Saturday, 13 July 2013

வள்ளுவர் கோட்டமும் எதிரேயுள்ள பனைமரங்களும் ஷங்கர்ராமசுப்ரமணியன்கவிஞர் விக்ரமாதித்யன் தன் கவிதைகளில் சிலவற்றின் பின்னணி குறித்து எழுதிய கவிமூலம் கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் சேர்ந்து கங்கோத்ரி என்னும் புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. கயல்கவின் பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் நூல் இது. கங்கோத்ரி என்று அவர் தன் நூலுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பும் கவனிக்கப்பட வேண்டியது. தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தாமிரபரணியின் ஞாபகம் உள்ள ஒருவன், கங்கையை விடுதலையாய், நிவர்த்தியாகப் பாவிக்கும் ஒரு இடத்தில் இத்தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறான்.
விக்ரமாதித்யனின் உரைநடை ஒய்யாரமான எழிலுடன் இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. இன்று கங்கோத்ரியை வாசிக்கும் போதும் அந்த எண்ணம் மாறவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கைவந்திருந்த உரைநடை, அதன்பிறகு மேலதிக சாத்தியங்களை அடையவே இல்லை. தன் உரைநடையை, சிறுநகர டவுன் பஸ் போல பராமரிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார் அண்ணாச்சி. அதற்கு உதாரணம் தற்போது அவர் தீராநதியில் எழுதிவரும் தன்வரலாற்றுத் தொடர். 
கங்கோத்ரி தொகுப்பில் ‘வள்ளுவர் கோட்டத்துத் தேர் கவிதையின் பின்னணி குறித்து அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. வள்ளுவர் கோட்டத்தை அவர் திராவிட அரசியலின், தமிழர் பண்பாட்டின் எழுச்சியாகப் பார்த்து எழுதிய கவிதை இது. கலைஞர் கருணாநிதியின் மீதுள்ள மரியாதையையும் அந்தக் கவிதையிலும், கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
மனித நாகரிகம் மேன்மை, பெருமிதம், வளர்ச்சி மற்றும் வெற்றியை எப்படி பார்க்கிறது என்பதை வள்ளுவர் கோட்டத்து தேர் வழியாக நாம் பரிசீலிக்க முடியும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சைப் பெரிய கோவில் தொடங்கி வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம், வள்ளுவர் சிலை போன்ற நினைவுச் சின்னங்கள் வரை இந்தப் பரிசீலனையை நாம் நீட்டிக்க வேண்டிய காலம் இது. அவசர அவசரமாக கட்டப்பட்டு, தற்போது அனாதையாக கைவிடப்பட்டிருக்கும் தலைமைச் செயலக கட்டடமும் நம் ஞாபகத்துக்கு வரவேண்டும்.
