கவிதைக்கும் உண்மைக்குமான தொடர்பில் பேசும்போது, கூடுமானவரை எதிர்நிலையில் ‘பொய்’ என்ற சொல்லைத் தவிர்க்கலாம் என்று கருதுகிறேன். உண்மை, உண்மை அல்லாதது என்ற அளவிலேயே பேசுவதற்கு முயற்சி செய்கிறேன். உண்மை, மெய்ப்பொருள் என்று பேசும்போதெல்லாம் அகிரா குரசோவாவின் ரஷோமான் படைப்பு ஞாபகத்துக்கு வராமல் போகாது. ஒரு கொலை நிகழ்ச்சி வேறு வேறு நபர்களின் பார்வையில் வேறு வேறு கதைகளாக மாறுகிறது ரஷோமானில். உண்மை என்ற ஒன்று சாத்தியமே இல்லை; அவரவர் அனுபவம், தன்னிலை, சார்பு, தன் அனுகூலத்தால் உண்மை மூடப்பட்டுள்ளது என்று நம்மைக் கைவிட்டுவிடும் நிலைக்கு அகிரா குரசோவா செல்கிறார். இறுதியில் கிட்டத்தட்ட உண்மைக்குப் பக்கத்தில் நெருங்கும் விறகுவெட்டி கதாபாத்திரம் தான், அநாதையாக விடப்பட்ட குழந்தையை எடுத்துச் செல்கிறான். அவரவர் சுயநலங்களால் மட்டுமே நிகழும் உலகில், அவரவர் சுயநலங்களால் பங்கப்பட்டு நிற்கிறது உண்மையும். இந்த அவநம்பிக்கை வாய்ந்த சூழலில்தான், உண்மை அல்லாததை உண்மையென்று உரைத்துக் கொண்டிருந்த அந்தக் கதாபாத்திரங்கள் மழைக்கு ஒதுங்கியிருந்த பாழ் மண்டபத்தில் தான், அநாதையாக விடப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. வி