Skip to main content

Posts

Showing posts from March, 2022

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக

நீ

  நீ  அவனைத் தழுவி  அவன் இடுப்போடு  கால்களை க் கொளுவிக்  கூடும் அனலில் திரும்பத் திரும்ப நான் பிறந்து விழுகிறேனடி. பின்னர்  குளிர்ந்து  உன்  பின்புறமிருந்து  உன்னைச் சேர்த்துக்கட்டி உன் பிள்ளையாய்  அணைக்கிறேனடி  நான்.

சங்கர் (எ) எலி

  நினைவு அஞ்சலி சுவரொட்டியில்  சங்கர் (எ) எலி  பெயரைப் பார்த்ததும்  வழக்கம் போல  வயதைப் பார்த்தேன்  47 வயது  முகத்தைப் பார்த்தேன்  கண்களும் மூக்கும்  மூன்று துளைகளாக  கருப்பு வெள்ளையில் தெரிந்தன எலியென்று  ஆசையாக  பெற்றோர் சூட்டியிருக்க  முடியாது. பள்ளியிலோ  வேலையிலோ  வீதியில்  நண்பர்களின் மத்தியிலோதான்  சங்கர் என்ற  எலியாக  அவர் ஆகியிருந்திருக்க வேண்டும் உயிருடன் இருந்தபோது  எலி செல்லாத  எந்த இடத்துக்கும் போக  சங்கருக்கு சாத்தியம் இருந்திருக்காது எலியை நன்கு அனுசரித்திருப்பார்  சங்கர். வாழ்வில்  இத்தனை பூக்களை  பார்த்திருக்க மாட்டார் சங்கர். சங்கர் மரணமடைந்த  இன்று  சங்கரிடமிருந்து  எலி  நிச்சயம் பிரிந்திருக்கும். சாவின் வீச்சம் கொண்ட  பருத்த சாமந்திகளோடு  கூட்டத்தோடு கூட்டமாய்  சுடுகாட்டுக்குப் போயிருக்கலாம்  அல்லது  நடுவில்  டாஸ்மாக் கடைக்குள்  மிச்ச மது குடிப்பதற்கு  ஒதுங்கியிருக்கலாம்  எலி.

சிங்கப்பூரில் கள் பாவிப்பு – கண்முன் தோற்றம் கொள்ளும் வரலாறு

  சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’-ல் வெளியாகியிருந்த ‘சிங்கப்பூரில் கள்ளின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ கட்டுரை, ஆழமும் சுவாரசியமும் ஒருங்கே கொண்ட அபூர்வமான எழுத்தாக இருந்தது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீனமான சிங்கப்பூர் சமூகத்தில் இருந்த கள்ளுண்ணும் பண்பாட்டை, குறிப்பாக தமிழர்கள் மத்தியில் கள் குடித்தலை சமூக, பொருளாதார, வெகுஜன பாவனைகளின் பின்னணியில் முனைவர் தாரிணி அழகிரிசாமி புனைவெழுத்தாளரின் கவனிப்புகளுடன் எழுதியுள்ளார். வழக்கம்போல சிங்கப்பூரை அப்போது ஆண்ட காலனித்துவ அரசாங்கம், கள் அருந்துதலை தமிழினத்தின் தனிப்பட்ட இழிவாகவே கருதியிருக்கிறது. கார்ல் மார்க்ஸ் காலத்தில் ஐரோப்பாவில் ஏழைகள் நமது டாஸ்மாக் கடைகளில் இருக்கும் நிலையைவிட மோசமான ஸ்திதியில் மதுபோதையில் அழுந்திக் கிடந்திருக்கின்றனர். டி எச் லாரன்ஸின் சிறந்த கதைகளில் ஒன்றான the odour of chrysanthemums சிறுகதை ஒன்று சுரங்கத் தொழிலாளி ஒருவனின் மது அடிமை நிலையின் உயிர் சித்திரம் தான். சிங்கப்பூரிலும் ஏழைகளின் பானமாகவே கள் நுழைந்திருக்கிறது. சில தமிழர்கள் கள்ளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து ‘கள்ளு ராஜாக்கள