Tuesday, 29 May 2018

புட்டியும் உடையவில்லை வாத்தும் சாகவில்லை


 ஜென் துறவி நான்சனிடம் அவருடைய மாணவரான ரிகோ ஒரு பழைய புதிருக்கான விடையைக் கேட்டார். “ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவும் இடுகிறான். வாத்து வளர்ந்தது. இப்போது ஒரு கேள்வி? கண்ணாடிப் புட்டியிலிருந்து வாத்தை உயிருடன் வெளியே வரவைக்க வேண்டும். கண்ணாடிப் புட்டியையும் உடைக்கவே கூடாது”.
கண்ணாடிப் புட்டியின் கழுத்தோ சிறியது. வாத்தால் வெளியே வர முடியாது. புட்டியையும் உடைக்கக் கூடாது; வாத்தும் கொல்லப்படக் கூடாது. வாத்து முழுமையாக உயிருடன் வெளியே வர வேண்டும். புட்டியும் சேதமாகாமல் இருத்தல் அவசியம். இங்கே அழித்தலோ உடைத்தலோ கூடாது. நான்சன் இந்தப் புதிரைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தார். அந்த விடையின் மீது தியானத்தைத் தொடங்கினார். அந்தப் பிரச்சினைக்கு விடை ஒன்றும் கிடைக்கவில்லை. திடீரென்று அந்தப் பிரச்சினையே இல்லையென்ற புரிதல் நான்சென்னுக்கு ஏற்பட்டது. தன்னிடம் அந்தப் புதிரைக் கேட்ட ரிகோவின் பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டி ஒரு நாள் சத்தமிட்டார் நான்சென்.
“ரிகோ”
ரிகோவிடம் சென்று, “வாத்து வெளியே வந்துவிட்டது” என்றார்.
வாத்து ஒருபோதும் உள்ளேயும் இல்லை. அது எப்போதும் வெளியில் தான் உள்ளது. அகந்தையின் ஏழு அடுக்குகளும் மறைந்துவிட்டதென்று குரு ரிகோவுக்குப் புரிந்துவிட்டது. நான்சென், ரிகோ என்று சத்தமிட்டவுடன் அவருக்கு ஞானம் வந்துவிட்டது. ரிகோவோ அந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான விடை ஒன்றை எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் “ரிகோ” என்று சத்தமிட்டவுடன் எந்தக் காரணமும் தொடர்புமின்றியே விடுபடாத ஒரு புதிர் தீர்க்கப்பட்டு விட்டது. அதுதான் அந்தப் புதிரின் ரகசியமும் கூட. “இதோபார் ரிகோ, வாத்து வெளியே வந்துவிட்டது” என்றார் நான்சென். கண்ணாடிப் புட்டியின் ஏழு அடுக்குகள் அகன்றுவிட்டன.
“ஆமாம் குருவே” என்றார் ரிகோ. அந்தக் கணத்தில் ரிகோ தூய்மையான பிரக்ஞையாக இருந்தார். அங்கே ஒரு திரைகூட இல்லை. ரிகோ உடல் அல்ல. அந்தக் கணத்தில் ரிகோ மனம் அல்ல. அந்த க்ஷணத்தில் கடந்த காலத்தின் நினைவு அல்ல. அந்த நொடியில் ரிகோ எந்த ஆசையும் அல்ல. அந்த நிமிடத்தில் யாருடனான ஒப்பீடும் அல்ல. அப்போது அவன் எந்தச் சமயத்தையும் சேர்ந்தவன் அல்ல.
‘ரிகோ’ என்று அவனை அவனுடைய குரு அழைத்தபோது, அவன் ஒரு விழிப்புநிலை, அவ்வளவே. எந்த உள்ளடக்கமும் நெறிப்படுத்தலும் அங்கே இல்லை. அவன் இளைஞனோ கிழவனோ அழகனோ அசிங்கமானவனோ அல்ல. அவன் முட்டாளோ புத்திசாலியோ இல்லை. எல்லா திரைகளும் மறைந்துவிட்ட சுடர்விடும் விழிப்பு நிலை அவன்.
“நான் புட்டியை உடைக்கவில்லை. அது அங்கேயேதான் இருக்கிறது. நான் வாத்தையும் கொல்லவில்லை. ஆனால், வாத்து வெளியே வந்துவிட்டது.”

