Sunday, 17 March 2019

ஒன்றையும் அறிய முடியாது


மார்டின் பட்லர்

(போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu  என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)

நாம் அனுபவம் கொள்ளும் உலகம், அதற்கு நாம் அளிக்கும் உருவகிப்பு மட்டுமே- அதுவே நிஜ உலகம் அல்ல. உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே அறிந்துகொள்வதற்கு வழி இல்லையென்பதால் நம்மால் உலகத்தை அறிய முடியாதென்பதே நிஜம். அப்படியெனில், சர்க்கரை இனிப்பானதா?

 சர்க்கரை அதனளவில் பல்வேறு பண்புகளைக் கொண்ட குறிப்பிட்ட மூலக்கூறாகும்; இனிப்பு அதன் பண்புகளில் ஒன்றல்ல. மனித நாக்கு தான் அதற்கு இனிமையைச் சேர்க்கிறது. இனிப்பு எப்படி தன்வய அனுபவமோ, நிறமும், இசைமையும், அழகும், ஒழுங்கும் இன்னபிறவும் தன்வய அனுபவங்களே.

உலகம் பற்றிய நமது அனுபவம் தன்பால்பட்டது- அதுவொரு தன்பால்பட்ட மெய்மை. நாம் சிந்திக்கும் வழியும் தன்மயமானதே- தர்க்கம், கணிதம், பகுத்தறிவு, காரணம் மற்றும் விளைவு எல்லாமும். நமது பகுத்தறிவால் மெய்மையைப் பற்றிவிட முடியுமென்ற எந்தவிதமான பாவனையும் அப்பட்டமான முட்டாள்தனமே. நமது அறிவால் புரிந்துகொள்ளக் கூடிய கட்டமைப்புகள் முழுவதும் அறிவாலேயே சிருஷ்டிக்கப்பட்டதுதான். நமது அறிவைப் பற்றி உலகத்துக்கு எதுவும் தெரியாதென்பதோடு நமது அறிவால் அது நிர்ணயிக்கப்படுவதும் இல்லை. உலகை நமது மனங்கள் உருவகிக்கும் வழியைப் புரிந்துகொள்ளவே, எல்லா அறிவியல்களும் உண்மையில் முயல்கின்றன. இந்த உருவகிப்புக்கு வெளியே உள்ள உலகத்தை, நம்மால் தொடர்பு கொள்ள இயலாத உலகத்தைப் பற்றி அறிவியல்கள் பொருட்படுத்துவது இல்லை. நாம், தன்மயப்பட்ட சொந்த மெய்மைக்குள் புலன்வயமாகவும் கருத்து ரீதியாகவும் அடைத்துத் தாழிடப்பட்டுள்ளோம்.

இந்த நிலை அப்பட்டமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது. நம்மால் அறியக்கூடியதுதான் என்ன? பதிலும் அப்பட்டமானதுதான். நம்முடைய மனங்களின் இயல்பை, உலகை நமக்கு நாமே உருவகித்துக் கொள்ளும் வழிவகையை நாம் அறிய இயலும். ஆனால், அதற்கு வெளியே இருப்பதாகச் சொல்லப்படும் அறிவு பாவனை எல்லாமே வெறும் பேராசைதான்.   

நமது மனங்கள் உலகைப் படைப்பதில்லை. ஆனால் உலகை அனுபவம் கொள்வதை மனம் தான் வரம்புறுத்துகிறது. வாழ்வும் மரணமும் நமது சொந்த உருவகிப்புகள் தான் – நமது அனுபவங்களை மனம் வகைப்படுத்துவதற்கான வழியாக காலம் உள்ளது. பிறப்பு, இறப்பு என்பது உண்மையிலேயே இருக்கிறதா? இமானுவேல் கான்ட் உறுதிப்படுத்துவது போல மெய்மையின் பண்பாக காலமில்லையென்றால், பிறப்பும் இறப்பும் இல்லை. மெய்மையை உருவகிக்கும் வழியின் ஒரு பண்புதான் காரியகாரணத் தொடர்புறுத்தலெனில் சுதந்திர விருப்புக்கும் நமது வாழ்க்கையில் வழியே இல்லை.

