Skip to main content

Posts

Showing posts with the label சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  நான் அறிவேன் அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை வரையறுக்கப்பட்ட வருத்தங்களை நான் அறிவேன்.   ஆனால் நான் அவர்களைக் கவனிக்கிறேன் அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை நான் விரும்புகிறேன் அதுவே ரொம்ப.   அவர்கள் புகார் சொல்கின்றனர் ஆனால் கவலைப்படுவதில்லை. அவர்களின் மிடுக்கு நடை  ஆச்சரியகரமான கண்ணியம். மனிதர்களால் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில் எளிமையாக அவர்கள் உறங்குகின்றனர்.   நமது கண்களை விட பூனைகளின் கண்கள்  அபரிதமிதமான அழகு கொண்டவை. அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில் உறங்கமுடியும் எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி.   நான் சோர்வாக உணரும்போதெல்லாம் எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.   நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன் அவர்களே எனது ஆசிரியர்கள். (சுஜாவுக்கு)

கும்பலின் மேதைமை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

துரோகம், வெறுப்பு, வன்முறை போதுமெனும் அளவுக்கு உள்ளது குறிக்கப்பட்ட நாளன்று ஒரு ராணுவத்துக்கு  வழங்கும் அளவுக்கு   சராசரி மனிதனில் அபத்தம் உள்ளது அத்துடன் கொலைக்கு எதிராகப் போதிப்பவர்கள் எவரோ அவர்களே அதில் தேர்ந்தவர்களாக உளர் அத்துடன் நேசத்தைப் போதிப்பவர்கள் யாரோ அவர்களே வெறுப்பதில் சிறந்தவர்களாய் உளர் அத்துடன்  போரிடுவதில் சிறந்தவர்கள் யாரோ அவர்களே  இறுதியில் சமாதானத்தைப் பிரசங்கிக்கிறார்கள் கடவுளைப் போதிப்பவர்களுக்கு கடவுள் தேவை அமைதியைப் போதிப்பவர்களிடம் அமைதி இல்லை நேசத்தைப் போதிப்பவர்களிடம் நேசம் இல்லை போதிப்பவர்களிடம் ஜாக்கிரதை அறிந்தவர்களிடம் ஜாக்கிரதை புத்தகங்களை வாசித்தபடி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். வறுமையைப் பழிப்பவர்கள் எவரோ வறுமையில் பெருமிதம் கொள்பவர்கள் எவரோ அவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் உடனடியாகப் புகழ்பவர்களிடம் ஜாக்கிரதை தேவை அவர்களுக்கு திரும்பப் புகழ்வது அவசியமாக உள்ளது உடனடியாக எதிர்ப்பு தெரிப்பவரிடம் கவனம் தேவை தமக்கு தெரியாதது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள் தொடர்ந்து கூட்டத்தைத் தேடிக்கொண்டிருப்பவரிடம் எச்சரிக்கையாய் இ...

அதிகமாக விற்கும் நாவலாசிரியனின் நேர்காணலைப் படித்தபோது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  அவன் எழுதுவதைப் போன்று பேசுகிறான் அவனது முகம் புறாவைப் போன்றது, வெளிவிவகாரங்களால் தீண்டப்படாதது. அவனது சௌகரியமான உறுதியான வெற்றியை வாசிக்கும்போது  பயங்கரத்தின் சின்ன நடுக்கம் என்னில் பாய்கிறது. “அடுத்த வருடம் ஒரு முக்கியமான நாவலை எழுதப் போகிறேன்” என்று உரைக்கிறான். சில பத்திகளை விட்டுத் தாவுகிறேன் ஆனால் அந்த நேர்காணல் இரண்டரை பக்கங்களுக்கும் அதிகமாக நீள்கிறது. ஒரு மேஜை விரிப்பில் பால் சிந்தியதைப் போல டால்கம் பவுடரின் மிருதுவை ஒப்ப சாப்பிட்ட மீனின் எலும்புகளைப் போல வெளிறிய கழுத்து டையில் ஈரமான கறையைப் போல அதிகரிக்கும் முணுமுணுப்பு போல. இந்த மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி அவன் சூப் கிச்சனில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. இந்த மனிதனுக்குத் தோல்வி என்ற கருதுகோளே தெரியாது அதற்காக அவனுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. நான் படுக்கையில் கிடந்து நேர்காணலை வாசிக்கிறேன். தரையில் செய்தித்தாளை நழுவவிடுகிறேன். அப்போது ஒரு சத்தம் கேட்கிறது. ஒரு சிறிய ஈ ரீங்கரிக்கிறது.  அது பறப்பதை அறையை ஒழுங்கற்றுச் சுற்றுவதை கவனிக்கிறேன். இறுதியாக வாழ்க்கை.  (சூப் கிச்சன் - இலவச உணவு விடுதி)