Thursday, 24 May 2018

மாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்சிறுவயதிலேயே வால்கா முதல் கங்கை வரை’ நூலைப் படித்துவிட்டு உற்பத்தி உறவுகளின் கதையாக இந்த உலகத்தின் கதையை வாசிக்கத் தெரிந்த இந்தியதமிழ் குடியானவன்.

யவனிகா என்று இவர் வைத்த பெயர் எழுத்தாளர் சுஜாதா நாவலின் பெயராக பின்னால் ஆனது. 1990-களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத்தொழிலை இழந்தவர்களில் ஒருவர். தலித் அரசியல்தலித் இலக்கியம்சோவியத் உடைவுக்குப் பின் மார்க்சியம் சந்தித்த நெருக்கடிபின் நவீனத்துவ,அமைப்பியல் கோட்பாட்டு விவாதங்களும் இவரது கவிதையில் கதைகளாககதாபாத்திரங்களாககுழந்தைகள் விளையாடும் கூழாங்கற்களைப் போல உருளுகின்றன.

வியாபாரத்துக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள்தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும். சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளிலும் பயணம் செய்யத் தொடங்கியபோதுஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை மனிதர்களை தீர்க்க தரிசனமாகப் பார்த்துவிட்டான் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவனது கவிதைகளின் முதல் தொகுதிதான் இரவு என்பது உறங்க அல்ல’. இரவு என்பது வேறு எதற்கு என்று கவிதை ஆசிரியனிடமே கிண்டலாகக் கேட்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும்அயல்பணிதகவல் தொழில்நுட்ப ஊழியம் செய்பவர்களுக்கும்காதலர்களுக்கும்பெருகிவரும் மன அழுத்தக்காரர்களுக்கும் இரவு என்பது உறங்க அல்ல என்பது இன்றைய எதார்த்தமாக ஆகியிருக்கிறது.     

 உணவுஉடைகள்உழைப்புஉற்பத்தி உறவுகள்காதல்இனவிருத்திஅரசுநிர்வாகம்நியமங்கள் எல்லாமே மாறிமுயங்கி,கலந்து கொண்டிருக்கும் மனநில வரைபடம் நம்முடையது. ஒரு தங்க நாற்கரச் சாலையின் வருகையால் தொலைந்து போன கிராமத்தைத் தேடிப் போகும் பேருந்தை நாம் யவனிகாவின் கவிதைகளில் பார்க்கிறோம். ஒரு கிழக்காசிய சிறு நகரத்தின் சாயலைதனது சொந்த ஊரான சின்னாளப்பட்டிக்கு தன் மொழியால் ஏற்றிவிடுகிறார். பிரம்மபுத்ராவின் பள்ளத்தாக்குகளில் இயற்கையும் சாவகாசமும்  அமைதியும் பால்புகட்டி வளர்த்த ஒரு இளைஞனை சென்னையின் தகரக் கொட்டடிக்குள் 72 மணி நேரங்களில் துப்பி உருளைக்கிழங்கு தின்னும் கட்டிடத் தொழில் எந்திரமாகத் துப்பும் எதார்த்தம்தானே நம்முடையது. “ யாரின் தூக்கத்திலிருந்து விடிகிறது இந்த அதிகாலைச் சூரியன்/மாலுமிகளிடம் கட்டணம் செலுத்தி/ எந்தக் கரைகளில் இறக்கிவிடப்படுகிறது பல நூற்றாண்டுத் துயரம்”(தெய்வங்களில் படியும் உப்புக்காற்று- பக்கம் 241) என்று எழுதுகிறார்.

