Monday, 22 December 2014

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது
சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன்


எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது..

உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன..

ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய அறிவு ஏற்படுகிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றையும் எப்படி கட்டுப்படுத்தி, சமரசம் செய்து ஒரு ஒழுங்கை நிலைநிறுத்தப் பார்க்கிறது என்பதை தெரிந்துகொள்கிறான். 5 வயதிலிருந்து 21 வயது வரை ஒருவருக்கு முக்கியமான காலம்.

உங்கள் கவிதைகள் மரபுத்தமிழ் கவிதையின் ஓசையைத் துறக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

நான் ஒரு கோவிலுக்குப் பக்கத்தில் பிறந்துவளர்ந்தேன். அது வைஷ்ணவக் கோவில். அதற்குப் பக்கத்தில் சைவக் கோவில்.  அர்த்தம் விளங்குவதற்கு முன்பே  பாசுரங்கள், பிரபந்தங்கள் மற்றும் பதிகங்கள் அறிமுகமாகி விட்டன. அவைதான் என்னைக் கவிதையை நோக்கித் தூண்டின.

உங்கள் நோக்கில் புதுக்கவிதை நிலைபெற்ற கதையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..

1958-ல் க.நா.சுப்பிரமணியன், சரஸ்வதி இதழில் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது இருந்து வந்த திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கவிதைகளுக்கு மாற்றாக ஒரு கவிதை வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. பாரதிதாசனுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் இருந்த வேளை அது. அந்த வெற்றிடத்துக்குக் காரணம் பாடுபொருள் இல்லாமைதான். அது ஏற்கனவே நிர்ணயமாக இருந்தது. ஒன்று கட்சியைப் பற்றி எழுதவேண்டும். இல்லையெனில் பொதுவுடைமைக் கொள்கைகளை எழுதவேண்டும். இல்லையெனில் தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக்கவிதை எழுதவேண்டும். அப்போது கவிதைகள் கல்கி மற்றும் கலைமகளில் பண்டிகை நாட்களில் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் புதிய கவிதை எப்படி இருக்கவேண்டும் என்று எழுதினார். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றார். உரைநடையில் எழுதினால் தமிழ் புலவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து விடமுடியும் என்ற கருத்தை க.நா.சுவோடு சேர்ந்து பிச்சமூர்த்தியும் வைத்தார். 1959 ஜனவரி மாதம் எழுத்து இதழ் வெளிவருகிறது. அதில் புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்கள். பத்து பேரோ, நூறு பேரோ படித்தால் போதும் என்ற நிலையில்தான் இந்த இயக்கம் தொடங்கியது.

 நீங்கள் நடை பத்திரிகையில் எழுதத் தொடங்கிய போது, உங்கள் கவிதைகளை புதுக்கவிதை இல்லை என்று விமர்சனம் எழுந்ததே?

மரபை நான் புதுப்பிக்கிறேன் என்றும் மரபை நான் விடவில்லை என்றும் சொன்னார்கள். நகுலன் என்னை புதுக்கவிஞன் இல்லை என்று சொன்னார். சி.மணியும் சொன்னார். க.நா.சுவுக்கு என்னுடைய கவிதைகள் ஏற்புடையதாக இருந்தது. இவருக்கு இடைக்கால யாப்பே போதுமானதாக இருக்கிறது என்று சொன்னார். சுந்தர ராமசாமியிடமும் ஒரு உரசல் இருந்தது. அது ரொம்ப நாள் கழித்து சரியாய் போச்சு.

 நீங்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ‘கசடதபற’ பத்திரிகை தொடங்கியதற்கான நோக்கம் என்ன?

கவிதையை விடுதலை செய்வது. தமிழை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. அதில் தமிழை எங்கே நிறுத்தலாம் என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். சந்தியில் நிறுத்தாமல் இருந்தால் போதும் என்று சுஜாதா எழுதினார். பெரிய பத்திரிகைகளில் இருந்து கவிதைகளை விடுவித்து சுதந்திரமாக எழுதவேண்டும் என்று விரும்பினோம். மொழி, நாடு, மதம்,மக்கள் என்று பேதம் பார்க்காமல் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கும் கவிதைகளை எழுதவேண்டும் என்று நினைத்தோம். நான், ஆத்மாநாம், ஆர்.ராஜகோபாலன், ஆனந்த், தேவதச்சன் எல்லாரும் சேர்ந்து ஒரு இயக்கமாக ஆனோம். அப்போதுதான் புதுக்கவிஞர்களை தனிநபர் வாதிகள் என்று வானம்பாடிக் கவிஞர்கள் எங்களைத் திட்டத்தொடங்கினார்கள். இப்படி கசடதபற வழியாக நவீன இலக்கியத்திற்கான கால்கோள் விழா நடந்தது.

புதுக்கவிதைகளை நீங்கள் எழுதத் தொடங்கும்போது உங்களுக்கு இருந்த எண்ணங்கள் என்னவாக இருந்தது?

கவிதை என்பதன் அடிப்படையில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய கவிதைகள் நாம் எழுதவேண்டிய கவிதைகளுக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் தெளிவாக இருந்தது. பாரதியாரின் கவிதைகளையும் சேர்த்தே சொல்வேன். அவருடைய கவிதைகள் உயர்வானவை என்றே கருதுகிறேன். ஆனால் நான் பார்க்கும் உலகம் அவரிடம் இல்லை. பாரதியார் காலத்தில் பேருந்து இருந்தது. ரயில் இருந்தது. சினிமா அறிமுகம் ஆகிவிட்டது. ஆனால் யதார்த்த உலகம் அவரிடம் இல்லவே இல்லை. புதுக்கவிதை யதார்த்த உலகத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.  பாரதிதாசனிடம் இனரீதியான விருப்பு வெறுப்பு கருத்துகள் இருந்தன. கட்சி சார்பில்லாமல் மனிதனின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும் என்பது எனது கருத்து. அதைத்தான் நான் ஏற்பியல் என்று சொன்னேன். அழகியல் என்பதைவிட ஏற்பியல் என்பது அர்த்த நெருக்கம் கொண்டதாக இருக்கிறது. குரங்கில் அழகான குரங்கு கிடையாது என்பது நமது பார்வையாக இருக்கலாம். ஆனால் குரங்குகளுக்குள் அழகானது என்பது உண்டு. நமது சமூகம் பலவிதமாக பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினைகளை அதிகம் வலியுறுத்தாமல் ஒரு பொதுத்தன்மையைக் கவிதையில் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்.நீங்கள் உங்கள் இளம்பருவத்தில் தமிழரசுக் கழக ஆதரவாளராக இருந்தீர்கள்…அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்..

1952 ஆம் ஆண்டு எனக்கு 14 வயது. இலக்கணம் எல்லாம் தெரியாமலேயே கவிதைகள் எழுத தொடங்கிவிட்டேன். காவிரி தஞ்சை மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது என்று நம்பியிருந்தேன். எங்கள் ஊர் கோவில் கோபுரம் தான் உலகிலேயே பெரியது என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் ம.பொ.சி எங்கள் ஊருக்கு வந்தார். அவர் திராவிட இயக்கத்துக்கு எதிராகப் பேசினார். தமிழ்நாடு என்பது தனி, சுயநிர்ணயம் வேண்டும் என்றார். உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குத் தோள்கொடுப்போம் என்று பேசினார். அவரைத் தாக்கினார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இருந்தேன். அவர் மூலமாகத் தான் தமிழ்நாடு என்ற ஒன்று இருக்கிறது, அதற்கு எல்லைகள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவர் பேச்சு என்னைக் கவர்ந்தது. தமிழ் நாட்டில் தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று அவர் சொன்னது எனக்கு பிற்பாடு திருப்திகரமான விளக்கமாக இருந்தது. ஆரிய-திராவிடர் பிரச்சினை வரும்போது, பிராமணர் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னார்கள். அது எனது மனதை இரண்டுகூறாக உடைத்துப் போட்டது. நாம் நம்மைப் பற்றி ஒன்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனம் பிளவுபட்டு விடும். அந்த நிலையில் ம.பொ.சியின் வரையறை தான் எனக்கு ஆறுதலைத் தந்தது.

திராவிட அரசியல் தமிழ் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களை உங்கள் கவிதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்…அதற்காகவே அதிகம் அறியப்படவும் செய்கிறீர்கள்..

