Skip to main content

Posts

Showing posts from December, 2021

அதிகாலை நான்கு மணி, வேங்கை - ஆஹா சாகித் அலி

இந்தப் பாழில் பதிக்க  எதுவோ ஒன்று காத்திருக்கிறது  ரோமம் மூடிய  எதுவோ ஒன்று  வெளியே  ஜனவரிப் பனியில்  இன்னமும் உறங்காமல் விழித்திருக்கிறது . நான் ஜன்னலைத் திறக்கிறேன் :  பத்தாயிரம் மைல்களுக்கப்பால்  குமாவுனின் மலைச்சரிவுகளில் ,  ஆட்கொல்லிக்கு அஞ்சி  குடியானவர்கள் வீட்டுக்குள் பூட்டியிருக்க ,  அவர்களின் குடிசைகளோ  உறைபனிச் சாந்தால் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ளது . எனக்கு முன்னால் மேஜையில்  காற்று பக்கங்களைப் படபடக்க வைக்கிறது . எதுவோ ஒன்று அசையத் தொடங்குகிறது :  கிராமத்தினர் மறுபடியும்  உயிர்ப்புக்குத் திரும்புகின்றனர் ,  சூரியனோ அவர்களது குடிசைகளுக்கு  திரும்பவும் ஆடை அணிகளைப் பூட்டுகிறது . கழுவத்தக்க வைகறையின் ஊதாக்களை  அது கழுவுகிறது . புத்தகப் பக்கத்துக்கூடாக  எதுவோ ஒன்று அலைந்துலவுகிறது .

அம்மா காரைக்கால் அம்மை ஆனாள்

 கண்ணாடி முன்னால் அவள் நின்று உடைமாற்றிக் கொண்டிருந்த வேளை ஜன்னல் வழிக்கடந்தபோது, தேகம் சிலிர்த்து, அறிவு விதிர்த்து, சிறுவன் நான் சில நொடிகள் பார்த்த, செழித்திருந்த முலைகள் அல்ல இப்போது அம்மாவுடையது முழு உடலையும் துவளச் செய்திருந்த புற்றுநோயில் மெல் உடைகளையும் வேண்டாமென்று மறுத்து சாவின் வாயோடு, அம்மா தன் உதடுகளைப் பொருத்திக் குவித்திருந்தாள் அவள் அனுபவிக்கும் மரணத்திலிருந்து நான் தப்பிக்க, அவள் மரணத்தைச் சற்று தொலைவுள்ளதாக்க, அவளது மரணத்தை நான் சற்று கசப்பு குறைய விழுங்க எனக்கு மதுவின் உஷ்ணம் தேவைப்பட்டது. அம்மா இருக்கும் வீட்டிலிருந்து இரண்டு மைல்களில் குன்னத்தூர் பொற்றை மலை அடிவாரத்தில் இருக்கும் பாசன ஓடைக்கு மதுவோடும் தேர்ந்து வாங்கிய திண்பண்டக் கொறிப்புகளோடும் இருசக்கர வாகனத்தில் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டே இருந்தேன். சில மிடறுகள் மதுவுக்கு அப்பால், பகல் மயங்கி என் முன்னால் இருக்கும் மலையும் மிதக்கத் தொடங்கும். பறவைகளின் சிறகுகளுக்குள் ஊடுருவும் ஒளியைக் கூட அவதானிக்க முடியும் அமைதி அங்கே நிலவும் அந்த நாட்களில் பொற்றை மலையை என் அம்மா என்றுதான் பார்த்தேன் அதில் உள்ள வெம்மையும

