Wednesday, 30 August 2017

ஜயபாஸ்கரனின் கடவுளை எங்கே வைப்பதாம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

பழைய பொருட்களுக்கு  வேகமாக விடைகொடுக்கும் காலம் இது. அன்றாட வாழ்க்கையில் பழைய பொருட்கள், புழக்கத்திலிருந்து தொடர்ந்து காணாமல் போகும் நிலையில், அதே பொருட்கள் அருங்காட்சிகளாக மாறி மீண்டும் வருகை புரிகின்றன. அப்போது அவை உபரி மதிப்பாக மாறி, படிப்படியாக மனிதக் கைகளின் தீண்டல் இல்லாமல் போய் கண்ணாடி பேழைகளுக்குள் தூசிபடர்ந்து அபூர்வத்தின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றன. இந்த அபூர்வ அந்தஸ்தை அடைவதற்குப் பொருட்கள் தொடர்ந்து பழமையின் அடையாளம் ஆகி, அவை நம் அன்றாட வாழ்விலிருந்தும்  விரைவாக காணாமல் போகவேண்டியுள்ளது.
இப்படித்தான்  பண்பாடுகள் மற்றும் மரபுகளையும், அபூர்வ அருங்காட்சியகப் பொருளாக நாம் மாற்றிவிட்டோம். என் தாய் மொழியிலேயே, ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்து அர்த்தம் காண்பதற்குக் கூட பயிற்சி தேவையாக உள்ளது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக பல்லாயிரம் மனிதர்கள் கூட்டாக சேர்ந்து புழங்கிய மொழி, வாழ்க்கை,கொண்டாட்டம், கதை, சமயம்,பொருள் ஆகியவை சார்ந்த அறிவு மற்றும் பண்பாட்டு  மரபுகளுக்கு அவசரமாக விடைகொடுத்து விட்டோம். இப்படித்தான் பண்பாடும், மரபும் தனது எண்ணற்ற கைகள், கோடிக்கனவுகள் மற்றும் கூட்டு ஞானத்துடன்- இச்சைகளையும், அபிலாசைகளையும், வன்முறைகளையும் சேர்த்து- செய்த கடவுளையும் நாம் இழந்தோம். ஆம் நமது கடவுளும் இன்று அருங்காட்சியகப் பொருள்தான்.
மரபையே பயிற்றுவிக்காத, கல்விப் பின்னணியிலிருந்து வந்து, நவீன பகுத்தறிவு சாத்தியங்களின் எல்லைகளையும், போதாமையையும் உணரத் தலைப்படும்,  ஒரு தலைமுறையைச் சேர்ந்த நவீன எழுத்தாளனாக இருக்கும் ஒரு தன்னிலையாக  நான் இருக்கிறேன். மரபுக்கும் எனக்கும் நடுவே ஒரு பரிசீலனையுடன் கூடிய உரையாடல் தேவையாக உள்ளது. அப்படி மரபைத் தழுவும் போது, அங்குள்ள சத்தங்களை என் மொழி உள்வாங்கும் போது, மரபின் இருட்டில் குழைந்த சிற்பங்களாக இருக்கும் வார்த்தைகளை என் கவிதை வசப்படுத்தும்போது(நள் என்றன்றே யாமம் என்று கேட்கும்போதே பட்டிருட்டு காட்சியாக விரிகிறது..) எனது பண்பாட்டின் கடவுளையும் உடன் இணைப்பாக நான் தழுவ வேண்டியுள்ளது.

என்னை முற்றிலும் ஒப்படைப்பதற்கு ஒரு முன்னிலை அல்லது ஒரு சர்வ வல்லமை கொண்ட சக்திக்காக எப்போதும் காத்திருப்பவனாகவே இருக்கிறேன். அதனால் இந்த தெய்வத்தையும் ஏற்பதில் எனக்கு குறையொன்றும் இல்லை.
பல உருக்களை வழிபடுபவனாகவும், அனுசரிப்பவனுமாக நான் இருந்தாலும், எனது கவிதை, தெய்வம் உட்பட அனைத்துப் பெருங்கதையாடலையும் தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதுதான். அந்த சந்தேகத்திலிருந்து தான் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடனும், அகந்தையுடனும், ஊக்கமுடனும் இருக்க முடியும் என்று நம்புகிறேன். 

கவிதையால், கடவுளை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது, அதேவேளையில் விமரிசிக்காமலும் இருக்கமுடியாது என்ற இடத்துக்கு ந.ஜயபாஸ்கரன் கவிதைகள் வாயிலாகவே துணிவுடன் வந்துசேர்ந்தேன். ஏனெனில் புறத்தில் புலப்படும் உலகத்தை விட புலப்படாத உலகிலிருந்தே தனது ஆற்றலை மொழி வாயிலாக கவிதை அள்ள முயல்கிறது. கவிதை, கடவுளை அவரின் கனபரிமாணத்தில் பாவிக்காவிட்டாலும் பலவீனமான உருவமாக, உருவகமாக அவரைத் தொடர்ந்து பரிசீலிக்கின்றன. பல நேரங்களில்  பிண அறுவையாளனின் கத்தியைப் போல கடவுளைச் சிதைத்தும் பார்க்கத் துணிகிறது.

மரபையும், கடவுளையும் எப்படி அனுசரிப்பது என்ற புள்ளியில் தான் ந.ஜயபாஸ்கரனது கவிதைகள் என்னை ஈர்க்கத் தொடங்கியிருக்க வேண்டும். முழுமையான விவேகமும், பிரமாண்ட நினைவும், விமர்சனமும், எதிர்ப்புணர்வும் கொண்ட மரபு, அனுதினமும் தன் உயிரைத் தக்கவைக்க ‘ஆசையுடன் போராடும் உடல்தான் இந்தக் கவிதைகள்.
ஆசையே மனிதனின் வரம். ஆசையே சகல வடிவங்களையும், பொருட்களையும் உருவாக்குகிறது. கலை மற்றும் அழகியலையும், குழந்தைகளையும் அதுதான் பெற்றெடுக்கிறது. ஆசைதான் பொருளைக் கடவுளாகவும், கடவுளைப் பொருளாகவும் அனுதினமும் மாற்றுகிறது. சின்ன ஆசைகளே உபயோகத்தைத் தாண்டியும் அழகிய வேலைப்பாட்டு அம்சங்களைக் கொண்ட நிரந்தரத்தின் மீதான ஏக்கம் கொண்ட புழங்குபொருள்களாகிறது. பொன்னனையாள் போன்ற பெரும் ஆசைகள், கடவுளின் பொற்சிலையாகிறது. சிலையையே வியந்து கிள்ளியதால் ஏற்படும் தழும்புமாகிறது. 

ஜயபாஸ்கரன் கடவுளின் முகத்தை நமக்கு காட்டக்கூடிய கண்ணாடி நவீன கண்ணாடி அல்ல. கோவில்களில் உலோகத்தில் வைத்திருக்கும் வேலைப்பாடுகள் உள்ள புராதனக் கண்ணாடி. பூஜைகளிலும் சேவைகளிலும் பயன்படுத்தக்கூடிய  பிசுக்கேறிய கண்ணாடி அது. எவ்வளவு பழைய கண்ணாடியாக இருப்பினும், பிம்பம் எவ்வளவு மங்கலாக இருப்பினும் அது தெய்வம் தன் முகத்தைப் பார்த்திருக்கும் கண்ணாடி அல்லவா. 

மாடக்குழிகளும் போய், மாடக்குழி விளக்குகளும் காணாமல் போய், அவற்றின் இருமருங்கிலும் இருந்த கிளிகளை கவிதைகளில் சேர்த்துக் கொள்பவராக இருக்கிறார். ஆசையின் எண்ணற்ற கடவுளர்கள் ஜயபாஸ்கரனின் கவிதைகள்.

ஆசை என்னும் மரத்தின் கனிகள் தான் சொற்கள். எந்தக் கிளைகளில் வந்து அமர்ந்தால் என்ன? அதை ஆசையின் கிளிகளாகவே இவர் உருவகிக்கிறார்.

அந்த ஆசையே அவனாகவும், அவளாகவும், அர்த்தநாரியாகவும் தடையற்றுப் பெருகி ஓடி அவர்களது வலியையும், கசகசப்பையும் தனது உடலில் சுமக்கிறது. ஆசைக்கு ஒருவர்கூட போதும் என்பதால் காதலை மாறாத கானலாக்கி தனிமையையும் சுமக்கிறது.      
 
