கார்த்திகை மாத தீபங்கள் ஏற்றப்பட்ட கமுகம்சேரியின் பகவதி அம்மன் கோயில் அது. அந்தி மறையும் இருட்டினூடாக, அந்த பகவதி அம்மன் கோயிலில் அமர்ந்திருக்கிறோம். பகவதி அம்மன் கோயிலுக்கு சற்று மேல் பக்கவாட்டில் அமைந்துள்ள மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் வர்கீஸை மேலதிகாரிகளின் உத்தரவுக்கும், மிரட்டலுக்கும் பணிந்து கொன்றது, நான் தான் என்று, ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளான ராமச்சந்திரன் நாயர் பல வருடங்களுக்குப் பிறகு, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த இடம் இந்தக் கோயில்தான். குளச்சல் மு.யூசுப்பிடம் நான் தான் சொன்னேன். அந்த பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டுத்தான் போக வேண்டும் என்று. தம் வாழ்நாள் முழுவதும், தம்மை உறுத்திய உண்மையை வெளிப்படையாய் சொன்ன ஸ்தலத்தில் ஆவி வடிவிலாவது ராமச்சந்திரன் நாயர் இருப்பார் என்ற நம்பிக்கையாக இருக்கலாம். ஒருவரைத் தேடி வந்து, அவர் இந்த உலகத்திலேயே இல்லையென ஆகும் யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாத தத்தளிப்பாக இருக்கலாம். வயநாடு பகுதி வனப்பகுதியில் நிலஉடைமையாளர்களின் சுரண்டலுக்கு உட்பட்டு, அடிமைகளாய் ஒடுக்கப்பட...