கிறிஸ்துவின் வீடு

வாழுமிடம், மூலாதாரம், சொர்க்கம், கருப்பை, அடைக்கலம்,விடுதலை என ‘வீடு’ என்ற அந்தச் சின்னச் சொல் குறிக்கும் அர்த்தம் பெருகிக்கொண்டே போவது. கருவிலிருந்து வெளிவருவதற்கு முன்பே வீட்டைத் தேடத் தொடங்கியவர் கிறிஸ்து. கடவுளின் மைந்தனாயினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே பாலைவெளியில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து அந்த இடத்தையும் அங்குள்ள எளிய வாழ்க்கையையும் ஒரு மகத்துவமான குறியீடாக்கிக்கொண்டவர். மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, சிலுவைப்பாட்டை எதிர்கொண்டு மரித்திருக்காவிடில் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், அத்தனை பேர் வசிக்கும் குடிசைப்புறங்களில் இன்றும், அவர் நட்சத்திர விளக்குகளுடன்  நினைவுகூரப்பட முடியுமா?  கிறிஸ்துவைப் மையமாகக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வீடென்ற ஒன்றை அதன் எல்லா பரிமாணங்களிலும் தேடி அலைந்த தமிழ்க்கவிஞன் பிரமிள் எழுதிய கவிதை இது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சொன்னதுபோல மனத்தின் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்ட தலைமுறையினரான நம்மை மனத்தின் இருண்ட அனுஷ்டானங்கள் வீடு திரும்பவிடாமல் தடுத்துத்தான் கொண்டிருக்கின்றன.  இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒரு காலத்தில் நகரத்துச் சந்தையி

கண்ணாடி வளையல்களின் கனவு - ஆஹா சாகித் அலி

கண்ணாடித் துண்டுகள் பதித்த கம்பளியில்  எனது பெற்றோர் இதமாய்  உறங்கிய அந்த இலையுதிர்காலங்கள் எனது அம்மாவின் கரங்களில் வளையல்கள்  இரவில்  உறைந்த நதிகளின் அலைகளைப் போல  தொழுகைகளுக்குப் பிறகு  அவள் தனது அறைக்குள் போகும்போது  படிகளில் உடைபடும்  ஆண்டுகள் கழிந்தபின்னர்  உடைபடும் குளிருக்குள்  பனியின் மெல்லிய ஒலியைக் கேட்டேன் தீவட்டிகளுக்காக கூரைகளிலிருந்து  கூர்பனிக் கழிகளை இழுக்கும்  ஆட்களால் எங்கள் வீடு சூழப்பட்டது நீர்முனைகளை  தீப்பிடிக்க வைக்கும்வரை  சிமெண் டு கருஞ்சிவப்பு சுவர்களில்  அவற்றை த் தேய்க்கின்றனர் . காற்று புதையும் ஈர மணல்பனி  என் தந்தையும்  தாயும்  வீட்டை விட்டு வெளியே  கால் வைக்கும்போது  எரியும் வீட்டுக்குள்  ஒரு விதவை  நதிகளை த் த னது  புஜங்களால் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறாள் .

அஞ்சல் அலுவலகம் இல்லாத காஷ்மீர்

காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அனுபவிக்கும் சிறை நிலைமைளோடு, அதுகுறித்து பிராந்திய ஊடகங்களில் நிலவும் மௌனம் கூடுதலாகப் பயங்கரமானது. தொலைபேசி, அலைபேசிச் செய்தித் தொடர்புகள் முதல் விரைவு இணையச் சேவை வரை துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவரது மறதிக்குள்ளும் செலுத்த வற்புறுத்தப்படும் பிரதேசமாக காஷ்மீர் மாறியிருக்கிறது. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நெருங்குவதை முன்னிட்டு, தொடர்ந்து படித்துவரும் செய்திகளின் வழியாக ஏற்பட்ட படபடப்பின் வழியாகத் தான் ஆஹா சாகித் அலியின் ‘தி கன்ட்ரி வித்அவுட் போஸ்ட் ஆபிஸ்’ கவிதைகளை நெருங்கினேன். கவிஞர் ந. ஜயபாஸ்கரன் வழியாக எனக்கு அறிமுகமானவர் காஷ்மீரக் கவிஞர் ஆஹா சாகித் அலி. சென்ற ஆண்டில் கவிஞரும் திரைப்பட இயக்குனரும் நண்பருமான லீனா மணிமேகலை, அரிய பரிசாக அனுப்பி வைத்த  ‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ புத்தகம்  எனது அலமாரியில் பத்திரமாக இருந்தது.  ‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ கவிதைத் தொடர் முதலில் ‘காஷ்மீர் வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ என்ற பெயரில் தான் முதலில் எ