ஆசையின் எண்ணற்ற நிறபேதங்களாக, நுட்பமான அலைவரிசைகளில் சொல்ல இயலாத காதல், பேசாத பேச்சு, நீட்டித்தால் நொறுங்கிவிடக் கூடிய நட்பு வெளிப்படுத்த இயலாமை,உறவின் தவிர்க்கமுடியாத ரசக்குறைவில் ஏற்பட்டுவிடும் சிறு சுருதிபேதம்,காத்திருப்பு, உறவின் ஒருகட்டத்தில் ஏற்படும் திகட்டல், சிறையாகவும், கருப்பையாகவும் நாம் உருவகித்துக் கொள்ளும், வரையறுத்துக் கொள்ளும் அவரவரின் இணையமுடியாத தனி உலகங்கள் என்று உறவுகளில் உள்ள இடைவெளியை அளந்தளந்து தீரவில்லை ஜயபாஸ்கரனுக்கு..

நம்மில் வறண்டிருக்கும் அன்பைப் போல பெரும்பாலும் வறண்டிருக்கும், மண்ணில் தோன்றி மண்ணில் முடிவதாகச் சொல்லப்படும், திருவிழாவில் மட்டும் கொஞ்சூண்டு காலடியில் கசகசத்துப் போகும் இன்றைய வைகை நதியையும், பொற்றாமரைக் குளத்தையும் அடையமுடியாமையின் முடிவற்ற அலைக்கழிப்பின் படிமமாக பயன்படுத்துகிறார். (திருப்பூவணத்துப் பொன்னனையாளுக்கும்/
ஆலவாய்ச் சித்தருக்கும்/இடையே/கடக்க முடியாத வைகை மணல்)

கு.ப.ராஜகோபாலன், மௌனி மற்றும் லா.ச.ராவின் வரிசையில் பிரமீள் வகுப்பது போல ஜயபாஸ்கரன் பூர்ணமான அக உலக கலைஞர். அக உலகக் கலைஞர்கள், ஊன் உண்ணும் செடியைப் போன்றவர்கள். அவர்களது உலகம் சிறியதாகத் தோற்றம் அளித்தாலும், அது புறத்தில் தன்னை நோக்கி வரும் அனுபவங்களையும்,பொருட்களையும் ஈர்த்து  தன் வயப்படுத்தி தன்வழியிலேயே ஒரு மெய்மையையும் படைப்புகள் வழியாக உருவாக்கிவிடக் கூடியது. அவ்வகையில் ஜெயபாஸ்கரனின் கவிதை உணர்வின் அகம் ஒரு பூரணமான பரவெளியாக இருக்கிறது.

ஜெயபாஸ்கரனின் கவிதைகளில் அங்கம் வெட்டுண்ட பாணன் என்ற திருவிளையாடற் புராணத்தின் கதைப்படிமம், அவ்வப்போது முகம் காட்டக்கூடியது. குருவின் மனைவி மீது காதல் கொண்ட சித்தனை, சிவனே குருவின் உருவத்தில் வந்து நேரடிச் சண்டைக்கு இழுத்துக் கொல்கிறார். திருவிளையாடற் புராணத்தைப் பொறுத்தவரை, சித்தன் கொடியோனாகவும், கடவுள் தீங்கிழைத்தவனை தண்டிப்பவனாகவுமே பாடல் இருக்கிறது. ஆனால் இந்த வரிகளுக்கூடாக, குரு பத்தினியிடம் ‘ஆசை வைத்த சித்தனின் துயரம் மீது, அவனது துடிப்பின் மீது ஜயபாஸ்கரனின் கண்கள் நிலைக்கின்றன. குருவின் மனைவியின் மனதில் ‘இடம் உண்டா என்று கேட்டு பகலில் போன சித்தனின் பால் ஜயபாஸ்கரன் மனம் சார்பு கொள்கிறது. குருவின் வேடத்தில் வந்த சிவன், சிஷ்யன் சித்தனை அங்கம் அங்கமாகத் துண்டாடிக் கொல்கிறான். குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்துரை நாவைத்/ தொட்ட கரத்தினை என தலை வரை அறுத்தறுத்துக் கொல்கிறான்.

மனிதனின் அதே மனோவிகாரங்கள் மற்றும் வன்முறையைக் கொண்டவராக கடவுளை, ஜயபாஸ்கரன் அங்கம் வெட்டுண்ட பாணன் படிமம் வழியாக இனம்காண்கிறார். எங்கெல்லாம் ஆசை தண்டிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் அங்கம் வெட்டப்படும் லீலைதானே இன்றும் தமிழ்நிலத்தில் நடைபெறுகிறது. ஆசை மறுக்கப்பட்ட நாம் அனைவரும் அங்கம் வெட்டுண்ட பாணர்களாக மாறும் இடம் அது.
அன்பு,காதல்,பக்தி என்றெல்லாம் மரபு, புனிதத்தை உலோகமாக உருக்கி மனிதர் மேல் ஊற்றி சிலையாக்கியிருப்பதை வகிர்ந்து கிழித்து, அவர்களின் சொல்லப்படாத வலியை, ஏக்கத்தை, அவற்றின் இடைவெளிகளை, தவிப்பை ஆண், பெண் என்ற பால்பேதமின்றி குறுக்குமறுக்காக எமிலிடிக்கன்சன், வஹீதா ரஹ்மான், ஆண்டாள், கண்ணப்ப நாயனார், பொன்னணையாள், மீனாட்சி போன்றோரின் மீது, உலராத ரத்தக்கீற்றைக் கொண்டு தன் கவிதைகள் மூலம் கோடிட்டதே ஜயபாஸ்கரனின் முக்கியமான பங்களிப்பு. நவீன கவிதைகளுக்கு மட்டுமல்ல தமிழ் நினைவில் புனிதம், பக்தி, தியாகத்தின் திருவுருக்களாக ஆக்கப்பட்டிருக்கும் ஆளுமைகளை இவர் ஒருவகையில் தன் பரிவால், காதலால் மனிதாயப்படுத்தியிருக்கிறார். இதுவே நமது மரபு குறித்த உண்மையான மறுவாசிப்பும் கூட.

காரைக்கால் அம்மையார், சிவன் குறித்து அனலும், குளிருமாக தனக்கு மாறி மாறி அனுபவம் தருவதாகச் சொல்கிறார். அனல் என்பது தீமைகளை அழிக்கும் சக்தியாகவும், குளிர் என்பது அருள்நிலையைக் காட்டுவதாகவும் மரபு விளக்கம் உள்ளது.
ஆனால் சிவன் என்ற பரம்பொருளின் மீது காதல் கொண்ட காரைக்கால் அம்மையார் மீது போர்த்தப்பட்டிருக்கும் பக்தியையும், புனிதத்தையும் கலைத்து தனியொருத்தியாகப் பார்த்தால், சிவனைத் தரிசிக்க அவள் எத்தனை வெம்மையை அனுபவித்திருக்க வேண்டும் என்பது புலப்படும். உடலை மனோவேகத்தில் செலுத்த பேயுருவாக்கி, கைலாயத்துக்குக் கால்களால் மிதித்து போவது தகாது என, தலையால் நடந்து போகும் காரைக்கால் அம்மையாரின் நேசத்துக்குப் பின்னால் உள்ள காத்திருப்பும், சரணும், தனிமையும்தான்  ஜயபாஸ்கரனின் பிராந்தியம். 

இவருக்கு சிவனை ஏன் பிடிக்கிறது? காரைக்கால் அம்மையார் இத்தனை தவம்கிடந்து தேடியவன் என்பதால் என்னும்போது, மரபுக்கு அழகானதும், இயல்பானதுமாக ஒரு எதிர்வினை கிடைத்து விடுகிறது. அக்குணமே ஜயபாஸ்கரனின் கவிதைகளை நவீனமாகவும் மாற்றுகிறது.

சரித்திரத்தில் மதுரை என்னும் ஊர் மறுபடி, மறுபடி அழிந்து, பிறப்பெடுக்கும் ஊராக உள்ளது. பெருவெள்ளத்தால் அழிந்து, திரும்ப எல்லை வரையறுக்கப்படும் மதுரையாகவும், கண்ணகியின் இடதுமுலை திருகி எறியப்பட்டு எரிந்து மீண்டும் துளிர்க்கும் மதுரையாகவும் இருக்கிறது. மதுரையின் அரசியான தடாதகைப் பிராட்டியின் மூன்றாம் முலை மறைவு என்பதையே ஒரு தனித்துவம் அல்லது பெருமிதத்தின் இழப்பாக கருதமுடியும். எனவேதான் நவீனத்திலும் மதுரை ஒரு இழப்புணர்வையும், இழந்த பொருள் தொடர்பான பெருமிதத்தையும் தன் உளவியலாகக் கொண்டுள்ளது.

மதுரையை ஆசையின் எல்லையற்ற எல்லையாகவும், திருவிளையாடற் புராணத்தை ஆசையின் எண்ணற்ற படலங்களாகவும் நவீன கவிதைகளில் கையாள்கிறார் ஜயபாஸ்கரன். அவ்வகையில் வருடம் முழுவதும் திருவிழாக்களை காலம்காலமாக பாவிக்கும், வாழ்தலின் ஆசையை வண்ண, வண்ண உணவுகளாக்கிப் பரத்தியிருக்கும், புராணிகம் மற்றும் வேறு காலத்தின் பெருமிதத்தில் திளைக்கும், நரிகள் இன்றும் அடிக்கடி பரிகளாக வேடமிடும் பல அடுக்குகளிலான மதுரையை ஆசையின் நித்தியக் குறியீடாக அவர் மாற்றியுள்ளார்.