வள்ளுவர் கோட்டம் தற்போது இருக்கும் பகுதி, முன்பு ஏரியாக இருந்து பின்பு குப்பை மேடாக மாறிய இடத்தில் கட்டப்பட்டது. வள்ளுவர் கோட்டம் கட்டுவதற்குத்தான், நவீன தமிழக வரலாற்றில், பாறைகள் மலைகளிலிருந்து வெட்டப்படுவது தொடங்கியிருக்க வேண்டும். வள்ளுவர் கோட்டம்தான் நவீன தமிழ் சமூகத்தின், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு தர்க்கம் சார்ந்த  ‘பகுத்தறிவு நியாயத்தின் முதல் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். இன்று தமிழகத்தில் மலைகள் காணாமல் போனதற்கும், நீராதாரங்கள் மற்றும் விளைநிலங்கள் காணாமல் போனதற்குமான குறியீடாக வள்ளுவர் கோட்டம் பழம்பெருமையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு நிற்கிறது. அந்தப் பழம்பெருமையை, இன்றைய ‘வளர்ச்சியின் பெருமிதத்தோடு சேர்த்து அருமையான நவீன கவிதையாக ஆக்கியுள்ளார் அண்ணாச்சி. கவிதையின் முடிவில் விமர்சனமும் இருக்கிறது.
வள்ளுவர் கோட்டதுத் தேர்
மேல்வானில்
முக்கால் நிலா
மிச்சம் மிஞ்சாடியாய்
நட்சத்திரங்கள் சிதறித்தெறித்து
இருளோ சமுத்ரமோ
என்றிருக்கும் மரநிழல்
தன்னந்தனியே நிற்கும்
தேர் அம்சமாய் அழகாய்
திருவாரூர் விட்டு வந்ததுபோல
திராவிடர் நாகரிகத்தின் சாட்சியமாக
சாலையில் வேகவேகமாய் கார் ஆட்டோக்கள்
சற்றேனும் நின்றுபார்க்க யார்தான் ஆள்
கட்டியவனுக்கே அழைப்பில்லை அன்று
காலசுழற்சியில் மீண்டுமவன் ஆண்டான்
கால்பரப்பி நிற்குமது கட்டளையிடுது
கவியெழுதச் சொல்லி
பார்வைக்குப் பெண்ணின் வடிவம்
பார்க்கப் பார்க்க பரவசம்
நின்ற நிலையிலேயே நின்றாலெப்படி
நெடுகவும் ரதவீதி சுற்றி வரவேண்டும்
உற்சவர் இல்லை ஐயர் இல்லை
ஒரு வடமுமில்லை ஓட்டமுமில்லை
இதுமட்டும் வீம்புக்கு இருந்த இடத்திலேயே
இருக்கும் என்றென்றைக்கும்.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் உண்மையும், புத்தூக்கமும், படைப்பாற்றலும், சிந்தனையும், எதிர்ப்புணர்வும் அவசியம். இல்லையெனில் நின்ற நிலையிலேயே நிற்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும். வள்ளுவர் கோட்டத்துத் தேரை நாம் கலைஞர் கருணாநிதியாகவும் உருவகிக்க முடியும். அதற்கான எல்லா திறப்புகளையும் இக்கவிதை கொண்டுள்ளது. ஒருவகையில் தமிழ் தன்னிலையின் வெற்றியையும், தோல்வியையும் , சமரசங்களையும், வரையறைகளையும்  ஒருங்கே உருவகிப்பவராக அவர், வள்ளுவர் கோட்டத்துத் தேர் போலவே இருக்கிறார்.
வள்ளுவர் கோட்டத்தின் பக்கவாட்டில் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி, திநகர் போகும் திசையில், மர அறைகலன்கள் விற்கப்படும் கடைவாசல் நடைபாதையில் இரண்டு பனைமரங்கள் இன்னும் விட்டுவைக்கப்பட்டு அதிகம் கண்ணுக்குப் படாமல் நிற்கின்றன. பரபரப்பான சென்னைக்கு நடுவே ஒரு கிராமம் ஒளிந்திருப்பதை அந்தப் பனைமரங்கள் ஞாபகப்படுத்துகின்றன. இந்தப் பனைமரங்கள் வள்ளுவர் கோட்டத்துத் தேரை விடப் பழையவை. இதுவும் ஒருவகையில் நம் தொன்மையின் சின்னங்கள்தான்.          