வீடுகள் - ஆஹா சாகித் அலி

அந்த மனிதன் தனது வீட்டை மணலில் புதைக்கிறான் ஒவ்வொரு மாலையிலும் அதைத் தோண்டி வெளியே எடுக்கிறான் சீக்கிரமாகவே அதைத் திரும்பவும் கச்சிதமாக வைப்பதற்கு கற்றபடி அத்துடன் அத்தனை வேகத்தில் வெளியே எடுக்கவும். எனது பெற்றோர்கள் இருளில் குழந்தைகளைப் போல உறங்குகின்றனர் அவர்கள் சுவாசிப்பதைக் கேட்கமுடியாத தொலைதூரத்தில் நான் ஆனால் அவர்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாகவே ஞாபகம் அத்துடன் நான் உறங்கவும் முடியும் அந்த இரவின் கூந்தல் கருப்பாகவும் அடர்த்தியாகவும் எனது கைகளுள். எனது பெற்றோர்கள் இருளில் உறங்குகின்றனர். நிலவு எழும்போது, அந்த இரவின் கூந்தல் எனது தோள்களில் நரை வெள்ளையாக மாறுகிறது. நான் வீட்டிலிருந்து பதின்மூன்று ஆயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கிறேன். நான் இரவின் நிலவுக்கு தலைசீவிவிடுகிறேன் எனது பெற்றோரோ குழந்தைகளைப் போல உறங்கிக் கொண்டிருக்கின்றனர். "எனது தந்தை இறந்துவிட்டார்,” விதுர் எழுதுகிறான், "அத்துடன் எனது பகுதியில் உள்ள  எனது பெற்றோர்கள் இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடு, எரிக்கப்பட்டு விட்டது." கடிதத்தைத் தொடர்ந்து படிக்கிறேன், நான் விழித்தெழுந்தால் எனது உடல் நீராக இருக்க

நீ இருக்கும் நகரை நீங்குதல் - ஆஹா சாகித் அலி

நள்ளிரவு மதுவிடுதியில்  உனது மூச்சு என் மீது சரிந்து விழுந்தது .  உனது புன்னகையின் நுனியில் நான் சமநிலைப்படுத்திக் கொண்டேன் ,  உனது வார்த்தைகளைப் பற்றியபடியே  இருட்டுப் படிகளில் ஏறினேன் . கடும் சிரத்தை ,  மரணத்துக்காக  உனது அறைகலன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது  கோட்டிக்கார வெள்ளியால் பளபளப்பாக்கிய  கத்தியை நீ நிலவின் மேற்பரப்பில் வைத்து  கூர்மையாக்கிக் கொண்டாய் . போதை நாக்குடன் கவிதையைப் பாடிய  நீ  நேசத்துடன் இருந்தாய்  நான் நினைத்தேன் : கடைசியாக ! தற்போது  நான் உள்ளும் புறமுமாக  உனது நினைவில்  அலைந்து திரிகிறேன் ,  எங்கெ நான் போனாலும்  நான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் . எனது வறுமைகளுக்குள் என்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டேன்  அத்துடன்  உன்னை  இருப்பதிலேயே விலைமதிப்பு கொண்ட நீலத்துடனான கடல்  எங்கே இருக்கிறதோ  அந்த இன்னொரு நாட்டின் நிம்மதியற்ற கனவுக்குள் . 000 எனது விரல் , உனது தொலைபேசி எண் அதன் நுனியில்  இரவுக்கு டயல் செய்கிறது .  உனது நகரமோ  எனது கண்களில் அதன் விளக்குகள் மரிக்க   என்னைத் தொடர்கிறது .