இங்கே தான் யவனிகாநிலங்களையும் மனிதர்களையும் அவர்களது துயரங்களையும் காதலையும்பாடலையும் தண்ணீரில் தெரியும் பிம்பங்களைப் போல கொஞ்சம் திசை மாற்றி விடுகிறார். ஒரு நாகரிகத்தின் கரையில் அமர்ந்து கொண்டு மாற்றங்களால் பறிக்கப்பட்டதுக்கித்த,வலித்த நரையேறிய உடலைக் கொண்ட ஒரு நாடோடியின்தோல்வியுற்ற பௌராணிகனின் பாடல் என்று இந்தக் கவிதைகளைச் சொல்லலாம்.

யவனிகா ஸ்ரீராமின் கவிதைகளில் வரும் கடவுள் சம்பிரதாயமான உருவம் அல்லர்இருந்ததாக நம்பப்படும் ஒரு ஒழுங்கின் இயற்கையின் முதிர்ந்த, தன்னைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத கதாபாத்திரம் தான் அவர். யவனிகா கடவுளின் இடத்தில் கோட்பாட்டையும் கார்ல் மார்க்சையும் வைக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளாக நவீன தமிழ் கவிதைகளில் புழங்கப்படும் கடவுளை யவனிகா தான் முன்நிர்ணயம் செய்கிறார். அப்படிப் பார்க்கையில் யவனிகாவும் கடவுள் நம்பிக்கையாளன் தான். சொர்க்கமாய் இல்லாத ஒன்றைக் கடவுள் படைக்கும் திறன் பெற்றிருந்தார் என யவனிகாவும் நம்பியிருக்கவில்லை என்பது அவன் கவிதைகளில் தொனிக்கும் மன்றாடலிலிருந்து தெரியவருகிறது. வரலாற்றின் பெருஞ்சுமையை தான் மட்டுமே சுமக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிரக்ஞையும் பிரமையும் கற்பிதமும் கொண்ட மனித உயிர்களின் பிரதிநிதியாக கார்ல் மார்க்சைக் காண்கிறார் யவனிகா. ஒரு மனித உயிரின் ஞாபகம்’ கவிதை மார்க்சியர்களால் கொண்டாப்பட வேண்டிய கவிதையாகும்.

90-களுக்கு முன்னர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைக்கும் 90-களுக்குப் பிறகு நவீன கவிதை என்று சொல்லத் தொடங்கப்பட்டதற்கு உள்ளடக்கம்,பண்பு ரீதியான வித்தியாசம் உள்ளதாஅதற்கான பதிலை யவனிகா ஸ்ரீராம் கவிதைகளின் வாயிலாகப் தெரிந்துகொள்வது கூடுதல் அனுகூலமானது. புதுக்கவிதைகள் அத்வைத நோக்கும் அதன் அம்சங்களான தன் விசாரணையையும்சலிக்கும் பண்பையும் கொண்டவை என்று கூறமுடியும். நவீன கவிதைகள் அத்வைதம் என்னும் ஒருமையிலிருந்து விலகிஇருமைபன்மைபெருக்கம் என்ற கூறுகளைப் பெறுகின்றன. அங்குதான் பெண்ணரசிகள் கவிதைகள் எழுதுகிறார்கள். கவிதையே வாளாகட்டும் என்ற லட்சியத்துடன் தலித் அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. ஒரு புனைகதையின் இடுபொருட்களையும் அழகியலையும் சேர்த்து நவீன கவிதை தோற்றம் கொள்கிறது. பூமியிலுள்ள தாவரங்கள்பாலூட்டிகள்மெல்லுடலிகள்,வெவ்வேறு மனநிலப் பிரதேசத்து மனிதர்கள்,உணர்வுநிலைகள்பால்நிலைகள்பாலியல் நிலைகள் என பல்லுயிர்கள் வாழும் பிரபஞ்சமாக யவனிகாவின் கவிதைகள் துடித்துக் கொண்டிருக்கின்றனநவீன கவிதைபொருட்களுக்கும் உயிரையும் உணர்வையும்  கொடுத்துவிட்டது.