நமது உலகம் என்பது தன்மய உருவகிப்பு தான் என்பதை உணர்வதால் ஏற்படும் பாதகமென்னவெனில், அனுபவத்துக்கு அப்பாற்பட்ட அறிவு பாவனைகளை நாம் இழக்க நேர்கிறது. அதன் நேர்மறை அம்சம் என்னவென்றால், நமது தன்மய உருவகிப்பு, ஒரு எதார்த்தமாக நம்மேல் செலுத்தும் தாக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்கு அதைப் பயன்படுத்தலாம்.

 பிறப்பு-இறப்பு என்பது இல்லை, காரணமோ காரியமோ இல்லை, இடமோ, காலமோ, நிறமோ, இசைமையோ இல்லையென்றும் இதைச் சொல்லலாம். மத்திய காலத்தில் பயிலப்பட்ட எதிர்மறை இறையியலையே இது பிரதிபலிக்கிறது. கடவுள் இல்லை, அவர் ஒரு நிறமல்ல, அவர் வெளியில் இல்லை, அவர் காலத்தில் இல்லை என்று அவர்கள் சொன்னதையொப்ப.  

நாம் எல்லாரும் தன்மயமான உருவகிப்பில் சிக்கியிருப்பதால், மெய்மையைப் பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியாதென்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியுமானால், மெய்மையின் இயல்பு குறித்து கொஞ்சூண்டு மேலதிகமாகச் சொல்வதற்குச் சாத்தியமும் ஆகலாம். அழகிய முரண்தான், அத்துடன் நான் முரண்களை விரும்புபவன். 

Monday, 11 March 2019

இகம் பரம் வேண்டும் உடல்தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ம் ஆண்டில் ‘ஆன்மிக மாசுபாடு’-ஐ ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்து பெற்ற அவரது மனைவி, மா ஜியானை தமது மகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.

கலைஞனாகவும் தனிப்பட்ட வகையிலும் நேர்ந்த துயரங்களாலும் தன் எதிர்காலம் குறித்த கேள்விகளாலும் துளைக்கப்பட்டு பதில் தேடி மூன்றாண்டுகள் சீனா முழுவதும் கால்நடைப் பயணத்தை மேற்கொண்டார். பௌத்த சமயத்தைத் தழுவினார். திபெத்திலும் சிறிது காலம் வசித்தார். தனது திபெத்திய அனுபவங்களையொட்டி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளின் சிறிய தொகுப்பே ‘நாக்கை நீட்டு’.

உலகின் கூரை என்று சொல்வதற்குத் தகுந்த உயரத்தில் காற்றழுத்தம் குறைந்து, கடினமான தட்பவெப்பச் சூழ்நிலைகளுக்குள் அகமும் புறமுமாக அதீதச் சூழலுக்குள் அலையும் மனிதர்களின் கதைகள் இவை. இது சிறுகதைத் தொகுப்பாக எழுதப்பட்டிருந்தாலும் ஒரு நாவலாகவும் படிக்க முடியும். காமமும் மரணமும் இந்தக் கதைகளை ஒரு நாவலாகத் தைத்துள்ளன.

எழிலும் கோரமும் சேர்ந்து பேரன்னை போல நெடிதுயரந்து இமயமலை நிற்கிறது. அதன் மடியில் வாழும் மனிதர்களால் அனுசரிக்கப்படும் உணவும், கழுத்தறுக்கப்பட்ட கடமாவின் ரத்தத்தைப் போல் பச்சையாகவே இருக்கிறது. உணவும் அடிப்படை வசதிகளும் பற்றாக்குறையில் இருக்கும் போது உடல் இச்சையே உயிர் என்னும் ஆகுதிக்கு நெய் வார்க்கிறது. இச்சை பெருகும் போது மரணம் இயல்பாகச் சமீபித்து விடுகிறது. மரணத்துக்கு அருகில் குற்றவுணர்வும் அச்சமும் மீட்புக்கான வேண்டுதலும் மரமாக முளைக்க எலும்புகளின் குவியலில் புத்தர் அங்கே தோன்றிவிடுகிறார். காமம், ரணம், குற்றவுணர்வு, மரணத்தின் எலும்புகளாலான மலையின் மீது அமர்ந்திருக்கும் புத்தரை இந்தக் கதைகளில் பார்க்கிறோம்.