ஓர் அழைப்பு - ஆஹா சாகித் அலி

நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை காஷ்மீரின் குளிர் நிலவு என் வீட்டை உடைத்து நுழைந்து என் பெற்றோரின் காதலைத் திருடுகிறது. நான் எனது கைகளைத் திறந்து பார்க்கிறேன்: வெறுங்கை, வெறுங்கை. இந்த அழுகையோ அந்நியமானது. “நீ எப்போது வீட்டுக்கு வருவாய்?” அப்பா கேட்கிறார், திரும்பவும் கேட்கிறார். சமுத்திரம் தொலைபேசி வடங்களுக்குள் இடம்பெயர்கிறது. “நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீர்களா?” நான் கத்துகிறேன் தொடர்பு மரித்துவிட்டது. தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது. கடல் அமைதியாக உள்ளது அதன் மேலோ குளிர்ந்த காஷ்மீரின் குளிர் நிலவு.   

டெல்லி பற்றிய தொலைந்த நினைவு - ஆஹா சாஹித் அலி

நான் பிறக்கவில்லை அப்போது 1948 பெயர் இல்லாத சாலை ஒன்றில் அந்தப் பேருந்து திரும்புகிறது அங்கே எனது தந்தை அவருடைய சைக்கிளில் அவர் என்னைவிட இளையவராக ஓக்லாவில் நான் இறங்குகிறேன் ஜமுனா நதியோரம் நடந்து எனது பெற்றோர்களைக் கடக்கிறேன் என் அம்மா புது மணப்பெண் ஜரிகையின் ஜூவாலை அவளது சேலை வெள்ளிப்பொடி அவளது கூந்தலைப் பிரிக்கிறது அவள் என்னைப் பார்க்கவில்லை அவளது கொலுசின் சலங்கை சப்தம் தொலைவில் சீனாவிலிருந்து வரும் ஒலியைப் போல தேநீர்க் கடைகளில் அரிக்கேன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன கண்ணாடி நாக்குகளுடன் மணியடித்தபடி நட்சத்திரங்கள் வெளியே வரத் தொடங்கின அவர்கள் வீட்டுக்குள் சென்று குடும்ப ஆல்பத்தில் புகைப்படங்களாக எப்போதுமாக மங்கிவிட்டனர் உப்பரிகையில் உடைந்த நிலையில் நான் பார்த்த எண்ணெய் விளக்கோ தற்போது ஒளியேற்றப்பட்டுள்ளது அவர்களை விட மூத்த வெகுவாக மூத்த நான் அவர்களது மகனென்று அவர்களிடம் சொல்ல வேண்டும் நான் கதவைத் தட்டுகிறேன் தட்டிக்கொண்டே இருக்கிறேன் ஆனால் அவர்களுக்கோ இரவு அமைதியானது எனது இருப்பின் இந்த இந்த இரவில் அவர்கள் என்னைக் கேட்கவில்லை அவர்கள் என்னைக் கேட்கவும் மாட்டார்கள் நட்சத்திரங்களின் நாவு

