தமிழ் நவீன இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். தன் வாழ்க்கையில் ஒரு நாவல்கூட எழுதியிராத போர்ஹெஸ், லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். சிறுகதைகளிலேயே நாவலுக்குரிய சம்பவங்களையும் சாத்தியங்களையும் கையாளக்கூடிய போர்ஹெஸ், நாவலின் அனுபவப் பிரம்மாண்டத்தையும் அதன் முடிவின்மையையும் உணரவைப்பதில் வல்லவர். மனிதர்கள் தம் எண்ணங்கள் வழியாகவும், கருத்துருவங்கள் வழியாகவும், கனவுகள் வழியாகவும் வாழும் பாகுபாடற்ற தனிப் பிரபஞ்சங்களை போர்ஹெஸின் புனைவுகளில் பார்க்கலாம். நன்மை, தீமை, மகிழ்ச்சி, துக்கம் முதலியவை அவர் உலகில் தற்செயல்களே. போர்ஹெஸ் ஒன்பது வயதில் ஆஸ்கர் வைல்டின் ‘தி ஹேப்பி பிரின்ஸ்’ படைப்பை மொழிபெயர்த்தவர்; 12 வயதில் ஷேக்ஸ்பியரின் அத்தனை படைப்புகளையும் ஸ்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் படித்துத் தேர்ந்தவர். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தந்தையின் வீட்டு நூலகம்தான் தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வு என்று போர்ஹெஸ் கூறுகிறார். அந்த நூலகத்திலுள்ள கலைக்களஞ்சியங்களையும் பிரிட்டிஷ், அமெரிக்க இலக்கியங்களையும் வாசித்து, உலகை அளந்த அனுபவம் கொண்டவர்.