Sunday, 7 July 2013

பாலத்தின் மீது காதலர்கள்ஷங்கர்ராமசுப்ரமணியன்

அவன்
ஏரியை நோக்கி
வெளியே அந்தரத்தில்
கால்களை சேர்த்து தொங்கவிட்டிருந்தான்
அவள் 
அவனது
தோளில்
சாய்ந்திருந்தாள்
ஒரு உடைந்த பாலத்தின் கல்நுனிதான்
ஆனால்
பெரியதொரு
மஞ்சள் சிகப்பு பூக்களாக
அவர்கள் அங்கே
ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர்
அவர்களின் அந்த சாய்மானம் போதும்
அந்த மெல்லிய கோட்டுச்சித்திரம் போதும்
சீக்கிரத்தில் மறைய இருக்கும் அந்த சாயங்காலம் போதும்
அவர்கள் அமர்ந்திருக்கும்
உடைந்த பாலத்தின் சிறுநுனி போதும்.


Wednesday, 3 July 2013

பறக்கும் அனுபவம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

அந்த அபாய சவாரியில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருமே மரணக்கூச்சலை இட்டனர். அந்த தீம்பார்க் முழுவதுமே எழும் கூச்சலின் பின்னணி இப்போது எனக்குப் புரிந்துபோனது. அவர்கள் எல்லாருக்கும் மரண சந்தர்ப்பத்தைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருக்கிறது. முற்றிலும்  மனித இயற்கைக்கும், புவிஈர்ப்பு விசைக்கும் எதிரான ஒரு சவாரி அது. அடுக்கடுக்காக வளைந்து, பின்னி சுற்றிச் சுழலும்  தண்டவாளப் பாதையில் இருக்கும் ஒரு சிறு பொம்மை வண்டியில் ஏறி, வேகம் முடுக்கப்பட்டு நம் உடலை பக்கவாட்டாக, தலைகீழாக, முன் பின்னாக கவிழ்க்கும் அந்தச் சவாரியை நடுவில் நாம் நடுவில் நிறுத்த நினைத்தாலும் முடியாது. நம்மோடு சிறுவர் சிறுமியரும் இருக்கிறார்கள் என்ற கூச்சத்தைக் கூட மறந்து, அந்த ரோலர் கோஸ்டரை இயக்குபவரைப் பார்த்து சத்தமாக கூவி நிறுத்தச் சொன்னேன்.  கீழே இருக்கும் அவர் அதையும் ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார். பின்னர் சவாரியின் ஒரு புள்ளியில் உடலைப் பிணைத்திருக்கும் கம்பியை இறுக்கமாகப் பிடித்து, கால்பாதத்தை நான் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்கு முன் நீட்டி, வண்டியின் முன்புறத்தில் அழுத்திப் பிடிக்கப் பழகினேன். மொத்தமே ஐந்துக்கும் குறைந்த நிமிடங்கள்தான் எனது குடல் எல்லாம் நெஞ்சுக்குள் ஏறியது போல இருந்தது. மூளை உள்ளிட்ட உடல் பாகங்கள் குலுங்கி அமர்ந்திருந்தன.  இன்னும் ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து அதில் நான் ஈடுபட்டிருந்தால் அவ்வளவுதான். நான் இறங்கினேன்.  மரணத்துக்கு நிகரான மெய்நிகர் அனுபவம் இது. 

யோகப் பயிற்சிகளில் கண்ட் யோகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. உடல் உறுப்புகளைத் தனியாக கழற்றி சேர்ப்பது அது. ஷீர்டி சாய் பாபா போன்ற ஞானிகள் அத்தகைய முறைகளில் வெற்றிகரமாக ஈடுபட்டதாக சொல்லப்படுவதுண்டு. இந்த ரோலர் கோஸ்டர் அனுபவம் கண்ட் யோகத்துக்கு ஒப்பானது. கழன்றுபோன உள்ளுறுப்புகளை, மறுபடியும் அதனதன் இடத்தில் பொருத்த, எனக்கு 500 எம்எல் கோக் தேவைப்பட்டது. நவீன வாழ்வின் ரோலர் கோஸ்டர் அனுபவத்தை, அன்றாடம் அனுபவிப்பவர்களுக்கு கோக் திரவம் ஏன் தேவையாக இருக்கிறது என்று அப்போதுதான் உணர்ந்தேன்.