அசோகமித்திரன் எழுதிய கவிதை

கவிஞர் எஸ். வைதீஸ்வரன் சமீபத்தில் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளைத் தொகுத்து 'சொல்ல நினைத்தேன்' என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அட்டையில் அவர் வரைந்த வாட்டர் கலர் ஓவியமும் உள்ளது. அதில் 'அசோகமித்திரனும் புதுக்கவிதையும்' என்ற சுவாரசியமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அசோகமித்திரனுக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள தொடர்பு என்னவாக இருந்தது என்பதைத் தொகுத்துப் பார்த்திருக்கிறார். ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்' அசோகமித்திரனின் மதிப்பைப் பெற்ற கவிதை. அதை அவர் அயோவா பல்கலைக்கழகத்துக்கு எழுத்தாளர் பட்டறைக்குச் சென்ற போது மொழிபெயர்த்த செய்தி இந்தக் கட்டுரையில் இருக்கிறது. அசோகமித்திரனின் ஒற்றன் நாவலில் அது ஒரு அத்தியாயமாகவே இடம்பெறுகிறது. ஆத்மாநாமைப் பற்றி அசோகமித்திரன் எழுதிய குறிப்பு என்னைக் கவர்ந்தது.  அசோகமித்திரன் எழுதியதாக ஒரு கவிதையை எஸ். வைதீஸ்வரன் இந்தக் கட்டுரையில் கொடுத்திருக்கிறார். அந்தக் கவிதை அசோகமித்திரனின் தனிமுத்திரையைக் கொண்டிருப்பதோடு இன்றைக்கும் பழைமை தோன்றாமலும் இருக்கிறது. வாழ்க்கையைக் கொடுத்த ஒரு க்ஷணத்தை, அந்த காலத்துண்டை எழுத, கவ

அருவம் உருவம் நகுலன் 100 அறிவிப்பு

நகுலனின் நூற்றாண்டை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் 'அருவம் உருவம் நகுலன் 100' தொகை நூலுக்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன.  ஓவியர் மணிவண்ணன் வரைந்துள்ள 'அருவம் உருவம் நகுலன் 100' தொகை நூலுக்கான அட்டைப்படம் இது. ஓவியர் மணிவண்ணன் வரைந்து வடிவமைத்தது. ஓவியன் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான ஸ்டாரி நைட் ஓவியத்தின் பின்னணியில் நகுலன் இடம்பெற்றிருக்கிறார். புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழுத்துக் கலைஞன் அவர். அவரது நூற்றாண்டை முன்னிட்டு அவரது படைப்புகளை மதிப்பிடும் தொகை நூல் ‘அருவம் உருவம்’. இதுவரை தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மற்றும் கவிதைகளின் மொழியாக்கம், நகுலனின் சித்திரங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் கட்டுரைகள் என நகுலனைப் புரிந்துகொள்வதற்கான முழுமையான ஆவணம் இது.  புதுமைப்பித்தன், பிரமிள், மா.அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் த

விக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம்

ஓம் அது குறைந்திருக்கிறது இது குறைந்திருக்கிறது குறைவு குறைவினின்று எழுகிறது குறைவினின்று குறைவு எடுத்து குறைவே எஞ்சுகிறது ஓம் அசாந்தி அசாந்தி அசாந்தி இந்த உலகில் பிறக்கும் மனிதஉயிர், மரணிக்கும் வரை தன்னை பின்னமாகவும் அபூர்ணமாகவும் கருதிக்கொள்கிறது. இயற்கையிலிருந்தும் இறைமையிலிருந்தும் ஒரு மனிதன் அல்லது மனுஷி தன்னைப் பிரித்துணரும் நாளிலிருந்து அவனது அவளது தனிமையும் மீட்சிக்கான தேடுதலும் ஆரம்பமாகிறது. அப்போதிருந்துதான் முழுமையை நோக்கிய பிரார்த்தனையும் ஏக்கமும் தன் குறையின்பால் புகார்களும் விசாரணைகளாகத் தொடங்கியிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழ் நவீன கவிதைப்பரப்பில் இந்த மனத்தை வைத்துக்கொண்டு அலைக்கழியும் கவிதை உயிரியாக விக்ரமாதித்யன் என்னும் கவிதை ஆளுமையை நாம் வகுத்துக்கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டு என்னும் காலப்பின்னணியை 1947-ல் பிறந்த நம்பிராஜன் என்னும் உடல் இயங்கும் காலத்தை வைத்து மட்டுமே குறிப்பிடுகிறேன். விக்ரமாதித்யனின் கவிதைகளில் இயங்கும் உடலைப் பார்த்தால் அது சிலசமயங்களில் குரங்கின் கள்ளமின்மையைக் கொண்டிருக்கிறது. சிலவேளைகளில் மத்தியகால உடலின் வன்மையுடன் தோற்றம் தருகிறது

