எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர் நித்ய சைதன்ய யதி. நல்ல அவியல் வைக்கத் தெரியாதவன் துறவியாக முடியாது என்ற கூற்று ஞாபகத்தில் இன்னமும் இருப்பது; நண்பர்களிடம் அதைத் தொடர்ந்து பகிர்கிறேன். அத்துடன் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல அவியலைச் சமைப்பதில் படிப்படியாக முன்னேறியும் வருகிறேன். நித்ய சைதன்ய யதியை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தும், ஓரிரண்டு முறை செய்த பலவீனமான முயற்சிகளுக்கப்பால், அதற்கான சூழல்கள் அமையவில்லை. பிரமிளும் யதியும் இப்படித்தான் தவறியது. நித்ய சைதன்ய யதி இறந்தபிறகு வேறேதோ சந்தர்ப்பத்தில் எனது திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சுயசரிதை நூலான Love and Blessings எனக்கு வந்து சேர்ந்தது. அந்த நூலில் அவர் தீட்டியிருந்த குழந்தைப் பருவத்தைப் பற்றிய காட்சிகள் தான் யதி என்னுடைய உலகத்தைச் சேர்ந்தவர் என்ற நெருக்கத்தை எனக்கு அளித்தது. குழந்தைப் பருவத்தை விவரிக்கும் வேளைகளில