உடலின் துக்கத்தை மட்டுமல்ல மனத்தின் வலியையும் உடல்தான் இங்கே சுமக்கிறது. ஒளிரும் நகரங்களின் முன்னிரவில் ஒரு மீமெய்மை நிலையை உணர்வது போலநவீன கவிஞர்கள் உடல்வழியாகவே மீமெய்மைத் தன்மையை அடைகிறார்கள். அங்கே உழைப்பதும்விழித்திருப்பதும்கனவு காண்பதும்காதலிப்பதும்நோய்ப்படுவதும் உடல்தான். நினைவுகளையும் லட்சியங்களையும் சுமப்பது உடல்தான்உடல் தான்.

000

வலியும் சந்தோஷமும் கொண்ட எந்திரமாக மனிதனைப் பாடுவதைப் போலவே இயற்கையையும் எந்திரமாகவே பாவிக்கிறார் யவனிகா. இயற்கையை தனி வாழ்வு கொண்ட ஒன்றாகவோ நிர்க்குணத்துடனோ அழகுடனுமோ பார்ப்பதில்லை. விவரணைகள் சலிப்புறும் போது சொல்லப்படும் நிலம் காட்சியாகாமல் மலட்டுச் சோர்வையும் தருகின்றன. அனைத்து வலிகளுடனும் நினைவின் சுமைகளுடனும் ஏமாற்றத்தின் முனைகளில் வாழ்ந்து தீர்க்கும் மானுட உயிர்களுக்கு போதையும் காமமும் மட்டுமே தப்பிக்கும் வழிகளாக இவர் உலகத்தில் உள்ளன. ஆனால் உபரிச்சந்தையின் விலைவாசி வரைபடத்தில் போதை எளிதில் வாங்கப்படக் கூடியதாகவும் காமம் விலை மிகுந்ததாகவும் உள்ளதையும் தீராமல் சொல்கின்றன யவனிகாவின் கவிதைகள் கூடவே சொல்கின்றன.

பெண்ணுடன் பேசஉறவு கொள்வற்கான விழைவோடு பெண்ணாகவே ஆகும் விழைவு இவர் கவிதைகளில் புதிய தன்மையாக உள்ளது. உலகம் மாறுவதை பெண்களின்பாலியல் பழக்கவழக்கங்களின் மாறுதல் வழியாக பயத்துடன் இந்தக் கவிதைகள் காண்கின்றன.
இயற்கையை நிர்க்குணத்துடன் ஒரு விவசாயியால் பார்க்க முடியாது போலும். பெண்களையும் காமத்தையும் பயங்கரத் தன்மையின்றி இந்த இந்திய தமிழ் கிராமத்துக் கவிதை சொல்லியால் பார்க்க முடியாதா யவனிகா? என்றும் கேட்கத் தோன்றுகிறது. அதேவேளையில் ஒடுக்கியவர்களையும் பழிதீர்க்கக் குறிபார்த்துக் கொண்டிருக்கும் ஒரு காலத்தின் வருகையை ஏற்கவும் செய்கிறது. (என்னைப் பொய்யனாக்கும் நிகழ்விற்கிடையேஒரு நாளை அடையாளம் காட்டி இறகுகள்விட்டுப் போன ஈசலாய் மட்டும் இருக்கச் சம்மதம்/ நண்பா சாக்கடைகளைத் திறப்பவனிடம் இனியாவது பேசு/ பெண்களிடத்து இருக்கலாம் பூமியின் மீதிச் சுற்று)

உயிரை நீட்டித்து வைத்திருக்க நப்பாசையாக ஒரு ராத்தல் மைதாமாவைக் கூட வாங்குவதற்கு ஏலாத ஓட்டை நாணயங்களாக உடல்பையில் கிணுகிணுக்கிறது காம்ம். அது ஒன்றே ஆறுதலாக கனவாக அவனது கவிதைப் பிரபஞ்சத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உள்ளது. (இந்நாட்களில் ஒருவனைகாதல் மட்டுமே அர்த்தப்படுத்திவிடக்கூடும்/ மேலும் ஒரு பெண்ணின் தேர்வுதான்இந்நகரத்தின் அலங்காரமும் கூட)

அறிவின் நம்பிக்கையில் எழுந்து அறிவின் பயனின்மையைப் பாடுவதுகருத்தியல் நம்பிக்கையுடன் மேலே போய்,கருத்தியலின் தோல்வியைப் பாடுவதுகோட்பாட்டின் பாட்டையில் பயணித்து கோட்பாட்டின் வியர்த்தத்தை எழுதுவது;உடலின் விடுதலையில் தற்காலிகமாகச் சுகித்து உடலின் எல்லைக்குள் துக்கித்துப் பகிர்வதுஎன்று இவன் கவிதைகளின் எழுதல்பறத்தல்அமர்தல் அமைகிறது.