தன் அணிகலனான ‘ஆசையின் பாம்பால் மீண்டும் ஜயபாஸ்கரன்,  கவிதைகள் வாயிலாக ஆலவாயை அளக்க முயன்றிருக்கிறார். தமிழ் கவிதையெனும் அகன்ற சன்னதியில் மிக அழகிய, ‘சின்ன மோகினி உருவாக ஜெயபாஸ்கரன் இருப்பார்.

Sunday, 27 August 2017

பேச வேண்டும்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

இன்று மாலை இருளும் வேளை, கட்டிடத்தின் மேல், சதுரவிளம்பில் அமர்ந்திருக்கும் காகங்களைக் கழிப்பறை ஜன்னலிலிருந்து பார்க்கிறேன். காகங்கள் கருநிழற்படங்களாக இருளில் சீக்கிரம் மறையப்போகின்றன. இன்னும் சிறிது நேரத்தில் மறையப்போகும் காகத்தின் சாராம்சம் என்ன?


எனது அன்றாட ரயில்பயணங்களின்போது, என்னோடு பயணிக்கும் யுவதிகள், நடுஇரவிலும் பேருந்துகளில் நம்பிக்கையை நோக்கிப் புன்னகைக்கும் குழந்தைகள், அனுபவச்சுருக்கங்கள் உலர்ந்திருக்கும் முதியவர்கள்... என்று என்னைச் சுற்றி உயிர் துடிகொள்கிறது. என் ஆசைகள், வாதைகள் மற்றும் களைப்பு மிகுந்த எனது காமம், நான் மேற்சொன்ன எதிலுமே எனக்குப் பங்கு இல்லை. நான் சில உணர்வுகளை வார்த்தைகளாகச் சுமக்க முயற்சிக்கிறேன். தவிர வார்த்தைகளோடும் எனக்கு உண்மையில் தொடர்பில்லை.

நான் சலித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கவும் உணரவும் நேர்ந்த மௌனத்திலிருந்து எழுதப்பட்ட கவிதைகள் இவை. எனது முந்தைய கவிதைகளில் உள்ள புதிய ஒளித்தன்மையை இக்கவிதைகளில் வாசகன் காணமுடியாது. 

அகாலத்தில் மரணமுற்ற காதலியின் சடலத்தைக் காணும் காதலனுக்கு அவள் சடலத்தில் மிஞ்சியிருக்கும் அவனிட்ட முத்தத்தின் அழகும் காதலும், அவள் உயிர்க்கோலத்தின் ஒருகணத் தோற்றம் உறைந்திருப்பதைப் போன்ற உணர்நிலையில் நான் இக்கவிதைகளைக் கடந்தேன்.

எனது நிலவெளிகளும் என்னோடு இறந்துகொண்டிருப்பதாகவே உணர்கிறேன். எனது நிலப்பகுதிகள் நான் தொடர்புகொண்டிருக்கும் மனிதர்களோடு தொடர்புடையது. அவர்கள் இறந்தவுடன் அந்த நிலங்களும் மரித்துப்போய்விட்டன. சுந்தர ராமசாமி இறந்தவுடன் நாகர்கோவில் நிலப்பகுதிகள் வெறும் ஞாபகங்களாக இறந்துவிட்டன. அவரைச் சந்தித்த பொழுதுகளில், அவர் வீட்டின் முன்முற்றத்தில் மழைப்பருவத்தில் ஒளிர்ந்திருக்கும் வாழைக்கன்றைப் போல நான் இருந்தேன். 

இப்போதும் நெரிசலான தி.நகர் பகுதி நடுவில் இருக்கும் மைதானத்தைப் பார்க்கும்போது சுந்தர ராமசாமியுடன் எஸ்.எல்.பி. மைதானத்தில் உடன் இருக்கும் ஞாபகம்தான் எனக்கு மீந்திருக்கிறது.

சாயங்காலத்தின் ஒளிவேறுபாடுகளுடன், இருட்டுக்குள் நுழையும் செம்மண் மைதானம் கொள்ளும் கோலங்களை அவரின் கண் வழியாகவே பார்க்கிறேன். விளையாடப்படாத வெற்று மைதானத்தையும், கூட்டுணர்வில் உயிர்கொள்ளும் ஒருமையில் விளையாடப்படும் மைதானத்தையும் சுந்தர ராமசாமி அலுக்காமல் எழுதியுள்ளார். அவர் நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது தன் மைதானத்தை வெளியே விரித்தார். விளையாடப்படாதபோது மைதானம் கொள்ளும் தனிமையை அவர் நெஞ்சுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

வாழ்வதற்கான நம்பிக்கை மிகுந்த நிலமாய், சுந்தர ராமசாமி என்னை ஆகர்ஷித்திருந்தார் எனச் சொல்லும்போது, குற்றமும் மரணமும் புறக்கணிப்பும் சூழ்ந்த இரவுகளின் பல்வேறு ரூபங்களை லக்ஷ்மி மணிவண்ணன்தான் எனக்குக் காட்டினார் என்பதையும் நான் பேச வேண்டும்.

கொலை வன்மமும் துடிக்கும் காதலும் வெறுமை நிலையும் ஒருங்கே கொண்ட அவர் அறிமுகப்படுத்திய, அதீத இயல்பின் இரவுப்பேய்கள் எனது முதிரா மனஇயல்பிலேயே பெரும் அலைக்கழிப்பையும் விநோத நிலைகளையும் எனக்குத் தந்தவை. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்நர் ஓர் இரவில் மதுரையிலிருந்து கிளம்பி நாகர்கோயில் வந்து இறங்கினேன். லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டிற்குப் போனவுடன் நான் வந்த உற்சாகத்தில் உடனே தூக்கம் விழித்தார். கோழிகள் வீட்டுத்தோட்டத்தில் மேயத்தொடங்கும் சலசலப்பைக் கேட்டபடியே அவர் வீட்டை அப்போது நான் கவனிக்கிறேன். அவர் வீடும் அவரும் சேர்ந்து தொடர்ந்து புராதனம் அடையும் தோற்றம். வீடு என்று சொல்வது கூட ஒரு சம்பிரதாயம்தான். அவர் ஆளுமையோடு சேர்ந்து அதன் இடிபாடுகளுடனும் சேர்ந்து இரவில் கிளைக்கும் வழிகள் கொண்டதாய் அவர் அந்த இடத்தை மாற்றி வருகிறார்.

நான் அவரைச் சங்குத்துறை கடற்கரைக்குப் போகலாம் என்று அழைத்தேன். அவர் ஒரு குடையை எடுத்துக்கொண்டார். அவருக்குக் குடை போன்ற துணை எப்போதும் தேவை. ஆனால் அவர் குடையைப் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. இருள் முழுமையாகப் பிரிவதற்குள்ளாகவே கடலுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது எனது பதற்றமாய் இருந்தது.
நாங்கள் கடந்த தென்னை விளைகளை மெதுவாகப் புலர வைத்தபடி எங்களுக்கிடையே பகைமையின் மூட்டங்களை இயல்பாகத் தகர்த்தபடியேபேசிக்கொண்டு சங்குத்துறை கடற்கரையை அடைந்தோம்.

லக்ஷ்மி மணிவண்ணன் தன் பெண் நண்பருக்காக ஒரு வாளைப் பரிசளிக்க விரும்பி ஒரு விழாவை ஒருங்கிணைத்திருந்தார். அந்த விழாவுக்குச் செல்வதை நான் தவிர்த்திருந்தேன். அந்தப் பரிசை அந்தப் பெண் நண்பர் புறக்கணித்துவிட்டார். அது மணிவண்ணன் வீட்டிலிருந்து ஓர் இரவு காணாமல் போனது. அந்தப் பெரிய வாள் காணாமல் போன அன்றைக்கு மறுநாள், நான் மணிவண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன்.

ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் அந்த வாளின் உடைந்த வடிவங்களைக் கண்டெடுத்தோம். மணிவண்ணனும் நானும் அந்த உடைந்த வடிவங்களைப் பழைய உலோகக் கடையில் போட்டு 'ரம்' வாங்கி அருந்தினோம். மணிவண்ணன் வாளோடு இருக்கும் தருணங்களில் நான் பதுங்கி இருக்கிறேன். வாள் மறைந்த தருணங்களில் பரிசுத்தமான விருப்பத்துடன் கடலின் பின்னணியில் உள்ள அவர் வீடு அடைகிறேன்.

