பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லாதது நம்மில் பெரும்பாலானோரின் அன்றாட யதார்த்தம். அற்புதங்களோ அரிது. காலங்காலமாக இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்க வேண்டும். இந்த அலுப்பான யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்குத்தான் நமக்குக் கனவு தேவைப்படுகிறது. இன்னும் மேலான வாழ்வுக்கான லட்சியம் மற்றும் கருத்தியல்கள் தேவைப்படுகின்றன. கலையும் கவிதையும் தேவையாக இருக்கின்றன. கடவுள் தேவைப்படுகிறார். ஆலயங்கள் தேவைப்படுகின்றன. இந்த மண்ணிலேயே அவ்வப்போது தரிசிப்பதற்கும், நினைவில் வைத்துப் போற்றுவதற்கும் கனவைப் போன்ற நிலபரப்புகளும் அனுபவங்களும் தேவையாக உள்ளன. தமிழின் சிறந்த சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான வண்ணநிலவன் எழுதியிருக்கும் 'குளத்துப் புழை ஆறு', அப்படிப்பட்ட கனவு நிலவுப்பரப்பை மொழியில் உருவாக்கிய அற்புதம். வண்ணநிலவனின் இந்தக் கவிதையில் வரும் குளத்துப் புழை ஆறு, கொல்லம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட குளத்துப்புழா என்ற சிறு கிராமத்தில் ஓடும் சிறு நதி. அதன் பெயர் கல்லடை. இந்தக் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயில் புகழ்பெற்றது. ஐயப்பன், இங்கே சிறுவனாகக் காட்சி அளிப்பதால் பால சாஸ்த...