வள்ளுவர் கோட்டமும் எதிரேயுள்ள பனைமரங்களும்

கவிஞர் விக்ரமாதித்யன் தன் கவிதைகளில் சிலவற்றின் பின்னணி குறித்து எழுதிய கவிமூலம் கட்டுரைகளும், பிற கட்டுரைகளும் சேர்ந்து கங்கோத்ரி என்னும் புதிய தொகுப்பாக வெளிவந்துள்ளது. கயல்கவின் பதிப்பகம் நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் நூல் இது. கங்கோத்ரி என்று அவர் தன் நூலுக்கு தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பும் கவனிக்கப்பட வேண்டியது. தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தாமிரபரணியின் ஞாபகம் உள்ள ஒருவன், கங்கையை விடுதலையாய், நிவர்த்தியாகப் பாவிக்கும் ஒரு இடத்தில் இத்தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறான். விக்ரமாதித்யனின் உரைநடை ஒய்யாரமான எழிலுடன் இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. இன்று கங்கோத்ரியை வாசிக்கும் போதும் அந்த எண்ணம் மாறவில்லை. அந்த சமயத்தில் அவருக்கு கைவந்திருந்த உரைநடை, அதன்பிறகு மேலதிக சாத்தியங்களை அடையவே இல்லை. தன் உரைநடையை, சிறுநகர டவுன் பஸ் போல பராமரிப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார் அண்ணாச்சி. அதற்கு உதாரணம் தற்போது அவர் தீராநதியில் எழுதிவரும் தன்வரலாற்றுத் தொடர்.   கங்கோத்ரி தொகுப்பில் ‘வள்ளுவர் கோட்டத்துத் தேர் ’ கவிதையின் பின்னணி குறித்து அவர் எழுதிய கட்டுரை முக்கியமானது. வள்ளுவர் கோட

மலை மீது ஓய்வு கொள்ளும் கவிஞன்

விக்ரமாதித்யன் எழுதிய பெருந்தொகையான கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் ஒரு சிறுதொகுதியைக் கொண்டுவர வேண்டுமென்பது எனது ஆசை. ஆனால் இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுதியைப் பொறுத்தவரை அந்த ஆசை பாதியே நிறைவேறியுள்ளது; கொஞ்சம் பெரியதாகிவிட்டது. இதிலிருந்து ஒரு குட்டித்தொகுதியை இன்னொருவரோ நானோ எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும்.   தமிழ்ப் புதுக்கவிதையில் சிறுபத்திரிகை வட்டத்திலும், பொதுவாசகர் பரப்பிலும் (தமிழர்களின் ஜனத்தொகையை ஒப்பிடும்போது அவர்கள் குறைவானவர்களாகவே இருந்தாலும்) தான் எழுதிய கவிதை வரிகளால் அதிகம் நினைவுகூரப்படுபவர் விக்ரமாதித்யனாகவே இருப்பார். தமிழ் சாதாரணனின் அறிவு, ஞானம், சமய நம்பிக்கை, உலகப் பார்வை என்னென்ன வளர்ச்சிகளையும் வரையறைகளையும் கொண்டனவோ அதுதான் விக்ரமாதித்யனின் வளர்ச்சியும் வரையறையும் வெற்றியும். என் அனுபவ அளவில் தமிழ் வாழ்க்கைதான் அதிகப் பரிச்சயம் என்பதால் இக்கூற்றைச் சொல்கிறேன். இதற்கு ஒரு உலகளாவிய தன்மையும் இருக்கலாம். அந்த அடிப்படையில் விக்ரமாதித்யன் சார்ந்து  பலராலும் நினைவுகூரப்படும் கவிதைகளைக் கூடுமானவரை விட்டுவிடக் கூடாது