Skip to main content

Posts

Showing posts from January, 2022

பேஹம் அக்தரின் நினைவில் - ஆஹா சாகித் அலி

1 ஒவ்வொரு செய்தித்தாளிலும் உனது மரணம்  சட்டகமிட்ட கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களாக  அஞ்சலிக் குறிப்புகளாக    வெதுவெதுப்பான , நீலமான , சாதா வானம்   உற்பாதம் நடந்த சுவடே இல்லாமல்   வரிகளுக்கிடையியே கூட தேம்புதல்களுக்கு   இடம் இல்லை . நான் உலகின் முடிவு குறித்து கதைக்க விரும்புகிறேன் . 2. இன்னும் உனது விரல்கள் பசிகொண்ட  பைரவியை அளக்கிறதா  அல்லது மண்போர்த்திய போர்வையை வெறுமனே  தொட்டுக்கொண்டிருக்கிறதா ? அந்த மரணம் தாங்கிய விதவை , கஜல்  இருண்ட அறைகளில் உன்னிலிருந்து மீளமுடியாமல்  அழுதுகொண்டிருக்கிறாள் வானத்தை அவநம்பிக்கை கொண்டு சூழும்  நிலவு நனைத்த வெண்ணிறத்தை  அவள் துயர் உடையாக அணிந்திருக்கிறாள்   காலிப் , மிர் , பெய்ஸ் ஆகியோரிடமிருந்து  தசாப்தங்களாகப் பக்குவம் பெற்ற ஸ்வரத்தைக் கொண்டு  பேரழிவுக்கு இறுதியாக பொலிவைக் கொடுத்துவிட்டாய் . ஸ்வரமற்ற ஒரு ராகத்தைக் கண்டுபிடிக்கிறேன் . 3 உன்னை குளிர்ந்த சேற்றுக்குள் நாடுகடத்தும்  மூடத்தனமும் வெள்ளைநிறமும் கொண்ட இந்தச் சவப்பேழை  தனது அறியாமையால் என்னை வியப்பிலாழ்த்துகிறது . காலிப் பெருமிதத்தை அணிந்துள்ளது அது  நாடோடியின் எதிரொலியைத் தோலுரித

அறிவின் தோற்றம் பற்றிய விசாரணை

  நவீன இந்திய சமூக உருவாக்கத்தில் பங்களிப்பு செய்த சீர்திருத்தவாதிகளில் ஒருவரும் துறவியும் கல்வியாளருமான நாராயண குரு, கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லும் விதமாக சம்வாத வடிவில் 15 பாடல்களாக எழுதிய நூல் ‘அறிவு’. மேற்கில் அறிவின் தோற்றம் குறித்து அறியும் ஆய்வுப்புலம் ‘அறிவுத்தோற்றப்பாட்டியல்’ (epistomology) என்ற பெயரில் உள்ளது. இந்தியாவில் வேதாந்த மரபின் ஒரு பகுதியாக அறிவு மற்றும் பிரக்ஞையின் தோற்றமும் அவற்றின் செயல்பாடுகளும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில் 1887 முதல் 1897 வரையிலான காலகட்டத்தில் நாராயண குரு, நவீன மனிதர்களின் மனப்போக்குக்குப் பதில் அளிக்கும் விதமாக, வேதாந்தத்தின் அடிப்படையில் எழுதிய பிரக்ஞையின் அறிவியலாக இந்த நூல் முக்கியமானது. நாராயண குருவின் வழிவந்த துறவியும் கேரளத்தின்  முன்னணி அறிஞர்களில் ஒருவருமான நித்ய சைதன்ய யதி, நாராயண குருவின் 15 பாடல்களுக்கும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தெளிவுரை ‘அறிவு - ஞானத்தின் ஆய்வியல் - நாராயண குரு’ என்ற நூலாகத் தமிழில் வெளிவந்திருப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும். திரும்பத் திரும்பப் படித்தும் விவாதித்தும் தெரிந்துகொள்ள வேண்டி

கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தை டெல்லியில் பார்த்துவிட்டு வரும்போது - ஆஹா சாகித் அலி