நான் திராவிட இயக்கத்தின் கருத்துகளை எதிர்த்து எழுதியதேயில்லை. மேடையில் ஒரு பேச்சாளன் பேசுகிறான். அவன் திமுகவாக இருக்கலாம், காங்கிரஸ்காரனாக இருக்கலாம், அவன் பொதுமனிதனின் பார்வையில் எப்படிப் படுகிறான் என்பதே எனது கவிதையின் கவலையாக உள்ளது. திராவிட இயக்கத்தின் தாக்கம் காரணமாக பிராமணப் பண்பாட்டிலேயே பல விஷயங்கள் கைவிடப்படுவதையும் நான் கவிதைகளில் எழுதியிருக்கிறேன். இவையெல்லாம் தனிமனிதனின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதன் மீது எனது கவிதைகள் கவனம் செலுத்துகின்றன. தனிப்பட்ட குடிமகனாக திராவிட இயக்கங்களால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் பெரிதாக விளையவில்லை என்பதே எனது கருத்து. அவர்களால் பண்பாடு போச்சு. மக்களிடத்தில் வேற்றுமை பெருகியது. ஆரியர்-திராவிடர் என்று சொல்லி மக்கள் அடையாளங்களைக் குழப்பினார்கள். பிராமணர்- பிராமணல்லாதார் என்று சொல்லி அதையும் குழப்பிவிட்டார்கள். பிராமணர் அல்லாத மேல்சாதியினர் மேடையில் இருந்தார்கள். கீழே இருந்து பேச்சைக் கேட்டவர்கள் எல்லாம் அடித்தட்டு சாதியினர். அவர்களுக்கு இவர்கள் பொழுதுபோக்கையே கொடுத்தார்கள். அவர்களது வாழ்க்கை மாறவில்லை. திராவிட அரசியல் கூட்டங்களில் பொழுதுபோக்கு மதிப்பைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. இட ஒதுக்கீடு போன்ற கொள்கைகளில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைமுறைப்படுத்தியிருக்கும்.

உங்கள் கவிதைகளில் மனிதன் குறையுள்ளவனாக இருக்கிறான். கடவுள் நடராஜர் மேஜை நடராஜராக குறும்வடிவம் எடுக்கிறார். கடவுள் ஓட்டை தேவனாராக வருகிறார்.. நவீன வாழ்வை உங்கள் கவிதைகள் குறைபாடுள்ளதாக, அபத்தமாகப் பார்க்கிறதா?

பல நூற்றாண்டுகளாக ஒரு பண்பாடு காக்கப்பட்டு வந்தது. இன்று நாம் பேசுகிறோம். ஆரியர்கள் ஆதிக்கம், இஸ்லாமியப் படையெடுப்பு, தலித்களின் அடிமைநிலை, பெண் அடிமைப் போக்கு என நாம் இன்று பேசும் எல்லாமே ஒரு நெடிய கால வரலாற்றை முன்னிறுத்திப் பேசுபவை. ஆனால் ஒரு முழுவாழ்க்கை உடைந்துபோய்விட்டது. தொட்டால் பால்திரியற மாதிரி எல்லாமே இடிந்துபோய்விட்டது. எனது கவிதைகள் இடிந்ததை, உடைந்ததைப் பேசுகின்றன. கீழ்வெண்மணியில் கொளுத்தப்பட்டதைப் பேசுகிறேன். மனிதன் பசியோடு இருக்கிறான். ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை மனிதன் அனுபவிக்கும் கஷ்டத்துக்கு முன்வினைப் பயன் என்ற நம்பிக்கையாவது இருந்தது. அதையும் அவனிடம் இருந்து பறித்துவிட்டோம்.  உனது துயரத்துக்கு  நீதான் பொறுப்பு என்று சொல்லிவிட்டோம். அப்போது இயற்கையாகவே மோதல் உருவாகிவிடுகிறது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மற்றவர்களைத் தாக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. திருப்பனந்தாள் மடத்தில் உ.வே.சா ஆசிரியராக இருந்தபோது தனியாகத்தான் சாப்பிட்டார். அதை அப்போது அனுமதித்தார்கள். இப்போது அது சாத்தியம் இல்லை.

மக்கள் போராடக்கூடாது என்கிறீர்களா?

 எதுக்கெடுத்தாலும் இன்று பிரச்சினைதான். இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளப் போராடுகிறோம். போராடினால் ஒரு வீரியம் வருகிறது. உலகம் எங்கும் உள்ள போராளிகள் சேர்ந்து  சேகுவேரா பனியனைப் போட்டுக் கொண்டால் நமக்கு ஒரு சந்தோஷம். ஆனால் அது எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதைத்தான் நான் விடுபட்ட நரிகள் கவிதையில் எழுதினேன். நிறைய மனிதர்கள் விடுபட்டுப் போய்விடுகிறார்கள். இடிபட்ட கோயிலின் கடவுளே என்று தாகூர் சொல்வார். கவிதையும் இடிந்துபோய்விட்டது. இடிபாட்டுக்கிடையில் இருப்பதுதான் எனது கவிதை என்று நினைக்கிறேன்.இன்றைய சமூகத்தில்  புதுக்கவிதைக்கான இடம் எது?

கவிதைக்கான இடம் இருக்கிறது. ஆனால் எங்கே இருக்கிறது என்று கேட்க க்கூடாது. இன்னும் கவிதை அபாயகரமான இடத்தில்தான் உள்ளது. புதுக்கவிதை படிப்பவர்களின் மனதை மாற்றுகிறது. மௌனி,  ந.முத்துசாமி, கோணங்கி, தமிழவன், பா.வெங்கடேசன், ஜெயமோகன் போன்றவர்களின் உரைநடையில் புதுக்கவிதையின் பாதிப்பை பார்க்க இயலும். புதிதாகச் சொல்வது, வித்தியாசமாகச் சொல்வது என்பதை புதுக்கவிதைதான் தொடர்ந்து சவாலாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

உலகக் கவிதைகளை தொடர்ந்து வாசிப்பவர் நீங்கள்… அந்த ரீதியில் இன்றைக்குள்ள தமிழ் புதுக்கவிதை எப்படியாக இருக்கிறது..

மற்ற நாடுகளில் எழுதப்படும் நல்ல கவிஞர்களோடு ஒப்பிட்டால் இங்கே பத்து, பதினைந்து பேரைச் சொல்லமுடியும். யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அய்யப்ப மாதவன், மாலதி மைத்ரி, பெருந்தேவி போன்றவர்கள் குறிப்பாக ஞாபகத்திற்கு வருகின்றனர். யவனிகா மற்றும் தேவேந்திர பூபதியிடம் இன்றைய கவிதைக்கான முன்வடிவம் கிடைக்கிறது. விகடன் போன்ற பத்திரிகைகளிலும் நல்ல கவிதைகள் கிடைக்கிறது.

உள்ளடக்க ரீதியில், சொல்லல் முறையில் என்னவிதமாக புதுக்கவிதை மேம்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 கவிதைகளில் சமயம் போய்விட்டது. உலகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவு பற்றிய பார்வை இல்லை. ஒரு பொருள் ஏகத்தன்மை உடையது அல்ல. அதில் இன்னொரு பொருளின் சாயலும் இருக்கும்.  உலகத்துக்கும் எனக்கும், எனக்கும் மிருகங்களுக்கும், எனக்கு பக்ஷிகளுக்கும் உள்ள பேதாபேதங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து பார்க்கவேண்டும். அஃறிணைப் பொருட்களைக் கூட நாம் நம்முடையது என்று சொல்கிறோம். இந்த உறவுகள் எப்படி வருகிறது. எனது குவளையை நீங்கள் எடுத்துச் சென்றுவிடலாம். எனது கையை எடுத்துச் செல்லமுடியாது. ஆனால் எனது குவளையை நீங்கள் உடைத்தால் எனது கையை உடைப்பது போல கத்துகிறேன். ஏன்? சமயம் என்பது கடவுளை வழிபடுவதைச் சொல்லவில்லை. தத்துவ விசாரங்கள் போய்விட்டது. கடவுள் வழிபாட்டை எதிர்த்தவுடன் தத்துவத்தையும் விட்டுவிட்டார்கள். ஆனால் அது தேவை.            

   


Monday, 1 December 2014

மிச்சம் உள்ள ஆவி


 ஷங்கர்ராமசுப்ரமணியன்
 திருநெல்வேலி
 டவுணில்
 சந்திப்பிள்ளையார் முக்கின்
 இடதுபுறம்
 உள்ளடங்கி இருக்கும்
 கல்லூர் பிள்ளைக் கடையில்
 பின்னரவில்
 பரிமாறப்படும்
 இட்லியை விள்ளும்போது
 ஆவி இப்போதும் வெளியேறுகிறது
 இட்லியில் ஆவியைப் பார்த்து
 ரொம்ப நாளாகி விட்டது
 ஆவிகள் என்று சொன்னால்
 அர்த்தம் விபரீதமாகி விடும்
 இருந்தும்
 திருநெல்வேலியின்
 ஆவி
 இட்லியில் மிச்சம் இருப்பதாகச்
 சொல்லிக் கொள்ளலாம். 