இந்த ரோலர் கோஸ்டர் அனுபவத்துக்குப் பிறகு, உயரங்கள் தொடர்பான, பார்வை அனுபவத்தில் கூடுதல் வியப்புணர்வை உருவாகியிருந்தது. அந்த  வியப்புணர்வுதான் ஏற்கனவே பலமுறை பார்த்த படமான பேபீஸ் டே அவுட் படத்தை டிவியில் உட்கார்ந்து ஒரு நாள் மீண்டும் பார்க்கத் தூண்டியது.
கட்டடங்களின் உயர அபாயங்களைப் பற்றிய அறிவு இன்னும் முதிராத குழந்தை அது. அந்த அறிவின் இன்மையில், கவலையின்றி சாலைகளைக் கடந்து, ஜாலியாக கிரேன் பலகை வழியாக மேலேறிப் போகிறது. சர்வசாதாரணமாக அதில் இருந்து தவழ்ந்து இடம் மாறுகிறது. வானைத் தொடும் கட்டடத்தின் உச்சிவிளிம்பில் உட்கார்ந்து வில்லன்களைப் பார்த்து சிரிக்கிறது. 

வில்லன்களான பெரியவர்கள் உயரங்கள் பற்றிய அறிவு இருப்பதால் பயப்படுகின்றனர். குழந்தையால் சொல்லொண்ணாத பாதிப்புக்குள்ளாகின்றனர். பேபீஸ் டே அவுட் சினிமாவை, உயரங்களின் பயமற்ற அனுபவம் என்று சொல்லலாம். நாம் குழந்தையின் மனநிலையிலிருந்து தான் சினிமாவில் காண்பிக்கப்படும் துணிகர உயரங்களைப் பார்க்கிறோம்.


ட்ரூ லெஜண்ட்ஸ் படத்தில் நாயகன், தன்னையும் தன் குடும்பத்தையும் நாட்டிலிருந்தே துரத்திய, மனைவியின் அண்ணனைப் பழிவாங்குவதற்காக ஒரு மலைக்குள் தலைமறைவாக வசித்து, தனது சண்டைத்திறனை வலுப்படுத்தப் பயிற்சியில் ஈடுபடுகிறான். ஒரு கற்பனை குருவை வரித்துக்கொண்டு, அவரது மற்றொரு சகாவுடன் ஒரு உயரமான கோட்டைச் சுவரின் விளிம்பில் வாள் சண்டையிடுகிறான். அந்தக் கோட்டைச் சுவரும் அவனது மனக்கற்பனை வெளியாகவே படத்தில் சித்தரிக்கப்படுகிறது. அந்தச் சண்டை முழுமையாக புவிஈர்ப்பு விசைக்கு எதிரான யுத்தம். அவர்கள் இருவரும் கத்திபோன்ற கோட்டைச் சுவர் விளிம்பில் காற்றில் மிதந்து வாள் சண்டையிடுகின்றனர். அவர்கள் சரியாக கோட்டையின் விளிம்பில் கால்பதித்து விடுகின்றனர். இருவரும் தரையில் இறங்குவதே இல்லை. ட்ரூ லெஜண்ட், கராத்தே கிட் படங்களின் உள்ளடக்கமாக சண்டையும், நாயக வெற்றியும் இருந்தாலும் அவற்றுக்கு வேறொரு அனுபவத்தைத் தருவது அந்தப் படத்தின் கதையில் வரும் பிரம்மாண்ட நிலக்காட்சிகள்தான்.   
ட்ரூ படத்தைப் பார்த்த அன்று இரவு உறக்கத்தில் கட்டிலிலருந்து கீழே விழுந்தேன். கட்டிலுக்கும் சுவருக்கும் இடையில் உள்ள இடுக்கில் கிடந்தேன். கால் விரல்களில் தோல் உரிந்த வலி. இடுப்பிலும் முதுகிலும் அடிபட்டிருந்தது. நான் ட்ரூ லெஜண்டின் நாயகனைப் போல கனவில் உடலைப் பறக்க வைக்க முயன்றிருக்கிறேன். சாதாரணமாக நழுவி விழுந்திருந்தால் உடலின் இத்தனை இடங்களில் வலிக்கு வாய்ப்பே இல்லை.  

