Skip to main content

Posts

Showing posts from November, 2021

கீழ்தாடை உடைந்த நாய்

நகரத்தின் ஈரச்சந்தையில் அன்றைக்குக் கிடைக்கும் உயிர்களின் சகல அங்கங்களும் சமையலாகும் உணவு விடுதி இருக்கும் தெருவுக்கு, கீழ்தாடையில் பாதியை நிரந்தரமாய் இழ்ந்த நாய் அடைக்கலமாய் வந்து சேர்ந்துள்ளது. தெற்கத்திய கிராமங்களிலிருந்து வந்த நாரைகள், ஆழ்கடலிலிருந்து வந்த இறால்கள், சுடச்சுட ருசிக்கப்பட்ட முயல்களின் எலும்புகளோடு வெளியே மாநகராட்சிக் குப்பைத் தொட்டியில் வழிய வழியக் கொட்டப்படுகின்றன. உபரியை விருந்தாய் வயிறுகளில் கொட்டிக் கழிப்பது வரலாறாய் தொடர்வது இன்றும் நகரங்களில் குப்பைகளாலேயே நினைவூட்டப்படுகிறது. பகட்டின் கொழுப்பு மின்னும் இறைச்சி ஒட்டிய எலும்புகளை, விளிம்பு உடைந்த சட்டியைப் போல வாயை வைத்திருக்கும் தாடை உடைந்த நாய், தன் நாக்கால் தொட்டுத் தொட்டு இன்றும் தடவிக் கொண்டிருக்கிறது. விருந்தை விள்ளவோ கொள்ளவோ முடியாத மௌனம் தடித்த இரவுகளை, அந்த கீழ்தாடை உடைந்த நாய் கடக்கிறது. உணவை ஒரு நிழலைப் போல நக்கி நிறைவுறும் நிலையில், இத்தெருவில் கழிப்பது துரதிர்ஷ்டமானதும் அபத்தமானதும் கூட. உங்களைப் போல, என்னைப் போல யாரிடமும் பகிரவோ, கவிதையாக எழுதி இறக்கிவைக்கவோ அதற்கு முடியாது. காமம், உணவு, வன்மம், வர

திரௌபதி அம்மன் கோயில் ரேணுகா பரமேஸ்வரி

மழையும் வெள்ளமும்  பிசுபிசுக்க வைத்திருந்த திரௌபதி அம்மன் கோயில் தெருவின் குட்டிச்சுவரில் முந்தின நாள் மரித்த விஸ்வநாத நாயக்கரின் சுவரொட்டிக்கு முன்னர் முகம் முழுக்க மஞ்சள் பூசிய ரேணுகா பரமேஸ்வரி பதமாய் அவித்து வைத்த இட்லிகளை நேற்று கழுவி உலரவைத்த வெள்ளை டப்பாவில் அடுக்கி வைத்தாள் தெருவில் இன்னும் சந்தடி பிறக்கவில்லை செயற்கை நுண்ணறிவுத் திறனும் அல்காரிதங்களும் இன்னும் பிறப்பிக்க இயலாத அரியதும் எளியதும் மருத்துவர்களால் இன்னும் பழிக்கவே முடியாததுமான டப்பாவில் அடுக்கப்பட்ட இந்த இட்லிகளை திரௌபதி அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் மஞ்சள் பூசிய ரேணுகா பரமேஸ்வரியை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் விசேஷ மலர்களாக ஆக்குகிறது சூரியன் அந்தக் காலை அவள் இடம் அவளது உள்ளங்கை சின்னச் சின்னப் பாத்திரங்கள் ஒளியின் தூய்மை அரைத்த நுரை இன்னும் நீங்கவில்லை எண்ணெய் மின்னும் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிசத்தை இனிமேல்தான் சட்னியின் தலையில் கொட்ட வேண்டும்.

எருமைப் பாலுக்கு என்ன ஆனது?

என் சிறுவயதில் பால் வாங்கப் போகும்போது, பசும்பால் வேண்டாம் என்றும் எருமைப்பால் வாங்க வேண்டும் என்றும், டம்ளரைக் கொடுக்கும்போதே  அம்மா ஞாபகப்படுத்துவாள். எருமைப்பால் தான் உடம்புக்கு நல்லது, கூடுதல் சத்துள்ளது என்ற பொது உணர்வு தொழில்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தூய பசும்பால் என்ற பெயரில் ஒரு பெரும் வர்த்தகம் தொடங்கியுள்ளது. வேளச்சேரியிலேயே பண்ணையிலிருந்து பசும்பாலைத் தருவித்துத் தருவதற்காக மூன்று கடைகள் உள்ளன. 'மரம்' என்ற பெயரில் பசும்பாலைக் குப்பிகளில் கொடுக்கும் பிராண்ட் ஒன்று வேளச்சேரியை முன்னிட்டு இயங்குகிறது. தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருவது தகவல் தொழில்நுட்பத் தொழிலுக்கு விடைகொடுத்து நம்மாழ்வாரின் தாக்கம்பெற்ற தெற்கத்தி வாலிபர் ஒருவர். வேளச்சேரியின் பூர்விகப் பெயர் வேதஸ்ரேனி என்ற ஒரு புராணிகமும் கடந்த பத்தாண்டில் தண்டீஸ்வரம் கோயிலில் தொடங்கி, ஊர் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. வேதஸ்ரேனி என்ற பெயரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பும் எழுந்துவருகிறது. வேளச்சேரி வேதஸ்ரேனி ஆவதற்கும், புரதச்சத்து வாய்ந்ததாக ஒரு காலம்வரை கருதப்பட்ட எருமைப்பாலைக் கடந்து 

நகுலனில் 'சலிப்பு'