சீனாவின் அரசியல் ரீதியான ஒடுக்குமுறையாலும் நிலவும் வறுமையாலும் நவீன காலத்தில் காயப்படுத்தப்பட்டிருக்கும் பௌத்தத்தின் பூர்விக நிலமான திபெத்தை, ஒரு பயணியின் துல்லியமான கண்களின் வழியாகப் பார்க்கிறோம். ஆசிரியர் ஒரு ஓவியராக இருந்தது ஒரு அனுகூலம். திபெத்திய கலாசாரத்துக்கு அன்னியன் என்ற ஆசிரியரின் அனுகூலம் வாசகனுக்கும் உதவியாக இருக்கிறது. அற்புதங்கள் என்று தோன்றக்கூடிய நிகழ்ச்சிகளும் நிதானமாகவே சொல்லப்படுகின்றன.

‘நீலவானும் அந்தப் பெண்ணும்’ முதல் கதையில் யம்துரோக் ஏரிக்கரைக்கு அருகே இறந்த பெண் மையிமாவின் விண்ணடக்கத்தைப் பார்க்க அவள் வசித்த வீட்டுக்குக் கதைசொல்லி அழைத்துச் செல்லப்படுகிறார். மையிமா வாழ்ந்த வீட்டின் சுவரில் ஓவியமாக கோரப்பற்களைக் காட்டியபடி வாழ்க்கைச் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் மரணக் கடவுள் யமன்தான் இந்தக் கதைகளை நம்மிடம் கூறுகிறார். இக்கதையில் மையிமாவுக்கு நடக்கும் விண்ணடக்கச் சடங்கில் அவளது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வல்லூறுகளுக்கு இரையாக இடப்படுகிறது. ஒரே ஒரு முறை கதைசொல்லியின் புகைப்படக் கருவியின் பொத்தான் மையிமாவின் விண்ணடக்கச் சடங்கில் இயங்க மறுக்கிறது. அது மையிமாவின் மறுப்புதான் என்று கதைசொல்லி உறுதிசெய்யவில்லை.

முதல் கதையில் தந்தையின் பாலியல் தொந்தரவிலிருந்து தப்பித்து இரண்டு பேருக்கு மனைவியாகி பிரசவத்தில் இறந்துபோகும் மயிமா, தந்தையின் இச்சைக்காட்பட்டு கணவனாலும் கைவிடப்பட்டு தொலைந்து போன பெண், பேராசையால் விபரீதமாக மரணிக்கும் கர் மடாலய ஸ்தூபி நிர்மாணக் கலைஞர் சங்பூச்சாவின் மனைவி குலா, பெண் புத்தராவதற்கான சடங்கில் உயிரிழக்கும் யுவதி சாங்சாங் தாஷி என அனைவரும் பெண்கள். புராணமும் அன்றாட நிகழ்வுகளும் உண்மையும் புனைவும் துல்லியமாகக் கோக்கப்பட்ட கதைகள் இவை.

திபெத்தின் இயற்கையை ஒப்ப, இந்தக் கதைகளின் பெண்கள் எல்லாரும் மிகக் குறைந்த சந்தோஷத்தையும் அதீதமாகத் துக்கத்தையும் மரணத்தையும் தங்கள் உடலில் சுமப்பவர்கள் அவர்கள். ஆண்கள் சாகச விழைவு, பாவ உணர்ச்சிக்குட்பட்டு வாழ்க்கைச் சக்கரத்துக்குள் மரணத்துக்காகக் ஆலயங்களிலும் அறைகளிலும் தனியாகக் காத்திருக்கிறார்கள். துன்பம் என்னும் கழியில் ஒன்றையொன்று விரட்டிச் சுழலும் திசைகாட்டிகளைப் போல ஆண்களும் பெண்களும் தென்படுகின்றனர். பெண் என்னும் அபரிதமிதத்தை உறிஞ்சிச் சலித்திருப்பவனாக ஆண் தென்படுகிறான்.

இந்தக் கதைகள் முழுவதும் உடலின் இருட்டுக்குள் நாம் அறியாத உறுப்புகள், உணர்வு நிலைகளுக்குள்ளும், புரிதல்களுக்குள்ளும் ஆசிரியர் அழைத்துச் செல்கிறார்.

இகம், பரம் இரண்டையுமே அடைவதற்கு லௌகீகத்திலும் ஆன்மிகத்திலும் உடலே சாதனமாக ஊடகமாகக் கருதப்படுகிறது. சமயங்கள், அரசு, வர்த்தகம் ஆகியவற்றுக்கும் உடலே மூலதனம்.