Tuesday, 4 November 2014

அந்த மனிதர்கள்ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஏன் அவர்கள்
ரயிலடிகளில்
பொதுக்கழிப்பறைகளில்
நடைபாதைகளில்
சாலைகளில் சுவர் மூலைகளில்
புகையிலை எச்சிலைத்
துப்பித் துப்பி
இந்த அழகிய மாநகரத்தை
அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

உங்கள் ஆசுவாசமான பயணத்தின்
நடுவில்
சிக்னல் முனையில்
காத்திருக்கும் போது
ஏன்
அவர்களின் குழந்தைகள்
கிடைக்கும் சிறு அவகாசத்தில்
அல்பப் பொருட்களின் பயன்பாட்டை
உங்களுக்குக் காட்டி
விற்று
யாசகம் கேட்டு
உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள்

அவர்கள் ஏன்
சாலையோரத்தில் உறங்கும்போது
காவல் நிலையத்தில்
மோதல்சாவுகளில்
செத்துத் தொலைக்கிறார்கள்

Saturday, 25 October 2014

நான் பார்க்க வேண்டும் ஷங்கர்ராமசுப்ரமணியன்

 
கழிமுகத்தில் தேங்கிநிற்கும்
கருப்பு நீர் ஆடியின்
மேல்
பறக்கும் பறவையின்
பிம்பத்தை
அது கரையைக் கடக்குமுன்
நான்
பார்க்க வேண்டும்

Friday, 24 October 2014

இப்போதெல்லாம் ஷங்கர்ராமசுப்ரமணியன் 
குற்றம் என்னும் காகத்தை
காமத்தைத் தன் பெயராகச் சூடிய புறாவை
வேங்கையை
மீனை
இப்போதெல்லாம்
காணவே முடியவில்லை

Wednesday, 15 October 2014

வேறு புறாக்கள் ஷங்கர்ராமசுப்ரமணியன்
பறக்கும் ரயில் நிலையத்தின்
தண்டவாள இடுக்கில்
நிற்கிறது
ஒரு புறா
ரயில் கடந்துசென்ற பிறகு
மெதுவாக 
தண்டவாளக் கட்டைகளிடையே
நடக்கிறது
முதுமையோ நோயோ
தெரியவில்லை
இனி அதனால் பறக்க இயலாது
ரயில் தண்டவாளத்தின்
கருத்த மசித்தடங்கள்
வழியாக
குறைவான வெளிச்சத்தில்
மெதுவாக நடக்கிறது
கழுத்தில்
கண்களில்
அலகில்
சிறகில்
எந்தத் துடிப்பும் இல்லை
இன்னும் சில தப்படிகள் தூரத்தில்
ஜன்னல்கள்
நிர்மலமான நீலவானம்
கடல் வெளிச்சம்
எல்லாம் இருக்கிறது
அவை இன்று வேறு புறாக்களால்
நிரப்பப்பட்டு விட்டன
இந்தப் புறா தன் வாழ்வில்
நோயைத் தவிர
வேறு எந்த ஒரு குற்றமும் இழைக்கவில்லை
ஆனாலும் அது
தன் வாழ்க்கையின்
மகத்தான குற்றமூலையில் நிற்கிறது
Friday, 10 October 2014

திருட்டுக் காக்கை ஷங்கர்ராமசுப்ரமணியன்


அந்தரத்தின் படிக்கட்டில்
ஏறி
என் வீட்டு சமையலறை
ஜன்னலுக்கு
சோறுண்ண வந்தது
ஒரு காகம்
அது
என்னைப் போல
ஒரு திருட்டுக் காகம்

Thursday, 9 October 2014

எறும்புகள்பாகிஸ்தானியக் கவிஞர் சைதுதீன்இந்த பூமியில் எத்தனை மைல்கள்
எறும்புகள் நடக்கின்றன
எத்தனை எறும்புகள் நம் பாதங்களின் கீழே
நசுக்கப்படுகின்றன
அவை எண்ணமுடியாதவை
ஆனால் நமது உடலின் மீது
எறும்புகள் ஊரும்போது
நம்மால் அவற்றை எண்ணமுடியும்
அவற்றின் பயணங்களைப் பற்றி
 ஓரளவு மதிப்பீட்டைச் செய்யமுடியும்

உங்கள் உடலிலிருந்து
ஒரு கடிக்கும் எறும்பை
எப்படி அகற்றுவீர்கள்
அதை ஒரு எறும்போ
அல்லது அதன் முறிந்த உறுப்புகளோ
சொல்வதற்கு முடியலாம்
எறும்புகளின் வீடுகள் பற்றி 
வேறு எதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது
அவை கதவுகளின் இடைவெளிகளில் வசிக்கின்றன
அல்லது சுவர் விரிசல்களில்
அல்லது இரவு முழுவதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.
ஆனால் அவை எங்கே கூடுகின்றன
என்பதையும்
ரகசியக் கூட்டங்களை நடத்தும் இடம் பற்றியும்
உங்களால் அறிய இயலாது.

ஆனால் நீங்கள் விரும்பும் தேன்
சர்க்கரை சீசா
அல்லது ஒரு இறைச்சித் துண்டு
அவற்றின் உணவு சேமிப்பாக மாறிவிடும்
எண்ணமுடியாத அளவில் அவை கூடிவிடும்
உங்களை எண்ணற்றத் துண்டுகளாக்கி
தங்களுக்குள் பிரித்துக்கொள்ளும்
அத்துடன்
கதவுகளின் இடைவெளிக்குள் இருக்கும் சிறுதுவாரங்களையும்
உங்களுக்குக் காண்பிக்கும்
அத்துடன் சுவர்களின் விரிசல்களையும்
அத்துடன்
அவை ரகசியமாய் சந்திப்புகளை நடத்தும்
மூலைகளையும் கூட.


(எழுத்தாளர்கள் நிர்மல் வர்மாவும் யு.ஆர்.அனந்தமூர்த்தியும் சேர்ந்து கொண்டு வந்த ‘யாத்ரா’ இதழில் வந்த கவிதை இது. இந்தப் பழைய இதழைக் கொடுத்த நண்பன் தர்மராஜனுக்கு நன்றி)

Monday, 29 September 2014

யவனிகா ஸ்ரீராம் நேர்காணல்

வர்க்கமும் வறுமையும் அழகியல்தானே

சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்தமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இது...

உங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்…

பாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர்.

இப்படியான சூழலில் நூலகத்தில் ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமையையும் பசுவய்யாவின் நடுநிசி நாய்களையும் எடுத்துப் படித்தேன். நான் முன்பு படித்த கவிதைகளைவிட இவை யதார்த்தமாகத் தோன்றியது. திராவிட இயக்கம், மார்க்சிய சார்புள்ளவனாக இருந்தாலும் அந்த இயக்கங்களைப் பகடி செய்து எழுதிய ஞானக்கூத்தனை எனக்குப் பிடித்திருந்தது. மேசை நடராசர், காலவழுவமைதி, அம்மாவின் பொய்கள், பாரதி, பாரதிதாசன், வானம்பாடிகளைத் தாண்டி வேறு ஒரு பரம்பரை கவிதைகளில் செயல்படுவதைத் தெரிந்துகொண்டேன். ஞானக்கூத்தனும், கலாப்ரியாவும்தான் எனது கவிதை உலகத்தைத் தூண்டியவர்கள். அத்துடன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெக்டின் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தன. ‘அதிகம் ரொட்டி சுடத் தெரிந்தவன் என்பதனால் என் பெயர் ஏன் சொல்லப்பட வேண்டும்’. அதிக ரொட்டிகளைச் சுடும் திறன் மீது அவனுக்குப் பெருமை இல்லை. அத்தனை ரொட்டிகளுக்குத் தேவை இருக்கிறது என்பதே அவனது அக்கறை. கவிஞனுக்குக் கவிதையும் ரொட்டியும் ஒன்றாகவே இருக்கிறது.


உங்களது கவிதைகளில் வரும், தமிழ் நவீன கவிதைக்கு மிகவும் புதுமையான நிலப்பரப்புகளை மொழிபெயர்ப்புகள் வழியாகத்தான் பெற்றீர்களா?

சிறுவயதிலிருந்து வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வெளியேற முயல்பவனாகவே இருந்திருக்கிறேன். வீடு என்பது  நான் இறக்கிறவரை இப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. குடும்பம் எல்லா ஆசாபாசங்களையும் தணிக்கை செய்யக்கூடிய இடம் என்று அறிந்துவிட்டேன். எனது கவிதைகளில் வீட்டைப் பற்றி நான் எழுதியதேயில்லை. அது எல்லாருக்கும் பொது அனுபவம்தான்.

பள்ளி இறுதி வகுப்பில் நான் தோல்வி அடைந்தவன். 15 வயதிலேயே நான் வணிகத்துக்குப் போகத் தொடங்கிவிட்டேன். காபிக்கொட்டை வியாபாரத்தில் ஈடுபட்டேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பன்றிமலையில் காபிக்கொட்டை மூட்டையைச் சுமந்து அலைந்திருக்கிறேன்.

