ஞானி ஜலாலுதீன் ரூமிக்கும் அவரது ஆன்மிக ஆசிரியனும் நண்பருமாக இருந்த சம்ஸ் இ தப்ரீசிக்கும் இடையிலான உறவையும் விவரிக்கும் துருக்கிய நாவலாசிரியை எலிஃப் சஃபக்கின் நேசத்தின் நாற்பது விதிகள் (‘தி ஃபார்ட்டி ரூல்ஸ் ஆப் லவ்’) படைப்பைச் சமீபத்தில் படித்தேன். ஜலாலுதின் ரூமியைவிட, சம்ஸ் இ தப்ரீஸ் என்ற ரௌடி ஞானி அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் பருவுருவமாக அறிமுகமாகிறார். அவர் வாழ்ந்தபோதிருந்த சமூக நெறிகள், மத நெறிகள் இரண்டையுமே கேள்விக்குள்ளாக்குபவர். ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிகப்பு' நாவலில் வரும் நிலப்பரப்பு, கலாசாரத்தை ஞாபகப்படுத்தும் நாவல் இது. கொன்யா நகரத்தில் மத அறிஞராகவும் பிரமுகராகவும் குடும்பம் குழந்தைகளோடு சௌகரியமாக வாழ்ந்து வரும் ரூமிக்கு அகத்தில் நிரப்ப முடியாத வெறுமை உள்ளது. அதை நிரப்ப வருபவர் தான் சம்ஸ் இ தப்ரீஸ். தளைகளற்ற சுதந்திரத்தோடு கூடிய மெய்ஞானப் பயணத்துக்கு ரூமியைத் தயார் செய்யும் சம்ஸ், ரூமிக்கு நகர மக்களிடமிருந்த நற்பெயரையும் பல்வேறு செயல்கள் வழியாக இல்லாமல் ஆக்குகிறார். சமூகம் கருதும் 'நல்லது'களிலிருந்தும் ஒருவன் உண்மையான விடுதலை அடையவேண்டியிருக்கிற...