புறாவின் அழுகை போலத் தொனிக்கும் ஒப்பாரித் தன்மைபெண்ணின் குத்தல் தொனிக்கும் சாடைப் பேச்சு, வக்கணை, முச்சந்தியில் நின்று சாபமிடும் பைத்தியத்தின் உளறல்காதலின் களி உரையாடல்நடு இரவில் குறிசொல்பவனின் தரிசனம்வரலாற்றையும் தத்துவத்தையும் இடைவெட்டி உரைக்கும் கதை சொல்லி என்ற வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறது யவனிகாவின் கவிதைகள்.  சாண்டில்யன்ஞானக்கூத்தன்,ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்கோட்பாட்டு கட்டுரைகளிலிருந்து யவனிகா ஸ்ரீராம்மரபற்றதும் அந்நியமானதாகவும் தோற்றமளிக்கும் ஒருவகை கவிதை மொழியை உருவாக்கியிருக்கிறார். யவனிகாவின் கவிதைகள் போர்ஹே உருவாக்காமல் போன கற்பனை விலங்குகளின் உடலை ஒத்தனவாக உள்ளன. பல கலாசார அடையாளங்கள்கோட்பாடுகள்கதைகள்குழந்தைகளின் சொலவடைகள் ஒட்டிப்பிறந்த உலகளாவிய தன்மை கொண்ட உயிர்கள் அவை. தமிழ் பண்பாட்டுக்கு நெருக்கமான ஒரு அனுபவத்தைக்கூடஉலகின் வேறு விளிம்பில் உள்ள குடிமகன் ஒருவனுக்கு நடப்பதாகவேறொரு காலநிலவாழ்வுப்புலத்தில் பேசும் அந்நிய பாவத்தை’ ஏற்படுத்தி விடுகிறார் யவனிகா. ஒரு நாவலின் பகுதிகளாக, இந்த மொத்தத் தொகுதியின் 256 கவிதைகளையும் வாசிக்க முடியும்.

  

தலைமறைவுக் காலம்’ கவிதைத் தொகுப்பில் ஒளி எழுப்பும் தேசம்’ கவிதையில் யுகங்களுக்கிடையே ஓடும் பேருந்தில் தேசத்தின் நீதிவாசகம் எழுதப்பட்டுள்ளது. அந்த நீதிவாசகத்தை நாம் திருக்குறளாகவும்அந்தப் பேருந்தை திருவள்ளுவராகவும் படிக்கலாம் யவனிகா. பூர்வ நிலத்திலிருந்து வெளியேறி நினைவுகளைக் கந்தல் பையாகச் சோகத்துடன் எங்கோ ஒரு அந்நிய நிலத்தில் சுமந்து திரியும் மூன்றாம் உலக அரசியல் உயிரியின் பாடல்கள் இவை. சிவந்த அபிப்ராயங்களோடு மூலவிரோதம் எதுவும் இல்லை என்று கூறும் கவிஞர் யவனிகா ஸ்ரீராம், பீடித் தொழிலாளர்களுக்கு தன் கவிதை ஈடாகாது என்றும் தெரிந்து வைத்திருக்கிறார்.  சமகால நிலைமைகள் மீதான சிறந்த இடையீடாக ஆகியிருக்கும் சிறந்த கவிதைகளென ஒரு பட்டியலை ஒவ்வொரு வாசகரும் பராமரிக்கலாம். (ஆசியப் பகுதியில் வசிப்பது, ஏறத்தாழ நரேன் சொன்ன கதை, புல் தைலம், நமது பார்வையாளர், பறக்கும் கம்பளம், தேய்ந்த ஆசாமி, அபிப்ராயங்கள், வாசனைத் திரவியம் தயாரிக்கும் வழிகள், சொல்வது நமது ஆனந்த், ஆறுமுகா காபி ஒர்க்ஸ், ஒரு மனித ஞாபகம், உலகம் இசக்கியை உழைக்கவே வைக்கிறது). இறகுகளைக் கொண்டதும் புனிதமானதும் இலேசானதுமான வஸ்து என்று கவிதையை வரையறுக்கிறார் ப்ளேட்டோ. யவனிகாவின் கவிதைகளை முன்வைத்து இறகுகளைக் கொண்ட புனிதம் துறந்த பொறுப்புகள் கனக்கும் வஸ்து என்று நான் சொல்கிறேன். அவர் இறந்த மண்டையோட்டின் பல்வலி என்றும் வரலாற்றிலிருந்து தானியக்கூடங்களைப் பாதுகாக்கும் செயல்பாடு என்றும் வரையறுக்கிறார்.