***
அந்தரத்தில் பறந்ததொரு
பறவை
ஒரு முறை பார்த்த பின்னர்
இருமுறை கண்டேன்
என்று சொல்வதுண்டா?
                     - நகுலன்


நகுலனை இருமுறைதான் நான் பார்த்திருக்கிறேன். மூன்று முறை பார்த்ததாக மனம் சொல்லச் சொல்கிறது. நகுலனின் விஷயத்தில் அந்தப் பிறழ்ச்சி அழகானதும்கூட. 

மனிதன் ஒரு சாராம்சம், அவனது அத்தனை செயல்களுக்கும் அவனே பொறுப்பு என்ற நவீனத்துவ நம்பிக்கைகளைக் குலைத்துப்போட்டவர் அவர். மனிதனை ஒரு வகையில் இயற்கையின் மங்கிய சாயலாக, சலித்து உதிர்ந்து விரையும் பிராணிகள், பறவைகளாக அதன் வழியே நிழல்கள் பிரதிபலித்துச் செல்லும் நகல்களின் நினைவு ஆறாகப் புத்தகங்களையும் எழுத்துப்பிரதிகளையும் கூடக் கலைத்துப் போட்டு விடுவித்தவர் அவர்தான்.
வெளியில் உள்ள பொதுவாழ்வு கோரும் செயலுக்கு எதிராக 9 இயங்கும் மனம், செயல் அற்ற பாவத்தில் நகுலனின் படைப்பில் தோற்றம் அளிக்கிறது. சுரீரெனும் விபரீத அழகுடன், காமத்தின் உயிர்த்தன்மை பரபரக்க இந்த உலகம் ஏற்கெனவே இறந்துவிட்டதை அறிவிக்கும் படைப்புகள் அவை. இந்தக் கோணத்திலிருந்துதான் செயல் என்பதன் மீதும் வெற்றி என்பதன் மீதும் அவை தம் பெரும் கண்டனத்தை எழுதிச்சென்றுள்ளன.

வாழ்வு என்ற செயல்ரூபத்தை அவர் முழுமையாக குருக்ஷேத்திரமாகவே கண்டு அச்சப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் குருக்ஷேத்திர யுத்தம் தொடங்குவதற்கு முன்பே அதன் எல்லையில் முதலில் தயார் ஆவது மயானங்கள் தான்.

நகுலனைப் போதத்துடன் படிக்கத் தொடங்கியது 'நினைவுப்பாதை' மூலம்தான். அந்த அனுபவத்தை நான் இப்போது உருப்பெடுத்த முயல்கிறேன். கோயம்புத்தூரில் ஒரு இலக்கியக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுப் பேருந்தில் திரும்பிக்கொண்டிருக்கும்போது அதன் கடைசிப் பக்கங்களைப் படித்து முடித்தேன். நவீனன் மனநோய் விடுதியில் இருக்கும்போது நடக்கும் மனப்பித்தின் உக்கிரமான பேச்சுகளால் ஆன பகுதி அது.

எப்போதும் பதற்றத்துக்குக் கொந்தளித்த நிலையில் இருக்கும் என் மனம் ஓர் அனாதை நிலையை உணர்ந்த தருணம் அது. இதேபோன்ற அநாதை நிலைகள், ஏற்கெனவே பலமுறை நான் உணர்ந்தவைதான். ஆனால் மனம் என்ற ஒன்று உள்ள அனைவரின் நிலையும் இதுதான் என்று 'நினைவுப்பாதை' நாவல்தான் எனக்கு முதலில் புலப்படுத்தியது. நான் அழவில்லை. ஆனால் நான் கனத்துப்போய் உணர்ந்தேன். அப்போது இருபக்கமும் பெருமரங்களின் நிழலில் பேருந்து நண்பகலில் சென்று கொண்டிருக்கும் காட்சியும் சாலையைச் சுற்றிப் போர்த்தியிருந்த வெயில் காட்சியும் இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது.

அதற்குப் பின்பான ஒரு தருணத்தில் சுந்தர ராமசாமியைச் சென்னையில் உள்ள ஓட்டல் பாம்குரோவின் அறையில் தளவாயுடன் சந்தித்தபோது 'நினைவுப்பாதை' குறித்து உவகையுடன் தர்க்க ஒழுங்கின்றி, எனது கண்டுபிடிப்பு என்பதுபோல் படபடவென்று பேசினேன். அவர் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

'இப்படி அவரைப் பற்றி உற்சாகமாகப் பேசுகிறீர்கள். ஆனால் அவர் பற்றிப் பொருட்படுத்தும்படியாக மலையாளத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு கட்டுரை கூடத் தமிழில் இல்லை' என்று கோபமாகக் குறிப்பிட்டார். எனக்கு வருத்தமாக இருந்தது. அவர் என்ன உணர்த்த வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை.

இப்போது புரிகிறது. நான் இப்போது மானசீகமாக சுந்தர ராமசாமியிடம் சொல்லிக்கொள்ள முடியும். நகுலனைப் பற்றிப் பொருட்படுத்தத்தக்க இரண்டு கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன். ஒரு பயணத்துக்கு ஊக்கமாக வழிச் சீட்டுகளைச் சந்தர்ப்பங்களாகத் தந்தவர்கள் என்பதால் தளவாய் சுந்தரத்துக்கும், மனுஷ்ய புத்திரனுக்கும் எனது நன்றி.
கடந்த மூன்று வருடங்களில் நகுலனின் படைப்புகளைச் சாட்சிபூர்வமாகத் தொடரும் எனது கவிதைகளின் மீது அவர் நிழல் படர்ந்துள்ளது. அவர் இறந்துபோன செய்தி வந்து பத்து நாட்கள் இருக்கலாம். மதுரையில் என் அலுவலக விடுதி அறையில் ஒரு காலி நோட்டுக்கு முன் ஒரு சாயங்காலம் செயலற்று அமர்ந்திருந்தேன். நகுலன் என்னுள் ஊடுருவிய உணர்வு ஏற்பட்டது. அவரது மொழியில் இருந்து, அவர் சாயலில் என்னால் ஒரு கவிதை எழுதப்பட்டது. அந்தக் கவிதைதான் 'சொற்புணர்ச்சி'. இந்தக் கவிதையை எழுதும்போது என் உடல் ஒரு பஞ்சு நிலையை எட்டியிருந்தது. என் எளிய எழுத்துச் செயலில் மிகவும் நினைவுகூரத்தக்க மாயமான நிகழ்வு என்று அதை எனக்கு நிச்சயமாகச் சொல்ல முடியும்.

இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளின் சில இடங்களில், அவர் எழுத்தின் சப்த ஞாபகங்கள் பிரக்ஞையுடன் இடம்பெற்றுள்ளன. 

நகுலனை இரண்டாம் தடவை பார்க்கும்போது அவரது முழுமையான படைப்புகளையும் நான் வாசித்திருந்தேன். அவர் படைப்புகளின் வினோத ஒளித்தன்மையுள்ள நடுச்சாமப் பொழுதில் நானும் கவிஞர் விக்கிரமாதித்யனும் கடும் மழையை அழைத்துக்கொண்டு தென்காசியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர் வீட்டில் வந்து இறங்கினோம். கதவைத் தட்டினோம். அந்த இரவிலும் ஜன்னல் வழியாக விக்கிரமாதித்யனைப் பார்த்துச் சிரித்து விட்டுக் கதவைத் திறந்தார். இது இயல்புதான் என்பது போல் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. அவரது அறையில் உள்ள பல்புஒளி வீட்டைச் சுற்றி நனைந்து கொண்டிருக்கும் வாழைமர இலைகளின் மேல் எண்ணெய் போல் வழிந்தோட, இலைகள் தடதடவென்று துடிக்கும் சப்தத்தில், நகுலன் கிளாஸ்களை எடுத்து வந்தார். நாங்கள் மிச்சமிருக்கும் ரம்மை அவருடன் பகிர்ந்துகொண்டு குடிக்கத் தொடங்கினோம். அந்த இரவு ஈரத்தால் ஆனது.

