந்து சேப்பாக்கத்திலுள்ள இஷ்டலிங்கேஸ்வரர் வரை அனைத்து குருக்களையும் தெய்வங்களையும் ஆலயங்களிலிருந்து நான் ஓட ஓடத் துரத்திய நாட்கள் அவை. மனம் தொடர்பிலான புத்தகங்களை கழுதை போலத் தின்று செரித்திருக்கிறேன்.

000

மனம், மனம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கிறது. மனம், தனக்கு எதிரான தனக்கு ஊறுவிளைவிக்கும் தகவல்களைக் கூட ருசியோடு கேட்கிறது. தன்னை இல்லாமலாக்குவதற்கான சதி, ரகசியங்களை ஏவிவிடும் ஆனந்த் போன்ற மனநல ஆலோசகர்களின் அறைகளில் கூட, குளிர்சாதன வசதி கொடுத்த குளிரில், ஆனந்த் கொடுக்கும் காபியைச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் மனத்துக்கு எத்தனை வலு இருக்க வேண்டும்; எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மனம் தன் மீது செய்யப்படும் யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

மனம் பற்றியும் மனிதனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் புரிந்துகொள்வதற்கான மிகச் சிறிய குளிகைகளாய் வார்த்தைகள் தேவையாக இருந்த காலகட்டத்தில்தான் ஆனந்தோடு ‘சுற்றுவழிப்பாதை’ படைப்பில் அவருடன் அமர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தேன்.

குருதேவருக்கும் சத்யரூபனுக்கும் தொடக்கத்தில் வரும் உரையாடலில் துவங்கி புத்தகத்தின் ஒவ்வொரு மூலையிலும் குருதேவர் சொல்வதை மனம் குவிந்து கேட்டேன். இரண்டு சிகரங்களுக்கிடையே குறுநாவலிலிருந்தே ஆனந்தின் கதாபாத்திரங்களாகத் தொடரும் மலைகள் பற்றிய விவரிப்பையும் நான் கதாபாத்திரங்களின் பேச்சைப் போலத்தான் கூர்ந்து பார்த்துக் கேட்டேன். சத்யரூபன் பார்க்கும் ஒரு குன்று தனிமையாகவும் தன் தனிமையில் நிமிர்ந்தும் நிற்கும். அந்தக் குன்று கதியற்ற தனிமையில் இல்லை. அந்தக் குன்று இனிய ஓருணர்வில் நிமிர்ந்து தனித்து இருக்கிறது. அது எனக்கும் ஒன்றைச் சொல்கிறது. தேவதச்சனின் கவிதையில் அன்பைவிட மதிப்பு மிக்க வஸ்து என்று சுதந்திரத்தைச் சொல்வார். அதைப் பரிந்துரைக்கிறது ஆனந்த் சொல்லும் குன்று.

எல்லாக் காலமும் இப்போதில் இருப்பதைத் தெரிந்துகொள்

பொருள் அல்லாததைப் பற்றுவதற்குக் கற்றுக்கொள்

நீ இல்லாதபோது இருக்கும் ரகசியத்தை அறிந்துகொள்.

‘சுற்றுவழிப்பாதை’ என்ற ஒட்டுமொத்தப் படைப்பும் எனக்குக் கொடுக்கும் இந்தக் கணம் வரைக்கும் பயனுள்ள மாத்திரைகளாக இந்த மூன்று வாக்கியங்களையும் நான் பற்றியிருக்கிறேன். முதல் வாக்கியத்தில் என்னிடம் இல்லாதது எதுவும் இல்லை என்ற நிறைவு ஏற்படுகிறது.

பொருள் அல்லாததைப் பற்றுவதற்குக் கற்றுக்கொள் என்ற வாக்கியம் தான் புதிது. ஆனால், கலை இலக்கியத்தில் அழகில் சத்தியத்தில் சிவத்தில் எங்கோ தொடர்பைக் கொண்டவருக்கு மிகவும் நெருக்கமான வாக்கியம் தான் இது.

நீ இல்லாதபோது இருக்கும் ரகசியத்தை அறிந்துகொள் என்ற வாக்கியம் நிச்சயம் மனத்தால் புரிந்துகொள்ள முடியாதது. ஆனால் வேறு எதுவோ புரிந்துகொள்கிறது.

இந்த மூன்று வாக்கியங்கள் தான் ஆனந்த் தன் சுற்றுவழிப் பாதை வழியாக அடைந்த மகாவாக்கியங்கள் என்றும் நான் சொல்வேன். அவை புதியவையா, பழையவையா என்பதை விட இப்போதும் உபயோகமானவை என்பதால் அவை பொருளுடையவை.

000

சுற்றுவழிப்பாதை நாவலின் வேலையின் முக்கால்பகுதியில், ஆனந்திடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் இது நாவலா என்று கேட்டார்.

இது நாவலின் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அஷ்டாவக்கிர கீதையைப் போன்ற ஒரு சம்வாத வடிவத்தில் அமைந்த மெய்யியல் வழிகாட்டி நூல் இது என்று சொன்னேன்.

ஏன் இதை நாவல் என்று சொல்லக்கூடாது என்று கேட்டார்?

நாவலில் நாவலாசிரியன் தன் கைவிளக்கைத் தொலைத்து நிற்க வேண்டும். அவனே இருள்சூழ்ந்த நிலவறைகளில் அலையவேண்டும். ஆனால், சுற்றுவழிப் பாதையில் நாவலாசிரியன் ஒரு இடத்தில் கூட கைவிளக்கைத் தொலைக்கும் பகுதியே இல்லை என்றேன். நாவலில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், நடக்கும் பாதைகள், நிகழ்ச்சிகள் குறித்த ஒரு தெளிவு இருக்கிறது என்று சொன்னேன். அப்போது நான் படித்துக் கொண்டிருந்த கரமசோவ் சகோதரர்கள் படைப்பை உதாரணமும் காட்டினேன்.

ஆனந்தும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டார். 

மீளவே முடியாதென்று தோன்றும் இருள்கொண்ட மனத்தின் புதிர் அம்சங்கள் சூழ்ந்த உலகத்தை நீங்கள் எழுதமுடியும் என்று சொன்னேன்.

ஆமாம், என்னால் எழுதமுடியும் என்றார் ஆனந்த்.

அந்த நாவலை நீங்கள் எழுத வேண்டும்.  

ஆனந்த் சார், உங்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். 

மதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு

மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும் தான் ந . ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம் . தமிழ் , சமஸ்கிருதம் , ஆங்கிலக்...