தமிழ் நவீன கவிதையில் அதிக வாசகர்கள் நினைவில் மனப்பாடமாகச் சொல்லக்கூடிய வரிகளை எழுதிய மக்கள் கவிஞர் என்ற வரையறைக்கு அருகில் வரக்கூடிய கவிஞர் விக்ரமாதித்யன் . கு றுந்தொகை தொடங்கி தமிழ் மரபிலக்கியத்தில் தேர்ந்த அறிவும் அதன் செழுமையான தாக்கத்தையும் பெற்ற அரிதான தமிழ் கவிஞர்களில் ஒருவர் . அவரிடம் இந்து தமிழ் திசைக்காக எடுத்த பேட்டியின் முழுவடிவம் இது ... கவிதையின் இன்றியமையாத அம்சம் , தேவை என்னவென்று சொல்லுங்கள் ? கவிதைதான் மொழியின் கொடுமுடி . அதில்தான் உச்சபட்சமும் சாத்தியம் . லண்டன் மெட்ரோ ரயிலில் இடம்பெற்ற ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்று தொடங்கும் குறுந்தொகை கவிதை ஏ . கே . ராமானுஜத்தின் மொழிபெயர்ப்பாக , ஒரு உலகப்பொதுவான விஷயத்தை அழகுபடப் பேசுகிறது . அத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அது புதிதாகவும் உள்ளது . ‘ சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் / உயிர்தவச் சிறிதே காமமோ நனிபெரிதே’ என்று ஈரடிகளில் பெண்ணொருத்தியின் நிலையைக் காண்பிக்க முடியும் . எல்லாவற்றுக்கும் மேலாக , கவிதை தோன்றுவது ; தோன்றுவது என்பதனாலேயே உயர்வானது . சங்கத...