Skip to main content

Posts

Showing posts from May, 2014

ஞாபக சீதா

  ஷங்கர்ராமசுப்ரமணியன்        இலைகளின் நுனியில் குவியும்  பாம்பின் வாலில்  நூலென ஆடும் கூர்மை  ஞாபக சீதா  உன் அழகு  உன் அகங்காரம்  அந்தரத்தில் வானில்  ஆடும் வாலின் நுனி  ஊசிக்கூர்மை    000   குப்பைச் செடிகளுக்கிடையே  பாலிதீன் பைகளை  மேயும் மான்களில்  இல்லை  உனது  பொன் மான்  சிதறி இரைந்து கிடக்கும்  புள்ளிகளைத் திரட்டியெழுந்து  யார் கைகளுக்கும் சிக்காமல்  ஒல்லிக் கால்களால்  ஓடித் தப்பிக்கும்  மான்களில்  கொஞ்சம் போல் தான்  என்றாலும் ஞாபக சீதா  நீ கேட்ட  பொன்மான் உண்டு

துக்கம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்   கனவில் ஒரு வீட்டின் ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஜன்னல் வழி தெரியும் அறையில் ஒரு பெண் வயது தெரியவில்லை யுவதியும் அல்ல வெறும் பாவாடை ரவிக்கையுடன் வந்து நிற்கிறாள் உடை மாற்றப் போகிறாள் போலும் மனமும் கண்களும் கூர்மையடைந்து விட்டன கடைசி உடையை அவள் நழுவ விட்டபோது எனக்கும் ஜன்னலுக்கும் நடுவில் நின்ற மரத்தின் உச்சியிலிருந்து ஹோவென்று ஒரு புறா அந்தக் கணத்தை மறைத்து விழுந்ததில் நான் பார்க்கத் தவறியதை அப்போதும்  பார்க்கத் தவறிவிட்டேன்.