பன்றி மலையின் இயற்கையோடு என்னை ஆழ்த்திக்கொண்டேன். மலையிலிருந்து மூட்டையை இறக்கி பேருந்து நிலையத்திற்கு குதிரைகளுடன் போகமுடியும். அங்குள்ள மரங்கள், பூச்சிகள், இலைகள் என இயற்கையோடு எனது மனம் இயல்பாக இணையத் தொடங்கியது. அதனால் எனது கவிதைகளில் வரும் நிலப்பரப்புகள் உள்ளேயும் இருக்கவே செய்கிறது. காபிக்கொட்டை வியாபாரம் பருவநிலை சார்ந்தது. ஆறுமாதம் தான் சீசன்.

மிச்ச நாட்களில் ஜவுளி வியாபாரம் பார்த்திருக்கிறேன். அரபிக்கடலோர கிராமங்கள் அத்தனையிலும் நான் சேலைகளை விற்றிருக்கிறேன். பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க எனது கால்தடங்கள் பதிந்திருக்கின்றன. வீட்டிலிருந்து வெளியேறும் ஆசையை நான் இப்படித்தான் தீர்த்துக் கொண்டேன். 

நெய்தல் நில வாழ்க்கை உங்கள் கவிதைகளில் இடம்பெற இந்த வாழ்க்கை துணைபுரிந்தது எனச் சொல்லலாமா

சாயங்காலத்தில் நான் கடலைப் பார்த்துக்கொண்டு கரையில் நின்றுகொண்டிருப்பேன். கடலை நெருக்கமாக உணர்ந்தது அப்போதுதான். இரவில் நானும் கடலும் தனியாக இருக்கும் நிலைகளை அனுபவித்திருக்கிறேன். இருட்டில் கடல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும். காட்சியில் அறுபட்ட கடலின் சத்தத்தை மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பேன். கடல் சார்ந்த மெல்லுடலிகள், மீனவர்களின் வாழ்க்கை எல்லாம் என் மனதில் அந்த வயதிலேயே தோய்ந்துவிட்டன. கைத்தொழிலிலிருந்து அந்நியப்படாத கடல்சார் வாழ்க்கை இன்னும் எனக்கு வசீகரமாகவே இருக்கிறது. ஒரு நாடோடியாக இருந்த எனக்கு இயல்பாகவே மார்க்சிய தத்துவ அறிமுகமும் ஏற்பட்டு விட்டது. எல்லாவற்றையும் வர்க்கச்சார்புடனேயே பார்க்கக் கற்றுக்கொண்டேன்.


மார்க்சியம் ஒரு தர்க்கச் சட்டகத்தோடு தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. ஆனால் கவிதை தர்க்கத்தை மீற முனையும் அறிதல் முறை இல்லையா?

கவிதை வழியாக தீவிரமான அரசியலைப் பேசும்போது அழகியல் பிரச்சினைகளும் வரவே செய்கின்றன. ஆனால் வறுமையும், வர்க்கமும் அழகியல்தானே. அழகியலையும், பாலியலையும் ஏதோ ஒருவகையில் எல்லா வகையான துன்பத்துக்கும் இடையிலும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பரவச நிலையில் இருப்பதை விரும்புகிறார்கள்.

இந்தியா முழுவீச்சுடன் தாராளமயத்திற்குத் தயாராவதற்கு முன்பே நீங்கள் வியாபாரத்துக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டீர்கள் அல்லவா?

80-களின் இறுதியில்தான் சிங்கப்பூர் போகத் தொடங்கினேன். பத்துக்கும் மேற்பட்ட தடவை போயிருக்கிறேன். சிங்கப்பூர் ஏற்கனவே திறந்த சந்தையாக மாறிவிட்டது. சீனா மற்றும் ஜப்பானியர்களின் மூலதனம் அங்குள்ள சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய நெருக்கடிகள் பெரும் வலியைக் கொடுப்பதாக இருந்தன. குடும்ப உறவுகளில் பெரும் திரிபுகள் தொடங்கிய காலம் அது. பாலியலே சந்தைமயமாகி விட்ட சூழல் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அநாதைகளாக, பைத்தியங்களாக நகரில் அலையும் சீனர்களைப் பார்த்தேன்.  அங்கு நான் பார்த்த வாழ்க்கைமுறை, பெரும் கட்டுமானங்கள், நகர்மயமாதல், கிராமங்களிலிருந்து பெருந்த எண்ணிக்கையில் புலம்பெயர்தல் காட்சிகள் சீக்கிரத்தில் இந்தியாவிலும் நடக்க இருக்கும் மாற்றத்தை எனக்குத் தெரிவித்தது.

மனிதகுல வரலாற்றிலேயே 20-ம் நூற்றாண்டை அதிகபட்சமான மாற்றங்கள் நடந்த காலகட்டமாகப் பார்க்கலாம். இந்த மாற்றங்கள் சார்ந்த துயரத்தைப் பாடும் நாடோடிப் பாடல்கள் என்று உங்கள் கவிதையைச் சொல்லலாமா?

பொருள்வயமான தட்டுப்பாடு என்பது  ஒருவகையான ஆன்மிகரீதியான வறுமை என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் கலாசார ரீதியாக சுதந்திரமாக இருக்கத்தான் மனிதன் விரும்புகிறான். ஆனால் கலாசார ரீதியாக அவனுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அவனது மனமோ கட்டற்ற சுதந்திரத்தை விரும்புகிறது. எல்லா இயல்பூக்கங்களையும் காயடிக்கும் அமைப்பைச் சமூகம் என்ற பெயரில் வைத்திருக்கிறோம். அடிப்படை உணர்வுகளை ஒடுக்கும் அமைப்பில் நாம் வாழ்கிறோம். சமூகம், அரசு போன்ற நிறுவனங்கள் உயிரற்ற தன் உட்கட்டமைப்பைக் காப்பாற்றுவதற்காக உயிருள்ள மனிதர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துகிறது. அந்த துயரத்தைத் தான் என் கவிதைகளில் பேசுகிறேன். 

இந்தியா போன்ற நாடுகளில் உலகமயமாக்கல் ஏற்படுத்தும் தனித்துவமான தாக்கம் என்றால் எதைச் சொல்வீர்கள்?


இந்தியாவைப் பொறுத்தவரை சாதியத்துக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் இறுக்கமானவை . இந்தியா திறந்த சந்தையான பிறகு அதிகமாகக் கிடைக்கும் பொருளாதாரத்திற்காக மக்களிடம் நுகர்வுத் தன்மையை மட்டும் அதிகரித்துவிட்டது. இந்தக் கட்டுமீறிய நுகர்வுக்காக  அடித்தள மக்களை வெறுமனே நுகர்வோர் ஆக்கும் சூழல் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிறது.  தாராளவாதச் சந்தை அதிகம் வாங்கும் திறனற்ற மக்களின் முன்பாகவே திறந்துவிட்டிருக்கிறது. ஒரே சாதியைச் சேர்ந்தவர்களில் வர்க்கரீதியாகப் பெரும்பகுதி பேர் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பத்து சதவீதம் பேர் மகா கோடீஸ்வரராகும் நிலைமை இங்கே உள்ளது. இங்கே நிலபிரபுத்துவத் தன்மை தொடர்ந்துகொண்டே இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இந்திய சட்டங்கள் மனிதனை மட்டுமே ஒடுக்குகின்றன. மூலதனத்திற்கு திறந்த கதவுகள் மனிதர்களுக்கு மட்டும் சிறைக்கதவுகளா? இங்கே பொருளாதார தாராளவாதம் மட்டுமே இருக்கிறது, கலாசார தாராளவாதம் இல்லை. மையப்படுத்தப்பட்ட ஆதிக்கக் கருத்துநிலையிலிருந்து நமது மார்க்சியர்கள்கூடத் தப்பவில்லை.

தேசிய விடுதலை போன்ற சூழல்களில் தான் பாரதி, நெரூதா போன்ற மகாகவிகள் உருவானார்கள்.  லட்சியவாதமே கேலியாகப் பார்க்கப்படும் காலகட்டத்தில் கவிஞனின் வேலை என்னவென்று பார்க்கிறீர்கள்?