இரண்டு கானேஷன்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எனது காதல் இரண்டு கானேஷன் மலர்களைக் கொண்டுவந்தது எனது காதல் என்னிடம் சிவப்பைக் கொண்டுவந்தது எனது காதல் அவளை எனக்குக் கொண்டுவந்தது எனது காதல் என்னை கவலைப்பட வேண்டாம் என்றது எனது காதல் என்னைச் சாகவேண்டாம் என்றது மேஜையில் உள்ள இரண்டு கானேஷன் மலர்கள் எனது காதல் இரவுக்குள் கருமையடையும் ஒரு மாலையில் ஷேன்பக்கின் இசையைக் கேட்கும்போது எனது காதல் இளமையாய் இருக்கிறது கானேஷன் மலர்கள் இருட்டில் கனல்கின்றன வாதுமைகளின் ருசியை விட்டுவிட்டு அவள் போய்விட்டாள் அவளது உடல் வாதுமைகளைப் போல ருசிப்பது. இரண்டு கானேஷன் மலர்கள் சிவப்பாய் கனல்கின்றன அவள் தொலைவில் எங்கோ அமர்ந்திருக்கும்போது அவளது விரல்களுக்குள் மிருதுவாய் இருக்கும் சீன நாய்களை அவள் கனவு  காணுகிறாள் பத்தாயிரம் கானேஷன் மலர்கள் கனல்வது எனது காதல் மரத்தின் கிளையில் அந்த அமைதியான தருணத்தில் அமர்ந்திருக்கும் ஓசனிச்சிட்டு எனது காதல் அவ்வேளை பதுங்கிவரும் பூனை.

ஜேனுக்கு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

புல்லுக்குக் கீழே 225 நாட்கள் என்னைவிடவும் உனக்குக் கூடுதலாகத் தெரியும் உனது ரத்தத்தை எடுக்கப் போதுமான அளவு. நீ ஒரு உபயோகமும் இல்லாதவள் இப்படித்தான் இது நடக்கவேண்டுமா? இந்த அறையில் பல மணிநேரங்கள் நேசக்கூடலில்  நிழல்கள் உருவாகின்றன இன்னும். நீ நீங்கியபோது கிட்டத்தட்ட எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டாய்.  இரவுகளில் நான் புலிகளின் முன்னர் மண்டியிடுகிறேன் அவை என்னை இப்படி இருக்கவிடப் போவதில்லை. நீ எப்படி இருந்தாயோ அது திரும்பவும் நிகழப் போவதேயில்லை. அந்தப் புலிகள் என்னைக் கண்டுபிடித்துவிட்டன அதைப் பற்றி நான் கவலையே கொள்ளப் போவதில்லை.

அந்தச் சிட்டுக்குருவியைப் போல - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உயிரைக் கொடுப்பதற்கு உயிரை எடுக்க வேண்டும் நூறு கோடி அனுபவங்களைக் கொண்ட கடலின் மீது நமது துயரம் தட்டையாகவும் உள்ளீடற்றதாகவும் விழும்போது வெள்ளைக் கால்கள், வெள்ளை வயிற்றைக்கொண்ட உயிரினங்கள் அழுகி  விளிம்பிட்ட கடலிடைத் திட்டுகளைக் கடக்கிறேன் சூழ்ந்திருக்கும் காட்சிகளுக்கு எதிராக கலவரத்தை நிகழ்த்தியபடி அவை நெடியதாக இறந்துகிடக்கின்றன. எனதருமைக் குழந்தையே அந்தக் குருவி உனக்கு என்ன செய்ததோ அதைத்தான் உனக்கு நான் செய்தேன் இளமையாய் இருப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில் நான் முதுமையில் இருக்கிறேன். சிரிப்பது மோஸ்தராக இருக்கும்வேளையில் நான் அழுகிறேன். நேசிப்பதற்கு குறைந்த தைரியமே தேவையாக இருக்கும்நிலையில் நான் உன்னை வெறுத்தேன். 

