மிகத் தாமதமாக , 1991- ல் எனது ப்ளஸ் டூ கணித இறுதித் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி , விஜி என்ற கதாபாத்திரமாக என்றைக்குமான தோழியாக அறிமுகமானார் . பாடமாக மட்டுமின்றி வாழ்க்கையின் கணிதமும் குழம்பத் தொடங்கியிருந்த நாட்களில் தோல்வி உறுதி என்ற உள்ளுணர்வு வந்திருந்தது . அந்த உள்ளுணர்வே படிப்படியாக ஒரு சாகச உணர்வையும் தைரியத்தையும் கொடுக்கத் தொடங்கியிருந்தது . பாலகுமாரன் , சுஜாதா , சரோஜாதேவி கதைகள் என ரகசியக் கனிகள் எனக்குத் திறந்துகொண்டே இருந்த காலம் . சிறப்பு வகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு , ஒரு சனிக்கிழமையில் ரத்னா திரையங்கரங்கில் மறு மறு வெளியீட்டில் காலைக் காட்சியாக ‘ மூன்றாம் பிறை ’ பார்த்தேன் . வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட ... சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம் .... என அப்படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகும் பாடலும் அதன் காட்சிகளும் ஒரு கல்மிஷமற்ற காலத்தின் மாலைச் சூரிய ஒளியால் நிரம்பியது . அந்தப் பொன்னொளி தன் முகத்தில்