Skip to main content

Posts

Showing posts from June, 2021

பெர்சி - மேரி ஆலிவர்

உன் விருப்பம் என்னவென்று சொல் பெர்சி? வெளியே மணல்பரப்பில் உட்கார்ந்து உதயமாகும் நிலவைப் பார்க்கலாமென்று நினைக்கிறேன் இன்றிரவு நிறைமதி. நாங்கள் போகிறோம் நிலவும் எழுகிறது, அதன் அபாரமான எழில் என்னை நடுங்கவைக்கிறது காலம் மற்றும் வெளியைப் பற்றி  என்னை யோசிக்கச் செய்கிறது என் குறித்து என்னை அளவெடுக்கச் செய்கிறது. ஒரு சிறுஅம்சம் சொர்க்கத்தைத் தியானிக்கிறது இப்படி நாங்கள் அமர்ந்திருக்கிறோம். நிலவின் முழுமையான இந்த அழகுக்காக எத்தனை நன்றிக்கடன்பட்டவள் நான் என்குறித்து நினைத்துக்கொண்டேன் நேசிப்பதற்கு உலகம் எவ்வளவு செழுமையை வைத்திருக்கிறதென்றும் வியந்தேன். அவ்வேளையில் பெர்சி என் முன்னால்  கால்களை மடித்து அமர்ந்து முகமுயர்த்தி என் முகத்துக்குள் ஆழமாக நோக்குகிறது முழுமையும் அற்புதமும் துலங்கும் அந்த நிலவைப் போல் நான் இருக்கக்கூடும்.

லூக் - மேரி ஆலிவர்

மலர்களை நேசித்த ஒரு நாய் என்னிடம் இருந்தது. வயல் வழியாக பரபரப்பாக ஓடும்போதும் தேன்குழல் பூ அல்லது ரோஜாவுக்காக நின்றுவிடுவாள் அவளின் கருத்த தலையும் ஈர மூக்கும் ஒவ்வொரு மலரின் முகத்தையும் பட்டிதழ்களோடு ஸ்பரிசிக்கும். மலர்களின் நறுமணம் காற்றில் எழும்வேளையில் தேனீக்கள் அவற்றின் உடல்கள் மகரந்தத் துகள்களால் கனத்து மிதந்துகொண்டிருக்கும் போது அவள் ஒவ்வொரு பூவையும் அனாயசமாக ஆராதித்தாள் இந்த பூ அல்லது அந்தப் பூவென்று கவனமாக நாம் தேர்ந்தெடுக்கும் தீவிரகதியில் அல்ல- நாம் பாராட்டும் அல்லது பாராட்டாத வழியில் அல்ல- நாம் நேசிக்கும் அல்லது நேசிக்காத வழியில் அல்ல— ஆனால் அந்த வழி நாம் ஏங்குவது- பூவுலகில் உள்ள சொர்க்கத்தின் மகிழ்ச்சி அது- அந்தளவு மூர்க்கமானது அவ்வளவு விரும்பத்தக்கது. 

கலை வழி வாழ்வு சி. மோகன் - 70

கலையையே தனிப்பெரும் அறமாகவும், அது வெளிப்படும் ஊடகமாகக் கலைஞனையும் பார்த்த விமர்சகர்களில் சி. மோகன் குறிப்பிடத்தகுந்தவர். வாழ்க்கையின் அடிப்படைகளை, மெய்மையை, மொழிவழி விசாரிக்கும் இலக்கியத்தோடு பிற கலை வடிவங்களான நவீன ஓவியம், சினிமா போன்றவற்றையும் சேர்த்துக் காண்பதற்கும் ரசிப்பதற்கும் ஒரு தலைமுறை தமிழ் வாசகர்களைத் தூண்டிய எழுத்துகள் இவருடையவை. மாணவப் பருவத்திலேயே கணித ஆசிரியராக டூட்டோரியலில் பாடம் எடுத்த எழுத்தாளர் ஜி.நாகராஜனின் சாகச ஆளுமையும் படைப்புகளும் சி. மோகனிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு பெரும் படைப்பான ‘புயலில் ஒரு தோணி’யை எழுதிவிட்டு, மதுரையின் ஒரு மூலையில் எழுத்தாளன் என்ற அடையாளத்தையே அழித்துவிட்டு தினத்தந்தியில் பிழைதிருத்துபவராக வாழ்ந்த ப.சிங்காரமும், நேதாஜியின் படையில் சேர்ந்து தனிப்பட்ட சௌகரியங்கள் அனைத்தையும் துறந்து உயிரையும் விடும் சிங்காரத்தின் கதாபாத்திரமான பாண்டியனின் லட்சிய மனோபாவமும் சி.மோகனை வசீகரித்திருக்க வேண்டும். மறதியிலும் புறக்கணிப்பிலும் புதைந்திருக்க வேண்டிய நிலையில் ப.சிங்காரம் எழுதிய நாவல்களை, பெரும் விமர்சகர்களும் படைப்பாளிகளும் புறக்கணித்த