நான் பறந்ததற்கு காரணம் ட்ரூ லெஜண்ட்டாக இருக்கலாம். நான் விழுந்ததற்குக் காரணம் பத்து நாட்களுக்கு முன் சென்ற ரோலர் கோஸ்டர் சவாரி தான். ரோலர் கோஸ்டர் சவாரி சென்றபிறகு என் உடல் கீழே விழுவதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருந்திருக்க வேண்டும். நீ இனி தரையிலேயே படு. கீழே விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்றாள் என் மனைவி.
கனவுகளில் இரண்டுவகை இருப்பதாக கூறுகிறார் கவிஞர் பாதலேர். முதல்வகை, அன்றாட பகல் வாழ்க்கையின் விவரங்கள், முன்னீடுபாடுகள், ஆசைகள், ஒழுங்கீனங்கள் ஆகியவை தாறுமாறாக நினைவின் பிரம்மாண்ட திரையில் குறுக்குமறுக்காக கலைந்து தோன்றுவது. இரண்டாவது வகை, கனவு காண்பவனின் இயல்புக்கு மாறான, அனுபவத்துக்கு அப்பாற்பட்ட, ஆசைகளுக்கு நேர்மாறாக வரும் கனவு என்கிறார். இந்த இரண்டாம் வகைக் கனவைத் தான் புராதன மனிதர்கள் தெய்வீக அனுபவத்துடன் இனம் கண்டதாக குறிப்பிடுகிறார்.


சினிமா என்ற அனுபவத்தை இந்த இரண்டு வகை கனவுகளும் சேர்ந்து பெற்றெடுத்த குழந்தை என்று சொல்லமுடியும். ஜேம்ஸ் காமரூனின் அவதார் திரைப்படத்தின் முப்பரிமாண அனுபவம்  என்னைச் சுற்றியுள்ள பொருட்கள் மற்றும் உயிர்களைப் பார்க்கும் காட்சித்துவத்தை முற்றிலும் மாற்றியது. எதார்த்தத்தில் நமது அனுபவங்களை மீண்டும் நினைவுகூறும்போது அது இருபரிமாணத்தில் காட்சியளிக்கிறது .நான் ஒரு அனுபவத்தைக் கடக்கும் தற்கணத்தில், ஒரு த்ரீ-டி சினிமாவுக்குள் இருப்பதாகத் தோன்றியது .
 .

ஒருவகையில் சினிமா தரும் காதல் மற்றும் பாலியல்ரீதியான புலன்துய்ப்பும், புவிஈர்ப்புவிசைக்கு எதிராக நாம் ‘பாதுகாப்பாக பறக்கும் அனுபவமே.
சமீபத்தில் இந்தி நடிகை ஜியாகானின் தற்கொலை செய்திகளை வாசித்துக் கொண்டிருந்ததன் தொடர்ச்சியாக, ஜியாகானின் அறிமுகத் திரைப்படமான நிஷப்த் திரைப்படத்தை பார்த்தேன். ராம் கோபால் வர்மாவின் தோல்விப் படங்களில் ஒன்று அது.
60 வயதைக் கடந்த புகைப்படக் கலைஞர் விஜய்யின் (அமிதாப் பச்சன்), வாழ்க்கைக்குள் அவரின் அன்றாட அலுப்பிலிருந்து மீட்கும் ஒரு திடீர் தேவதையாக, 18 வயது மகளின் கல்லூரித் தோழியாக விடுமுறையைக் கழிப்பதற்கு ஜியா(படத்திலும் அவர் பெயர் ஜியாதான்) வருகிறார். விமானத்தின் கண்ணாடியை பறவை மோதிய அனுபவத்தை விஜய் அடைகிறான்.  பத்தே நாட்கள்தான். ரோலர் கோஸ்டர் போல, வாழ்வின் அந்தியில் இருக்கும் அமிதாப்பின் வாழ்க்கையை தன் வண்ணங்களால், இளமையின் துடிப்பால், வேகத்தால் பற்றி,பறக்கவைக்கிறாள் ஜியா. மனைவி, குழந்தை, உறவு என்று அவர் இருந்த எதார்த்தத்தின் கூட்டையும் அவள் தன்னையறியாமல் கலைத்துவிட்டு நீங்கிப் போய்விடுகிறாள்.