ஒரு தேசத்திற்கான ஒருங்கிணைவுக்காக, எல்லா தேசிய அரசாங்கங்களுக்கும் தேசியக் கவிஞர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். பாரதி போன்றவர்கள் அதற்கு உதவியிருக்கிறார்கள். அவர்களை இன்றைய கவிஞர்கள் நிராகரிக்கவே வேண்டும். எந்த விதமான ஒருங்கிணைப்புக்கும் நான் எதிரியாகவே இருக்கிறேன். டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பையும் என்னால் உணரமுடியவில்லை. மொழியா, நீளமா, தூரமா, முகங்களா என்று என்னால் சொல்ல முடியவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசியக் கவிகள் சொல்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் வடவேங்கடம் முதல் தென்குமரி என்று நில அமைப்புசார்ந்து ஒரு தேசியத்தை வரையறுக்கிறார்கள். இந்த வரையறைக்குள் வராத பழங்குடிகள்,  மொழிச் சிறுபான்மையினர், உதிரிகள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என எத்தனையோ மற்றமைகள் தேசியத்துக்குள் வராமல் இருக்கின்றன.

உலகம் ஒற்றைக் கிராமமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கவிஞனாக அதை நான் பன்முகத்தன்மை கொண்ட கிராமமாக மாற்றுவேன். அங்கே ஒரே உலகம் இல்லை. நூற்றுக்கணக்கான உலகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வேன்.

90-களுக்குப் பிறகு எழுதப்பட்ட தமிழ் புனைவுகள், கவிதைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லுங்கள்?

 
பன்னாட்டு மூலதனத்தின் கீழே இந்தியா வேகமாக வருகிறது. வாழ்க்கையின் சகல பிரிவுகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீனத்துவத்தின் கோளாறுகள் தெரியத் தொடங்குகின்றன. பொது மனசாட்சியை பாவனை செய்த நடுத்தர வர்க்கமும் அந்த பாவனையையும் தவறவிட நேர்கிறது. நடுநிலைமை என்றே எதுவும் கிடையாது. என்றாகிறது.

மற்றவர்கள், மற்ற சமூகங்கள் மீது கரிசனம் காட்டிய படைப்புகள் வரத்தொடங்குகின்றன. பன்மைத்துவம் கொண்ட வாழ்க்கை மற்றும் சமூகப்பின்னணிகளிலிருந்து எழுத்துகள் பெரும் உடைப்பை ஏற்படுத்தின. பெண் கவிஞர்கள் எழுதவந்தார்கள். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் ஆகிய கோட்பாடுகள் பரவலாவதற்கு இந்தப் படைப்புகள் உதவிபுரிந்திருக்கின்றன. லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீநேசன், பாலை நிலவன், பிரான்சிஸ் கிருபா, கரிகாலன் உள்ளிட்ட பத்துப் படைப்பாளிகளைப் பிரதானமாகச் சொல்வேன்.

 உங்களைப் பொறுத்தவரை பாரதி முதல் எழுத்து மரபுக் கவிதைகளை சுமையாகவே பார்க்கிறீர்கள்...


நவீன கவிதையைப் பொறுத்தவரை, 90க்கு முன்பான கவிதையாக்கத்தையும், அதற்குப் பிறகான கவிதையாக்கத்தையும் இரண்டு  பிரிவுகளாகப் பார்க்க வேண்டும். பாரதியில் தொடங்கி மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, பிரமீள், பசுவய்யா, நகுலன், சி.மணி ஆகியோர் அகரீதியான விசாரணைத் தன்மையில் கவிதைகளை எழுதினார்கள். ஆனால் புற உலகம் தொடர்பான விவரங்கள் அவற்றில் மிகவும் சொற்பமாகவே இருந்தன. தனிச்சுற்றுக்காக எழுதப்பட்ட, குழுக்குறியாகவே அவர்களின் படைப்பாக்கம் இருந்தது என்று கருதுகிறேன். ஒருவிதமான லட்சிய நிலையில் எழுதப்பட்ட கவிதைகளாக இருந்தன. மேல்தட்டு வர்க்கத்தினரின் உயர்தொழில்நுட்ப ஆன்மிகம் என்றே அந்தக் கவிதைகளைச் சொல்லமுடியும். அவற்றுக்கு ஒரு பொதுத்தன்மையும் உண்டு. அதை இந்தியத் தன்மை என்றும் சொல்லலாம். புறவாழ்க்கை சித்திரங்கள், மற்றவர்கள், மற்ற சமூக குழுக்களின் அனுபவங்கள் எதுவும் அவற்றில் பதிவாகவேயில்லை. 
ஞானக்கூத்தன், ஆத்மாநாம் வரை அந்த அம்சம் தொடர்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, பெட்ரண்ட் ரஸல் ஆகியோரின் தாக்கமும் இந்திய அனுபூதிவாதமும் சேர்ந்து தொழிற்பட்ட கவிதைகள் அவை. இந்தப் போக்கில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியவர் கலாப்ரியாதான். அவரது மொழியில் ஒரு  ஆதிமனிதத் தன்மையும், வன்முறையும் இருந்தது. மனதிலிருந்து உடலைப் பிரித்துப் பார்க்கும் தீவிரம் இருந்தது. அலங்காரம் அற்ற சொற்களில் அவர் தனது கவிதைகளை உருவாக்கினார். 


 ஆறுமுகா காபி ஒர்க்ஸ்

 யவனிகா ஸ்ரீராம்

 

எனது தேசம் விடுதலையின் கனவுகளில்
இருந்தபோது பிறந்தவன் நான்
அப்போது ஒரு சந்நியாசி கைத்தடியுடன்
கிழக்கும் மேற்குமாய் சத்தமிட்டபடி அலைந்து கொண்டிருந்தார்
வெகுகாலம் முன்பாக கப்பலில் வந்தவர்கள்
சுருட்டிக் கொண்டதுபோக ஒருநாள் நள்ளிரவில்
நைச்சியமாய் கைகுலுக்கி விடைபெற்றார்கள்
மக்கள் பெருமூச்சு விட்டபடி விவசாய நிலங்களுக்கு
நீர்நிலைகளுக்கு கிராமச் சாலைகளுக்குத் திரும்பினார்கள்
நான் காப்பிக் கொட்டைகளை சீராக வறுக்கும்
ஒரு இயந்திரத்திற்கு உரிமையாளனானேன்
எனது நண்பன் உள்ளூர் கைநூற்புகளை நெய்யும்
தறியில் நெசவாளியாக அமர்ந்தான்
சிலரோ எப்போதும்போல் கழிவறைகளைத் தூய்மை செய்தனர்
கோவில்களில் மங்கல விளக்குகளும்
ஆலயங்களில் மெழுகின் தீபமும்
மசூதிகளில் பாங்கும் இழைய
எனது தேசம் அணைகளில் பாய்ந்து
ஆலைகளில் உயிர் பெறத் துவங்கியது
ஒருநாள் வியாபாரி ஒருவன் உரம் கொண்டுவந்தான்
வேறொருவன் புதிய விதையொன்றைக் கண்டுபிடித்தான்
அதை விற்க ஒருவன் ஆங்காங்கே கடை திறந்தான்
கடைபெருகி வீதியாகி வீடுள்ள தெருவெல்லாம்
விறுவிறுவென சந்தைக் காடானது
இந்த ஏராளச் சந்தைக்கு யார்யாரோ
தாராளமாய்க் கடன் கொடுத்தார்கள்
இப்படித்தான் நண்பர்களே என் இயந்திரம்
என் கையைவிட்டுப் போனது
என் நெசவாளி நண்பனும் நேற்றுத்தான் செத்தான்
விடுதலைக்குப் பிறகு இப்போது என்னிடம்
மனைவியோடு ஒரு வாடகை வீடு
காப்பி வறுவலைச் சோதிக்கும் ஒரு மாதிரிக் கரண்டி
பவுடர் நிறைக்கும் பட்டர் பைகள் மற்றும்
கல்லாப்பெட்டியும் கொஞ்சம் கடனும் இருக்கின்றன
புகை படர்ந்த ஒரு காந்தியின் படத்தோடு.

Monday, 8 September 2014

எங்கும் மௌனம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்


எங்கும் குளிர்
கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக
இந்த விடியல் இருக்கிறது
உறக்கத்திற்கும் விழிப்பிற்கும்
இடையில்
வீடுகள் சோம்பல் முறிக்கின்றன
நடுவயதுக்காரர்களின் காலைநடை ஓசைகள்
குழந்தைகளைக் குளியலறைக்கு விரைவுபடுத்தும்
அம்மாக்களின் வசைகளைத் தவிர
காற்றில் வேறு எந்த மாசும்
கலக்காத புனிதவேளை அது
மாடிப்படிகள்
இலைகள்
பாத்திரங்கள்
நமது செயல்கள்
மீது இன்னும் இருட்டும் மௌனமும்
சூழ்ந்திருக்கிறது
முதியவர்கள் மட்டும்
நுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக
பால்கனிகளில் காத்திருக்கின்றனர்.