நீக்கமற விரிந்திருக்கும் மரண போதத்தின் நிச்சயப் பின்னணியில் இலையின் பச்சையும் கிளியின் பச்சையும் கன்னிமையின் ஒளிப்பச்சையும் உயிர்த்துடிப்புடன் நகுலன் வழியாகச் சொல்ல முயற்சிப்பதை நாம் கேட்கவேண்டும்.
***
மூன்று வருடங்களுக்கு முன்பு சென்னையில் எனக்குத் தோதாக வேலை எதுவும் அமையாமல் ஆறு மாதங்கள் வெறுமனே கழிந்தன. நண்பர் கார்மல் உதவியால் மதுரையில் உள்ள 'மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமைகள் தொண்டு நிறுவன அமைப்பின் பதிப்பக வேலைக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறந்து ஏழு மாதங்கள் மட்டுமே பூர்த்தியடைந்திருந்த மகள் வினோதாவின் பூ உடல் மென்மையின் ஞாபகம் என் உடலில் எப்போதும் மீந்திருக்க பிரிவின் துயருடனும் உடல் நழுவும் பிரக்ஞையுடனும் நான் சென்னைக்கும் மதுரைக்கும் வந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவள் அணிவது போன்ற உடைகளைப் பார்க்கும்போது அவளாகத் தெரிந்தாள். அவள் செருப்புகளைப் போன்ற சின்ன செருப்புகளைப் பார்க்கும்போதெல்லாம் அவளாகத் தெரிந்தாள். இப்போது சொல்லத் தோன்றுகிறது. எப்போது தந்தையாகிறோமோ அப்போதிலிருந்து நாம் திருதராஷ்டிரர்கள் ஆகிவிடுகிறோம். அவளுக்கான கவிதைகள் இத்தொகுப்பில் என் வரையில் விசேஷ அர்த்தம் பொருந்தியவை.

மதுரை என்ற நகரம் எனக்கு எப்போதும் ஒவ்வாமையையும் வெறுமையையும் தெரிவிக்கும் இடமாகவே இன்றுவரை இருக்கிறது. தமிழகத்தின் உள்ள பின்நவீனத்துவ லட்சணங்கள் கொண்ட ஓர் ஊர் அது. பெருமிதத்தின் வேறு காலத்திய மதிப்புகளுடன், தன்மிதப்பின் ஒரு நகலாக 'ஃப்ளக்ஸ்' தட்டிகளாக வெறுமனே இன்றைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஊர் அது. அங்கு நிகழ்காலம் இல்லை. அதனுடன் தொடர்பற்ற ஒரு கனவிலிருந்து இலக்கற்ற காமமும் இலக்கற்ற அதிகாரமும் இறந்த சுவர்களின் மீது சுவரொட்டிகளாக அங்கு ஒட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. காமம் புரோட்டாவாக, அதிகாரம் தொண்டாக, ஜிகர்தண்டா கொலைகளாக மாற்றம் அடையும் ஊர் அது. பின்நவீனத்துவக் கலைக்கு இணக்க வடிவமான அதன் கலாச்சாரமும் மௌனமும் ஆசைகளும் தமிழில் பேசத் தொடங்கியிருப்பது யதேச்சையானது அல்ல.

மதுரையின் மோனத்தினூடாகக் கால்கள் கொண்டு நடந்தும், மூக்கின் வழியாக முகர்ந்தும், வாய் வழியாகச் சுவைத்தும் பார்த்துள்ளேன். சுந்தர ராமசாமி, சி.மோகன் போன்றவர்கள் பேசியதன் வழியாய் அது ஜி. நாகராஜனின் மதுரை. முருகபூபதி சொல்லியதன் வழியாய்ப் பழைய நாடகக்காரர்கள் அலைந்த மதுரை. பழங்கதைகள் உரைத்ததன் வழியாய்ப் பிட்டுக்கு மண் சுமந்த சிவன் கசையடி வாங்கிய மதுரை. திருவாதவூர் நரிகளைப் பரிகளாய் மாற்றிப் பிறகு திரும்பவும் நரிகளாக்கி விடைபெற்ற மதுரை, தப்பிப்போன நரிகளின் இன்னமும் ஒலிக்கும் ஊளைதான் அதன் ஊழ் போலும்.

மதுரையின் ரூபங்களை உடலில் கொண்டிருக்கும் கோணங்கியும் முருகபூபதியும் அங்கே வரும்போது மதுரை என்னிடம் சிறிது உயிர்ப்பு கொண்டுள்ளது. கோணங்கியும் முருகபூபதியும் அங்குதான் எனக்கு 'இவான் ரூல்போ'வை அறிமுகப்படுத்தினார்கள். அவரது எரியும் சமவெளி நிலபரப்பைப் புரிந்துகொள்வதற்கு மதுரையைவிடத் தோதான நில, மனப்பரப்பு ஏதுமில்லை. சலித்த துயரத்திற்கு வெற்று மணலின் நிறைதான் இருக்கும். அங்கே மணிதர்கள் கூட ஆவிகள்தான் என்று உணர்த்தும் 'இவான் ரூல்போ'வின் படைப்புலகை மதுரை வந்திருக்காவிட்டால் இனம் கண்டிருக்கவே முடிந்திருக்காது.
***


நித்தயத்தோடு நிச்சயமற்ற தன் இருப்பை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஆசை படைக்கிறவனுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவன் நித்தியமான படிமங்களோடு தொடர்ந்து உரையாடுபவனாய் இருக்கிறான். அவ்வகையில் கவிதையோடு தொடர்புடைய எப்போதுமான படிமங்கள் இந்தத் தொகுப்பில் வெறும் படங்களாகச் சேராமல் அவற்றின் அர்த்த கர்ப்பத்தோடு வந்து சேர்ந்துள்ளன. அந்த வகையில் எனது நான்காவது கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் எனக்கு ஒருவகை நிறைவை அளிக்கின்றன. நிலவு, மலர்கள், கடல் போன்ற நித்தியமான படிமங்கள் இயல்பாக இக்கவிதைகளுடன் இருப்பது எனக்குச் சிறிய மனத்திருப்தியை அளிக்கிறது.
சமீபத்தில் சென்னையில் நான் தினமும் பயணம் செய்ய நேர்ந்த பறக்கும் ரயில் எனக்கு விநோதமான கிளர்ச்சியைத் தீராமல் ஏற்படுத்தியது. பறக்கும் ரயிலிலிருந்து நகரத்தை ஒரு நூல் பட்டத்தின் கோணத்திலிருந்து பார்ப்பதும், பறக்கும் ரயில் நிலையங்களின் அலாதித்தன்மையும் மர்மமும் என்னை வெகுவாக ஈர்த்துவருகின்றன. நடுவில் நான் இதுவரை பார்த்திராத கல்லறைத் தோட்டங்களையும் மரணத்தின் போதமற்று அதில் விளையாடும் சிறுவர்களையும் பறக்கும் ரயில்தான் எனக்கு அறிமுகப்படுத்தியது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பறக்கும் ரயில் நிலையம் இருப்பதால் ரயிலும் ரயில் நிலையமும் விநோதாவுக்கும் எனக்கும் பொதுவான நேசவெளி ஆகிவிட்டது. அவளது பிராயத்தில் அவளுக்கு நான் தந்த முக்கியமான பரிசு இந்த பறக்கும் ரயிலாகத்தான் இருக்கும். 

ஊருக்குள் சென்றாலும் தனியாகவே தெரியும் ரயிலும் பிரிந்து விலகி இணைகோடுகளாய் அடிவானம் வரை செல்லும் ரயில் பாதைகளும் நமக்கு எதை எதையோ உணர்த்தும் வல்லமை கொண்டவை. இன்றைய மனித இருப்பை ஒரு ரயில் நிலையத்தைவிட எதுவும் தெரிவித்துவிட முடியாது என்று நான் நம்புகிறேன்.
இந்தத் தன்னுரையில் மரணப் பிரக்ஞை அதீதமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளதை என்னால் உணரமுடிகிறது. ஆமாம், இதன் கவிதைகளூடாகவும்தான் ஆனால் நான் அந்தக் கடலைக் கடைந்துதான் ஒரு குவளை அமிர்தத்தைப் பருகிக்கொண்டிருக்கிறேன்.

அந்த போதத்திலிருந்துதான் நித்தியத்துக்குள் தங்களை விட்டுச்சென்றுள்ள எழுத்தாளர்கள் நகுலனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் இந்தத் தொகுப்பைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

நான் பேச வேண்டும்... பாலைவனப் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது அடித்த மணற்புயலைப் பற்றி... பாலைவனத்தில் அரிதாக அன்று பெய்த மழையைப் பற்றி சாலையின் பக்கவாட்டில் உயரத் தொடங்கும் மணற்குன்றி குத்துச்செடிகளைப் போல கூட்டம் கூட்டமாக நின்று முதுகின் மேல் மழை பூக்கத் தியானித்திருந்த ஒட்டகங்கள் பற்றி... என் கவிதையில் அவற்றைச் சொல்ல முடியாமல் போனது பற்றி... தேச எல்லைகள் என்றும் தெரியாமல் தேசம் கடந்து அஸ்தமனத்திற்குள் விரையும் கருங்குருவிகள் கூட்டம் பற்றி... நான் பேசவேண்டும்...