அந்தத் தாதியர்கள்- சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் போகும் அந்த மருத்துவமனையில் தாதியர்கள் கூடுதல் எடையுள்ளவர்களாக எனக்குத் தோன்றுகின்றனர். அவர்கள் தங்கள் வெள்ளை உடைகளில் தடிமனாக இருக்கிறார்கள் இடுப்புக்கும மேல் கீழேயும் பிருஷ்டங்களிலிருந்து கால்கள் வரையும். அவர்கள் எல்லாரும் 47 வயதினராய் தெரிகின்றனர் கால்களை அகற்றி நடக்கின்றனர். அவர்கள் தங்கள் தொழிலிலிருந்து தொலைவில் உள்ளவர்களாகத் தெரிகின்றனர். அவர்கள் தங்கள் கடமைகளுக்குச் செவிகொடுக்கின்றனர் ஆனால் தொடர்பின்றி. அவர்களை நான் நடைபாதைகளிலும் நீளத் தாழ்வாரங்களிலும் அவர்களைக் கடக்கிறேன். அவர்கள் ஒருபோதும் எனது கண்களைப் பார்ப்பதில்லை. அவர்களது கனத்த ஷூ நடையை மன்னிக்கிறேன் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களுக்கும் இடையில் அது ஒரு இடைவெளியை உருவாக்குகிறது. இந்தப் பெண்கள் கூடுதலாக இரை உண்டவர்கள் அவர்கள் கூடுதலாக மரணத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

அந்தம் வரை போ - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நீ முயற்சிக்கப் போகிறாய் என்றால் அந்தம் வரை செல். இல்லையெனில், முயற்சியைத் தொடங்கக்கூட வேண்டாம். தோழியரை மனைவியரை உறவினர்களை உனது மனத்தைக் கூட இழந்துபோக நேரிடலாம்.  மூன்று அல்லது நான்கு நாட்கள் பட்டினியிருக்கலாம் பூங்காவின் பெஞ்சில் உறையும் குளிரில் கிடக்க வேண்டியிருக்கலாம். சிறையாக இருக்கலாம். கண்டனத்துக்கு இலக்காக ஆகலாம். நகைப்புக்குரிய- தனிமைப்படுத்தலாக ஆகலாம். தனிமைப்படுத்தல் என்பது பரிசு. உன் முயற்சியில் எவ்வளவு திடத்தோடு இருக்கிறாயென்று சோதிக்க வருபவைதான் அவை எல்லாமும் புறக்கணிப்பையும் மோசமான சங்கடங்களையும் தாண்டி நீ முயற்சியைத் தொடர்ந்தால் உன்னால் கற்பனை செய்ய முடிவதைத் தாண்டியும் அதுவே  மற்ற எல்லாவற்றையும் விடச் சிறந்தது. நீ முயற்சி செய்யப் போகிறாய் என்றால், அந்தம் வரை செல். அதுபோன்ற உணர்வு வேறொன்று இல்லை.  நீ கடவுளர்களுடன் தனியாக இருப்பாய், இரவுகள் நெருப்பில்  சுடர்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையில் ஏறி பூரண எக்களிப்பை நோக்கிச் சவாரி செல்வாய் வலுத்த போராட்டத்தால் மட்டுமே அடையக்கூடிய இடம் அது. 

சிரிக்கும் இருதயம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

உனது வாழ்க்கை உன்னுடையது சவசவப்பான ஒப்புக்கொடுத்தலோடு அதைப் பிணைத்துவிடவேண்டாம் விழிப்புடன் இரு.  தப்பி வெளியேறுவதற்கான பாதைகள் இருக்கவே செய்கின்றன. எங்கோ வெளிச்சம் இருக்கிறது. அது அதிகமில்லாமல் இருக்கலாம் ஆனால் இருட்டை விரட்டும் வெளிச்சம் அது. விழிப்புடன் இரு. கடவுளர்கள் உனக்கு வாய்ப்புகளை அளிப்பார்கள். அவற்றைத் தெரிந்துகொள். அவற்றை எடுத்துக்கொள். உன்னால் மரணத்தை வெல்ல முடியாது ஆனால் வாழ்வில் இருக்கும் சவத்தன்மையை சில சமயங்களில் வெல்லமுடியும். அதை எவ்வளவு சீக்கிரம் கற்கிறாயோ அத்தனை கூடுதல் வெளிச்சம் அங்கே இருக்கும்.  உனது வாழ்க்கை உன்னுடையது.  அது இருக்கும்போதே அதைத் தெரிந்துகொள். நீ அற்புதமானவன் கடவுளர்கள் உனக்குள் குஷி ஏற்படுத்துவதற்காகக் காத்திருக்கிறார்கள். 

