ஓவியரும் ஓவியத்தைப் பற்றி எழுதும் மொழியைக் கொண்டவருமான கணபதி சுப்பிரமணியம் சுயமுயற்சியில் ஓவியம் பயின்றவர். உருவப் படங்கள், நிலக்காட்சிகள், சித்திரக்கதை, அனிமேஷன் என்று தொடங்கி மெய்சாரா ஓவியங்களில் நிலைகொண்டு தற்போது பூனைகளில் பூனைத் தன்மையை நீர்வண்ணங்களில் கீற்றி வருகிறார். ஓவியம் சார்ந்து பேசத் தொடங்கி அது வேறு வேறு புலங்களுக்கு இயல்பாகப் பயணிக்கும் உரையாடல் இவருடையது. இவர் எழுதி சமீபத்தில் வெளிவந்த ஓவியம் தேடல்கள், புரிதல்கள் ஓவிய மாணவர்களுக்கும் ஓவிய ரசனையை வளர்த்துக் கொள்ள விரும்புவபர்களுக்கும் முக்கியமானது...இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது... ஓவியம், அதுசார்ந்த கல்வியை நோக்கி எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்? குழந்தைப் பருவத்தில் படித்த ‘பூந்தளிர்’, ‘அம்புலிமாமா’, ‘பாலமித்ரா’, ‘ரத்னபாலா’ புத்தகங்களிலிருந்த அற்புதமான ஓவியங்களும் ‘நியூ செஞ்சுரி’, ‘ராதுகா’ சிறுவர் கதைப் புத்தகங்களின் சின்னச் சின்ன நீர்வண்ண ஓவியங்களும் வேறொரு உலகமாக இருந்தது எனக்கு. ‘குமுதம்’, ‘விகடன்’ இதழ்களில் வந்த மாருதி, ஜெயராஜ் ஓவியங்களும் தனியான தாக்கமாக இருந்தது. அமெரிக்க...