ஷங்கர்ராமசுப்ரமணியன் வண்ணத்துப்பூச்சியும் கடலும் சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப்பூச்சி வேளை சரிய சிறகின் திசைமீறி காற்றும் புரண்டோட கரையோர மலர்களை நீத்து கடல் நோக்கிப் பறந்து நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஒய்ந்து அமர்ந்தது முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது - பிரமிள் இந்தக் கவிதையின் வரிகள் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருப்பவை. அந்தக் கவிதையின் கடைசி வரிகளான ‘முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது’ என்பதைத் தெரிந்துகொண்டே நண்பர்களிடம் ‘முதற்கணம் உவர்த்த சமுத்திரம் பின்னர் தேனாய் தித்திக்கிறது’ என்று என் கற்பனை சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் இடையில் ஒர...