கொடீலியா உடைந்த மதில் சுவரில் தூக்கில் தொங்கும்போது லியர் ஓலமிடுகிறான் "நீங்கள் கல் மனிதர்கள்" பேரரசியும் அரசகுடிப் பெண்களும் சூடும் மல்லிகைப் பூக்கள் குவிந்திருந்த சாலையாக முன்பிருந்த சாந்தினி சௌக்குக்குள் நுழைகிறேன் வாசனைத் திரவியங்களை அவர்கள் இஸ்பஹானிலிருந்து வரவழைத்தார்கள் டாக்காவிலிருந்து துணிமணிகளும் காபூலிலிருந்து தைலங்களும் ஆக்ராவிலிருந்து கண்ணாடி வளையல்களும் வந்தன. இங்கே யாரும் அறியாமல் ஆகிவிட்ட பிரபுக்கள் மறக்கப்பட்ட துறவிகளின் சமாதிகளில் யாசகர்கள் தற்போது வசிக்கின்றனர் தெருவோர வியாபாரிகள் சீப்புகள் முகம் பார்க்கும் கண்ணாடிகளை சீக்கிய கோயிலுக்கு வெளியே விற்கின்றனர்.  தெருவுக்கு அப்பால் ஒரு கொட்டகையில் இந்திப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் படைவீரர்களால் கால்களில் சங்கிலி இடப்பட்டு  மகன்கள் தூக்கிலிடப்படுவதைப் பார்க்க இந்தச் சாலைவழியாக அழைத்துச் செல்லப்படும் கவிஞனும் பேரரசனுமான ஸஃபாரை நினைத்துப் பார்க்கிறேன். நாடுகடத்தப்பட்ட நிலையில் அவன் எழுதினான்:  "துரதிர்ஷ்டம் பிடித்த ஸஃபார் தனது வாழ்க்கையின் பாதியை நம்பிக்கையிலும் அடுத்த பாதியைக் காத்திருப்பிலும் கழித

திக் நியட் ஹானின் காதல்

நம் காலத்தில் வாழும் வியட்நாமைச் சேர்ந்த பவுத்தத் துறவி திக் நியட் ஹான், தன் இளம்பருவத்தில் இளம் பிக்குணியுடன் ஏற்பட்ட காதலைப் பற்றி தனது உரையொன்றில் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது. “ஒரு துறவியாக, காதலில் விழக்கூடாது. ஆனால், காதல் நமது உறுதிப்பாடுகளை உடைத்துவிடக் கூடியது.” என்று அந்த நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார். ’கல்டிவேட்டிங் தி மைண்ட் ஆப் லவ்’ என்ற நூலில் இதைப் பற்றி எழுதியுமிருக்கிறார். ஒரு மென்மையான காதல் கதை படிப்படியாக பவுத்த ஞானத்தைத் தெரிவிக்கும் செய்தியாக அவரது எழுத்தில் அது மாற்றம் பெறுகிறது. பவுத்தத்தில் ஒரு துறவியின் காதல் தவறாகப் பார்க்கப்படும் சூழ்நிலையில், திக் நியட் ஹான் தனது அனுபவத்தை நேர்மையாகப் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1950-களில் மக்கள் சேவையின் அடிப்படையில் பவுத்தத்தை உருவாக்க திக் நியட் ஹான் முயற்சி செய்தபோது அவர் அந்தப் பெயர் தெரியாத பிக்குணியைச் சந்தித்ததாகக் கூறுகிறார். “நான் அவளைப் பார்த்தபோது, அது முதல்முறை சந்திப்பாக நிச்சயமாக இல்லை. முதல்முறை சந்தித்திருந்தால் அத்தனை சுலபத்தில் அது நிகழ்ந்திருக்குமா? ஒரு பத்திரிகையில் நான்

ஒரு அஞ்சல் அலுவலகமும் இல்லாத நாடு - மூன்றாம் பகுதி - ஆஹா சாகித் அலி

"தொலைந்தவற்றின் முழுமையான வரைபடமும் தீவைக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்ததிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலன் நான். நான் உயிர்பிரிவதற்குள் வா. சூரிய ஒளிக்கு நேரே உள்ள, சில சமயங்களில் வெள்ளை, பின்னர் கருப்பாக, ஒரு பைஸ்லி மலராகத் தான் இருக்க வேண்டும்.  அதன் புறத்திலோ பசைகொண்ட தூய்மை, ஈரமாக இலையுதிர் காலத்தின் கடைசி நாட்டை நோக்கி மலர்கிறது -  அதை விலைக்கு வாங்கு, நான் ஒரேயொரு முறை வெளியிட்டு விடுகிறேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் ரத்து செய்யப்படுவதற்குள் வா.” இந்த கருத்த மழையில், விசுவாசமாய் இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை நீ உணரவே வேண்டும்.  “எதுவும் மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,” அவனது குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த காணாமலாக்கப்பட்ட கடித உறைகளைத் திற.”  நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள் இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன்.  இது உன்னுடைய வலி. அதை நீ உணரவே வேண்டும். உணர்,