எனது தோல்வி - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நரகத்திலிருக்கும் சாத்தான்கள் குறித்து எண்ணிப்பார்க்கிறேன் கோபத்துடன் விளக்கின் குமிழை அழுத்தி  அணைத்தபடியும் எரிவித்தபடியும் இருப்பதைப் பார்த்துக் கொண்டே பூக்கள் நிறைந்த அழகிய மலர்குடுவையை வெறித்துப் பார்க்கிறேன். எங்களுக்குள் வார்த்தைகள் முற்றிப்போயிருந்தன. நான் இங்கே உட்கார்ந்து  இந்தியாவிலிருந்து வந்த சிகரெட்களைப் புகைத்துக் கொண்டிருக்கிறேன் வானொலியில் ஒலிக்கும் ஓபரா பாடகியின் பிரார்த்தனைகள் என்னுடைய மொழியில் இல்லை. வெளியே, எனக்கு இடப்புறம் உள்ள ஜன்னல் நகரத்தின் இரவு விளக்குகளைக் காண்பிக்கிறது இந்த எளியதொரு பயங்கரத்தைத் தகர்த்து விஷயங்களை மீண்டும் சீராக்கும் தைரியத்தை நான் வேண்டுகிறேன் ஆனால் எனது அல்பக் கோபம் என்னைத் தடுக்கிறது. இந்த சிகரெட்களைப் புகைத்தபடியே நரகம் என்பது நாம் உருவாக்குவது என்பதை நான் உணர்கிறேன். இங்கே ஊகங்களைச் செய்துகொண்டு நான் காத்திருக்கும் வேளையில் அவள் உட்கார்ந்தபடி விளக்கின் குமிழை அழுத்தி எரிவிப்பதும் அணைப்பதுமாக இருக்கிறாள் எரிவது மற்றும் அணைவது. 

பார்ஃப்ளை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நாங்கள் சேர்ந்து குடித்துக் கழித்த நாட்களை திரைக்கதையாக எழுதுவேனென்றும் அது திரைப்படமாகத் தயாரிக்கப்படுமென்றும் அவளது பாத்திரம்  அழகிய சினிமா நட்சத்திரத்தால் நடிக்கப்பட்டிருக்குமென்றும் 31 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன ஜேன் கற்பனைகூட செய்திருக்கமாட்டாள் “அழகிய சினிமா நட்சத்திரமா? அப்படியா, நாசமாய் போச்சு" என்று ஜேன் சொல்வது இப்போது கேட்கிறது. அது கேளிக்கைத் தொழில் ஜேன் அதனால் இனியவளே நீ போய் உறங்கு ஏனெனில் எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் உன்னைப் போல அச்சு அசலான ஒருத்தியை அவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அத்துடன் என்னாலும். (பார்ஃப்ளை - சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 1987-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படத்தின் பெயர்)