(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்குட்டிகள் கவிதைத்தொகுப்பில் உள்ள முன்னுரை)

Wednesday, 23 August 2017

முல்லாவின் தொடர்ச்சி பஷீர்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

இன்றும் உலகம் முழுக்க முல்லாவைப் பற்றிய நூற்றுக்கணக்கான கதைகள் படித்து ரசிக்கப்படுகின்றன. முல்லா நஸ்ருதீன் என்னும் நகைச்சுவை ஞானியை துருக்கியர்களும்கிரேக்கர்களும் ஹோஜா நஸ்ருதீன் என்றழைக்கின்றனர். கஸாக்கியர்களால் அவர் கோஜா நஸ்ரெதீன் என்றழைக்கப்படுகிறார். சிலர்முல்லா நஸ்ருதீன் ஒரு கற்பனை கதாபாத்திரம் எனவும் சொல்கின்றனர். முல்லா நஸ்ருதீன் 1208-ம் ஆண்டு துருக்கிய கிராமத்தில் பிறந்து 1284ம் ஆண்டுவாக்கில் இறந்துபோனார் என்பது பொதுவான நம்பிக்கை. துருக்கியில் முல்லாவைப் புதைத்த நகரத்தில்ஜூலை 5 முதல் 10 வரை எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை நிகழ்த்தியும் திரையிட்டும் முல்லாவின் நினைவைக் கொண்டாடும் நிகழ்வு இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அஸர் பைஜானில் முல்லா நஸ்ருதீனின் குட்டிக் கதைகள் இப்போதும் அங்கு நடக்கும் விருந்துகளிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இயற்கையாகவே பேச்சினூடாக இடம்பெறுகின்றன. சில முக்கியமான அனுபவங்கள் நிகழும்போது சரியான சூழ்நிலையில் முல்லா கதைகளைச் சொல்லும் பழக்கமும் அவர்களிடம் நிலவுகிறது.

முல்லாவின் கதைகள் எல்லாக் காலத்திற்குமானவை. மனிதனின் அடிப்படை இயல்புகளில் இருக்கும் முரண்பாடுகள் அநீதி,  சுயநலம்,கோழைத்தனம்சோம்பேறித்தனம்அறியாமைகுறுகிய புத்தி இவை எல்லாவற்றையும் முல்லாவின் கதைகள் பரிசீலனை செய்கின்றன. 13ம் நூற்றாண்டின் பின்னணியில் தேநீரகங்களிலும் பொதுக்குளியலறைகளிலும் சந்தைகளிலும் இக்கதைகள் பொதுவாய் நிகழ்கின்றன. இக்கதைகளிலுள்ள மனித இயல்பைப் பற்றிய முல்லாவின் அவதானிப்புகள் தரிசனத் தன்மையுடையவை. நூற்றாண்டுகள் கழிந்தபின்னும் நம்மைப்பற்றி ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்டவையாக அவை இருக்கின்றன.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலுமுள்ள மனிதர்களும் முல்லாவின் கதைகளில் இடம்பெறுகிறார்கள். யாசகர்மன்னர்அரசியல்வாதிகுமாஸ்தா,அறிஞர்வியாபாரி... முல்லாவின் மனைவியும் கழுதையும் அவருடைய நிரந்தரமான உதவியாளர்கள். முல்லா கதைகளில் முல்லா முட்டாள்போல் தோற்றமளித்தாலும் அவை தந்திரமாக மற்றவர்களின் முட்டாள்தனத்தை அவிழ்த்து சிதறவிடுவதாகவே இருக்கின்றன. வாய்மொழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் பரப்பப்பட்ட முல்லாவின் கதைகள் கீழைத்தேய நாட்டுப்புறவியல் கதை மரபில் மிகப் புகழ்பெற்ற அங்கத நகைச்சுவைக் கதைகள். முல்லா நஸ்ருதீன் தன் சமாதியிலிருந்து கூட நகைச்சுவையை எழுப்புபவர்.

முல்லா தனது உயிலில் தன் சமாதி மீது பூட்டிய கதவு ஒன்றைத் தவிர வேறெதுவும் இடம்பெறக் கூடாதென்றும்பூட்டிய பின்பு சாவிகளை சமுத்திரத்தில் எறிந்து விட வேண்டுமென்றும் விருப்பப்பட்டார். ஏன் அவர் அப்படிச் சொன்னார்இன்னமும் மக்கள் அவர் சமாதியைப் பார்க்கின்றனர். கதவைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். அங்கே சுவர்கள் இல்லாமல் ஒரு கதவு மட்டும் பூட்டப்பட்டு நிற்கிறது. முல்லா நஸ்ருதீன் சமாதிக்குள்நிச்சயமாய் சிரித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறிய காலகட்டத்திற்குள் வாழ்ந்து மடிந்து போகும் மனிதன்தன் வாழ்வை நகர்த்த எத்தனையெத்தனை அல்பமான காரியங்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது.  முல்லாவின் கதைகளில் முல்லாவும் எல்லா மனிதர்களைப் போல்தான் தன் கதைகளில் நகையாடப்படுகிறார். சில அபத்தத் தருணங்கள்முரண்களில் எளிய உண்மைகளை சத்தமின்றி சொல்லிப் போகிறது முல்லாவின் கதைகள்.முல்லாவின் நவீன தொடர்ச்சியெனப் பார்த்தால் வைக்கம் முகம்மது பஷீரிடம் அந்த இயல்புகளைக் காண முடியும். பஷீரின் கதை சொல்லி உடலும்சாதாரண மனிதர்களின் அல்பத் தனங்களோடும்சிறிய எண்ணற்ற தந்திரங்கள் மற்றும் மனத்தடைகளில் திளைப்பவையே. ஆனால் கதைக்குப் பின்னால் உள்ள பஷீரின் கண்கள்உடல் ஏந்தியிருக்கும் களங்கம் எதையும் ஏற்காதவை. எக்காலத்திலும் நடந்து கொண்டிருக்கும் மனித நாடகத்தை ரசிப்பவை. அதன் மேல் ஒரு புன்னகையைப் பரவவிடுவதன் மூலம் உலகை எல்லா காலங்களோடும் ஏற்றுக்கொண்டு,ஆற்றுப்படுத்தும் வல்லமை கொண்டவை. பஷீரின் இப்புன்னகைதான் அவரின் விமர்சனமும். அவரது 'பாத்துமாவின் ஆடுகதைசொல்லி எல்லோரையும் ஏமாற்ற முயல்கிறார். ஏமாற்றப்படுகிறார். நடுவில் உலவும் ஆடு  சமன் செய்யும் உயிரியாக பஷீரின் வீட்டுக்குள் அலைந்து கொண்டிருக்கிறது. அது அபோதத்தில் அவர் எழுதிய சில புத்தகங்களையும் தின்றுவிடுகிறது. பஷீரின் புன்னகை எல்லாவற்றின் மீதும் படர்ந்திருக்கிறது. உடலின் மரணத்துக்குப் பின்னும் இமை திறந்தால் உயிர்த்திருக்கும் விழிகள் போன்றது பஷீரின் அப்புன்னகை.

ஓஷோமுல்லாவின் கதைகளில் சிறந்தவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் வண்ணமயமான சித்திரங்களும் ஓஷோவின் குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளன. "முல்லா நஸ்ருதீனின் மேல் எனக்கிருக்கும் விருப்பம்இந்த உலகின் யார் மீதும் இல்லை" என்கிறார் ஓஷோ. அவரது பேச்சுகளிலும் முல்லா நஸ்ருதீன் இடம்பெறுகிறார். ஓஷோ முல்லாவைப் பற்றிப் பேசும்போது, "மதத்தையும்,சிரிப்பையும் ஒருங்கிணைத்தவர் முல்லா நஸ்ருதீன். அதுவரை மதமும்நகைச்சுவையும் ஒன்றுக்கு எதிரான ஒன்றாகவே இருந்தன. அதன் பழைய பகைமை மறந்து மதத்தையும்நகைச்சுவையையும் சேர்த்து நண்பர்களாக்கியவர் சூஃபி முல்லா நஸ்ருதீன். மதமும் சிரிப்பும் சந்திக்கும்போதுதியானம் சிரிக்கும்போது சிரிப்பு  தியானமாகும்போது அற்புதங்களுக்கு மேலான அற்புதம் ஒன்று நிகழ்கிறது. இந்தியர்கள்கடவுள் மற்றும் பிற விஷயங்களில் மிகத்தீவிரமாக இருப்பவர்கள். அங்கு சிரிக்கும் கௌதம புத்தாவைப் பற்றி யோசிக்க இயலாது. சங்கராச்சாரியார் சிரிப்பதோமகாவீரர் சிரிப்பதோ அசாத்தியமான காரியம்" என்கிறார்.