தனி தனி குழந்தைகள்

அன்று நண்பகலில்  கம்பர் தெருவில் இருக்கும்  அடுக்குமாடிக் குடியிருப்பின்  முதல் தளத்து வீட்டின் ஜன்னல் கம்பிவலையில்  தோன்றிய முகம் முதலில்  ஏதோவொரு நீர்வண்ண ஓவியமாகவே தோன்றியது ஜன்னல்கள் வழியாக  உள்ளிருந்து வேடிக்கை பார்க்கும் முகங்களை  சமீபமாக  வீடுகளில் நான் பார்க்கவேயில்லை  அதனால் அந்தச் சித்திரத்தை  ஊன்றிப் பார்த்தேன் கம்பி வலையில் பதித்து  தெருவை வெறித்துக் குத்திப் பார்த்திருந்த  கண்கள்  மூன்று வயது குழந்தையுடையது உதடு தடித்து கண்கள் பழுத்து  ஓரங்களும்  கனவுகளற்று அழுந்தியிருந்த  அந்த முகத்தில்  ஆட்டிசம் உருகிக் கொண்டிருக்கிறது குட்டிப்பையா  குட்டிப்பாப்பா  மதி இறுகிய ஊர் இது  மதி இறுகிய தெரு இது  நீயும்  நானும்  உள்ளேயும் வெளியேயும்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்  தனி தனி  குழந்தைகள் .

சாந்த்னி சவுக், டெல்லி - ஆஹா சாகித் அலி

இந்தக் கோடைக்கால வீதியை விழுங்கு ,  அப்புறம் மழைக்காலத்துக்குக் காத்திரு .  மழை ஊசிகள்  நாக்கில் உருகுகின்றன .  இன்னும் தூரத்துக்குப் போவாயா ? வறட்சியின் ஓர் நினைவு உன்னைப் பிடித்திருக்கிறது  பசிகொண்ட வார்த்தைகளின் ருசி  உனக்குத் தெரியும் உப்பின் எழுத்துக்களை நீ அசைபோடுகிறாய்  உன்னால் இந்த நகரத்தை அலசிக் கழுவ முடியுமா ?  கடிபட்ட நாக்கிலிருந்து மறையும் ரத்தத்தைப் போலே .

டெல்லி ரயில் நிலையத்துக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் ஜோதிடரின் தலைவிதி - ஆஹா சாகித் அலி

“ பாருங்கள் , கோள்கள் சொல்வதற்கு கவனம் கொடுங்கள்” கடந்து செல்பவர்களிடம் உரக்கக் கத்துகிறார் . கடந்து செல்லும் ட்ரக் வண்டிகள் கிளப்பும் புழுதி கோள்களை மண்டுகின்றன . 

பொன்னொளி சூடிய நாட்கள்

மலையாளக் கவிஞர் பி. ராமன் தனது புதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சென்னை வருகிறார் என்று இசை சொன்ன போது பி. ராமனை 23 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றாலம் மெயின் பால்ஸ்க்குக் கீழே குளித்த ஈரம், சிரிக்கும் கண்களுடன் பார்த்தது ஞாபகத்துக்கு வரவில்லை. நிகழ்ச்சி அன்று காலை அவரைப் பார்த்தவுடன் நாம் பார்த்திருக்கிறோம் என்று சொன்னார். ஆமாம், ஆமாம் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். கலாப்ரியா நடத்திய குற்றாலம் பட்டறைக்காகப் போயிருந்தபோது, ஜெயமோகன், பாவண்ணன் ஆகியோருடன் பி. ராமனை பார்த்தது. இப்போது எனக்கு 47 வயது; அவருக்கு 49.  இசையின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மனைவியும் கவிஞருமான சந்தியாவுடன் வந்திருந்த ராமன் எங்களுடன் சகஜமாகிவிட்டார். சகஜமாகியவுடன் செல்போனை எடுத்து எனது 'ஞாபக சீதா' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். எனது கவிதையின் உள்ளடக்கம், வெளிப்பாட்டை மிகவும் நெருங்கும் மொழிபெயர்ப்புகள் அவை. அதே வேளையில் எனது கவிதையில் இல்லாத இசைத்தன்மை, பாடல் தன்மை அவர் வாசிக்கும் போது சேர்ந்துவிட்டிருந்ததை ரசித்ததோடு, எனது கவிதையில் இல்லாதது

