ஷங்கர் தொண்ணூறுகளின் மத்தியில் சிறுபத்திரிகைகள், சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் அருகி வரும் உயிரினங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், ‘காலச்சுவடு படியுங்கள்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டோ ஓட்டியவர் சிவதாணு. நாகர்கோவிலிலிருந்து சிறுவயதிலேயே சென்னை வந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இலக்கிய வாசிப்பும் சேர்ந்திருந்தது. நடிகர்கள் பாலாசிங், நாசருடன் நேரடியான பழக்கம் இருந்தது. சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துகளில் மட்டுமின்றி நேரிலும் பரிச்சயம் கொண்டவராக அப்போது இருந்தார். சென்னைக்கு வரும் எழுத்தாளர்கள் எல்லாரும் ஒருமுறையாவது அவருடைய ஆட்டோவில் பயணித்திருப்பார்கள். அவரது தெற்கத்தி வெள்ளந்தித்தனத்தாலும் சுபாவத்தாலும் சீக்கிரமே நிறைய நண்பர்களையும் சேர்த்திருந்தார். சுந்தர ராமசாமி சென்னை வந்தால் அவரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆஸ்தான சாரதியாக ஆனார். வெகுஜனக் கதைகளுக்கும் சிறுபத்திரிகை கதைகளுக்கும் இடைப்பட்ட சில சிறுகதைகளையும் எழுதினார். அவரது ஆட்டோ பல இடங்களுக்கும் பயணப்படத் தொடங்கியது. 1999-ல் பாலு மகேந்திரா, தமிழ் சிறு...