ஷங்கர்ராமசுப்ரமணியன் அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கின்றன; ஒரு பொருள் இன்னொரு பொருளாகிறது; ஒரு உயிர் இன்னொரு உயிராக மயங்குகிறது; உயிர் உயிரற்றது என்று சொல்லப்படும் எல்லைகள் குழம்புகின்றன; பொழுதுகளும் பருவங்களும் மயங்குகின்றன; உரையாடலின்போது தனித்தனிச் சுயங்கள் கரைகின்றன. தமிழின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவரான நகுலன் இந்த உருமாற்றங்களையும் மயக்கத்தையும் ஒரு ‘சொரூப’ நிலையாகத் தன் கவிதைகளிலும் உரைநடையிலும் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறார். இயற்கையும் மனிதனும் வேறு வேறு என்று நவீன மனிதன் பாவிக்கிறான். ‘சுயம்’ என்றும் ‘தான்’ என்றும் தனித்து அவன் கொள்ளும் லட்சியங்களும் கனவுகளும் கனத்துச் சலிக்கின்றன. இதைத் தன் படைப்புகளில் தொடர்ந்து தெரியப்படுத்தியவர் நகுலன். தந்தை, அதிகாரி, கணவன், வியாபாரி, நிர்வாகி, ஆட்சியாளன் என லௌகீக வாழ்வில் தான் வகிக்கும் பாத்திரங்களையே திடமான சுயங்களாக வரித்துக்கொள்ளும் மனிதன், அவற்றாலேயே விழுங்கப்படுகிறான். இதை மனித உயிரின் தோல்வியாகப் பார்க்கிறார் நகுலன். இருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது எல்லாம் நகர்ந்துகொண்டு இருக்கின்றன. முந்தைய உருவை இல்ல