ப்ரவுனியையோ என்னையோ நினைவில் காடுள்ள மிருகம் என்று சொல்ல முடியுமா? உயிர் மரபில் எங்கோ காடு சலிக்கப்பட்டு, காட்டின் சாயல் மட்டும் ப்ரவுனிக்கு மிஞ்சவோ போதவோ செய்திருக்கிறது என்றே கருதுகிறேன். அத்தனை பிரமாண்டமான பழைய காட்டை என் சின்ன ப்ரவுனியின் மேல் எதற்கு சுமத்த வேண்டும். ப்ரவுனிக்குக் காட்டின் சாயல் போதும்.  பூ னை சலித்தது பூ முகம்  ஆனது அவள். இரண்டு ஓட்டைக் கண்கள், ஒரு வாய் சேர்ந்ததுதான் முகம் என்றால் பூனையும் ஓயாமல் உரையாடிக் கொண்டேயிருக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர்தானே. எல்லாம் முடிவதற்கு முன்னர், சாவுக்கு முன்னரே, எல்லாவற்றையும் முடிப்பது எப்படி என்று தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. நள்ளிரவில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தேய்ந்த கருப்புவெள்ளை முகத்தைப் பார்க்கும்போது, முகம் சலித்து, அவர் ஒரு கபாலத்தின் நிழலாக மாறிவிடுகிறார். கபாலத்தில் கண்கள் மட்டும் உயிர்தரித்து என்னிடம் வாழ்வைப் பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது.  உயிர் சலிக்கிறது உடல் சலிக்கிறது இயற்கை சலிக்கிறது நிலம் சலிக்கிறது வேளை சலிக்கிறது பருவம் சலிக்கிறது. இது நிகழ்ச்சி.  போதும், என்னை விட்டுவிடேன

சர்தார் உதம் சிங்

ஒரு கொடுங்கோன்மை அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரு பஞ்சாபிய கிராமத்திலிருந்து கிளம்பி வயல்கள் வழியாகப் உதம் சிங் நீங்கும் காட்சி, இன்றைய இந்தியச் சூழலில் வேறு ஒரு அர்த்தத்தை, வேறொரு கொடுங்கோன்மையின் நிழலுக்குள் நாம் வந்திருப்பதை மௌனமாக நினைவுபடுத்துகிறது. சுயநலத்தைத் துளிகூட கருதாமல், எத்தனையோ போராட்டங்களைச் சீக்கிய இனம் தாண்டிய ஒரு நூற்றாண்டின் கதை ஞாபகத்துக்கு வருகிறது. உலகப் போரில் இந்தியா சார்பில் உலகின் பல மூலைகளுக்குப் படைவீரர்களை அனுப்பிய சமூகம் அது. பிரிவினையில் அதிகபட்ச பாதிப்புகளைச் சந்தித்ததில் தொடங்கி, இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தின் போது கலவரத்தில் அப்பாவி மக்களைப் பலிகொடுத்த இனம் அது. விவசாயிகள் போராட்டத்தில் தலைநகரில் தொடங்கி உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் வரை, அரசுகளின் உச்சபட்ச கொடுங்கோன்மைக்கும் அவதூறுகளுக்கும் எதிராக ஓராண்டுக்கும் மேலாக ஒற்றுமை குலையாமல் திரண்டு நிற்கும், அந்த இனத்தின் பாடுகளை சர்தார் உத்தம் சிங் திரைப்படம் நம் ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் திருப்புமுனைத் தருணங்களில் ஒன்றான ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்

நான் பிறந்த க-வி-தை -ழாக் ப்ரெவர் - இன்னலின் கரும்பலகையில் வரையப்பட்ட மகிழ்ச்சியின் முகம்

முன்னிலையற்ற காதல், குறிப்பிட்ட உருவம், உள்ளடக்கத்தின் பாதை உருவாகாத கவிதை லட்சியம் - இரண்டும் உருவாக்கிய உத்வேகம், மகிழ்ச்சி, ஆற்றலின் குழந்தையாக அப்போது இருந்தேன். வேலை, அந்தஸ்து, பொருள், இணை சார்ந்த விழைவு எனப் புறம் அளிக்கும் நிர்ப்பந்தங்கள் அனைத்தையும் என் சின்ன அகத்தின் வாசலில் செருப்புகளைப் போலத் தைரியமாக, அதேவேளையில் அனிச்சையாகக் கழற்றிப் போட்டிருந்தேன். சற்றே உடல் அளவில் வளர்ந்திருந்த, ஊரிலிருந்து நகரத்துக்குக் கிளம்பிவந்து புதிது கொடுக்கும் எல்லாவற்றையும் பேதம் பார்க்காமல், ஆசையோடும் பரபரப்போடும் நடுக்கத்தோடும் கலாசார விலக்கமாக மொழிபெயர்க்கப்படாத அச்சத்தோடும் வியப்போடும் பருகிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழ் புதுக்கவிதையில் குழந்தையின் கள்ளமற்ற தன்மையோ, விளையாட்டோ போதுமான அளவு ஏன் பதிவாகவில்லை என்ற கேள்வி எனக்கு இருந்தது.  ஒரு உணவோ, ஒரு நாய்க்குட்டியின் முகமோ, பெயரே தெரியாமல் தெருவின் திருப்பத்தில் நம்மைச் சிறியதொரு வாஞ்சையால் அங்கீகரித்துவிட்டுப் போகும் யுவதியின் வதனமோ கொடுக்கும் தற்செயலான நிறைவு ஏன் தமிழ் கவிதையில் அதிகமாகப் பதிவுசெய்யப்படவில்லை. துயரமும் வலியும் வாழ்வின்மை