மிச்சமின்றி அழிந்து அழிந்து ஓடு மில்கா

ஆறு நகரங்களை நோக்கி ஓடத்தொடங்கிய போது நகரத்தில் மிச்சமிருந்த மயில்களை பன்றிகள் துரத்தி ஓடத்தொடங்கிய போது துணைக்கண்டத்தின் புதிய வரைபடம்  குழந்தைகள், பெண்கள், ஆண்களின் உடம்புகளில் கீறி ஓடியபோது பெற்ற தாய் தந்தையும் பிறந்த பொன்னாடும் ரத்தச் சகதியாகக் கலங்கிய தருணத்தில் துயரத்திலிருந்து தப்பிக்க ஓடத்தொடங்கினான் மில்கா சிங் ஒரு கிளாஸ் பாலை ஊக்கமாக அளித்து ஓடச் சொல்லியது புதிய தேசம் அம்மாவின் வெறித்த கண்கள் துரத்த அவன் துயரத்திலிருந்து ஓடியபடி இருந்தான் அவன் வென்றதற்காக தேசம் விடுமுறை அளித்தது அவன் துயரத்திலிருந்து ஓடியபடி இருந்தான் அவனைப் போன்ற எண்ணற்றோரை உண்டு உருவான புதியதொரு தேசம் அவனைப் பறக்கும் சீக்கியன் என்று அங்கீகரித்தது அவன் ஓடியபடி இருந்தான் நிற்காமல் ஓடு மில்கா  துயரங்கள் துரத்தும் ஓடு தாமசங்கள் துரத்தும் ஓடு அடையாளங்கள் துரத்தும் ஓடு பண்பாடுகள் துரத்தும் ஓடு பெருமிதங்கள் துரத்தும் ஓடு கருத்துகள் துரத்தும் ஓடு அறிவு துரத்தும் ஓடு தேசங்கள் துரத்தும் ஓடு நீதி துரத்தும் ஓடு நெறிகள் துரத்தும் ஓடு மகிழ்ச்சி துரத்தும் ஓடு விடுதலை துரத்தும் ஓடு உட்காராதே மில்கா ஓடு மிச்சமின்றி அழிந்து

எப்படி ஆரம்பித்தது - மேரி ஆலிவர்

ஒரு குட்டி நாய் குட்டிநாய்தான் குட்டிநாய்தான் ஒரு கூடையில் கொத்தாக மற்ற நாய்க்குட்டிகளுடன் அவன் இருக்கக்கூடும். அதையடுத்து அவன் சற்றே மூத்தவன் அத்துடன் ஒரு பிடி ஏக்கம் தவிர அவன் வேறெதுவும் இல்லை. அதை அவனால் புரிந்துகொள்ளவும் இயலாது. அப்புறம் யாரோ ஒருவர் அவனைத் தேர்ந்தெடுத்துவிட்டு  சொல்லவும் செய்கிறார் “எனக்கு இது வேண்டும்.”