கள்ளமற்ற சிரிப்பு என்பது வித்தியாசமானதொரு அனுபவம் அது. அது களைப்பாற்றும் செயல்முறை மட்டும் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்தியர்களின் நகைச்சுவை பற்றிப் பேசும் குஷ்வந்த் சிங், "இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மற்றவர்களைப் பார்த்து நன்கு சிரிக்கத் தெரிந்தவர்கள். ஒரு சிலர் மட்டுமே தன்னையே பார்த்து சிரிக்கத் தெரிந்தவர்கள். இதனாலேயே இந்தியர்களிடமிருந்து மகத்தான நகைச்சுவையாளர்கள் யாரும் உருவாகவில்லை. உலகத்தின் மிகச் சிறந்த நகைச்சுவையாளர்கள் என்றால் யூதர்களைத் தான் சொல்வேன். ஹிட்லரும் நாஜிகளும் அவர்களை விஷவாயுக் கிடங்குகளில் அடைத்த கொடுமையான நிலைகளில்கூட ஹிட்லருக்கு எதிரான நகைச்சுவைக் கதைகளை உருவாக்க அவர்களால் முடிந்திருக்கிறது.

வாழ்க்கையைக் கவனித்துப் பார்த்தால்அது அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல என்று நமக்குத் தெரியும். சிரிப்பதற்காகவே எஞ்சியிருப்பது தான் அது. எதையும் வெற்றிக்கொள்ளவில்லையே என்ற கேள்வி எழலாம். ஆனால் வெற்றி என்பதன் அர்த்தம் என்னஒருவன் வெற்றி பெற்றவனாகி விட்டாலும் எதை அவன் அடைகிறான்ஓஷோவின் கேள்வியிலும் புன்னகையே மிஞ்சி நிற்கிறது.

(தீராநதி)

Saturday, 19 August 2017

அந்தக் காகத்தின் பெயர் ஷங்கர்


இன்னொரு முனை கட்டப்பட்டிருப்பது
தெரியாது
அறுந்த கொடிக்கம்பியைக்
கவ்விச் செல்ல முடியாது
தன் அலகாலே சிறைப்பட்டு
பதைத்துத் திணறி
ஊஞ்சலாடி
பின்னர்
விட்டு விடுதலையாகி
பறந்து சென்ற 
காகத்தை நேற்று பார்த்தேன்
அந்த க்ஷணத்திற்கு
அந்தக் காகத்திற்கு
அந்தச் சம்பவத்துக்கு
ஷங்கர் என்று பெயரிடுகிறேன்.

Thursday, 17 August 2017

அம்மா அறியாதது


குழந்தைகளை
நீர் அழைக்கிறது
காலம் காலமாக
அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமல்
அம்மா வகுத்த எல்லைகளை மீறிப்போகும்
முதல் சாகசம்
முதல் ஏகாந்தம்
சொல்லிப்போக எல்லாக் குழந்தைகளும்
அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அல்ல
குழந்தைகளை நீர்துறைகள் கிளர்த்துகின்றன
வயிற்றில் பயம் நொதிக்கிறது
விரையும் கால்கள் பின்னுகின்றன
சில்லிட்ட கரங்களுடன்
தொலைவிலிருந்தே தண்ணீர் வருடுகிறது
எத்தனை பேர் திளைத்தாலும்
அத்தனை பேரும் தனியாகத்தான்.
அது
அவர்களுடன் என்றும் தொடரப்போகிறது
உச்சந்தலை கொதிக்க கண்கள் சிவக்க
அவர்கள் நீருக்குள்
அமிழ்ந்து அமிழ்ந்து
வெளியே வருகின்றனர்
பார்க்காத கருப்பு ஒன்றையும் பார்க்கின்றனர்
பகல் மங்க
அகாலம் நிழல்களை வரையும்.
உடனடியாக அம்மாவின் நினைவு
வா என்று கூப்பிட
பெரும்பாலான குழந்தைகள்
குற்றத்தின் ஈரத்தைப் பிழிந்து
அவளின் அரூபச் சொல்லுக்குப் பணிந்து
வீடு திரும்பி விடுகின்றன.  

Monday, 14 August 2017

மூன்று மியாவ்களின் அர்த்தம்
எங்கள் வீட்டுப் பால்கனியில்
ஓய்வெடுக்க வரும்
வெள்ளைநிறத்துக் குண்டுப்பூனை வெளியிடும்
மூன்று மியாவ்களின் அர்த்தம்
இப்போதெனக்குத் தெரியும்.
பால் திடவுணவு கொஞ்சுவதற்கான கோரிக்கை
என்று
என் மகள்
மூன்று மியாவ்களை
எனக்குத் திறந்து காண்பித்தாள்
மூன்று மியாவ்களுக்குள் சாத்தியமாகிவிடக் கூடிய
அதன்
வாழ்வின் மீது எனக்குப் பொறாமையும் வந்திருந்தது
இன்று மாலையில்
மழைக்கு ஒதுங்கி
காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்திருந்த
கருப்பு வெள்ளை வரிப்பூனை
என்னைப் பார்த்து
மியாவ் என்றது.
அது மெலிந்த பூனைதான்
அது தொடர்ந்த மியாவ்களின் புதிர்
என்னை அறுப்பதைப் பார்த்தபடி
திடுக்கிட்டு நின்றேன்.
அதற்கு அர்த்தம் சொல்வதற்கு யாரும் இல்லை.
எனக்கு அது இனி தெரியவும் போவதில்லை

அந்த மியாவின் கோரிக்கை
மிக
எளியதாகவும் கூட இருக்கலாம்.

