ஒரு கவிஞனின் முதல் தொகுப்பை அவகாசம் எடுத்துப் படிக்கத் தொடங்குவதற்கும், படபடப்பு இன்றி அவன் புழங்கும் பிரபஞ்சத்தை அவதானிப்பதற்கும், பொதுமைப்படுத்தி விடமுடியாத என்வகையிலான ஒரு முறைமையே எனக்குக் கைகொடுக்கிறது. அதை நான் இன்னொருவருக்குப் பரிந்துரைக்க மாட்டேன். எனினும், வே. நி. சூர்யாவைப் பற்றிப் பேசும்போது அந்த முறைமை குறித்து முதல்முறையாகப் பேசிப் பார்க்கலாம் என்ற தைரியத்தை அடைகிறேன். குழந்தைகளிடமும் விலங்குகளிடமும் என்னைப் பரிச்சயப்படுத்திக் கொள்ளும் முறைக்கு ஒப்பானது அது. எனக்குத் தெரிந்த, அனுபவமான உலகத்தின், முகங்களின் சாயல் கொஞ்சம்போல இருக்கும் குழந்தைகளின் முகங்களிடம் சீக்கிரம் ஈர்க்கப்படுகிறேன். என் முகத்தின் சாயலையும் அதில் பிரதிபலித்துப் பார்க்கிறேன் என்பதைக் கூடுதலாக உங்களிடம் விளக்க வேண்டியதில்லை. அந்தப் பிரதிபலிப்பின் வழியாக முதல் ஈடுபாடும் முதல் உறவும் எனக்கு அந்தக் கவிஞனிடத்தில், அவனது கவிதைகளினிடத்தில் ஏற்படுகிறது. அந்தப் பிரதிபலிப்பின் கைப்பிடித்து எனக்குப் பரிச்சயமில்லாத அனுபவம், சாயல்கள், உயிர்கள் உலவும் அவனுடைய பிரபஞ்சம் அறிமுகமாவதற்கு நடுக்கத்தோடு, ஆனால் என்னை அனுமதி