ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு பொருள் என்ன நிலையில் இருக்கிறது என்று நமக்குத் தெரியாத நிலையில், குவாண்டம் கோட்பாடு அதை 'இருநிலை இருப்பு' என்று அழைக்கிறது. அது என்னவாக இருக்கிறது என்று பார்க்காத வரை அதற்கு எல்லா நிலைகளும் சாத்தியம். ஆணாக, பெண்ணாக, இருபாலுயிரியாக, யாரும் பார்க்காத வரை எல்லா நிலைகளும் சாத்தியம். புகழ்பெற்ற விஞ்ஞானியான எர்வின் ஷ்ரோடிங்கர், ஒரு சோதனையைக் கற்பிதம் செய்தார். அதன்படி, ஒரு இரும்புப் பெட்டிக்குள் பூனையையும் ஹைட்ரோசயனிக் அமிலக் குப்பி ஒன்றையும் வைக்க வேண்டும். அத்துடன் கதிரியக்கத்தன்மை கொண்ட பொருளையும் வைக்க வேண்டும். பரிசோதனையின்போது, அந்தக் கதிரியக்கப் பொருளின் ஒரு அணு சீர்கெட்டாலும், அது அந்த இரும்புப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சுத்தியலை அசைத்து, அமிலக் குப்பியை உடைக்கும். அமிலக் குப்பி கசிந்தால் பூனை இறந்துவிடும். ஆனால், அந்த இரும்புப் பெட்டி மூடியிருக்கும் நிலையில் பூனை உயிருடன் இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவே தெரியாது. குவாண்டம் விதியின்படி, பூனை உயிருடனும் இருக்கலாம்; இறந்தும் இருக்கலாம் என்ற 'இருநிலை இருப்பு நிலை'யில் உள்ளது.