‘தீட்சையின் கடைசி நிலை’ கதையில் புத்த தீட்சையை ஏற்க சிறுவயதிலிருந்து கடுமையான நியமங்களை அனுசரித்த சாங்சாங் தாஷி இரண்டாம் நாள் உறைநதியின் குளிர் தாளாமல் இறந்துபோகிறாள். ஒரேயொரு நாள் தான் மீதம். அவள் உடல் அவளை புத்தராவதிலிருந்து தோல்வியடைச் செய்துவிட்டது.

 இந்தக் கதைகள் இப்படித்தான் உடலைத் தழுவுகின்றன; நம் உடலை அறுத்துக் கடைகின்றன; உடல் வழியாகவே உடலைப் பூரணமாக அறிவதன் வாயிலாகவே அதைக் கடக்கும் முயற்சியையும் பரிசீலிக்கின்றன. அந்த முயற்சியின் வியர்த்தத்தையும் அதன் துயரத்தையும் பேசுவதால் அவை நவீன காலக் கலைப்படைப்பாகின்றன. காய்ந்த எலும்பின் கடைசி நினைவு வலியாகத்தானே இருந்திருக்கும்.     

சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் நம் மரபுக்கு நெருக்கமான படைப்பு ‘நாக்கை நீட்டு’. திபெத்தைப் போன்றே நெடிய மரபின் சுமை கொண்ட, தற்போது வெறும் நுகர்வுச் சந்தையாக மாறிக் கொண்டிருக்கும் நமது பண்பாட்டிலிருந்து இந்தக் கதைகளை வாசித்து நம்மையும் பரிசீலித்துக் கொள்வது அவசியமானது.

Friday, 8 March 2019

ஜலாலுதீன் ரூமியின் விருந்தினர் இல்லம்
இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லமாகும்.
வரும் ஒவ்வொரு காலைப்பொழுதும் ஒரு புதிய வருகை
ஒரு மகிழ்ச்சி, ஒரு மன அழுத்தம், ஒரு அல்பத்தனம்
ஒரு கணநேர விழிப்பு நிலை
எதிர்பாராமல் வருபவரைப் போல.
அவர்கள் எல்லாரையும் வரவேற்று மகிழ்வியுங்கள்!
அறைகலன்களேயற்ற உங்களது காலிவீட்டுக்குள்
தாறுமாறாக வந்த துயரங்களின் கூட்டமாக இருப்பினும்
ஒவ்வொரு விருந்தினரையும் மரியாதையுடன் நடத்துங்கள்.
அந்த விருந்தினர் உங்களை இங்கிருந்து
இன்னொரு புதிய சந்தோஷத்துக்கு விரட்டுபவராகக் கூட இருக்கலாம்.
இருண்ட எண்ணங்கள், அவமானம், வன்மம்
எவராக இருந்தாலும்
புன்னகையுடன் வாயிலில் நின்று உள்ளே வருவதற்கு அழையுங்கள்.
வருபவர் யாராகவும் இருக்கட்டும்
நன்றியோடு இருங்கள்
ஏனெனில் ஒவ்வொருவரும்
அப்பாலில் இருந்து ஒரு வழிகாட்டியாக அனுப்பப்பட்டவர்கள்.

Sunday, 3 March 2019

இது துயரம்தான் பழனிவேள்காலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.

பழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில்,  திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அடிக்கடி பார்த்து நட்பெல்லாம் பாராட்டாமலேயே அவர்களுக்குள் மதிப்பும் மரியாதையும் அரிதான உரையாடல்களும் இருந்தன. ஆனால் படைப்பு சார்ந்து அவர்கள் ஒரு புதிய உணர்வையும் ஆற்றலையும் பற்றவைக்கப்பட்டது போலப் பகிர்ந்துகொண்டவர்கள். அந்த இயக்கத்தின் கடைக்கொழுந்து என்று பழனிவேளைச் சொல்வேன்.

ஒரு தோற்றுப் போன விவசாயியின் வேரைக் கொண்ட உலகை நோக்கிக் கிளைகளால் தழுவ முயலும் கவிஞன் பழனிவேள். ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு தொகுதியை எழுதிய மலைச்சாமியையும் பிரம்மராஜனையும் பழனிவேளின் கவிதைகளில் தடம்காண முடிகிறது. வான்கோவும் ஏழு கன்னிமார் குளித்த வடதமிழ்நாட்டு கிராமத்துச் சுனையும் சந்திக்கும் இடம் பழனிவேள்.