இன்பாவின் கவிதைகளில் அக தேசம்

நெடிய தமிழ் மரபின் நினைவுகளைச் சுவடுகளாகக் கொண்டு, கட்டற்ற கண்களோடு, பல இன, மொழி, தேசங்களைச் சேர்ந்த மனிதர்களின் அடையாளங்களும், பண்பாடுகளும் சேர்ந்த சமைக்கப்பட்ட உலகப் பெருநகர் வீதியில் மனத்தடை இல்லாமல், வேடிக்கை பார்த்தபடி சுதந்திரமாகப் பயணிக்கும் புலம்பெயர்ந்தவள் காணும் காட்சிகள் இந்தக் கவிதைகள். ஊரிலிருந்து பிழைப்புக்காக வந்து நகரத்தில் சௌகரியமான வாழ்க்கையையும் தன்னிறையையும் அனுபவித்துக் கொண்டே பிறந்த பூர்விகத்தைப் பற்றி, தாய், தந்தையரைப் பற்றி, தெருவைப் பற்றி ஏக்கக் கவிதைகள் ஒன்றுகூட இத்தொகுப்பில் இல்லை என்பதுதான் எனது உற்சாகத்துக்கு முதன்மையான காரணம். இன்பா, சர்வசாதாரணமாக தஞ்சாவூரை மட்டுமின்றி எல்லைகளைக் கடந்துவிடுகிறார். 'கருப்புக் கடவுச்சீட்டில் ஓட்டையிடும்போது’, தேசப்பிதாவின் நெஞ்சில் ஏற்பட்ட வலியை சற்றே பரிவுடன் அனுபவித்து விசாரித்துவிட்டு, கல்லாங் ஆற்றின் கரையில் நாடுமாறியாக சகஜமாக ஆகிவிடுகிறார். மரபுக் கவிதையோடு பரிச்சயம் இருந்தாலும் அந்த மரபைப் புனிதமாகவோ, பெருமிதமாகவோ அணுகும் மனோபாவம் இல்லாததே இன்பாவை நவீன குணம் கொண்ட கவிஞர் ஆக்குகிறது. உலகளாவிய தளத்தில் நின்றுகொண்டு,

அநித்தியத்தின் மேடையில் இசை தூவும் அட்சதை க்ஷணங்கள்

இசையின் 'உடைந்து எழும் நறுமணம்' கவிதைத் தொகுதியில் முதல் காயம் என்றொரு கவிதை இருக்கிறது. முதல் காயத்தில் போட்ட வெள்ளைக்கட்டைக் கொக்காகப் பார்க்கும் அந்தச் சிறுமி, ஆண்ட்ராய்ட், ஐபோன் தொலைபேசிக்குப் பழக்கமானவளாக இருக்க வேண்டுமென்று தோன்றியது. தனக்கு ஏற்பட்ட வலியை, காயத்தை ஒரு காட்சியாக, ஒரு படமாகப் பார்ப்பதற்கான முறைப்பாட்டையும் தகவமைப்பையும் இன்றைய தலைமுறையினர் பெற்றிருக்கிறார்கள். தனது காயத்தை அவள் ஒரு கொக்காகக் கற்பனை செய்யும்போது அவளுக்குக் கொடுக்கப்பட்ட வலியிலிருந்து அவள் நழுவி அதை வேடிக்கையாக மாற்றிவிடுகிறாள். எனது வலியை நான் காட்சியாகப் பார்க்கும்போது, எனது வலி ஒரு பாவனையாக, நகலாக உடனடியாக ஆகும்போது அங்கே லட்சியமும் நழுவத் தொடங்கிவிடுகிறது.   லட்சியம், உன்னதம், தத்துவம், நம்பிக்கை, அறம் அவை சார்ந்த தீவிரங்களும் கற்பனைகளும் முடிந்துபோன சாலையாக அறிவிக்கப்பட்டே தொடங்கிய இந்த நூற்றாண்டுக்கும், பெருகிய ஊடகத் தொடர்பு தொழில்நுட்பங்களுக்கும் நிச்சயமாகச் சம்பந்தம் இருக்கிறதென்றே தோன்றுகிறது. தன்னை நூற்றுக்கணக்கில் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கும் வெளிச்சக் கண்ணாடி அறையில் லட்சியமும்