முதலாளித்துவம் துவங்கிய காலகட்டத்தில் எந்திரங்கள் மனிதனை அவனது உற்பத்தியிலிருந்து அந்நியமாக்கினாலும் ஓரளவு தன்னிறைவுக்கும் வாழ்வாதாரத்துக்குமான வழிகளையாவது விட்டுவைத்திருந்தன. ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு மனிதர்கள் ஈடுபடுவதற்கு எந்திரங்கள் கூடப் பறிக்கப்பட்டுவிட்டன. பூர்வ நிலங்களிலிருந்தும் பிடுங்கி எறியப்பட்ட மக்கள் உலக வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் காலம் இது. அந்த நிலைமைகளை கவிஞன் யவனிகா ஸ்ரீராமைப் போலத் தமிழில் கலையழகுடனும் தீர்க்க தரிசனத்துடனும் உரைத்த ஒரு மார்க்சியக் கவிஞன் யாருமில்லை. அவரது கவிதைகளுக்கு நகல்களும் உருவாகி விட்டன. ஆனால் இதுவரை அவரை நமது தமிழ் மார்க்சியர்கள் திரும்பிக்கூடப் பார்க்காதது அப்படி ஒன்றும் ஆச்சரியப்பட முடியாத நிகழ்வுதான்.

Wednesday, 23 May 2018

சினேகமுடன் பாலா

ந்தை, தாய்க்கிடையே பிணக்கையும் தீராத சச்சரவையும் பார்த்து வளரும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே பாரம்பரியம், கவுரவம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இழந்துவிடுகின்றன’ - தாஸ்தாயெவ்ஸ்கிக்காக கோணங்கி தொகுத்து வெளியிட்ட ‘கல்குதிரை’ சிறப்பு மலரில் பார்த்த இந்த வாக்கியம்தான், பள்ளிப் பருவத்திலேயே எழுத்தைத் துறையாகத் தேர்ந்தெடுக்க வைத்தது. மகிழ்ச்சியற்ற குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள்தான் அதிகமாக லௌகீக உத்தரவாதமற்ற துறைகளை நோக்கி ஈர்க்கவும்படுகின்றனர் என்று தோன்றுகிறது.

எனது துக்கம் இந்த உலகிலேயே தனியானது என்று நினைத்திருந்த 15 வயதில், “உன்னைப் போலத்தான் பாலகுமாரனுக்கும் அப்பாவைக் கண்டால் ஆகாது” என்ற அறிமுகத்துடன் கொடுக்கப்பட்டது ‘சினேகமுள்ள சிங்கம்’ நாவல். இப்படித்தான் பாலகுமாரன் எனக்கு அறிமுகமானார். அடுத்த 10 நாட்களிலேயே ‘இரண்டாவது சூரியன்’ கிடைத்துவிட்டது. என் தந்தையாரோடு நான் பழகிக்கொண்டிருந்த ரவுத்திரத்தையும் என் அம்மா மீதான நேசத்தையும் மகத்துவப்படுத்தியவர் பாலகுமாரன். தாய்க்கும், காதலிக்கும், மனைவிக்கும் தாயுமானவனாக விளங்கும் ஒரு ரொமாண்டிக்கான ஆணை எனக்குள் லட்சிய உருவமாக மாற்றியவரும் அவர்தான்.