மகாபாரதக் கூத்துக் கதாபாத்திரத்தின் ஆகிருதியைக் கொண்ட பழனிவேள், அறிமுகமாகும்போதே ஆரவாரம், சட்டென வெளிப்படும் வன்முறையுடன் தான் எங்களுக்கு அறிமுகமானார். மணல் புத்தகம் என்ற கவிதை சார்ந்த சிற்றிதழைத் தொடங்கும் எண்ணத்துடன் நான் இருந்தபோது முதலில் அதற்கு ஆதாரமான ஊக்குவிசையாக நினைத்தது திருவண்ணமாலை சார்ந்த நண்பர்களைத் தான்.

ஆரணியில் அப்போது தேவதாஸ் இருந்தார். ராணி திலக், ஸ்ரீநேசன், அசதா, பழனிவேள் எல்லாரையும் மணல் புத்தகத்துக்கு பங்களிப்பு கேட்க எண்ணி திருவண்ணாமலையில் ஒரு குன்றில் காலை பனிரெண்டு மணிவரை பேசினோம். போர்ஹே கவிதைகள் சிலவற்றை அங்கே மொழிபெயர்த்து அசதாவும் நானும் வாசித்தோம். தமிழ் சிற்றிதழ் சூழலில் ஒரு மடைமாற்றத்தை  நிகழ்த்திவிட வேண்டுமென்ற நம்பிக்கையை அந்தச் சந்திப்பு ஏற்படுத்தியது. அப்போது தான் சில நண்பர்களை முதல் முறையாகச் சந்தித்தோமென்று ஞாபகம். புது எழுத்து மனோண்மணியும் இருந்தார். ஜி. முருகன் இருந்தார். 

எங்கள் அப்போதைய குலச்சடங்குகளின் ஒரு அங்கமாக மலையிலிருந்து இறங்கி நேராக ஒரு டாஸ்மாக் பாருக்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். தளவாய் பார்த்துவந்த குமுதம் தீராநதி மாத இதழ் சார்ந்து ஏதோ பிரச்சினையை பழனிவேள் எழுப்பினார். என்னையும் தளவாயையும் தவிர மற்ற நண்பர்களுக்கு பழனிவேளின் உக்கிரம் ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். நான் பழனிவேளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். கடுமையான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் பழனிவேள் மேஜையின் மீது தன் செருப்பை எடுத்துவைத்தார். நானே அப்போது சின்னதொரு ரௌடியாக சிற்றிதழ் சூழலில் அறியப்பட்டவனாக இருந்தும், பெரிய ரவுடிகளோடு புழங்கிய அனுபவம் உள்ளவனாக இருந்தும், பழனிவேளின் முரட்டுத்தனம் எனக்கு மிகவும் புதியதாகவே இருந்தது. செருப்பு வைக்கப்பட்ட நிமிடத்தில் அந்த இடத்தில் என்னையும் தளவாயையும் தவிர எல்லாருமே தெறித்து ஓடிவிட்டனர்.

திருவண்ணாமலைக்குக் கணிசமான பணத்தை அப்போதைய காலத்தில் நாங்கள் கொண்டு போயிருந்தும் கொண்டு போன பணம் பில் கொடுத்ததில் தீர்ந்துவிட்டது. பவா வீட்டுக்குப் போய் பணம் வாங்கித்தான் திரும்ப முடிந்தது.

அடுத்து ஒரு முறை, எனது திருமணத்துக்கு முன்னால் நான் இருந்த அம்பாள் நகர் அறைக்கு வந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒரு இரவு தங்கி ஊர் திரும்பினார். அன்று மிகவும் சுபாவமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அவரது பராக்கிரமங்களெல்லாவற்றையும் களைந்து பேசிக் கொண்டிருந்த இரவு அது.

அதற்குப் பிறகு நெருக்கமாக பழனிவேளை நான் பார்க்கவேயில்லை. தவளை வீடு தொகுதி உயிர்மை வெளியீடாக வந்தது. சென்னைக்கு வந்து சினிமாவுக்கு முயன்றதாக நண்பர்கள் சொல்லத் தெரியும். நடுவில் ஒரு கூட்டத்தில் பிரம்மராஜனிடம் நேரில் விமர்சித்த கவிஞர் கண்டராதித்தனைக் கண்டித்து அவரை தாறுமாறாக பழனிவேள் அடித்த செய்தி வந்தது. ‘இன்னர் ப்ளோ சார்ந்து மகாபாரத ஓவிய, கவிதைக் கண்காட்சிக்கு வந்திருந்தார் பழனிவேள். அப்போதுதான் கடைசியாகப் பார்த்திருப்பேன்.