Saturday, 12 August 2017

மகாநினைவு கொண்டது தோல்வி கண்டராதித்தன் அவர்களே

ஷங்கர்ராமசுப்ரமணியன்

இரண்டாயிரத்துக்குப் பிறகு தமிழ் நவீன கவிதை பெற்றிருக்கும் அலாதியான வகைமைகள், மொழிபுகள் மற்றும் பல்லுயிர்த் தன்மையைப் பார்க்கும் போது அவற்றைக் கற்பனை உயிரியான நவகுஞ்சரம் பறவையுடன் ஒப்பிட முடியும். தமிழின் தற்காலக் கவிதைகளை ஓருருவமாக வரைந்துப் பார்க்க நாம் முயன்றால், சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடுப்பு, பாம்பின் வால், யானை,மான் மற்றும் புலியின் கால் என அது வடிவு கொள்ளலாம்.
இப்பின்னணியில் தனியானத் த்வனி மற்றும் பருவங்களோடு இடிபாடுகளின் வசீகரத்தைக் கொண்ட தனிமொழி கண்டராதித்தனுடையது. உறவுகளின் இடிபாடுகள், ஆளுமைகளின் இடிபாடுகள், பால்நிலைகளின் இடிபாடுகள், காதல் மற்றும் காமத்தின் இடிபாடுகளைச் சிதைந்த மரபின் கோபுரத்திலிருந்து எழுதும் பிரக்ஞை கொண்டக் கவிதைகள் அவை. நவீனத்துக்கும் சமகாலத்துக்கும் முதுகுகாட்டுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன இவரது கவிதைகள்.
கண்டராதித்தன் என்ற பெயரையும் அவரது கவிதைகளையும் அனிச்சையாகப் பிரித்துபோட்டு வழக்கம்போலக் கடந்துவிட முடியாது- நகுலன் என்ற பெயரை வெறும் பெயர்தான் என்று கடக்க முடியாததைப் போல. பெயர் கொண்டிருக்கும் நினைவுகளையும், காலத்தையும், சிதைவுகளையும் சேர்த்தே தன் கவிதைகள் வழி மீட்டுகிறார் தற்போதைய கண்டராதித்தன். அவர் வாழும் கண்டாச்சிபுரம், கண்டராதித்த சோழபுரத்தின் மருவிய பெயர்.
கண்டராதித்த சோழன் காலத்தில்தான் சோழப் பேரரசு மிகப்பெரிய வீழ்ச்சியை அடைகிறது. போர் செய்து ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பதில் ஈடுபாடின்றி சமாதானம் நாடியவர் என்று இணையத் தகவல்கள் சொல்கின்றன. இவரது காலத்தில்தான் ராஷ்டிரகூடர்கள் பலம்பெற்று தஞ்சை வரை வந்து தாக்கி அழித்தனர். கண்டராதித்தரும், அவர் மனைவி செம்பியன் மாதேவியும் அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரத்தின் மீது கவனம் செலுத்துவதை விட சிவபக்தியில் ஈடுபட்டவர்கள். கண்டராதித்தர் சிவனுக்காகப் பாடிய ‘திருவிசைப்பா’ பதிகம் ஒன்பதாம் திருமறையில் உள்ளது. அரசன் என்ற முகமூடிக்குள் தில்லை அம்பலவாணனின் பாதங்களைத் தேடி அலைந்திருக்கிறார். அவரது நிலையில் எதிரிகளே இல்லை.
கண்டராதித்தன் கவிதைகளிலும் எதிரிகள் வருகிறார்கள். அவர்களுக்கு விரோதியென்றோ வைரியெனவோ பெயர் சூட்டக்கூடாது என்கிறார். அவர்களை அதிரூபங்களாகப் பார்க்கிறார். காலத்தின் நல்லெண்ணத் தூதுவர்கள் என்கிறார் ‘நீண்டகால எதிரிகள்’ கவிதையில். சாமர்த்தியம், அதிகாரம், அற்பத்தனம், தற்புகழ்ச்சி மற்றும் பெருமிதங்களைக் கண்டு விமரிசிக்கும்போது கண்டராதித்தனின் முகமூடியைத் தாண்டி கண்கள் வெடிமருந்தின் பளபளப்புடன் மின்னுகின்றன. சமகால இலக்கிய அரசியல் அகங்காரங்கள் மற்றும் டாம்பீகங்கள் நூற்றாண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டு நையப்புடைக்கப்படுகின்றன.
கண்டராதித்தனின் கவிதைகளைக் காதால் வாசிக்கமுடியும். கண்டராதித்தன் கவிதைகளுக்கு குரல் இருக்கிறது. காலம் பிறழ்ந்த இடத்திற்கு வந்துநிற்கும் தோற்றுப்போன வீரனின் அடங்கிய சமத்காரம், பயம், தயக்கம், பொருமல், அங்கதம் எல்லாம் உண்டு. காதல் கவிதைகளில் பெண் வேடமிடுகிறார் கண்டராதித்தன். கண்டராதித்தன் கவிதைகளுக்குத் தமிழ் புதுக்கவிதையில் மரபு இருக்கிறதா? உண்டு. நகுலன், கலாப்ரியா, ந.ஜயபாஸ்கரன் என்று தொடரும் மரபில் கண்டராதித்தன் பழங்கவிதைகள் மற்றும் புராணிகங்கள் மீது சாய்வையோ எதிர்வினையையோ புரிவதில்லை.
மகாபாரதம், கம்ப ராமாயணம், திருவாசகம், தலபுராணங்கள், திருத்தலங்களின் பெயர்கள் மற்றும் புராணங்களின் மொழி-நினைவுகளைத் தூண்டியபடி, கிள்ளி, மழவன் போன்ற கதாபாத்திரங்கள் வழியாக கண்டராதித்தன் தன் கவிதைகளைப் பழங்கதைகள் மற்றும் விடுபுதிர்களின் இருட்டிலும் இசைமையிலும் நீலப்புரவியில் ஏற்றுகிறார். அவர் கவிதைகளில் இன்று நிகழ்வதைத் தொன்மையான அன்றின் பாதாளத்துக்குள் அநாயசமாக எறிந்துவிடுகிறார். அந்த வகையில் கண்டராதித்தன், புராதனத்தன்மையை ஒரு திரைச்சீலைப் போலக் கையாள்கிறார் எனலாம். மனதை இங்குள்ளது போல அங்கும் மிக நேர்த்தியாக அலையவிடும் திறன் கண்டராதித்தனின் கவிதைகளில் சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் கண்டராதித்தனின் கவியுலகம் தனித்த உயிர்ப்பைக் கொண்டது. அவரது கவிதை சொல்வது போலவே இறந்தகாலத்தை நோக்கி அவர் செல்வது முன்னோக்கியது.
ஆணிடமிருந்து பெண்ணுக்கும், அழகிலிருந்து துயரத்துக்கும் சமத்காரத்திலிருந்து மென்மைக்கும் காதலிலிருந்து இறைமைக்கும் கீழ் உலகத்திலிருந்து மேலுலகத்திற்கும் இடையில் ஆடும் இயல்பான ஊஞ்சலாக இவரது கவிதையுலகம் இருக்கிறது. அங்கேதான் ‘அம்சம்’ போன்ற ஒரு கவிதை சாத்தியமாகிறது.
தேவதைகளைக் காவியமாக்கும் பெண்ணொருத்தி
நிழலுருவாய் அருகில் நின்று
அய்யா சற்றுத் தள்ளிச் செல்லுங்கள்
இது பெண்கள் செல்லும் பாதையல்லவா
என்றழைக்கவும் நகர்ந்தான்
பிறகு பிருஷ்டத்தில்பட்டு ஆடிய கூந்தலை
வலக்கையால் அள்ளி வரப்புகளைத் தாண்டி
வயல்களை விட்டு மட்டைவழிச் சிதறிய
கதிர்களைப்பற்றி வானம்வரைச் சென்று
வளர்மதியானாள்.

சௌந்தர்யமும், காதலும், மானுடத்தின் மீதான அன்பும் துரதிர்ஷ்டத்தை நோக்கி, துயரத்தை நோக்கி, பைத்தியத்தை நோக்கிச் செல்லும் சரிந்த பாதை கண்டராதித்தனுடையது. அவரது உலகில் எல்லாமே பிரிக்கவியலாத ஞாபகத்தின் பிரக்ஞையில் பிணைந்து கிடக்கிறது. அந்தவுலகிலேயே உழலும் கண்டராதித்தனின் கவிதைத் தன்னிலை பல உருமாற்றங்களை அனுபவிக்கிறது. அங்கே சந்தோஷமும் துக்கமும் பயங்கரமும் வசீகரமும் நல்லூழும் துரதிர்ஷ்டமும் வேறு வேறு உயிர்நிலைகள் அல்ல.
கவிதைக்கும் வரலாற்றுக்கும் ஞாபகம்தான் பிரச்சினை. நகுலனுக்குப் பிறகு தன் மரபில் தோய்ந்து ஞாபகத்தின் பிரச்சினைகளை அழகிய கவிதைகளாக மாற்றியுள்ளார் கண்டராதித்தன்.

‘நான்குகட்டு ஓடுவேய்ந்த
ஏகாம்பரம் இல்லாத வீட்டில்
ஏகாம்பரம் ஏகாம்பரம் என்றேன்
ஏகாம்பரம் இல்லாத
வீட்டிலெல்லாம் மூதேவி
உன் கட்டைக் குரல்தான் முட்டுகிறது
கேடு ஏகாம்பரத்திற்காக ஏகாந்தத்திற்கா
என்றது உள்ளிருந்து ஒரு குரல்’நகுலனின் ராமச்சந்திரன் கவிதையின் எதிரொலியை கண்டராதித்தனின் இக்கவிதையில் உணரமுடியும்.

கண்டராதித்தன் கவிதைகளில் துப்பாக்கி போன்ற நவீன ஆயுதங்களைக் காண இயலாது. மழு மற்றும் சில்லாக்கோல் தான். கண்டராதித்தன் கவிதைகளைத் தவிர வேறெங்கும் பழைய ஆயுதங்கள் பாவிக்கப்படுவதேயில்லையென்று, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில், இப்போதைய ஜனநாயக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில், கண்டராதித்தன் வாழ்ந்துவரும் வடமாவட்டம் ஒன்றிலிருந்து சொல்லிவிடமுடியுமா?இத்தொகுப்பில் ‘மகளின் கண்ணீர்’, ‘பந்துகள் இல்லாதவன்’, ‘வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பெண்ணிற்கு நான்கைந்து பிள்ளைகள்’ போன்ற கவிதைகள் எனது மன உலகத்திற்கு நெருக்கமானவை. என்னைப் போல அடிக்கடி குழந்தைகளைத் தொலைக்கும் வாய்ப்புள்ளவனே இக்கவிதைகளை எழுதமுடியும்.
கண்டராதித்தனின் கவிதைகள் புதிர்களையும் ரகசிய மொழிகளையும் சங்கேதங்களையும் கொண்டவை. மரபில் பரிச்சயமில்லாத எனக்கு கண்டராதித்தனின் கவிதைகளைத் திறப்பதில் போதாமையையே உணர்கிறேன். பழங்கவிதைகளில் பயிற்சியுள்ள ந.ஜயபாஸ்கரன், விக்ரமாதித்யன், ஸ்ரீநேசன் யாராவது முயன்றால் கண்டராதித்தன் கவிதைகளை தமிழ் வாசகர்களுக்கு மேலும் அணுக்கமாகத் துலக்கப்படுத்த முடியும்.

போதாமைகளை உணர்ந்தாலும் கண்டராதித்தனின் கவிதைகளை நெருக்கமாக வாசிப்பதற்கு இந்த முன்னுரை எழுதும் காரியம் உதவியிருக்கிறது. அந்த வகையில் ஒரு தீவிரமான கவிதை வாசகனாக, கவிதை எழுதுபவனாகச் சொல்கிறேன்; கண்டராதித்தன் கவிதைகள் எளிமையாகக் கடந்துவிட முடியாதவை. ஈடுபடுதலையும் காத்திருப்பையும் வேண்டி நிற்பவை.
மரபும் நவீனமும் தீவிரமாய் விளையாடி உரையாடும் திருச்சாழலுக்கு உங்களை என் போதாமைகளுடன் நெறிப்படுத்துவதில் நிறைவை அடைகிறேன். கண்டராதித்தனுக்கும் அவரது கவியுலகத்திற்கும் எனது வணக்கங்கள்.நன்றி.

(கண்டராதித்தனின் ”திருச்சாழல்” கவிதைத் தொகுப்புக்கு எழுதப்பட்ட முன்னுரை)

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...