எனக்குத் தெரியும் பழங்கள் எப்போது அழுகத்தொடங்குமென்று அன்புக்கு எப்போது மூச்சுமுட்டுமென்று உண்மை எந்த இறகால் கனக்குமென்று. 000 விபத்துக்குள்ளான நாட்களில் வந்து சேரும் தற்காலிக ஊன்றுகோல் அகாலப் பயணத்தில் ஒரு அறிமுகத் துணை என் பசியை நிரப்பவே வாய்ப்பில்லாத குழந்தையின் கைப்பிடி உணவு. அவர்கள் நடுவில் வருகிறார்கள் நடுவிலேயே போய்விடுகிறார்கள். முடியாத வெயிலில் நீரைப் போலத் தொனிக்கும் கொதிநீர் அவர்கள் நான் போக முடியாத கனவு ஊருக்குச் செல்லும் ரயில் நிற்பதாகக் கூறப்படும் இடம், ரயில், சிநேகிதம் அவர்கள் அவர்களுக்கு என் தோல்வியுற்ற அம்மாவின் சாயல் இருக்கிறது. அவர்கள் நிரம்புவதுமில்லை என்னை நிரப்புவதுமில்லை நடுவில் அவர்கள் இறங்க வேண்டியிருக்கிறது கொஞ்சம் போல துக்கத்துடன் நானும் அவர்களை வழியனுப்பத்தான் செய்கிறேன். அவர்கள் வந்து வந்து செல்லும் ரயில்களா நிலையங்கள் தானா? நான் ஒரு நினைவுமேயற்று இந்தக் கண்ணாடிகளைப் போல இருந்துவிடக் கூடாதா.