ஜே. கிருஷ்ணமூர்த்தி பனைகளுக்கு அப்பால் தூரத்தில் நிம்மதியற்ற கொடூரமான கடல்; அது அமைதியற்று, முரட்டு அலைகளோடு வலுத்த சுழிப்புடன் திகழ்ந்தது. இரவின் மௌனத்தில் அதன் ஆர்ப்பரிப்பு தூரத்திலிலுள்ள ஒரு தீவிலும் கேட்கக்கூடியதாக இருப்பதோடு அதன் ஆங்காரத்தில் ஒரு எச்சரிக்கை, அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இங்கோ, பனைகளுக்கு நடுவே, ஆழ்ந்த நிழல்களும் மோனமும் இருந்தன. அன்று முழுநிலவு. கிட்டத்தட்ட பகல்போல ஒளிர்ந்தது. அனலோ கண்ணைக் கூசும் ஒளியோ இல்லை. காற்றிலாடும் பனைகள் மேல் விழும் ஒளி, மிருதுவாக எழில்மிக்கதாக இருந்தது. பனைகள் மீது விழும் நிலவொளி மட்டுமல்ல, அவற்றின் நிழல்களும், வட்டமான கிளைகளும், மின்னும் நீரும் வளமான பூமியும், எல்லாமும். பூமி, வானம், நடக்கும் மனிதன், கத்தும் தவளைகள், தூரத்து ரயிலின் சீழ்க்கையொலி என அனைத்தும் மனத்தால் அளக்க இயலாத ஒரு உயிர்ப்பொருள். மனம் என்பது அற்புதமான ஒரு கருவி; அத்தனை சிக்கலான, நுண்ணிய, எண்ணிலாத அத்தனை சாத்தியங்களையுடையதாக மனிதன் படைத்த எந்த இயந்திரமும் இல்லை. நமக்குத் தெரிவது மனத்தின் மேலோட்டமான மட்டங்களைப் பற்றி மட்டுமே; அதன் மேல் தளத்திலேயே நமது இருப்பைத்...