விஜய்க்கும், ஜியாவுக்கும் இருந்த காதல், உடலுறவு என்ற நிவாரணத்தைக் கூடப் பெறாதது. ஒரு நெடுஞ்சாலைச் சந்திப்பைப் போல, வேகவேகமாக மலர்ந்து, விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் அந்த உறவால், விஜயின் இல்லற வாழ்க்கையும் பழுதே செய்யமுடியாத அளவுக்கு சிதைந்துவிடுகிறது. நான் அவளை நேசித்தேன் என்று, தன் மனைவியிடம் தவறு செய்த ஒரு சிறுவனைப் போல பொறுப்புடன் ஒப்புக்கொள்ளவும் செய்கிறான். மகள் தந்தையுடன் இருக்க விரும்பாமல் மேற்படிப்பென்ற பெயரில் பிரிகிறாள், மனைவியும். விரக்தியில் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்யப்போகும் விஜய்க்கு, ஜியாவுடனான சந்தோஷப் பொழுதுகள் காட்சிகளாக நினைவில் மேலெழுந்து வருகின்றன. தற்கொலை எண்ணத்தைக் கைவிடுகிறான். அவள் தொடர்பான நினைவுகள் மட்டுமே இனி வாழும் வாழ்க்கைக்குப் போதும் என்று முடிவுசெய்து தன் வீட்டில் கண்ணீர் வழிய வழியத் தனியனாகிறான். இத்துடன் நிஷப்தின் கதை முடிகிறது. ராம் கோபால் வர்மா எடுத்த படங்களில் மிகவும் உணர்வுப்பூர்வமான, அருமையான தருணங்களைக் கொண்ட படம் இது. ஒரு செக்ஸ் படமாக எப்படியோ முத்திரை விழுந்து புறக்கணிக்கப்பட்டு விட்டது. அமிதாப் தனது திரைவாழ்வின் மகத்தான பரிசு என்று இப்படத்தை நிச்சயமாகச் சொல்லமுடியும். இந்தப் படத்திற்காக நாயகி ஜியாகான், சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். இந்தி சினிமாவின் முக்கியமான நாயகியாக இவர் வருவார் என்ற எதிர்பார்ப்பும் இவர்மேல் இருந்துள்ளது.

செடியைச் சுற்றி சுழன்று பறக்கும் இரண்டு வெள்ளை வண்ணத்துப்பூச்சிகளின் துடிப்புதான் லோலிதா என்று நபக்கோவ் சொல்வதன் உயிர் உருவகமாக இப்படத்தில் ஜியாகான், லாலிபாப்பைச் சுவைத்துக் கொண்டு அநாயசமாக இப்படத்தில் அறிமுகமாவார். நொடிப்பொழுதில் ஏறி இறங்கும் உற்சாகமும், சோர்வுமாக ஓயாது அசைந்து, துடிக்கும்  உணர்வுகளால் குழந்தைமையையும், பிராயத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் முகம் அவருடையது.   

இப்படத்தின் தோல்வி ஜியா கானின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கு முறிந்த காதலோடு, எதிர்பார்த்தளவு வாய்ப்புகள் இல்லாமல் போனதும் காரணம் என்று கூறப்படுகிறது. ஆறு வருடங்கள் வேலை இல்லாமல் இருப்பது மிகவும் துயரகரமானது என்கிறார் ராம் கோபால் வர்மா.

நிஷப்த் திரைப்படம், அப்படத்தின் நாயகனுக்கு மட்டுமல்ல, அப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் வாழ்வு தரும் நீண்ட அலுப்பையும், சோர்வையும் துண்டிக்க, ஒரு வண்ணத்துப்பூச்சி போல காதலும், துடிப்பும், நேசமும் ஒருகணமாவது வந்துசெல்லும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
 
சினிமா எனக்கு இடைவிடாமல், இந்தப் பறக்கும் அனுபவத்தைதான் தந்துகொண்டிருக்கிறது.   

(காட்சிப்பிழை - ஜூலை இதழ்)

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...