Monday, 1 September 2014

தற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார இந்திரஜித் நேர்காணல்

  சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்

தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். 1980-களில் எழுதத் தொடங்கிய இவரின் கதைகள் அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகளின் மர்மங்கள் மீது கவனம் குவிப்பவை. அலையும் சிறகுகள், மாபெரும் சூதாட்டம், நடன மங்கை உள்ளிட்ட ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் மதுரையில் வசித்துவருகிறார். தி இந்து கலை-இலக்கியம் பகுதியில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது...உங்களைப் பாதித்த முதல் கதை எது? ஞாபகம் உள்ளதா?

அப்பா என் சின்ன வயதிலேயே தவறிவிடுகிறார். அண்ணாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அவர் கூட தான் நானும் எங்கள் அம்மாவும் இருந்தோம். அண்ணி வழியாகத் தான் கதைகள் எனக்கு அறிமுகமானது. அண்ணி தான் படித்த கதைகளை நாங்கள் சாப்பிடும்போது சொல்வார்கள். ஜெயகாந்தனது பொம்மை கதையை அப்படித்தான் கேட்டோம். அந்தக் கதையில் ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை, ஒரு ஏழை வீட்டுக் குழந்தை பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறார்கள். பணக்காரக் குழந்தைக்கு சொந்தமாக பொம்மை இருக்கிறது. அதை வைத்து விளையாடுகிறது. ஏழைக்குழந்தைக்கு பொம்மை இல்லை. அது அந்தக் குழந்தைக்கு ஏக்கமாக இருக்கிறது.  ஏழைக்குழந்தைக்கு ஒரு குட்டித்தங்கை இருக்கிறாள். ஒரு நாள் தங்கச்சிப் பாப்பாவை விட்டுவிட்டு அம்மா,அப்பா  வெளியே போறாங்க. அந்தக் குழந்தை, தன்னோட தங்கச்சிப் பாப்பாவை பொம்மை மாதிரி பாவித்து குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணத் தொடங்குது. அம்மா, அப்பா வருவதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. இந்தக் கதையை கேட்டபோது எனக்கு எட்டு வயசு இருக்கலாம். அந்தக் கதைக்குப் பிறகு ஜெயகாந்தன் என் மனதில் பதிந்துபோனார்.
தினசரி சாயங்காலம் பொழுது இருட்டும் வேளையில் என் அண்ணி வீட்டின் நடுவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து லைப்ரரியில் இருந்து கொண்டுவந்த நாவலைப் படிப்பாங்க. நான், அண்ணன், அம்மா எல்லாரும் சுத்தி உட்கார்ந்து கேட்போம். இன்னும் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை.

ஜெயகாந்தன் வழியாகத்தான் ஒரு காலகட்டத்தில் தீவிரமான வாசிப்புக்கு இளைஞர்கள் நுழைகிறார்கள் இல்லையா?

கல்லூரியில் படித்தபோது, ஜெயகாந்தன் குமுதத்தில் ஒரு பக்கத் தொடர் ஒன்று எழுதினார். அதன் பெயர் ‘நினைத்துப் பார்க்கிறேன்’. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புதுமையான கோணத்தில் அவர் எழுதியதாகப்பட்டது. ஜெயகாந்தன் வழியாகத்தான் புதுமைப்பித்தன், மௌனி எல்லாருடைய பெயரும் எனக்குத் தெரியத்தொடங்கியது.80-களின் இறுதியில் எழுத வந்தவர் நீங்கள்..அப்போது வந்த கதைகள் மற்றும் சமூகச்சூழல் பற்றி சொல்லுங்கள்?

 ஒரு தனிமனிதன் அல்லது இளைஞன் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கிற நிலையைத்தான் அக்காலகட்டத்தில் வந்த சிறுகதைகள் பிரதிபலித்தன. கணையாழி, கசடதபற பத்திரிகைகளில் இப்படியாக எழுதப்பட்ட பல கதைகளைப் பார்க்கலாம். பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் அந்நியன் நாவல் இந்த போக்குக்கு கூடுதல் வலுசேர்த்தது. அந்நியமாகும் மனிதனின் தத்தளிப்புகள் தான் எங்கள் கதை உலகமாக இருந்தது. சுகுமாரனின் கவிதைகளை அந்நியமாதல் காலகட்டத்தின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம். அடுத்து தமிழ் சூழலுக்கு அறிமுகமான லத்தீன் அமெரிக்க கதைகள் தனிப்பட்ட அளவில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. கதை மையமற்று இருக்கலாம், மறைந்து இருக்கலாம், கதையற்ற வரலாற்று எழுத்து மாதிரி எழுதலாம். இந்த முரட்டுக்குதிரை மீது சவாரி செய்வதற்கான உத்வேகம் வந்துச்சு. அதுதான் எனது இரண்டாவது தொகுப்பான மறைந்து திரியும் கிழவன் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாத்திலேயும் அந்தப் புதுமையின் தாக்கத்தைப் பார்க்கலாம்.

இந்திய வரலாறு என்ற நேஷனல் புக் டிரஸ்ட் போட்ட புத்தகத்தில் விடுதலைக்காகப் போராடிய தீவிரவாதிகள் பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. வங்காளத்தைச் சேர்ந்த குதிராம் போஸ், 64 நாள் உண்ணாவிரதம் இருந்த ஜதின்தாஸ், சிட்டகாங் ராணுவப் பாசறையைச் சேர்ந்த சூர்யா சென். இவங்களைப் பற்றி படித்த விஷயங்கள் புதிதாக இருக்குது. குதிராம் போஸோட வயதைப் பார்த்தீங்கன்னா அவன் மைனர். இந்த விஷயங்களை கதையாக எழுதிப்பார்க்கலாம்னு தோணுது. மறைந்து திரியும் கிழவன் கதையில் நேதாஜி காலகட்டத்தைச் சேர்ந்த ஒருவன் நிகழ்காலத்தில் வருவான். ஆனால் அவனோட நினைவுகள் அந்தக் காலகட்டத்திலேயே உறைந்திருக்கிறது. அவன் மூலமாக ஒரு காலகட்டத்தின் கதையை அதில் சொல்கிறேன். அவனது கதையை அப்படியே திரும்ப எழுதமுடியாது. அதற்கு ஒரு மர்மப்பின்னணியைக் கொடுக்கவேண்டும். அதுதான் மறைந்து திரியும் கிழவன்.

 தமிழகத்தின் யதார்த்தம் உங்கள் கதைகளில் மூட்டமாக வருகிறது…பீகாரும் ஜாக்குலினும் கதையில் ஒரு கோவில் நகரில் உள்ள கடையில் காந்தியின் படமும் ஸ்டாலின் படமும் மாட்டப்பட்டுள்ளது…

 அரசு, அதிகாரம், மதம், சாதி, நமது மக்களுக்கு இருக்கும் சினிமா மாயை, அதனுடன் தொடர்புடைய அரசியல், அன்றாட யதார்த்தத்தில் மனிதர்களின் பாவனைகள் இவற்றுக்கு இடையிலான உறவுகளை, அபத்தங்களை ஒரு கதையின் பாவனையில்  கட்டவிழ்த்துப் பார்க்கும் விதமாக அப்போது என் கதைகளை எழுதினேன். கதையின் பாவனையில் ஒரு விமர்சனம் உள்ளே இருக்கும்.  

2000-க்கு அப்பால் வேறுவிதமான கதைகள் எழுத தொடங்குகிறீர்கள் இல்லையா…சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் வலுப்பெற்ற பகுத்தறிவு இயக்கம், திராவிட அரசியல் சமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் உங்கள் கதைகளில் கோட்டுச்சித்திரங்களாக வருகின்றன…

 இப்போது மறைந்து திரியும் கிழவன் பாணியிலான கதைகளை எழுதமுடியாது. 2000-க்குப் பிறகு முழுமையாக கதை சொல்லத் தொடங்கினேன். அது எனக்குத் திகைப்பாகவும் இருந்தது. வாசகர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற தயக்கமும் இருந்தது. கதையை மறைத்து எழுதிய நான் புனைவையும் யதார்த்த சம்பவங்களையும் சேர்த்து வெளிப்படையாக கதை சொல்ல ஆரம்பித்தேன்.
நான் சமீபத்தில் எழுதிய நடன மங்கை கதையில் பெரியார் மேல் அபிப்ராயம் உள்ள ஒரு கிழவர் வருவார். இன்னொரு கதையில் பெரியாரே கதாபாத்திரமாக வருவார்.
 எனக்கு மதப்பிடிப்பு இல்லை. கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் பிறந்த ராமேஸ்வரம் என்பதால் மதம் சார்ந்து நடக்கும் அத்தனை வியாபாரத்தையும் பார்த்திருப்பதால் இவையெல்லாம் போலியானது என்ற எண்ணம் பாலிய வயதிலேயே ஏற்பட்டு விட்டது. பெரியார் எழுத்துகளும் அதற்குக் காரணம்.