கமல்ஹாசன் முன்னுரையுடன் பழுப்பாக அட்டை பிய்ந்த நிலையில் ‘சின்னச் சின்ன வட்டங்கள்’ சிறுகதைத் தொகுப்பை ஆசையுடன் தொட்டது இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. ‘குணா’ படத்தில் அவர் எழுதிய ஒவ்வொரு வசனத்தோடும் நான் என்னை அடையாளப்படுத்திக்கொண்டேன். “என் முகம் அப்பா கொடுத்தது, அது அசிங்கம் அசிங்கம்” என்று கமல் சுற்றிச்சுற்றி அறையில் பேசி விழுவார். நானும் குணசேகரனைப் போலவே பித்தாகி ‘ரத்னா’ தியேட்டரில் அமர்ந்திருந்தேன். ‘பாலகுமாரன், பாலகுமாரன்’ என்று எனது வகுப்பு சகாவிடம் அரற்றினேன். அவனுக்குப் புரியவில்லை.

தொடர்ந்து, ‘இரும்பு குதிரைகள்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘கரையோர முதலைகள்’ எனத் தொடர்ந்து துரத்தி, அப்போது வெற்றிபெற்ற இளையராஜா பாடல்களின் முதல் வரியில் (‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’, ‘என் அன்புக் காதலா’) பாக்கெட் நாவல்களை மாதந்தோறும் வாங்க பணத்தை ஒதுக்கும் பழக்கம் வரை முன்னேறினேன். பேருந்துப் பயணங்களில் எல்லாம் பாலகுமாரன் என்னுடன் வந்தார். அவர் ஒவ்வொரு பாக்கெட் நாவலிலும் வாசகர்களுக்காக எழுதும் அறிமுகக் குறிப்பை அத்தனை இதத்துடன் படித்திருக்கிறேன். ‘சிநேகமுடன் பாலா’ என்று கையெழுத்திடுவார். ஒருமுறை என் அம்மாவுக்கு எழுதும் கடிதத்தில் ‘சிநேகமுடன்’ என்று சொல்லி எனது கையெழுத்தைப் போட்டு விடுதியிலிருந்து போஸ்ட் கார்ட் அனுப்பிவிட்டேன். கல்லூரி முதல்வர் அறையில் உள்ள தொலைபேசிக்கு ஒருநாள் என்னை அழைத்தார்கள். போனில் நான் வெட்கப்படும்படி எனது அம்மாவிடம் வசை வாங்கினேன். அம்மாவுக்கு சிநேகமுடன் என்றெல்லாம் எழுதுவது அத்துமீறல் என்று சமூகம் புரியவைத்தது. கல்லூரிக் காலத்தில் பாலகுமாரனுக்கு ரசிகர்களாக இருக்கும் குடும்ப உறவினர்களும் எனக்கு அறிமுகமானார்கள். எனது பெரியம்மா மகனும் அவர் காதலித்து மணந்துகொண்ட அண்ணியார், இரண்டு பேருமே பாலகுமாரன் ரசிகர்களாக எனக்கு நெருக்கமாகவும் பேசு வதற்கு ஆத்மார்த்தமாகவும் ஆகினர். எனது பெரியப்பாவோ, தனது பிள்ளைகளையும் பெண்களையும் கெடுப்பது பால குமாரன் என்று கூறி, பாலகுமாரன் புத்தகங்களையெல்லாம் தேடியெடுத்து அப்போது வீட்டடுப்பில் வெந்நீர் போடுவதற்கு விறகுகளுடன் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழகத்தில் கீழ் மத்திய தர வர்க்கம், மேலே நகர்ந்ததில் மேல் சாதியினருக்கும் இடைச் சாதியினருக்கும் சமூக, பொருளாதார, கலாச்சாரப் புலங்களில் நடந்த பரிவர்த்தனை சுமூகமானதற்கு பாலகுமாரனது எழுத்துகளுக்கும் பங்குண்டு. சைவச் சமையலறையில் அசைவ உணவு காதலாக நுழைந்தது. மாநிறமும் கறுப்புமான பெண்ணின் வசீகரத்தை எழுதியவர் பாலகுமாரன். கல்வி, பொருளாதாரம் சார்ந்து வீட்டை விட்டு வெளியே வந்து இருபாலினரும் சேர்ந்து பழகுவதற்கான முறைசாராக் கல்வியை ஒரு தலைமுறைக்கு வழங்கிய ஆசிரியர் பாலகுமாரன்.

எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற விருப்பத்துடன் தன் வீட்டுக்கு வந்த ஒரு இளைஞனுக்கு, அடிப்படையாக வாசிக்க வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட துறைவாரியான பட்டியலை பாக்கெட் நாவல் ஒன்றில் வெளியிட்டிருந்தார். அந்தப் பட்டியலைச் சில வருடங்களாவது நான் பாதுகாத்து அவர் சொன்ன நூல்களைத் தொடர்ந்து படித்தேன். ராகுல சாங்கிருத்யாயன் தொடங்கி கரிச்சான்குஞ்சு வரை இன்னமும் அனைத்துத் தொடக்க நிலை வாசகர்களுக்கும் பயனுள்ள பட்டியல் அது. அந்தப் பட்டியலில் இருந்த ஒவ் வொரு புத்தகமும் பாலகுமாரனிடமிருந்து தள்ளிக்கொண்டேபோனது. அவர் எனக்குச் செய்த பெரிய உபகாரம் அதுதான். சென்னைக்குப் போனால் நேரடியாக பாலகுமாரன் வீட்டுக்குப் போய்த்தான் இறங்குவது என்று அக்காலத்தில் முடிவெடுத் திருந்தேன். பாலகுமாரனைப் போய்ப் பார்க்கவே இல்லை.


Friday, 4 May 2018

தொட்டில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது


எங்கே ஆடுகிறது
அந்தத் தொட்டில்
என் குழந்தை வளர்ந்து விட்டாள்
ஆனால் தொட்டில்
ஆடும் சத்தம் கேட்கிறது
தூளியை ஆட்டி
ஞாபகமிருந்த ஒரே ஒரு தாலாட்டைப்
பாடிய
பெரியம்மாவும் இப்பூமியில் இல்லை
ஆனாலும் தொட்டில்
ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.
தொட்டில் கம்பு கொண்டுவந்த
நெல்லையப்பன் அத்தான்
இப்போது இல்லை
ஆனாலும் தொட்டில்
ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.
முதல்முறையாக
வண்ணங்களை என் மகள் அறிவதற்கு
சொல்லித்தந்த
கிளி
எங்கே போனது
தெரியவில்லை
ஆனாலும் தொட்டில்
எங்கோ ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.Tuesday, 1 May 2018

திருட்டுப்பூனைவீட்டின் தாழ்வார மிதியடியருகே 
அடுத்த காலடி நெருக்கத்தில் 
கருமையும் வெள்ளையும் மினுமினுத்து நெளிய 
ஒரு குண்டு உடலைப் பார்த்தேன் 
திடுக்கிட்ட பிறகுதான் 
பூனை என்று
எண்ணம் 
முழுமையாய் வரைந்தது
நான் பார்த்த பிறகு அது ஓடிவிட்டது

நான் பார்க்காத வேளையில் 
அது அங்கே வந்து இருந்து 
சில நிமிடங்கள் ஆகியிருக்கும்
 படியிறங்கி ஓடி
 காம்பவுண்ட் சுவரைத் தாண்டுவதற்கு முன்னால்
 அதற்கு நான் வரைந்த உடலை
 அதுவே தொகுக்கும் வேலை.

ஆனால்
நானோ
அதன் முகத்தைக் கூட முழுமையாகப் பார்க்காமல்
திருட்டுப் பூனை
திருட்டுப் பூனை
திருட்டுப் பூனை என்று
புதுசாய்க் கண்டுபிடித்த
எக்களிப்பில்
நானே வரைந்த பூனையைத் துரத்தி ஓடுகிறேன்.

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...