குழந்தைகள் கதை எப்போது பெரியவர்களுக்கான கதையாகிறது?

குழந்தைகள் கதை எப்போது பெரியவர்களின் கதையாக மாறுகிறது என்கிற கேள்வி திடீரென்று சில நாட்களாக எனக்குள் இருந்து கொண்டிருந்தது.  மையநீரோட்ட கார்ப்பரேட் ஆன்மிகவாதிகள், தன்னம்பிக்கை எழுத்தாளர்கள், மேலாண்மைத் திறனைச் சொல்லிக் கொடுப்பவர்கள் பெரும்பாலான பேர், குழந்தைகளுக்கான கதைகளைத் தான் பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெரும்பான்மையான பெரியவர்களுக்கு, குழந்தைகளாக இருப்பதில் தான் ஈடுபாடும் இருக்கிறது. தஸ்தயவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் 'விசாரணை அதிகாரி' அத்தியாயத்தில் சாத்தானின் தரப்பாக வரும் விசாரணை அதிகாரியான திருச்சபை பாதிரியார், மனிதர்களுக்கு குழந்தைகளுக்கான பாடல்களும் கூட்டாக விழுந்து வணங்குவதற்கு ஒரு சொரூபமும் தான் தேவை, இயேசு கருதியது போல, நிபந்தனையற்ற சுதந்திரம் அல்ல என்று வாதிடுகிறார். கிட்டத்தட்ட அதுவே சரிதான் என்று தோன்றுகிறது.  நமது பிரதமர் அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி குழந்தைகளுக்கான கதைகளை குழந்தைகளுக்குச் சொல்லும் பாணியில்தானே வெவ்வேறு உடைகளில் வெவ்வேறு தலைப்பாகைகளில் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கதைகளில் மரணமே இடம்பெறுவதில

மதியத்தில் டெல்லிக்கு திரும்புவதை நான் கனவு காண்கிறேன் - ஆஹா சாகித் அலி

புராணாகிலாவில் நான் தனியாக  தர்யாகஞ்சுக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருக்கிறேன் அது வந்துகொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்  நானோ வெறுங்கையோடு நிற்கிறேன்  " ஏறு , ஏறு " என்று யாரோ கத்துகிறார்கள்  “ வருடக்கணக்கில் நான் இந்தச் சில்லறையை உனக்காகச் சேர்த்துவைத்திருக்கிறேன் . பார் "  ஒரு கை திறக்கிறது , முழுக்க வெள்ளி நாணயங்கள்   “ ஏறு ஏறு " அந்தக் குரல் நிற்கவேயில்லை   அங்கே எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை . ஒரு போலீஸ்காரன்  கையில் விலங்குகளுடன்  எனது பயணச்சீட்டைக் கேட்கிறான் . நான் ஓடும் பேருந்திலிருந்து குதித்திறங்குகிறேன்  எனது கேசத்திலிருந்து வியர்வை வழிகிறது  நான் டால் மியூசியத்தை ஓடிக் கடக்கிறேன்  டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தின் தலைப்புச் செய்திகளை  கடக்கிறேன் , பீகார் சிறையில் குருடாக்கப்பட்ட கைதிகள்  நிலச்சுவான்தார்களால் தீக்கிரையாக்கப்பட்ட அரிஜன கிராமங்கள்  ஓடி இரைக்கிறேன்  நான் கோல்சா திரையரங்குக்கு வெளியே  தர்யாகஞ்சில் நிற்கிறேன் . சிகரெட்டைப் பற்றவைத்தபடியே சிரித்தபடி  சுனில் அங்கே நிற்கிறான்   “ பத்து வருடங்கள் இருக்கும் . நீ மாறவேயில்லை . உனது

