என் வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக என் ப்ரவுனியையும் என்னையும் கொல்வதற்கு நுழைந்த பைத்தியத்தின் பூனையை நான் கொல்லவே முடியாதென்று இன்று தெரிந்துகொண்டேன். முதலில் ப்ரவுனி தான் வீணாகப் பயப்படுகிறதென்று நினைத்தேன். ஆனால் பூனைக்குத் திடமான ஒரு குறி இருக்கிறது. என் வீடிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நிழல்மறைவுகளில் அது நடமாடி, நான் இல்லாத வேளைகளில் என் வீட்டின் ஜன்னல் வழியாகத் தோன்றி என் ப்ரவுனியை அச்சுறுத்துகிறது. உருவம் தெரியாத அரவம் போல, என் பைத்தியத்தின் பூனை, ப்ரவுனிக்குத் தன் நகர்வை உரைத்துக் கொண்டே இருக்கிறது அந்த அரவம் கேட்டதும் ப்ரவுனி காற்றில் மூக்கைத் தூக்கி மூச்சிரைத்தபடி வீடெங்கும் சிதறி அலைகிறது. தனியாக இருக்கும்போது, உருவத்தைக் காண்பிக்காத எத்தனையோ வஸ்துக்கள் இப்போது, வீட்டுக்குள் சரசரக்கத் தொடங்குகின்றன. மாத்திரைகள் பூச்சிகளாகிவிடுகின்றன. விழும் பொருட்களை, நாணயங்களை தரை விழுங்கிவிடுகிறது. இரவு பத்து மணி தொடங்கி நான்கு மணிவரை பைத்தியப் பூனையின் அரவம் வீட்டைச் சுற்றி தீவிரகதி கொள்கிறது. ஆலிஸின் செஷயரைப் போல ஜன்னலில் ப்ரவுனிக்கு மட்டும் தோற்றம் காட்டி மறையும் பூனையை