வேளச்சேரி காமாட்சி மருத்துவமனை தாண்டி நாரணோ ஜெயராமன் குடியிருக்கும் நன்மங்கலத்தில் உள்ள இல்லத்துக்கு எப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கேட்டுச் செல்லும் நான் இன்று கேட்கவில்லை. துக்கம், துல்லியத்தைக் கொடுக்கிறது போல. பல்லாவரம் போகும் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி, நேரே பயணித்து வலதுபக்கம் திரும்பி நீலவர்ணப் பெருமாள் கோயிலைத் தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாரணோ ஜெயராமனின் மகனிடம் ஒருமுறை தொலைபேசியில் கேட்டு உறுதிப்படுத்தி அவர் உடல் இருக்கும் வீட்டை அடைந்தேன். குற்றாலம் தர்மராஜன் தான் வேலி மீறிய கிளை தொகுதியை மேற்கு மாம்பலத்தில் உள்ள பழைய புத்தக கடையிலிருந்து 2003-ம் ஆண்டு வாக்கில் வாங்கித்தந்தார் என்று ஞாபகம். சிகப்புத் துணி அட்டையில், மிக எளிமையான சித்திரத்துடன் ஒல்லியாக, மிக மேன்மையும் ஆரோக்கியமும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு அது. கலாப்ரியாவும் நாரணோ ஜெயராமனும் ஒரு காலகட்டத்தின் புதுக்குரல்கள். உரையாடல் மொழியிலிருந்து உயரும் சமத்காரம் அவரது குரல். பிரமிளின் முன்னுரை இன்னமும் படிப்பதற்கு தீட்சண்யத்தை இழக்காதது. கசடதபற குழுவினருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். க்ரியா ராமகிருஷ்ணன், ஞானக