மகாபாரதக் கூத்து சார்ந்த ஓவியங்களுக்கு நான் எழுதிய கவிதைகளை அவர் மிகவும் விரும்பினார். என் மீது அன்று மிகுந்த நேசத்துடன் நடந்துகொண்டார். அதுகுறித்து நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதன்பின்னர், முகநூலில் எல்லாரையும் கடுமையாக வசைபாடுபவராக, குறிப்பிட்ட சாதிய நோக்கு, பிராந்திய, வாழ்க்கை நோக்குகளுக்குள் குறுகிப்போனவராக அவரது ஸ்டேட்டஸ்களை என்னால் பார்க்கமுடிந்தது. கிட்டத்தட்ட அவர் தனது குருவாகவே பாவித்துவந்த பிரம்மராஜன் போன்றவர்கள் பழனிவேளின் இப்படியான நடவடிக்கைகளில் என்ன தலையீட்டைச் செய்தார்கள் என்று தெரியவில்லை.

அன்றாட வாழ்க்கை தரும் சவால்கள், நெருக்கடிகள், பொறுப்புகளிலிருந்து கலைஞன் விடுபடுவதற்கான வழிகளில் ஒன்றாக மது அருந்துவதும் பார்க்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. விடுபடுவதற்கும் லேசாவதற்கும் உபாயமாகக் குடியே அப்போது எங்களுக்கு இருந்தது.

 குடிப்பது, சண்டையிடுவது, கசப்புகளையும் புகார்களையும், வசைகளையும் அவரவர் சக்திக்கு ஏற்ப வெளிப்படுத்துவது என்பதெல்லாம் எங்கள் நடவடிக்கைகளாக இருந்தது. அதை தார்மீகச் செயல்பாடு என்றும் படைப்பூக்கத்தின் ஓர் அங்கம் என்றும் நினைத்தோம். அக்காலகட்டத்தில் நாங்கள் எழுதிய கவிதைகளின் நிலங்களும், வாழ்க்கைகளும், பறவைகளும் கொண்டிருந்த ஒளியில் இப்போதும் உணரக்கூடியளவில் இருக்கும் அதன் சுடர் நிறங்களில் எங்களுடைய அப்போதைய மடத்தனங்களும் குணக்கேடுகளும் கள்ளமின்மையும் சேர்ந்தே இருக்கின்றன நண்பர்களே.

சில வீழ்ச்சிகள், சில பிறழ்வுகள், சில மறுபரிசீலனைகள், சில உயிர்ப்புகள், சில மரணங்கள் என அந்தக் கதை பல ரகசியக் கிளைகளாகப் பிரிந்துள்ளதை இப்போது திரும்பிப் பார்க்கமுடிகிறது.  
அப்படிப்பட்ட இன்னொரு மரணம் பழனிவேளுடையது. தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா...

தன்னைக் கைவிட்ட விவசாய பூமியிலிருந்து, அதற்குப் பக்கத்திலிருக்கும் தனது வீட்டிலிருந்து தனது தடித்த வசைகளையும் சேர்த்தே நேசத்தைப் பகிரத் துடித்திருப்பான் பழனிவேள். நமக்குப் புரியவில்லை. அவனது வரவேற்பு இப்படியாகவே இருக்கிறது.

வாரும்
நீவிரோ வேன்கோவின் சுவைஞர் என்றால்
நன்கு வளர்ந்த சூரியகாந்தித் தோட்டத்தைத்தருவேன்
பின்னோடும் மலையும் விளிம்பில் சூரியனும்
சத கோடி திரை வானும் இனாம்
என் வசைகளைப் பொறுப்பாயேயானால்
ஏழு கன்னிமார் குளித்த சுனையும்
நத்தத்தில் மீதமுள்ள ராஜேந்திரசோழன் பட்டயமும்
கவர்ந்த ஆநிரை மீட்ட மூபாட்டன் கள்ளும்
பன்றிக்கொழுப்பில் சுட்ட பணியாரமும் கூட.  

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...