இணையற்ற அந்தச் சீமாட்டிக்கு இரங்கற்பா - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இரவில் உறங்கும் சில நாய்கள் நிச்சயம் எலும்புகளைக் கனவு காணவே செய்யும் நான் உனது எலும்புகளை சதையோடு அந்தக் கரும்பச்சை உடையோடு உயர் குதிகாலைக் கொண்ட பளபளக்கும் அந்தக் கருப்பு ஷூக்களோடு நினைவுகூர்கிறேன் நீ குடித்த போதெல்லாம் வசைமாரி பொழிவாய் எது உன்னை நெரித்துப் பிடித்திருக்கிறதோ அதிலிருந்து வெடித்து வெளிவரவிரும்பியதைப் போல உன் கேசம் கலைந்து விழும். அழுகிய இறந்தகாலத்தின் அழுகிய நினைவுகள் அழுகிய நிகழ்காலத்தில் என்னை விட்டு மரணம் வழியாக நீ ஒருவழியாக வெளியேறினாய்; நீ இறந்துபோய் 28 ஆண்டுகள் ஆகிவிட்டன மற்ற எல்லாவற்றையும் விட மேலதிகமாக உன்னைத்தான் நினைவுகூர்கிறேன் வாழ்க்கை கொண்டிருக்கும்  இந்த ஏற்பாட்டின் வியர்த்தத்தை புரிந்துவைத்திருந்தவள் நீ ஒருத்தி தான்; மற்ற அனைவரும் பொருட்படுத்தவே தகாத  சிறு கூறுகள்பற்றி அதிருப்தியைக் கொண்டிருந்தனர் அபத்தம் பற்றி அபத்தமான புகார்களைச் சொல்லியபடி; மிகக் கூடுதலாக தெரிவதுதான் உன்னைக் கொன்றது ஜேன். இந்த நாய் கனவுகாணும் உனது எலும்புகளுக்கு இதோ இந்த மது. 

பாடல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஜூலியோ தனது கிடாருடன் வந்து தனது புதிய பாடலைப் பாடினான். ஜூலியோ பிரபலமாய் இருந்தான் அவன் பாடல்களை எழுதினான் குட்டிச் சித்திரங்களுடன் கவிதைகளையும் சேர்த்து புத்தகங்களையும் வெளியிட்டான் அவை அருமையானவை. ஜூலியோ தனது சமீபத்திய காதல் உறவைப் பாடினான் ஆரம்பிக்கும்போது சிறப்பாக இருந்ததையும் அதன்பிறகு கசப்பாக ஆகிவிட்டதையும் பற்றிப் பாடினான். அவன் உபயோகித்த வார்த்தைகள் வேறென்றாலும் அவற்றின் அர்த்தம் இதுதான். ஜூலியோ பாடி முடித்தான். “நான் இன்னமும் அவளை நேசிக்கிறேன் அவளை என் மனத்திலிருந்து துடைக்க முடியவில்லை.” என்று சொன்னான். “என்ன செய்வது?”ஜூலியோ கேட்டான். “குடி" என்றான் மதுவை ஊற்றியபடி ஹென்றி. ஜூலியோ தனது கிளாசைப் பார்த்தபடி: “அவள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்?” “அனேகமாக வாய்வழிப்புணர்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்" என்றான் ஹென்றி. ஜூலியோ கிடாரை பெட்டியில் பூட்டி கதவை நோக்கி நடந்தான். ஹென்றி ஜூலியோவின் கார்வரை கூட நடந்து சென்று விட்டான். நிலா சுடர்ந்த பிரமாதமான இரவு அது ஜூலியோ காரை உசுப்பி திருப்பிச் செல்லும்போது ஹென்றி அவனுக்கு கையசைத்து விடையளித்தான். பின்னர் உள்ளே சென்று அம...

யுவதிகளும் பறவைகளும் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவர்கள் இளம் யுவதிகள் அவர்கள் தெருக்களில் நின்று ஆட்களை அழைப்பார்கள் ஆனால் பெரும்பாலான நாட்களில் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாத நிலையில் எனது விடுதி அறைக்கு வந்து சேர்வார்கள் அவர்களில் மூன்று நான்கு பேர்கள் வைனை உறிஞ்சியபடி முகத்தின் மேல் கூந்தல் படிய காலுறைகளுடன் ஓடியபடி வசைகளோடு கதைகள் சொல்வார்கள் எப்படியோ அவை  அமைதி நிறைந்த இரவுகளாய் இருந்தன அவர்களோ வெகுகாலத்துக்கு முன்னால் நான் சிறுவனாய் இருந்தபோது எனது பாட்டி வளர்த்த கானரி குருவிகளை எனக்கு நினைவூட்டினார்கள் அவை தீனி விதைகளில் எச்சம் போடும் அத்துடன் தங்களது குடிநீரிலும் அந்தக் குருவிகளோ அழகானவையாகவும் இருந்தன அவை சலசலத்தன ஆனால் அந்தக் குருவிகள் பாடியதேயில்லை. 

