ஒரு நூற்றாண்டைக் காணப்போகும் புதுக்கவிதை, நவீன கவிதை வடிவத்தில் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்திய கலைஞர்களின் படைப்புகளை என்னளவில் தொகுத்துக் கொள்ளும்போது அவர்களது மரபையும் சேர்த்துத் தொகுத்துக் கொள்வது அத்தியாவசியமான பணியாகவே தோன்றுகிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்துவத்தையும், அலாதிக் குணத்தையும் தக்க வைத்திருக்கும் ஸ்ரீநேசனின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் சேர்த்து வாசிக்கும்போது என்ன மரபில் அவர் கிளைத்திருக்கிறார் என்று மெல்லிசாகத் தெரிய வருகிறது. நகுலன், ஆனந்த், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், அபி ஆகியோர் உருவாக்கிய சாரமான ஒரு கவிதை மரபின் தொடர்ச்சி என்று சொல்ல முடிகிறது. நகுலனில், ஆனந்தில் காலம் ஒரு அரூபப் பொருளாக, தொட முடியாத ஒன்றாகத் தோற்றம் கொள்கிறது. வாசகனால் அதைக் கைக்குள் வைத்திருக்க முடியாது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புதிய பண்பாட்டை உருவாக்கிய கவிஞர்களில் ஒருவராக எழுதத் தொடங்கிய ஸ்ரீநேசன், காலத்தை இயற்கையாக, காலத்தை மலையாக, காலத்தை ஏரியாகத் தொட்டுக் கவிதைகளாக்கும் போது இங்குள்ள பிராந்தியம் மற்றும் ஊர்களின் சுவைகளை, மூலிகை மணங்களைக் கொண்டதாக மாறுகிறது. சென்னைப...