திருநெல்வேலியில் ப்ரவுனி

ப்ரவுனி, பிறந்து வளர்ந்த மூன்று ஆண்டு காலத்தில் முதல்முறையாக நீண்டதொரு பயணமொன்றை சென்னையிலிருந்து மேற்கொண்டு நேற்று திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது.  காரில் ஏறியதிலிருந்து பரபரப்பு, ஆயாசம், பயண மயக்கத்தில் இருந்த ப்ரவுனிக்கு ஒரு நாளான பிறகும் திருநெல்வேலி பழகவில்லை. ஒரு இடமோ, வீடோ, ஊரோ பழகுவதற்கு அங்கே சாவகாசமாக சிறுநீரோ ஆயோ போகவேண்டும். அப்படித்தான் நாய்கள் ஒரு இடத்தைத் தன்வயமாக்கிக் கொள்கின்றன. நேற்று காலையிலிருந்து நள்ளிரவு வரை வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக உலாவந்தபடியே இருந்த ப்ரவுனி அதிகாலையில் தான் திருநெல்வேலி வீட்டில் முதல்முறையாக சிறுநீர் கழித்தது. அதற்குப் பிறகுதான் குரைக்கத் தொடங்கியது. இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது புதிய தெருக்கள், புதிய வீடுகள், சாலையில் உள்ள சீனிக்கற்கள், எருக்கஞ் செடிகள், காக்காய் முள் எல்லாவற்றையும் ஒரு சர்வேயரைப் போல முகர்ந்து முகரந்து பார்த்தபடி நாற்பது நிமிடங்களைக் கழித்தும் ஒரு பொட்டுக்கூட சிறுநீர் கழிக்கவில்லை. திருநெல்வேலி இன்னமும் அதற்குப் பழகவில்லை. சென்னையை விட திருநெல்வேலி கூடுதல் பரபரப்பாக இருப்பதை இந்தமுறை அதிகமாக உணர்கிறேன்.

இரண்டு கானேஷன்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எனது காதல் இரண்டு கானேஷன் மலர்களைக் கொண்டுவந்தது எனது காதல் என்னிடம் சிவப்பைக் கொண்டுவந்தது எனது காதல் அவளை எனக்குக் கொண்டுவந்தது எனது காதல் என்னை கவலைப்பட வேண்டாம் என்றது எனது காதல் என்னைச் சாகவேண்டாம் என்றது மேஜையில் உள்ள இரண்டு கானேஷன் மலர்கள் எனது காதல் இரவுக்குள் கருமையடையும் ஒரு மாலையில் ஷேன்பக்கின் இசையைக் கேட்கும்போது எனது காதல் இளமையாய் இருக்கிறது கானேஷன் மலர்கள் இருட்டில் கனல்கின்றன வாதுமைகளின் ருசியை விட்டுவிட்டு அவள் போய்விட்டாள் அவளது உடல் வாதுமைகளைப் போல ருசிப்பது. இரண்டு கானேஷன் மலர்கள் சிவப்பாய் கனல்கின்றன அவள் தொலைவில் எங்கோ அமர்ந்திருக்கும்போது அவளது விரல்களுக்குள் மிருதுவாய் இருக்கும் சீன நாய்களை அவள் கனவு  காணுகிறாள் பத்தாயிரம் கானேஷன் மலர்கள் கனல்வது எனது காதல் மரத்தின் கிளையில் அந்த அமைதியான தருணத்தில் அமர்ந்திருக்கும் ஓசனிச்சிட்டு எனது காதல் அவ்வேளை பதுங்கிவரும் பூனை.

பைரவருக்குப் பரிகாரம்

பரபரப்பும் சந்தடியும் ஓட்டமும் ஒரு பழைய ஞாபகமென அசைபோடும் அளவுக்கு இந்தப் பெருந்தொற்று நம்மை எல்லா முனைகளிலும் அறைந்து வீட்டில் இருத்தி வைத்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்துவிட்டோம். இந்த நாட்களில் அதிகம் பாதிக்கப்பட்ட உயிர்களில் ஒன்றாக எனக்குக் கண்ணுக்குத் தெரிவது, தெரு நாய்கள்.  பூனைகளின் வாழ்க்கை என்றைக்குமான ரகசியத்துடனேயே திகழ்கிறது. அவர்களது உலகத்தில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வேலையின்மை, சம்பளக் குறைப்பு, குடும்ப வன்முறை என எந்தப் பிரச்சினை குறித்தும் நமக்குத் தகவல்கள் இல்லை. அவை நாம் வசிக்கும் வீடுகளில் தெருக்களில் நம்மைக் கடக்கும்போது தென்படுகின்றன. வீடுகளில் சமையலுக்காக மீனின் தலைகள் பிய்க்கப்படும் வரை அவற்றின் உலகம் ரகசியமாகவேத் திகழும் என்று நாம் இப்போதைக்கு நம்பலாம். ஆள் நடமாட்டம் குறைந்து, ஆள் நடமாட்டம் குறைவதால் கிடைக்கும் உணவாதாரமும் குறைந்து காலி வீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் தெருக்களில், பூங்காக்களில், ரயில் நிலையங்களின் வளாகங்களில் நாய்கள் சலித்து நிற்பதையும் அலைவதையும் பார்க்கிறேன். இந்த வருடமும் நிறைய நாய்க்குட்டிகள் பிறந்திருக்கின்றன. அ