ஆனால் மதம், சம்பிரதாயங்கள் ஒருவனின் நனவிலியில் ஆதிக்கம் செலுத்தவே செய்கின்றன. அது இயற்கையாக நம்மிடம் பதிந்திருக்கிறது. எனது கதை ஒன்றில் ஒரு கதாபாத்திரம் காபரே பார்க்கப் போகிறான். நடனமாடும் பெண் சிலுவை அணிந்திருக்கிறாள். அது அவனை தொந்தரவு செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் புராண சினிமாவில் சாமி முன்னால் கவர்ச்சி நடனம் நடப்பதை ஒரு இந்துமனம் அதிர்ச்சியாக எடுத்துக் கொள்வதில்லை. சிலுவை என்ற குறியீடு மேல் இந்து மனம் ஒன்றுக்கும் ஒரு மதிப்பீடு இருக்கிறது.

தமிழகத்தில் உருவான சமூகநீதி அரசியலால் பிராமணர்கள் பாதிக்கப்பட்டதான சித்திரம் உங்களது சமீபத்திய கதைகளில் உள்ளதே..

செல்வாக்கோடு இருந்தவர்களுடைய சரிவு என்பது துயரகரமானது. அந்தஸ்தில் இருந்தவர்கள் கீழே விழும்போது உருவாகும் சங்கடத்தை ஒரு எழுத்தாளன் எழுதக்கூடாது என்று சொல்லமுடியாது. எனது கதையில் அப்படியான துயருறும் கதாபாத்திரங்களாக பிராமணர்களும் இருக்கிறார்கள். எனது குறிப்பிட்ட கதையில் திராவிட இயக்கத்தவர் ஒருவர், வீழ்ந்த பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மேல் அனுதாபப்படுகிறார். உண்மையிலேயே ஒரு மனிதனுக்கு, கலைஞனுக்குத் தேவையான அம்சம் அது. இட ஒதுக்கீடு குறித்த விமர்சனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

உங்கள் கதைகளில் பெண்கள் அழகும், பயங்கரமுமாகத் தோற்றம் கொள்கிறார்கள்…

பெண்கள் ஆண்களின் மனசைத் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன்தான் பார்த்து அலைக்கழிகிறான். அவர்கள் தன்போக்கில்தான் இருக்கிறார்கள். அதுக்கு அடிப்படையான காரணம் பெண்ணின் வசீகரம்.  மனித மனத்திற்கு பிறன்மனை சார்ந்து வசீகரம் இருந்துகொண்டே இருக்கிறது. இதெல்லாம் சேர்ந்து தான் சமூகமும், மனித உறவுகளும் இயங்குகின்றன. தனிப்பட்ட வகையில் பேசினால், நான் காலை நடைப்பயிற்சி போகும்போது, எனக்கு முன்னால் ஒரு பெண் போனால் நான் அதிகநேரம் நடப்பேன். அவள் எட்டு சுற்று வந்தால் நானும் சலிக்காமல் நடப்பேன். பெண் ஒருவகையில் ஆணுக்கு தூண்டுதலைக் கொடுப்பவளாக இருக்கிறாள். அங்கே உறவு கிடையாது. எனது கதைகளில் பெண்கள் வசீகரமாகவும், அதனாலேயே பயங்கரமாகவும் இருக்கிறாள்.

லா.ச.ரா மாதிரி பெண்ணை வழிபாட்டுருவமாகப் பார்க்கிறீர்களா?

ஆராதனைக்குரியதாகப் பார்க்கவில்லை. அன்புக்குரியது, மோகத்துக்குரியது, ஆற்றலுக்குரியது. அப்படி வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். பக்தி என்கிற ஸ்தானம் இல்லை. கோவிலில் பார்க்கும்போதும், திருமண வீடுகளில் பார்க்கும்போதும் பெண்கள் அழகாகத் தெரிகிறார்கள். அவர்கள் முகம் சுடர்விடும். அது யதார்த்தம். அதற்குக் காரணம் தெரியவில்லை.

சென்ற நூற்றாண்டில் சிறுகதை வடிவம் தமிழில் சாதனை கண்டது..90-கள் வரைக்கும் வளமான சிறுகதை மரபு இருக்கிறது…அந்தப் பின்னணியில் சிறுகதையின் வடிவம், உள்ளடக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்…?

சமீபத்திய பத்து வருடங்களில் சிறுகதையில் பெரிய தேக்கம் இருப்பதாகத் தோன்றியது. சமீபத்தில் உருவான நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் எனில் ஜே.பி.சாணக்யா, எஸ்.செந்தில்குமார் போன்றவர்களைச் சொல்வேன். சமகால எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மொழியிலேயே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். விஷயம் சிக்கலாக இருக்கலாம். ஆனால் மொழிவெளிப்பாட்டிலேயே சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்கள் எல்லாரும் எழுதும் கதைகள் பூடகமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். கதாபாத்திரமும், சம்பவங்களும் துலக்கமாக இருப்பதில்லை. புறவாழ்க்கையின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் கதையைத் துலக்கமாகவும், யதார்த்தமாகவும் சித்தரித்தார்கள் எனில் அந்தக் கதைகள் பிழைக்காமல் கூட போய்விடக் கூடிய அபாயம் இருக்கிறது. 
நவீனத்துவ காலகட்டம் முடிந்த நிலையில் நாம் இருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் சிறுகதைகள் கிளாசிக்கலான வடிவத்தை நோக்கி மீண்டும் போகவேண்டும் என்று நினைக்கிறேன்.

சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள் கதையை கிளாசிக்கல் கதை என்று சொல்வேன். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை அதற்கு உதாரணம்.

இன்றைய சிறுகதை எழுத்தாளனுக்கு உள்ளடக்கம் சார்ந்த சவால்கள் என்னவாக இருக்கின்றன?

சில சமூக மதிப்பீடுகள் நிலைபெற்று விட்டன. அதன் மறுபக்கம் இருக்கிறதல்லவா. அதை இன்று ஒரு எழுத்தாளன் எழுதுவதுதான் சவாலானது. அதை எழுதும்போது மனத்தடை இருக்கக்கூடாது. அரசியல், சமூக உறவுகள் சார்ந்த இன்னொரு தரப்பையும் ஒரு எழுத்தாளன் எழுதவேண்டும். என்னைப் பொருத்தவரை வெவ்வேறு விதமாக அவன் வாழ்நாளில் எழுதிப்பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரே விஷயத்தையே அவன் திரும்பத் திரும்ப எழுதக்கூடாது. ஒரு குறிப்பிட்ட தளம் சார்ந்து தான் அவன் இயங்கமுடியும் நிலைமை இருக்கக் கூடாது. காஃப்காவோ, நகுலனோ டால்ஸ்டாய், ஹெமிங்வே கையாண்ட பிரமாண்டத்தை அடையவே முடியாது.  ஒரு எழுத்தாளனுக்கு முன்னால் உள்ள சவால் என்பது அவன் வெவ்வேறு பாணிகளில் அவன் இயங்கவேண்டும்.   

 உதாரணத்திற்கு ஜெயமோகனைச் சொல்லலாம். ஜெயமோகனின் நாவல்கள் மீது எனக்கு ஈடுபாடு இல்லை. சிறுகதை எழுத்தாளர்களில் அவர் முக்கியமானவர். பன்முகத்தன்மையோடு, துணிச்சலாக எழுதுகிறார். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை இன்று முக்கியமான ஆளுமை ஜெயமோகன்தான். ஜெயமோகன் மற்ற எல்லா எழுத்தாளர்களையும் குள்ளமாக்கிவிட்டார்.

நீங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் சிறுகதைகளை எழுதுபவர்.. சமீபகாலமாக பக்க அளவில் மிகப்பெரிதாக வெளியிடப்படும் நாவல்கள் குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

ரஷ்ய நாவல்களைப் பார்த்துதான் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மொந்தையாக நாவல் எழுதும் போக்கை தமிழில் ஜெயமோகன்தான் உருவாக்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஜெயமோகன் இல்லாதபோது சிறிய நாவல்கள் வந்தன. அவர் வந்துவிட்டார். அதற்குப்பிறகு சிறிய நாவல்கள் இல்லாமல் போய்விட்டது.
 பெரிய நாவல்கள் மூலம் பெரிய உலகத்தை சிருஷ்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கை  இங்கே இருக்கிறது. அது சாத்தியமானதும்தான். தால்ஸ்தோய், தாஸ்த்யாவெஸ்கி போன்றோரின் கதைகள் அவ்வளவு விரிவுகொண்டதாக உள்ளன.
ஆனால் எனக்கு பெரிய பிரதேசத்தை சிருஷ்டிப்பதில் லயிப்பு இல்லை. நேர்மையாகச் சித்தரிக்கவேண்டும். படைப்பாற்றலோடு, புதுமையாக சித்தரிக்கவேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக உள்ளது. இன்றைக்கு ஒரு தமிழ் எழுத்தாளன் 200 பக்கத்தில் நாவல் எழுதமுடியாது. அத்தனை பெரிய நாவல்கள் முன்னால் தன் படைப்பு சிறுத்துப் போய்விடும் என்று பயப்படுவான்.