அன்பே சாஹித் - ஆஹா சாகித் அலி

அன்பே சாஹித், எந்தக் கருத்தும், பெரும்பாலான ரஷ்யர்களுக்கு இருப்பதைப் போன்ற பிரிக்க முடியாத ரஷ்யா குறித்த கருத்தும் கூட, ஒரு முழு ஜனத்திரளுக்கு எதிரான போரை நியாயப்படுத்த முடியாது. - எலினா போனர், செசன்யா குறித்து யெல்ட்ஸினுக்கு எழுதப்பட்ட கடிதத்திலிருந்து... எந்த மனித உயிரோ ஒரு மனிதக் கூட்டமோ, ஒரு நகரத்துக்கு மரண தண்டனை தீர்ப்பை அளிக்கும் உரிமையை வைத்திருக்கவில்லை. - சார்லஸ் சிமிக் தொலைதூரத்து நாட்டொன்றிலிருந்து நான் உனக்கு எழுதுகிறேன். எங்கே நாம் வாழ்கிறோமோ அதிலிருந்தும் தொலைவில். நீயும் இருக்க முடியாத அந்த இடத்திலிருந்து. ஒவ்வொருவரும் அவனது முகவரியை தங்கள் சட்டைப் பையில் வைத்திருந்தால் தான் அவனது சடலமாவது வீட்டை வந்தடையும். நகரத்தில் வதந்திகள் எங்களை வந்தடைவதற்குள் வழிதப்பி விடுகின்றன. ஆனால் செய்தி இன்னமும் எல்லைப் பகுதி நகரங்களிலிருந்து எங்களை வந்தடைகின்றன. ஆண்கள் சில்லிடும் நீரில் வெறுங்காலுடன் நிற்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெண்களோ உள்ளே தனியாக இருக்கின்றனர். ராணுவ வீரர்கள் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் உடைத்து நொறுக்குகின்றனர். வெறும் கைகளால் அவர்கள் நமது வீடுகளை சுக்குநூ

நான் பிறந்த க-வி-தை 8 - கல்யாண்ஜி - பார்த்தவன், பார்த்தல், பார்த்தலுக்குப் பிறகு

  அந்நியத்தன்மையும், ஆனால் வசீகரமும் கொண்ட பெயராக, எனது கல்லூரி இளங்கலை கணிதம் முதல் ஆண்டில், தமிழ் பாடம் வழியாக அறிமுகமானவர் கல்யாண்ஜி. நாம் பெரும்பாலும் சாமானியம் என்று எண்ணியோ, அனிச்சையாகவோ, பழக்கமாகவோ கவனிக்காமலோ, ரசிக்காமலோ, பாராமல் கடக்கும் காட்சிகளை, நிகழ்வுகளை, சின்ன அழகுகளை, சிறிய நுட்பங்களை, ஒரு ஓவியனின் நுட்பத்தோடு பார்ப்பதற்கும் அவதானிப்பதற்குமான விழிப்பையும் கல்வியையும் அளிப்பவராக முதல் கவிதையிலேயே எனக்கு அறிமுகமானார். அந்தக் கவிதையின் தலைப்பே 'வாழ்க்கை'. மிக எளிய கவனிப்புகள் தான்; கவனிப்புகளை அடுக்கிக்கொண்டு போய், 'என் கக்கத்துக் குடையைப் போல பெரிதாகக் கிழிந்து போச்சோ அவன் வாழ்க்கை' என்று சொல்லும் போது, அதன் தலைப்பான 'வாழ்க்கை'யும் வாசகனுக்குள் சேர்ந்து ஒட்டுமொத்த துக்கமாகக் கவிழ்ந்துவிடுவதைத் திரும்ப திரும்ப அந்தப் பிராயத்தில் படித்து உணர்ந்திருக்கிறேன்.  வாழ்க்கை   இறக்கை சிலுப்பும் காக்கையை எச்சில் இலையைத் தின்றபடி யோசனை செய்யும் பசுமாட்டை நனைந்த குரலில் பூ விற்று நடந்து போகும் சிறு பெண்ணை ஓட்டல் புகையை ரோட்டின்மேல் பெட்ரோல் சிதறிய கோலத்தை பாராம