அபி கண்ட ‘தெளிவு’

தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே  . - திருமூலர் காண்பவர்கள் எல்லாம் கண்டவர்கள் அல்ல. கண்டவர்கள் எல்லாம் அதை விண்டுசொல்ல முயன்றாலும் சொல்ல முடிந்தவர்களோ சொல்லியவர்களோ அல்ல. காண்பதற்கும் கண்டுசொல்வதற்கும், காண்பவர்களுக்கும் கண்டுசொல்பவர்களுக்கும், அணுக்கமான ஊடகமாக கவிதை எல்லா கலாசாரங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் இருக்கிறது. அதனால்தான் இருப்பின் அடிப்படையை நோக்கி, அது இன்னமும் விலக்காமல் வைத்திருக்கும் ரகசியங்களின் அந்தகாரத்தைக் கிழிக்க, மொழியின் குதிரையில் ஏறிப் பயணிக்க முயற்சித்த எந்தக் கவிஞனும், நன்மை, தீமை என்று அவன் கையாண்ட உள்ளடக்க வேறுபாடின்றி, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சமயத்தன்மையை அடைந்துவிடுகிறான். கிறிஸ்துவை எதிர்த்து, கிறிஸ்துவைக் கிழித்து அவன் பிறப்பதற்கு முன்பாக இருந்த ஒரு மானுடத்தோடு தம்மை இனம்கண்டு கொண்ட பாதலேரும், ஆர்தர் ரைம்போவும் கிறிஸ்துவின் தன்மையை அடைவது போன்றது அது.  தமிழ்க் கவிதையிலும் மாணிக்கவாசகர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார், பாரதி என அண்மை வரை ஓர்

தார்மிகம் கொண்ட வீரனின் கதை

இலங்கையின் கண்டி நகரத்தில் பிறந்து வளர்ந்த அஜித் போயகொட, எல்லோரையும்போல கடற்படையினர் அணியும் வித்தியாசமான சீருடை மேலுள்ள கவர்ச்சியால் கடற்படைக்கு விண்ணப்பம் போட்டு, இளநிலை அதிகாரியாக 1974-ல் பணியில் சேர்ந்தவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இணக்கம் சீர்குலைந்து, பதற்றம் தொடங்கிய நாட்களிலிருந்து தனது நினைவுகளை ஆரம்பிக்கிறார் அஜித் போயகொட. நிலத்தில் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவினரும் பின்பற்றும் நெறிமுறைகள், கட்டுப்பாடுகளைவிட அதிக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கும் கப்பல் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான பல தகவல்களைச் சொல்கிறார். குடிநீர் உட்பட எல்லாமே வரையறைக்கு உட்பட்டே கிடைக்கும் இடத்தில் கட்டுப்பாடும் பாதுகாப்பு நெறிகளும் காலங்காலமாக அங்கே ஒரு பண்பாடாகவே ஆகிவிட்ட சூழல் அது. நிலத்தில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் இருந்த நல்லுறவையும், உள்நாட்டு முரண்பாடுகள் அதிகரிப்பதற்கு முன்னர் கடலில் மீனவர்களுக்கும் சிங்களக் கடற்படையினருக்கும் இருந்த நட்பையும் கொடுக்கல் வாங்கல்களையும் நெகிழ்வோடு விவரிக்கிறார். நிலத்தில் தனது முதல் ப