உங்களுக்குத் தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் மனதுக்கு நெருக்கமானது எது?

மனத்தடை இல்லாமல் என் மனது இயற்கையாகப் போய் அமரும் படைப்புகள் என்று மூன்று நாவல்களை என்னால் சொல்லமுடியும். ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சிலகுறிப்புகள் இந்த மூன்று நாவல்களைத் தான் நான் சொல்வேன்.  

உங்கள் கதைகளில் பெரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் சில அபத்தமான சந்தர்ப்பங்களும் முக்கியமான காரணியாக இருக்கிறதா?

தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம் நமது வாழ்க்கையில் இன்றியமையாமல் இருக்கிறது. ஒரு தினசரி செய்தித்தாளில் வந்த செய்தி இது. அதை நான் கதையாக எழுதியிருக்கிறேன். ஒருத்தன் சைக்கிளில் போய்க்கொண்டிருப்பான். வானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் பருந்து தன் காலில் உள்ள பாம்பின் பிடியை விடுகிறது தவறவிடுகிறது. அது அந்த சைக்கிள்காரனின் மேல் விழுந்து கொத்தி இறந்தும் போய்விடுகிறான். இந்த நிகழ்ச்சியின் சாத்தியத்தைப் பாருங்கள். பருந்து பிடியை விடுகிறது. பாம்பும் துல்லியமாக சைக்கிள்காரனின் மேல் விழுகிறது. விழும் பாம்பு அவனைக் கொத்தி செத்தும் விடுகிறான்.
இவனுடைய சாவைத் தற்செயல் என்று சொல்லலாம். ஆனால் அந்த தற்செயல் நிகழ்வில் பயங்கர ஒழுங்கும் திட்டமும் இருக்கிறது. ஒரு திட்டமில்லாத திட்டம் இருக்கிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள். எது நடந்ததோ அதை நடக்க விதிக்கப்பட்டதாக நாம் நினைக்கும் போது தற்செயல்களின் சூதாட்டம் வெற்றிகரமாகத் துவங்கிவிடுகிறது என்றும் சொல்லலாம்.
நான் என் சொந்த வாழ்வை ஒரு வரலாறாக கற்பித்துக்கொண்டால் எனது மனைவியைப் பார்த்தது ஒரு தற்செயல் நிகழ்ச்சிதான். அவரைப் பார்க்கவில்லையெனில் எல்லாமே வேறு மாதிரியாக இருந்திருக்கும். எனது உத்தியாகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு சின்னத்திருப்பத்தில் இத்துறைக்கு வந்தேன். தற்செயல் நிகழ்வுகளை நாம் அனுமானிக்க முடியாது. மனிதர்களின் வாழ்க்கையில் அதற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.  

ஒரு எதார்த்த நிகழ்ச்சியை உங்களது கதைகளில் தத்ரூபமாகச் சித்தரிக்கிறீர்கள்…அதற்கு காரணம் என்ன?

ஒன்றை தத்ரூபமாகச் சித்தரிப்பதன் மூலம் அதை பரிகாசமாக்கி விடமுடியும் என்பதுதான் காரணம். ஒரு  மத குருவை பக்தர்கள் வரவேற்று, அவரது பாதங்களுக்குப் பூஜை செயவதை எழுதுவதாக வைத்துக்கொள்வோம். பக்தன் அல்லாத ஒருவனுக்கு அந்தச் சித்தரிப்பைப் படிக்கும்போது பரிகாசமாக இருக்கும். பக்தன் படித்தாலும் அவனுக்கு அந்தச் சித்தரிப்பு ஒரு புன்னகையை வரவழைத்தால் அங்கு கதை வெற்றியடைந்துவிடுகிறது.

 உங்கள் கதைகளில் ஆண், பெண்கள் இடையிலான உறவில் வன்முறை  ஒரு அம்சமாகத் தொடர்ந்து வருகிறது…சமூக வாழ்க்கையில் வன்முறையைத் தவிரக்கமுடியாததாகப் பார்க்கிறீர்களா?

எந்த உறவிலும் இல்லாத வன்மம் கணவன்-மனைவி உறவில் இங்கு இருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. எனது உத்தியோக வாழ்க்கை சார்ந்து வருடத்திற்கு ஆறு மாதங்கள் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணிபுரிய வேண்டும். நான் போகும் நீதிமன்றத்துக்கு அருகில் குடும்ப நீதிமன்றம் இருந்தது. அங்கே காணும் காட்சிகளை நீங்கள் நம்பவே முடியாது. பிரிந்த கணவனும் மனைவியும் அத்தனை வன்மத்தை பார்வையில் வைத்திருப்பார்கள்.
இந்தியா போன்ற நாட்டில் திருமண உறவு என்பதில் பொருத்தமே இல்லை. எக்சுக்குப் பொருத்தமான கணவன் ஒய்யின் கணவனாக இருப்பான். ஒரு தேசமே பொருத்தமில்லாத மணவாழ்க்கையை ஒரு சகிப்புத்தன்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது. காதல் திருமணத்துக்கும் இது பொருந்தும். ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் காதலிக்கிறார்கள். மேல்நாட்டில் எப்போது பொருத்தம் இல்லையென்று தோன்றுகிறதோ விலகிவிடலாம்.
குடும்பத்துக்குள் இருக்கும் இந்த வன்மம்தான் சமூகம் வரை தொடர்கிறது. அதுதான் அரசாக வடிவம் எடுக்கிறது. இதெல்லாம் எனது கவனத்துக்குரியதாக உள்ளது.

தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஒரு சிறிய நாவலை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். திராவிட அரசியலின் காரணமாக சில சமூகங்கள் அடைந்த வீழ்ச்சி மற்றும் சில சமூகங்களின் ஏற்றத்தைப் பேசும் படைப்பாக அது இருக்கும். அந்த நாவலின் காலம் 1950-களில் தொடங்கி 70-களில் முடியும். 30,40 பக்கம் தான் வந்திருக்கிறது.

நீங்கள் இப்போதும் சரணடையும் படைப்புகள், எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?

வண்ணநிலவனுடைய பாம்பும் பிடாரனும் கதை பிடிக்கும்.  அவருடைய நிஜநிழல் கதை எழுதப்பட்ட விதத்தில் என்னைக் கவர்ந்தது. தியோப்ளஸ் என்ற கதாபாத்திரம் வரும். அவன் காந்தி போலவே காலை மடித்து உட்கார்பவன். அவனும் அவனது நண்பனும் பேசிக்கொள்ளும் கதை. அந்த நண்பன் தற்கொலை மனநிலையில் இருப்பான். தியாப்ளஸ் அந்த நண்பனிடம், எதையும் பிடிவாதமாகச் செய்யாதே, எப்படியானாலும் நீ இறந்து போனதாக எனக்கு செய்தி வரும் என்று சொல்வான். அந்த உரையாடலின் போது ஜன்னல் வழியாக ஆட்டுமந்தை ஒன்று போகும். இப்படி சிறுகதைகளை எழுதிய பாணியில் வண்ணநிலவன் முக்கியமானவர். சுந்தர ராமசாமியின் கதைகளைப் பொருத்தவரை பல்லக்குத் தூக்கிகள், வாசனை கதைகள் எனக்கு முக்கியமானவை. 

 உங்களுடைய ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இருப்பவர் யார்?

ஜெயகாந்தன் கதைகளில் நிறைய சொற்பொழிவு இருந்தாலும் அவர் கதைகள் எனக்கு பிரியமானவையாக இன்னும் இருக்கின்றன. அவருடைய கதைகளில் உபதேசம் இருந்தாலும் அந்த உபதேசம் நமக்குத் தேவை. அவர் எழுதிய பாரிசுக்குப் போ நாவல் முக்கியமானதுதான்.

தீவிரமான கதைகளாக இருக்கட்டும், வெகுஜனக் கதைகளாக இருக்கட்டும் நீதி என்பது வாசகர்களுக்கு எப்போதும் தேவையாகத்தான் உள்ளதா?

 இருந்துகொண்டே தான் இருக்கும். என்னுடைய முதல் ஆசான் ஜெயகாந்தன்தான். என்னுடைய பார்வை மற்றும் மனதை வடிவமைச்சது அவர்தான். தனி மனித உறவுகள், சமூக உறவுகள், கணவன்-மனைவி உறவு, பிறன்மனை உறவுகள் எல்லாவற்றையும் அவர் அர்த்தப்பூர்வமாக விவாதித்திருக்கிறார். அவரைச் சார்ந்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டேன்.
  

   


அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...