உனது உயிரை திருடனைப் போலப் பறித்துச் செல்வதற்காக ஜன்னல் திரையினூடாக ஊர்ந்து வரும் வைகறைக்கு நீ காத்திருக்கும் போது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

பாம்பு வளைக்குள் மறைந்திருந்தது அப்போது உன்னைப் பற்றிச் சொல் என்றாள் அவள். வேறொரு உலகின் குறுகிய முடுக்கில் வெகு காலத்துக்கு முன்னர் நையப் புடைத்தெடுக்கப்பட்டவன் என்றேன் நான். அவளும் சொன்னாள். ஏதோவொரு சந்துக்கு அடித்துத் துரத்தப்பட்ட பன்றிகள் நாம் எல்லாம், நமது புல் மூளைகள் வெட்டுக்கத்தியை நோக்கிப் பாடுகின்றன. அதிசயம், நீ வித்தியாசமானவளாக இருப்பது நான் சொன்னேன். நாங்கள் அங்கே அமர்ந்து சிகரெட்களைப் புகைத்துக் கொண்டிருந்தோம் காலை ஐந்து மணிக்கு.

சுயம் விதித்துக் கொண்ட காயங்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஸ்டீன்பெக், தாமஸ் உல்ப் பற்றிப் பேசினான் அதோடு அவர்கள் கூடிப் பெற்றது போலத் தோன்றும் எழுத்தை எழுதினான் அப்போது பிகுரோவா தெருவில்  மதுவிடுதிகளுக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கியிருந்தேன் அவனோ தூரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தான் நாங்கள் இருவருமே எழுத்தாளர்களாக விரும்பினோம் நாங்கள் பொது நூலகத்தில் சந்திப்போம் கல் பெஞ்சுகளில் அமர்ந்து எழுத்தாளர் ஆவது பற்றி பேசிக்கொண்டிருப்போம். அவன் தனது சிறுகதைகளைக் காண்பித்தான் நன்றாக எழுதினான் நான் எழுதியதை விட நன்றாக எழுதினான் அவனது படைப்பில் அமைதியும் வலுவும் இருந்தது என் படைப்பில் இல்லாதது என் கதைகள் கரடுமுரடாகவும் கடுமையாகவும் சுயம் விதித்துக்கொண்ட காயங்களோடும் இருந்தன எனது படைப்பனைத்தையும் அவனிடம் காண்பித்தேன் ஆனால் அவன் என் படைப்பைவிடவும் எனது குடியின் வல்லமை மற்றும் எனது உலகியல் அணுகுமுறையால் கவரப்பட்டான் ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு கிளிஃப்டன் கேஃபிடேரியாவுக்கு   நாளின் ஒரே சாப்பாட்டை உண்பதற்காகப் போவோம் (1941-ல் ஒரு டாலருக்கும் குறைவு) இருப்பினும் நாங்கள் பிரமாதமான ஆரோக்கியத்துடன் இருந்தோம். நாங்கள...

நீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நீல மீன், நீல இரவு, ஒரு நீலக் கத்தி எல்லாம் நீலமாக இருக்கிறது என்னுடைய பூனைகளும் நீலநிறத்தில் நீல ரோமம் நீல நகங்கள் நீல மீசைகள் நீலக் கண்கள். எனது படுக்கை விளக்கு  நீலமாய் ஒளிர்கிறது. உள்ளே, எனது நீல இதயம் நீல ரத்தத்தை இறைக்கிறது எனது விரல் நகங்கள், கால் நகங்கள் நீலம் அத்துடன் எனது படுக்கையைச் சுற்றி நீல ஆவி மிதக்கிறது எனது வாய்க்குள் இருக்கும் ருசியும் நீலம் அத்துடன் நான் தனியாக இறந்துகொண்டிருக்கிறேன் அத்துடன் நீலமாக.  

ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது -சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவர்கள் நல்லவர்களாகவோ மோசமானவர்களாகவோ இருக்கலாம் அவர்களை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரபலமானவர்கள் இறக்கும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது அவர்கள் பழைய கட்டிடங்கள் பழைய தெருக்களைப் போல நமக்குப் பழக்கமான வஸ்துக்கள் மற்றும் இடங்களைப் போல அவை அங்கே இருப்பதால் நாம் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதைப் போல. ஒரு தந்தையின் மரணம் அல்லது ஒரு வளர்ப்புப் பூனை அல்லது வளர்ப்பு நாயின் மரணத்தைப் போல ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது பிரபலமானவர்கள் இறக்கும்போது பிரபலமாக இருப்பதின் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் உடனடியாக இடம்பெயர்க்கப்பட வேண்டும் அத்துடன் அவர்களை அத்தனை எளிமையாக இடம்பெயர்த்துவிடவும் முடியாதென்பதாலேயே நமக்கு அது தனித்துவமான சோகத்தைத் தருகிறது. பிரபலமானவர்கள் இறந்துபோகும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது சாலையோரத்து நடைபாதைகள் வித்தியாசமாகத் தெரிகின்றன அத்துடன் குழந்தைகள் வித்தியாசமாகத் தெரிகிறார்கள் படுக்கைத் துணைகளும் நமது திரைச்சீலைகளும் நமது வாகனங்களும் வித்தியாசமாய் தோன்றுகின்றன. பிரபலமானவர்கள் இறக்கும்போது ஒரு விசித்திரம் ஆட்கொள்கிறது: நாம் தொந்தரவுக்குள்ளாகிறோம். 

சிதைந்து போதல் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  தாமதமாகவே இந்த எண்ணத்துக்கு வந்தடைந்தேன் இந்த நாடு நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு பின்னர் சென்றுவிட்டது அத்துடன் அனைத்து சமூக முன்னேற்றமும் நபருக்கும் நபருக்குமான நல்லுணர்வும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது அதோடு அங்கே பழைய சகிப்பின்மைகள் இடம்பெயர்ந்துவிட்டன. எப்போதும் இல்லாத அளவில் அதிகாரத்துக்கான சுயநல வேட்கைகள் நம்மிடம் உள்ளன பலவீனர்கள் வறியவர்கள் நாதியற்றவர்கள் முதியவர்கள் மீது மதிப்பின்மையையும் கொண்டுள்ளோம் அன்பை போராலும் விடுதலையை அடிமைத்தனத்தாலும் இடம்பெயர்த்துவருகிறோம். நாம் அடைந்த பலன்களை வீணடித்திருக்கிறோம் தொடர்ந்து  நாம் சிறுத்து வருகிறோம். நமது வெடிகுண்டு நம்மிடம் உள்ளது அதுதான் நமது அச்சம் நமது சாபம் மற்றும்  நமது அவமானம். நம்மையெல்லாம் பிடித்திருந்த மூச்சு நீங்கிக்கொண்டிருப்பதுதான் தற்போதைய பெரும் சோகம் அத்துடன் நம்மால் அழக்கூட இயலாது. 

வியட்நாமின் யானைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

யானைகளைச் சுடுவது, வெடிவைப்பது அப்போது அவர்களுக்கு பழகியிருந்தது, அவர் சொன்னார் எல்லா சத்தங்களுக்கும் மேலாக அவற்றின் சத்தங்களையும் கேட்க முடியும் ஆனால் மக்கள் மீது குண்டுபோடும்போது உயரத்தில் பறப்பீர்கள் நீங்கள் பார்க்கவே மாட்டீர்கள் ஒரு சின்ன வெளிச்ச மின்னல் உயரத்திலிருந்து தெரியும் அவ்வளவே ஆனால் யானைகளிடத்தில் நிகழ்வதைப் பார்க்க முடிவதோடு அவற்றின் கதறலையும் கேட்பீர்கள் நான் எனது சகாக்களிடம்  கேளுங்க தம்பிகளா நிறுத்துங்கள் என்று சொல்வேன் ஆனால் அவர்கள் வெறுமனே சிரிப்பார்கள் யானைகள் சிதறடிக்கப்படும்போது வாயை அகலப்பிளந்து விரைவாக இயங்கமுடியாத தமது தடிக்கால்களை உதறிக்கொண்டு வயிறுகளில் பொத்தலிடப்பட்ட பெரும் துளைகளிலிருந்து ரத்தம் வழிய தும்பிக்கைகளைத் தூக்கி அலறும் (அவை தகர்க்கப்பட்டிருக்காவிட்டால்)   அதற்குப்பிறகு எங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றிவிட்டுத் திரும்பிவருவோம் கவச வண்டிகள், குப்பைத் தொட்டிகள், பாலங்கள், மக்கள், யானைகள் மற்றும் மிச்சமிருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டோம்.   அவர் சற்றுக் கழித்துச் சொன்னார், யானைகள் குறித்து சங்கடமாக உணர்ந்தேன் என்று.